(Reading time: 22 - 43 minutes)

 

வன் ஏதோ ஒரு தேசத்தின் கமண்டோ! எப்படியோ இங்கே வந்திருக்கிறான். இங்கிருந்த அதி முக்கிய ரகசிய கோப்புகளை கண்டுபிடித்து அனுப்பிக்கொண்டிருக்கிறான். இன்னும் இவன் இங்கிருக்கபோகிறானா அல்லது கிளம்பவேண்டுமா என்ற தகவல் பின் இரவில் தெரிவிக்கபடும். காதை தீட்டி கவனித்து தன் அறிவை கோண்டு அதை அலசியதில் புரிந்தது இதுதான் நிரல்யாவுக்கு. ‘இந்த புரிதல் சரிதானா?’

அவன் பேச்சுமுறை அக்மார்க் ஆங்கிலேயன் என்றது. ஆனால் ஒருவகையிலும் அவனிடம் வெள்ளைகாரனின் சாயலில்லை. பெர்ஷியர்களின் நிறம். ‘அப்புறம் இவனெப்படி இதில்? உயரத்தில் நம்ம ஹீரோவை பக்கத்தில் நின்னு பார்க்கிற எல்லாருமே படிமேல நின்னுதான் பாக்கனும்போல! முகம்னு ஒன்னு வெளியே தெரிஞ்சாதானே மத்தபடி சொல்ல?.’ ஓடியது மனது.

‘ஹீரோன்னு முடிவே பண்ணிட்டியாடி குரங்கு? அவன் சீஃப்ட்ட உன்னைபத்தி சொல்லவே இல்ல பாரு?உன்னை என்ன பண்ணபோறானோ?’ வேற யாரு மண்டைக்குள்ள இருந்த மூளைதான் குறுக்க வந்தது.

ஆம், இவளை பற்றிய எந்த பேச்சும் அங்கே இல்லை. ‘அப்படியானால்?..............’

‘ஒருவேளை இங்கு நடப்பது எல்லாமே நாடகமோ? இவளை ஏமாற்றி இவள் மூலம் ஏதாவது காரியம் சாதிக்க சதியா?’

‘காரியம் சாதிக்க நினைக்கிறவன் தான் இப்படி கட்டி தரையில் உருட்டிட்டு கண்டுகாம போவானாமோ?’ இப்பொழுது அவனுக்கு பரிந்து கொண்டு வந்தது மூளை.

‘உலகத்தை பொறுத்தவரை இவள் செத்தவளா? இவள் உடையுடன் ஒரு பிணம் கடலுக்குள் புதைந்ததே? இவன் இவளை என்ன செய்ய போகிறான்?’

அதே நேரம் அவனிருந்த அறையின் சிறுவெளிச்சமும் மறைய, மை இருட்டு. தூரத்தில் கடலின் ஆர்பரிப்பும் அருகில் ஊளையிடும் காற்றின் சத்தமும் மட்டும். பகலைவிட இப்பொழுது சூழ்நிலை பயங்கரமாய் தோன்றியது. வறண்டிருந்த நாவும், பசித்திருந்த வயிறும் பயத்தால் நிறைந்தது.

காலடி சத்தம். இவளிடமாக வந்து நின்றது.

மெல்லிய பச்சை வெளிச்சம் வட்டமாக பரவி அது அவனது கைகடிகாரத்திலிருந்து வருகிறது என்பதை காண்பித்தது. சான்ட்விச்சும் தண்ணீரும் அவள் முன் அமர்ந்தது.

“நாம் இருவரும் உயிருடன் வெளியேற வேண்டும் எனில் பேசாதே” என்று எழுதியிருந்த துண்டு பேப்பரை காண்பித்துவிட்டு கட்டை அவிழ்த்தான்.

மனதிற்குள் ஜெபித்துவிட்டு இவள் சாப்பிட, இவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். ‘ஓ அவன் சாப்பிட்டானா?’

சாப்பாட்டை அவன் புறமாக நீட்டினாள். மென்மை அவன் முகத்தில். ‘புன்னகைக்கிறானோ?காடாய் வளர்ந்திருந்த தாடியில் உதடை எங்கே தேட இந்த சிறு வெளிச்சத்தில்?‘

குளிர் நடுக்கியது. அவனோ உள்ளே சென்று சிறு கட்டைகளை எடுத்துவந்து போட்டு தீவைத்தான்.

“நீ எனக்கு ஒரு வார்த்தை கொடுத்தால் நான் உன்னை இங்கிருந்து பத்திரமாக அனுப்பிவிடுகிறேன்.” என ஒரு காகிதத்தில் எழுதி நீட்டினான்.

ஆமோதிப்பாக பலமாக தலை அசைத்தாலும், அவள் கண்களில் ஆச்சரிய குறி, முகத்திலோ மெச்சுதல். “இவளின் அங்குசத்தை கண்டுபிடித்துவிட்டானே!’

முதல் காகிதத்தை தீயிலிட்டுவிட்டு அடுத்ததில் “உங்கள் நாட்டிடம் உங்களை நான் ஒப்படைத்துவிடுகிறேன். நம் இந்த சந்திப்பை பற்றி, நான் உங்களை காப்பாற்றியது பற்றி, உங்கள் உயிருள்ளவரை யாரிடமும் சொல்லமாட்டீர்கள் எனில்.”

இதற்குள் இவளும் உண்டு முடித்திருக்க தானும் ஒரு காகிதத்தை எடுத்து பதிலை எழுதினாள். “இந்த சந்திப்பு, உங்கள் உதவி குறித்து யாரிடமும் சொல்லமாட்டேன், உங்கள் தலைமை எது?, என்னை அவர்களிடமும் ஏன் மறைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு நாட்டிற்காக வேலை செய்கிறீர்களா? அல்லது ஏதாவது போராளி குழுவை சேர்ந்தவரா?”

இவள் கையிலிருந்து வாங்கி அதை படித்ததும் அதை தீயிலிட்டு எரிந்து சாம்பலாகும்வரை பார்த்திருந்தவன், “என்னை பற்றி எதுவும் கேட்காதே” என எழுதி காண்பித்துவிட்டு, அந்த பேப்பரையும் தீயிலிட்டு சாம்பலாக்கிவிட்டு, எழுந்து சென்றுவிட்டான்.

பின்பு கையில் பலவித கம்பி மற்றும் சிறு பொருட்களுடன் வந்தவன் அவைகளில் தன் கைவண்ணத்தை காண்பித்தான். இரண்டு மிகப்பெரிய காதணிகள் அவன் கரத்தில். இவளிடம் நீட்ட ஆச்சரியத்துடன் வாங்கி அணிந்துகொண்டாள்.

தேர்ந்த ஒப்பனை கலைஞன் போல அங்கிருந்த கரியை ஏதோ செய்து அவளுக்கு அடர் நீள் புருவம் வரைந்தான். சமையல் பொருள் எதுவோ ஐஷடோவானது. இவை எதற்கு என்று அவளுக்கு புரியவில்லை. ஆனாலும் அவன் சொன்னால் இவள் செய்தாக வேண்டுமே! ஒத்துழைத்தாள்.

நீளமாய் இருந்த இவளணிந்திருந்த பேண்ட்ஃஸை வெட்டி பெடல் புஷராக்கினான். மேல் பனியனின் கைகள் நீக்கபட்டன. பின் ஒரு புர்காவைகொண்டுவந்து அணிய செய்தான். அவளுக்கு சிரிப்பு வந்தது. மூடி மறைத்துகொள்ள எதற்கு இத்தனை அலங்காரம்?

ஆனால் எழுதி கேள்வி கேட்க நேரமில்லை.

அதற்குள் அவனோ ஜீன்ஃஸ், டீ ஷர்ட் மாற்றி வந்திருந்தான். பெரும் தாடியை காணவில்லை. அதற்கு பதிலாக இரண்டு இட்லி அளவு கன்னங்கள் உப்பியிருந்தன. குறுந்தாடி தோன்றியிருந்தது. பெரும் தாடிக்கு மேலாக இந்த மாஸ்க்கை அணிந்திருப்பானாக இருக்கும். இவன் நிஜமுகம் எது?

அடுத்த அறைக்கு அவளை அழைத்து சென்றவன், அங்கிருந்த தரை விரிப்பை நீக்கி, உள்ளே தெரிந்த கதவை திறக்க, படிகள். அதன் வழியாக அவளை அழைத்துச் சென்றான். அதன் முடிவிலிருந்த நீர்நிலையை அதாவது கடலை அடைந்தனர். படகு கடலில் நின்றிருந்தது.

படகிலேறி சற்று தொலைவு சென்றதும் கடும் இருட்டான பகுதி. அவள் புர்காவை கழற்ற சொல்லி பத்திரபடுத்தினான். அவளை அவனருகில் வந்து அமர சொன்னான். “என்ன செய்ய போறோம்?, யாராவது நம்ம பார்கிறாங்களா?”

“சாட்டிலைட் கேமிராவில் கண்காணிக்க வாய்ப்பு இருக்கிறது, பார்க்கிற யாருக்கும் இது நாம ரெண்டு பேரும்னு தோணவே கூடாது. ”

“அப்படின்னா நீங்க ஏதோ ஒரு நாட்டுக்காக வேலை செய்றீங்க”

திடீரென அவன் எதையோ ஆன் செய்ய பெரிய சத்தத்துடன் ராக் ம்யூசிக் வெடித்துகொண்டு கிளம்பியது. பிறர் கவனிக்கா வண்ணம் தப்பி ஓடுபவன் என்ன செய்கிறான்?

“எழும்பி ஆடு” என்றானே பார்க்கலாம்!

வேறு வழி ஆடத்தொடங்கினாள்.

சுற்றிலும் ஆள் நடமாட்டம் தெரிந்தது. அதாவது படகு போக்குவரத்து. ஊருக்கு ஒத்துவராத இவளது உடை, வம்பிழுக்கும் இசை, வாலிப பெண்ணின் நடனம்.

கவரபட்ட இளவட்டங்கள் சில படகுகளில் இவர்களது அருகே வர “ஹுப்ப்ப் ரேஸ்ஸ்ஸ்......” என்றபடி படகை பறக்க வைத்தான். ஹுயேஏஏஏஏஏ........... ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............பலவித சத்தங்களுடன் இவர்களை துரத்தியது ஒரு சிறு கூட்டம்.

மிரண்டு போனாள் நிரல்யா. அவர்கள் கையில் கிடைத்தால் இவள் நிலை.......?

படகின் வேகமா, துரத்துபவர்கள் காரணமான பயமா, ஏதோ ஒன்று இவளை இழுத்து சென்று அவன் அருகில் உட்கார வைத்திருந்தது.கைகளோ அவன் தோளை ஆதரமாக பற்றியிருந்தது.

“பயமா இருக்கு ஜாஷ்வா ”

அத்தனை மென் வெளிச்சத்திலும் அவன் கண் விரிவது இவளுக்கு தெரிந்தது.

“நான் எப்ப ஜாஷ்வாவானேன்?”

“உங்க பேர நீங்க சொல்லமாட்டீங்க, அதான் என்னை காப்பத்தவந்த கடவுளுடைய பெயரையே உங்களுக்கு வச்சுட்டேன்.”

அவன் பல்வரிசை தெரிய சிரிப்பது அவளுக்கு தெரிந்தது. மனது பறந்து அந்த புன்னகையுடன் காணாமல் போனது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.