(Reading time: 25 - 49 minutes)

 

ஜெஷுரனை அறிமுகபடுத்தினான் ரக்க்ஷத். ரக்க்ஷத், நிரல்யா குடும்பம் போல் அவனும் கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்டவன். எட்மாண்டன் வாசி.

ரக்க்ஷத்தின் குடும்பத்தொழில் ஈகிள் ஆயில்ஸ். எட்மாண்டனில் பிட்டுமென் எனப்படும் தார் பகுதி பரவியிருக்கிறது. அதிலிருந்து எரிபொருள் பிறிப்பது அவர்களது முதல் தொழில். பெற்றோர் தொடங்கிய அத்தொழில், இன்ன பிற தேசங்களிலும் எண்ணெய் கிணறுகள் என வளர்ந்திருந்தது. அப்படி கிணறுகளிலிருந்து எடுக்கும் எண்ணெயை அப்படியே விற்காமல் உலகின் பல்வேறு பாகங்களில் இருக்கும் சுத்தகரிப்பு தொழிற்சாலைகள் மூலம் சுத்தகரித்து அந்தந்த பகுதிகளில் பகிர்ந்தளித்தது அந்த ஈகிள் ஆயில்ஸ். ஈகிள் டவர்ஸ் இளையவனின் சொந்த முயற்சி.

அந்த வகையில் எண்ணெய் சுத்தகரிப்பு தொழில் செய்யும் ஜெஷுரனுடன் ஏற்பட்ட தொழில் தொடர்பு, நல்ல நட்ப்பாக மலர்ந்திருந்தது ஆரணியின் அண்ணன்கள் இருவருக்கும். அன்பான தன் தங்கை, திருமதி. ஆரணி ஜெஷுரனானல் மரணம் வரை மகிழ்ந்திருப்பாள் என்பது ரக்க்ஷத்தின் கணிப்பு.

பெற்றோர் இல்லாததால் பெரிய அண்ணன் மூலம் இதை ஏற்பாடு செய்யும் முன் இருவரின் இதயத்தையும் அறிந்து கொள்ளும் ஆவல் அவனுக்கு. நண்பன் தானாக வந்து நேற்று தான் பெண் கேட்டானாம். தன் தங்கையிடம் நிரல்யாவை கேட்டு சொல்ல சொன்னான் ரக்க்ஷத்.

அவன் இட்ட பணியை நடைமுறை படுத்துவதன் மூலம் ஆரணியின் இதயத்துள் இருப்பதை அறிய முடிவு செய்தாள் நிரல்யா.

ன்று மதியம் ஆரணியின் வீட்டில் அவளது அறையிலேயே இவர்கள் இருவர் மாத்திரமான தனிமையில் நிரல்யா தன் துப்பறிதலை துவக்கினாள்.

“உன் அண்ணா உனக்கு மாப்பிளை பார்த்திருக்காங்க ஆரு......”

இத்தனை வார்த்தைகளில் ஆரணி அரண்டு மீண்டும் இயல்பிற்க்குள் திரும்பிவிட்டாள்.

“ச்சு..... ஒன்னும் வேண்டாம் நிரு, ஏன் சுத்தி வளைக்கிறீங்க?..... எனக்கு என்ன ப்ரச்சனை ?             அதுதான உங்களுக்கு தெரியனும்.... நான் எப்படியும் உங்கட்ட சொல்லித்தான் ஆகணும்.....சொல்றதாத்தான் இருந்தேன்......”

துப்பறிதல் துவங்கிய இடத்திலேயே சொத்தென்று முடிந்து போனது.

“ஹி..ஹி... சாரி ஆரு, கேட்டா என்ன நினைப்பியோன்னு  நினைச்சேன்...” வழிந்தாள் நிரல்யா. ‘ச்சே! ஒருத்தர் மனசையும் புரிஞ்சுக்க தெரியலை நிரு உனக்கு. கேட்டா சொல்ல போறவட்ட போய் துப்பறிஞ்சு கண்டுபிடிக்க திட்டம்....இதுல ஜாஷ் மாதிரின்னு ஒரு பில்டப் வேற சகிக்கலை.’ மனது ஓட்டியது.

எளிதாக ஆரணி விஷயத்தை சொல்ல வந்த விதத்தில் நிரல்யா நிச்சயமாக இத்தனை பெரிய வேதனையை எதிர்பார்க்கவில்லை என்பது நிஜம்.

இயல்பான குரலில் தொடங்கினாள் ஆரணி. அடுத்தவர் வாழ்வில் என்றோ நடந்த நிகழ்வை சொல்லும் தொனி.

“அகனை பார்த்தவுடனே எனக்கு புரிஞ்சுட்டு, மத்தவங்கள பார்க்கிற மாதிரி என் மனம் அவன பார்க்கலைனு. ஒரே தடுமாற்றம். ரச்சுவோட ஃப்ரண்டுதான் அவனும். எங்க வீட்டில நடந்த ஒரு ப்ரேயர் மீட்டிங்கில்தான் அண்ணா அவனையும் அவன் தங்கையையும் இன்ட்ரிடியூஸ் செய்து வச்சான். ஆரம்பமெல்லான் ரொம்ப நல்லாத்தான் போச்சு. அகனா என்ட்ட வந்து பேச கூட மாட்டான். ஆனாலும் அவன் பார்வை, மத்தவங்கட்ட அவன் பழகிற முறை அவனுக்கும் என் மேல இன்ட்ரஸ்ட் இருக்குதுன்னு எனக்கு தோண வச்சுது.. அவன் மேல உள்ள அட்ராக்க்ஷனில் அவன் தங்கை துவிட்ட அதிகமாகவே ஒட்டிட்டேன். இரண்டு பெரும் சேர்ந்து ஷாப்பிங், சாட்டிங், ஈட்டிங்னு சுத்திட்டு இருந்தோம். இது எதுவும் ரச்சுக்கு தெரியாமல் செய்தது இல்ல.

அப்ப அச்சு அண்ணாவுக்கு மேரேஜ் ஆன புதுசு. அவங்க கூட இருப்பத விட ரச்சு கூட வந்திருக்கலாம்னு எட்மாண்டன்ல தங்காம நான் எல்.ஏ (லாஸ்ஏஞ்சலிஸ்) வந்ததுதான் தப்பு போல.

ஒரு நாள் அந்த துவி என்ன அவளோட வீட்டுக்கு வர சொன்னா, அகன் என்ன விரும்புறதாவும் என்ட்ட பேச ஆசபடுறதாவும் சொல்லி. அகன் மேல இருந்த ஈர்ப்பு, நம்பிக்கை, துணையோட அதுவும் அவன் தங்கையோடதான போறோம், அதுவும் பல வேலை ஆட்கள் இருக்கிற வீட்டுக்குத்தானேங்கிற தைரியம்... துணிஞ்சு போய்ட்டேன். ரச்சுட்ட சொல்ல ஏனோ ஒரு மாதிரி இருந்துச்சு. இரண்டு அண்ணாட்டயும் சொல்லாம நான் முதலும் கடைசியுமா போன இடம்.

வீட்டுக்குள்ள போனதுமே அத்தனை பெரிய வீட்டில் பார்வையில் படுறமாதிரி வேலை ஆட்கள் யாரும் இல்லாதது எனக்கு உறுத்திச்சுதான் .யூ எஸ்ஸில் அதிகமா வேலையாட்கள் எதிர் பார்க்க முடியாதுதான். ஸ்டில் ஒருத்தர் கூட இல்லங்கிறது உறுத்திச்சு. வீட்டோட மத்த பகுதியில் இருக்காங்க. பெர்சனல் கெஸ்ட் வர்றப்ப இடஞ்சலா இடயில வரமாட்டங்கன்னு துவி சொன்னத அப்படியே ஏன் நம்பினேன்னு இப்ப எனக்கு புரியலை. ஹால்ல உட்காந்து கொஞ்ச நேரம் பேசினோம். அண்ணா மாடியில இருக்கான், கூப்பிட்டுட்டு வர்றேன்னு போன துவியோட அலறல் சத்தம்தான் கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு கேட்குது. படியேறி மாடிக்கு ஓடுறேன். முத ரூமில் ஒருத்தரும் இல்ல. அடுத்த ரூம், அடுத்த ரூம்னு நான் தேடிட்டே போறேன், அதே மாதிரி ஒரு ரூம்ல வேகமா உள்ள நுழஞ்சதுதான்......., பின்னால இருந்து என்ன பிடிச்ச அகனோட பிடியிலேயே தெரிஞ்சுட்டு அவன் நோக்கம் என்னன்னு. என்னோட எந்த போராட்டமும் ப்ரயோஜனப்படல........மிருகம்.........மயக்கம் தெளிஞ்சு நான் விழிச்சப்ப ரத்தம் வழியிற தலையோட துவிதான் அழுதுட்டு இருந்தா...... சொந்த தங்கைய அடுத்த அறையில அடிச்சு போட்டுட்டு, இங்க என்ன.....வேட்டையாடிருக்கான்.

ரச்சு எப்படி இவனோட ஃப்ரெண்ட் ஆனான்னு இன்னும் எனக்கு புரியலை. எந்த ஒரு மனுஷனையும் அவ்வளவு சரியா கணிக்கிற அவனே ஏமந்திருக்கான்னா, நான் ஏமாந்தது ஒன்னும் அதிசயமில்ல. ஆனா..... எது எப்படியோ...... இதனாலதான் எனக்கு அண்ணங்களோட தவிர வேற யார் வீட்டிலயும் தங்க தைரியமில்லாம போச்சு.  

நிச்சயத்தன்னைக்கு உன் கண்ணில தண்ணிய பார்த்ததும் நான் பதறுனதுக்கு முக்கிய காரணம் இதுதான். அவசரமான நிச்சயதார்த்தம்.....நீ வேற அழுதுட்டு இருந்தியா..... என்னை மாதிரி ஏதாவது பெருசா.... சாரி அப்படி நினச்சதுக்கு.....பட்......உனக்கு உதவி செய்யணும்னுதான் நினைச்சேன்....ரச்சுக்கு நீ வேண்டாம்னுல்லாம் நினைக்கல... அப்படி ஏதாவது இருந்தா கூட ரச்சு மருந்தா இருப்பானே தவிர விஷமாக மாட்டான்...”

“எனக்கு தெரியும் ஆரு நீ எந்த சூழலிலும் எனக்கு எதிரா எதையும் நினைக்கவேயில்லனு....நீ எனக்கு நட்ப்பா, தங்கையா கிடச்சதுக்கு நான் யேசப்பாவுக்கு கோடி நன்றி சொல்லனும். ஆனா...”

“ஒரு ஆனாவும் இல்ல நிரு.... இத பத்தி ஆராய ஒன்னும் இல்ல. கல்யாணம் பண்றதில்லனு நான் முடிவெடுத்ததும் இதனால தான். அச்சு அண்ணாவையும் ரச்சுவையும் எனக்கு ஒரே அளவுதான் பிடிக்கும், ஆனால் ரச்சுட்ட கொஞ்சம் எஸ்ட்ரா கம்ஃபர்ட். கடைசி வர அவன் வீட்லதான் இருக்கபோறேன். அவன் என்ட்ட ‘நீ ஏன் என் வீட்டில இருக்க’ன்னு கேட்க்கமாட்டான். ஆனா அவன் வீட்டு எஜமானியம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சிருந்தா எல்லாருக்கும் நல்லதுன்னு பட்டுது. அதான் உங்கட்ட சொல்லனும்னு முடிவு செய்தேன்.”

சொல்லி விட்டு, நிரல்யாவின் முகம் நோக்கினாள், பதில் எதிர்பார்ப்பவள்போல்.

“ஆரு நான் உன்னவிட வயசுல பெரியவளா இருந்தாலும், சில விஷயத்துல உன் அளவு பக்குவம் போதாது. எனக்கு தெரிஞ்சத சொல்றேன். சரின்னு பட்டா எடுத்துகோ, தப்புனு பட்டா விட்டுடு...... கற்ப யாரும் அழிக்க முடியாது, இழக்கதான் முடியும். நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்....விருப்பபட்டு நீ செய்திருந்தன்னா அது பாவம், உனக்கு நடந்தது ஆக்ஸிடெண்ட். காட்டு விலங்குட்ட மாட்டின மாதிரி நீ மனுஷ விலங்குட்ட மாட்டிட்ட. அதுவும் நம்புனவனே... வாழ்க்கைக்கும் துணையா வருவான்னு நினச்சவனே.. இப்படி நடந்துகிட்டா உன்னோட வலி......ஏமாற்றம்.... குற்ற உணர்ச்சி எல்லாம் எனக்கு புரியுது. ஆனால் ஆக்ஸிடெண்ட் நடந்தா ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு திரும்ப வந்துடனும். விழுந்த இடத்திலயே நினைவு சின்னம் கட்டிட்டு சமாதியாகிட கூடாது....த.....”

பேசிக்கொண்டிருந்தவளை ஆரணி எழுந்து வந்து கட்டிகொண்டாள்.. “அண்ணா செலக்க்ஷன்கிறப்பவே உங்க மேல படு நம்பிக்கை தான். ஸ்டில்..... தேங்க்ஸ்......... தேங்க்ஸ்......... தேங்க்ஸ் நிரு. உண்மைய புரிஞ்சுகிட்டதுக்காக.....வாழ் நாளுக்கும் என்னை எதையோ இழந்தவளா, தோத்தவளா...தீட்டுபட்டவளா....”

“அப்படி பேசாத ஆரு” என்ற படி நிரல்யா ஆரணியின் வாய் நோக்கி நீட்டிய கையை புன்னகையுடன் பிடித்துகொண்ட ஆரணி தொடர்ந்தாள்.  “அப்படி எல்லாம் நினைக்காம இயல்பா நடத்த போறதுக்காக கோடி தேங்க்ஸ். யேசுவின்  தழும்புகளால் குணமாகிறோம்னு தேவ வார்த்தை சொல்லுது. அந்த ஹீலிங் அழிய போற உடம்புக்கு கிடைக்கிறதவிட சர்வ நிச்சயமா காயம் பட்ட மனசுக்கு கிடைக்கும். அதனாலதான் நான் பழைய ஆருவா மாற முடிஞ்சுது. என்றவள்

“நிரு நீங்க எதுக்கு ரச்சுவ முதல்ல வேண்டாம்னு சொன்னீங்க” என்ற எதிர் பாராத குண்டை எடுத்து வீசினாள். நிரல்யா நடுங்கி போனாள் நொடி நேரம். எதை சொல்வாள் ஆரணியிடம்?. எதை மறைப்பாள்? உயிர் போனாலும் ஜாஷ் பத்தி வாயை திறக்க கூடாதே!!!

ஆனால் இவள் பதிலை ஆரணி எதிர் பார்த்தது போலவே தெரியவில்லை. இடைவெளியே இன்றி தொடர்ந்தாள். “எப்படி இத மறந்தேன்? அன்னைக்கே இத செய்திருக்கனும்” என்று தானாக பேசிக்கொண்டவள், “ஒரு நிமிஷம் உங்களுக்காக ஜெபிச்சுகிறேன்பா” என அனுமதி போல் கேட்டாள். இவள் தலையில் கை வைத்து ஜெபித்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.