(Reading time: 18 - 36 minutes)

07. சிறகுகள் - பாலா

ன்று எல்லோரும் ஸ்ரீராமின் வீட்டிற்கு கொலுவிற்காக செல்வதாக ஏற்பாடு. எல்லோரும் ஒன்றாக செல்லலாம் என்று பேசி வைத்துக் கொண்டு, அதற்கேற்றார் போல எல்லோருக்கும் வசதி படுமாறு அன்று செல்வதாக இருந்தார்கள்.

அதனால் அன்று மாலை பெண்கள் யாருக்கும் கடைசி க்ளாஸ் போடாமல் அவர்கள் எல்லோரும் மட்டும் வீட்டிற்கு சென்று தயாராகி வரலாம் என்று சொல்லியிருந்தான் கௌசிக்.

ஆனால் அதிலும் ஜமுனாவை மட்டும் விடாமல் அவளுக்கு கடைசி வகுப்பும் போட்டு அவளை டென்ஷன் செய்து கொண்டிருந்தார்கள்.

Siragugal

“டேய் இப்ப என்ன சீக்கிரம் அனுப்ப முடியுமா முடியாதா” என்று கத்திக் கொண்டிருந்தாள் ஜமுனா.

“முடியாது” கூலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான் கெளசிக்.

பக்கத்தில் தௌலத்தும், தேன்மொழியும் இருந்தும் அவர்களும் ஏதும் கேட்காமல் அந்த விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, திரும்ப அவனிடம் வரிந்துக் கட்டிக் கொண்டு சண்டையிட்டாள் ஜமுனா.

“கடைசியா என்ன தான் டா சொல்ற”

“ஏய் நான் முதல்ல இருந்தே இதை தான் சொல்றேன். கடைசியில என்ன சொல்றன்னா என் பதில் இதே தான்” என்று சிரித்தான்.

“கிருஷ்ணா எல்லாருக்கும் க்ளாஸ் அலாட் செஞ்ச வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. இப்ப நீ செய்யற லொல்லு இருக்கே, இரு நான் யார் கிட்ட பேசணுமோ அங்க பேசிக்கறேன்”

“பேசிக்க பேசிக்க”

சரியாக அப்போது ஸ்ரீராம் வந்தான்.

“ராம் இவனை என்னன்னு கேளு”

“என்ன ஜமுனா, யாரை என்னன்னு கேட்க சொல்ற” என்று அக்கரையாக அவன் கேட்கும் போதே அவள் புரிந்துக் கொள்ளாமல் போனது கொஞ்சம் அதிசயம் தான்.

“பாருடா, உங்க வீட்டுக்கு வரர்துக்கு எல்லாருக்கும் லாஸ்ட் க்ளாஸ் ப்ரீ பண்ணி விட்டுட்டு எனக்கு மட்டும் இந்த மங்கி க்ளாஸ் போட்டு வச்சிருக்கு”

“எந்த மங்கி மா”

“டேய் இந்த வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காத”

“என்ன ஜமுனா” என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவனை பார்த்து கௌசிக், தேன்மொழி, தௌலத் எல்லோரும் சிரித்தனர்.

எல்லோரையும் திரும்ப முறைத்து விட்டு “கொழுப்பா” என்றாள்.

திரும்பவும் அதே மாதிரி “என்ன ஜமுனா” என்றான்.

கடுப்பான ஜமுனா “எனக்கு எங்க என்ன செய்யனும் தெரியும் டா. இன்னைக்கு உங்க வீட்டுக்கு தானே எல்லாரும் வறோம், அப்ப பார்த்துக்கறேன்” என்றவாறே ஜாடையாக தேன்மொழியைப் பார்த்தாள்.

வெளியில் சிரித்துக் கொண்டே (உள்ளே கொஞ்சம் பதறிக் கொண்டே) “இப்ப சொல்லு, இந்த கௌசிக் என்ன செஞ்சான் சொல்லு” என்றான்.

‘அப்படி வா வழிக்கு’

“இப்ப எப்படி உனக்கு திடீர்ன்னு அது கௌசிக் தான்னு தெரிஞ்சது”

“விடும்மா விடும்மா, நீ விஷயத்துக்கு வா”

“அதான் ஏற்கெனவே சொன்னேன் இல்ல”

“என்ன கௌசிக், ஏன்டா ஜமுனாக்கு மட்டும் க்ளாஸ் போட்டு வச்சிருக்க” என்று அவனை பார்த்து கண்ணடித்தவாறே கேட்டான்.

ஆனால் கௌசிக்கோ அதை கவனிக்காமல் “என்னடா நீ தானே இப்படி செய்ய சொன்ன” என்று விஷயத்தை போட்டு உடைத்தான்.

ஜமுனாவோ இப்போது ஸ்ரீராமை முறைக்க, ஸ்ரீராமோ கௌசிக்கை முறைத்தான்.

“ஏய் நான் ஒன்னும் சொல்லலை ஜமுனா, இவன் சொல்றதை வச்சி என்னை சந்தேகப் படாத”

“என்னடா ராம்” என்ற கௌசிக்கைப் பார்த்து “யார் மேன் நீ” என்றான்.

ஜமுனாவிற்கு அவர்களின் விளையாட்டு புரிந்ததால் “இப்ப என்ன தான் சொல்றீங்க” என்றாள்.

கௌசிக் பேசுவதற்கு முன் முந்திக் கொண்ட ஸ்ரீராம் “நீ இப்பவே கூட கிளம்பு டா, உனக்கு வேலை இருக்கும்” என்றான்.

“அது. இப்ப எனக்கு க்ளாஸ் இருக்கு. உன்னை எப்ப கவனிக்கனுமோ அப்ப கவனிச்சிக்கறேன்” என்றவளாக கிளம்பினாள்.

அவள் சென்றவுடன் கௌசிக் ஸ்ரீராமை திட்டிக் கொண்டிருந்தான்.

“அடப்பாவி. உன்னை நம்பி ஒரு வேலை கூட செய்ய முடியாது டா. கொஞ்ச நேரம் அவளை கதற விடலாம்ன்னு சொல்லிட்டு நீ வந்த உடனே அப்படியே ப்ளேட்டை மாத்தி போடற, இதை ப்ளான் பண்ணதே நீ தான். பட் என்ன சொன்ன. ப்ராட்”

அவனை சிரித்துக் கொண்டே சமாளித்தான் ஸ்ரீராம்.

விசாலாட்சி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்க, சுபா அவர் சரியாக செய்ததில் ஏதாவது மாற்றத்தை செய்து அந்த விஷயத்தை தவறாக்கி அவருக்கு டென்ஷன் அளித்துக் கொண்டிருந்தாள்.

“நீ எனக்கு உதவி செய்யலைன்னா கூட பரவால்ல டீ. ஆனா உதவி பண்றேன்ற பேர்ல உபத்தரத்தை செஞ்சி வைக்காத”

“ஏன் மா, இப்ப நான் என்ன செஞ்சிட்டேன். இருங்கம்மா பாத்துட்டே இருங்க. உங்க பொண்ணை இப்படி எல்லாம் செய்யறீங்க. உங்க மருமக வரட்டும். அப்ப தான் உங்களுக்கு என்னோட அருமை தெரியும். உங்க மருமக எல்லாம் உங்களை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டாளாக்கும்”

“பாரு நீயே கரெக்டா சொல்லிட்ட. என் மருமக நான் அவளை ஒரு வார்த்தை குறை சொல்ற மாதிரி விட மாட்டாளாக்கும்”

சுபஸ்ரீக்கு பொறாமை உணர்வு தலை தூக்க “ஏம்மா இது உங்களுக்கே நல்லா இருக்கா. அங்கங்க பொண்ணுங்களை எப்படி தாங்கு தாங்குனு தாங்கறாங்க. நீங்க என்னடான்னா இல்லாத மருமகளை உசத்தியா பேசி உங்க மகளையே தாழ்த்தி பேசறீங்க” என்றாள் கோபமாக.

அவளை ஆழமாக பார்த்தவர் “இப்ப நான் உன்னை என்ன சொல்லிட்டேன்னு இப்படி பேசற சுபா. நான் உன் அம்மா நீ செய்யறது தப்புன்னா அதை தப்புன்னு சொல்ற உரிமை எனக்கு இருக்கு. அதை நான் சொல்லிட்டிருக்கும் போது, நீ சொல்ற அதே இல்லாத மருமகளை பத்தி நீ தான் எடுத்த, நான் அதுக்கு பதில் தான் சொன்னேன். அப்புறம் என்ன சொன்ன, அங்கங்க பொண்ணுங்களை தாங்கறாங்களா. உனக்கு இங்க மட்டும் என்ன குறை. அவன் உன்னோட தம்பி தான். பெரிய பொண்ணு தான் விட்டு குடுக்கணும்ன்னு எல்லாம் நான் சொல்ல வரலை. ஆனா தப்பு உன் மேல இருந்தா கூட, அவன் சரி நம்ம அக்கா தானேன்னு அமைதியா போய்டுவான். அவன், உங்க அப்பா, நான், இதுல யாரு உன்னை என்ன செஞ்சிட்டோம்ன்னு இப்ப இல்லாத மருமகளை பத்தி பேசி நீ சண்டை வைக்கற. ஒண்ணு மட்டும் கேட்டுக்க. நீ சொல்ற மத்த வீடு மாதிரி இங்க இருக்காது. இங்க உனக்கு காலத்துக்கும் உரிமை இருக்கு. அதை நான் மறுக்கல. ஆனா இங்க மருமகன்னு வர பொண்ணுக்கும் உனக்கு இருக்கற அதே உரிமை இருக்கும். அதை மட்டும் நீ நியாபகம் வச்சிக்க”

அவரின் பேச்சில் அவளின் பகை தான் இன்னும் அதிகரித்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.