(Reading time: 20 - 40 minutes)

 

னக்கு பிடிக்கலை என்னை விட்டுடு......

அதற்காக அம்மா அவனுக்கு கொடுத்த தண்டனைகள் அவனை மாற்றவே இல்லை. மாறாக அதனால் அவனுக்கும் அவருக்கும் நடுவில் விரிசல் விழ துவங்கியது. அவர் வார்த்தைகளிலும், செயல்களிலும் இருந்த கண்டிப்பின் காரணமாக விஷ்வாவால் அவரிடம் மனம் விட்டு பேச முடியாமலே போனது.

பரத் அவனுக்கு நேர் எதிர். தன் அத்தை சொல்வதை கண்களை மூடிக்கொண்டு செய்வான் பரத். அவனது ஒரே நோக்கம் அவனது அத்தை சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பது மட்டுமே.

தான் பெற்ற மகனும் இவனை போலவே இருந்து விட மாட்டானா என்று ஏங்கியது அந்த தாயின் மனம். அதன் வெளிப்பாடாய் வந்து விழுந்தன வார்த்தைகள்

‘‘எப்படி வாழரதுன்னு கண்ணனை பார்த்து கத்துக்கோ’

என்னைக்குமே கண்ணன் தாண்டா என் பிள்ளை. நீயும் இருக்கியே. பேசாம அவன் என் வயித்திலே வந்து பிறந்திருக்கலாம்’’ விஷ்வாவால் தாங்கிக்கொள்ளவே முடியாத வார்த்தைகள் அவை. ஒரு முறை இரண்டு முறை அல்ல பல முறை வெளிப்பட்டன அந்த வார்த்தைகள்.

அவன் அம்மா அப்படி சொல்லும்போதெல்லாம் பரத்தின் கண்களில் சின்னதாய் மின்னிய பெருமை விஷ்வாவின் மனதில் அவன் மீது கோபத்தை விதைத்தது.

எப்போதுமே அவன் துவண்டு போகும் போதெல்லாம் அவனுக்கு ஆறுதல் சொல்வது இந்து மட்டுமே.

தாத்தா அவ்வப்போது அவனுக்கு ஆறுதல் சொல்வார். ஆனால் ஏனோ அவரை அவனால் நெருங்க முடியவில்லை அவர் பரத்திடம் காட்டும் பாசம் இவனுக்கு கோபத்தை அளித்தது ‘ உங்களுக்கு கண்ணன் தானே எல்லாம். போங்க அவன்கிட்டேயே போங்க’ என்பான் விஷ்வா.

வாழ்கை இப்படியே போய்க்கொண்டிருக்க அவனது பத்தொன்பதாவது வயதில், இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்னால் , அவன் மாமாவுக்கு வந்தது அந்த நோய்.

கொஞ்சம் கொஞ்சமாய் அதன் தாக்கம் அதிகரிக்க படுத்த படுக்கையானார் அவர். இவன் ஜாதகம் இவன் கண்முன்னே அலசப்பட்டு விவாதிக்க பட்டது. நடந்ததுக்கெல்லாம் விஷ்வாவின்  ஜாதகம் தான் காரணம் என்றார்கள்.

காரணமே இல்லாமல் தான் குற்றவாளி ஆக்கப்பட்டதை போல் உணர்ந்தான் விஷ்வா. அவனுக்குள்ளே கொதித்தது.

அப்போதுதான் சிங்கபூரிலிருந்து வந்திருந்தார் அவன் அப்பா. அவர் மடியில் படுத்துக்கொண்டு அவன் அழுது குலுங்கிய தினம் இன்னமும் விஷ்வாவின் மனதில் அப்படியே இருக்கிறது.

‘இந்த வீட்டிலே என்னாலே இருக்க முடியலைபா. மாமாக்கு உடம்பு சரியில்லைன்னா நான் என்னப்பா பண்ண முடியும்.? இந்த பூஜை, பரிகாரம்னு என்னை குற்றவாளி மாதிரி நிக்க வைக்கறாங்கபா. இதெல்லாம் எனக்கு பிடிக்கலை நம்பிக்கையும் இல்லை. என்னை உங்களோட கூட்டிட்டு போயிடுங்கபா ப்ளீஸ்’

சுரீரென்று உறைத்தது அவன் அப்பாவுக்கு. வயது வந்த தன் மகனின் மனநிலை தெளிவாக புரிந்தது அவருக்கு.

அவனுக்கென்று தனி விருப்பு வெறுப்புகள் வந்தாகிவிட்டது. தாய் மாமன் வீட்டில் அவனுக்கென்ற தனி சுதந்திரம் கிடைத்துவிடுமா என்ன? இது ஏன் எனக்கு இத்தனை நாட்கள் தோன்றவில்லை. குழந்தைகளுக்கு பணம் சேர்ப்பது மட்டும் தான் ஒரு தந்தையின் கடமையா என்ன ?

எல்லாவற்றையும் விட தனது மகனின் சந்தோஷமே முக்கியம் என முடிவெடுத்தவர் அடுத்த பதினைந்து நாட்களில் வேலையை மாற்றிக்கொண்டு சென்னைக்கே வந்துவிட்டிருந்தார். அவர் குடும்பத்துடன் வசிக்க ஒரு வீட்டையும் விலை பேசிவிட்டிருந்தார்.

மாமாவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்துகொண்டிருந்தது. அப்போதுதான் வந்தது அந்த பேச்சு.

ஏதோ ஒரு கோவிலில் விஷ்வாவை வைத்து பரிகாரம் செய்ய சொன்னால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். அதை செய்தே ஆக வேண்டும்மென்று விஷ்வாவை கட்டாயப்படுத்த துவங்கினார் மைதிலி.

‘இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைன்னு நான் பல தடவை சொல்லிட்டேன். என்னை கட்டாய படுத்தாதம்மா ப்ளீஸ்.’......

டாக்டர்களே நம்பிக்கையளிக்கும் வகையில் எதுவும் சொல்லாத நேரத்தில், இந்த பூஜை பரிகாரமெல்லாம் அவரை காப்பாற்றுமென்று நம்ப முடியவில்லை விஷ்வாவால்.

தன் மகனுக்கு துணையாய் நின்றார் அனந்தராமன் ‘வேண்டாம்ன்னா விட்டுடேன் மைதிலி. ஒரு அம்மாவா அவன் மனசையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.’

‘ஒரு பரிகாரம் தானே இதிலென்ன இருக்கு? அவன் மனசை புரிஞ்சி வேண்டாம்னு சொல்ற அளவுக்கு நான் தப்பா ஒண்ணும் செய்ய சொல்லலை.’ அவர் பிடியிலேயே நின்றார் மைதிலி.

‘சரி விடு மைதிலி. ஆண்டவன் என்ன நினைச்சிட்டிருக்கானோ அது படி நடக்கட்டும்’ என்று சொன்ன தாத்தாவின் பேச்சையும் கேட்பதாக இல்லை மைதிலி.

ரு நாள் எல்லாரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்க, அங்கே வந்தமர்ந்தான் விஷ்வா.

என்ன தோன்றியதோ மைதிலிக்கு சட்டென சொல்லிவிட்டிருந்தார் ‘எங்கேடா வந்தே.? அம்மா சொல்றதை கேட்க மாட்டே உனக்கு அம்மா கையாலே சாப்பாடு மட்டும் வேணுமா? நீ பரிகாரத்துக்கு ஒத்துக்கற வரைக்கும் என் கையாலே உனக்கு சாப்பாடு போட மாட்டேன்.’

பேசாமல் எழுந்தான் விஷ்வா. அதை பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தராமனால் அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

கொதித்து போய் எழுந்தார் அவர் ’‘வேண்டாம். நீ இனிமே அவனுக்கு சாப்பாடு போடவே வேண்டாம். அவனுக்கு மட்டும் இல்லை எனக்கும் போட வேண்டாம். நாங்க இப்பவே இந்த வீட்டை விட்டு கிளம்பறோம்.

அதிர்ந்து போயினர் அங்கே இருந்த அனைவரும்.

நீ கிளம்புடா விஷ்வா. என்றபடி உள்ளே சென்றவர் தனது பெட்டியுடன் வெளியே வந்தார்.

‘என்ன மாப்பிள்ளை என் பையனுக்கும் உடம்பு சரியில்லை. இந்த நேரத்திலே நீங்களும் இப்படி கிளம்பி போயிட்டீங்கன்னா எப்படி? பெட்டியை கொண்டு முதல்லே உள்ளே வைங்க.’ என்றார் தாத்தா.

‘இல்லை மாமா.’ என்றார் அனந்தராமன் தான் தங்கபோகும் வீட்டின் முகவரியை தன் மாமனாரிடம் நீட்டியபடியே. ‘அவருக்கு உடம்பு சரியில்லைங்கிற ஒரே காரணத்திற்காகத்தான் நான் இத்தனை நாள் பேசாமல் இருந்தேன். என் பையன் மனசையும் நான் பார்க்க வேண்டியதா இருக்கு. எப்போ என்ன உதவி தேவைப்பட்டாலும் என்னை கூப்பிடுங்க. இங்கேதான் மைலாபூர்லே இருக்கேன்.’

நகர்ந்தவர் திரும்பி நின்றார். அவர் பார்வை அங்கே நின்றிருந்த மைதிலியின் மீதும் அவர் கையை இறுக்கமாக பற்றிய படியே கண்களில் பயத்துடன் நின்றிருந்த அந்த பதினேழு வயது பெண்ணின் மீதும் விழுந்தது.

‘யாரவது என் கூட இப்பவே வர தயாரா இருந்தா வரலாம்.’ சொன்னார் அனந்தராமன்.

அங்கே இறுக்கமான மௌனம் நிலவியது.

சரி யாருக்கு எப்போ தோணுதோ அப்ப வாங்க. நான் காத்திட்டிருப்பேன். விஷ்வாவின் தோளை அணைத்துக்கொண்டு திரும்பி நடந்தார் அனந்தராமன்.

கண்களில் சேர்ந்த கண்ணீருடன் அங்கே இருந்த எல்லாரையும் ஒரு முறை பார்த்துவிட்டு தனது  தந்தையுடன் நடந்தான் விஷ்வா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.