(Reading time: 18 - 36 minutes)

 

வீட்டிற்கு வந்த விருந்தாளியை அவர் திட்ட மாட்டார் தான், இருந்தும் அவர் மனதிலாவது ஏதாவது நினைத்துக் கொண்டால், என்ன செய்வது, இதே எண்ண ஓட்டமே அவனை சுற்றி வந்தது.

ஒரு வழியாக அவன் எண்ண ஓட்டத்தை தடை செய்ய தேன்மொழி வந்தே விட்டாள்.

ஆனால் அவளை பார்த்தவனுக்கு தான் ஆச்சர்யம் (அதிர்ச்சி),

காலையில் அழகிய புடவையில் வந்தவள் இப்போது சுடிதாரில் வந்துக் கொண்டிருந்தாள்.

என்ன இவள் சுடிதாரில் வருகிறாளே என்று எண்ணும் அதே வேளையில், இதுவும் அழகாக தான் இருக்கிறது. இருந்தாலும், முதல் முறை வீட்டிற்கு வரும் போது சேலையிலேயே வந்திருக்கலாம் என்று தோன்றியது.

அதற்கும் மேலாக, அவன் எண்ணியவாறே, வளையல் அணியாமல் தான் வந்தாள் அவள்.

இதை எல்லாம் எண்ணியவனாக அவன் யோசனையில் நின்று கொண்டிருக்க, அவர்கள் இவனருகில் வந்து விட்டிருந்தார்கள்.

இவன் ஏதும் பேசாமல் இருக்க, “என்ன சார். வாங்கன்னு கூப்பிட மாட்டீங்களா” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

ஏதோ தூக்கத்தில் இருந்து விழித்தவனை போல விழித்தான் ஸ்ரீராம்.

தேன்மொழி வியப்பாக பார்க்க, “என்னடா, உள்ளே விடற ஐடியா இருக்கா, இல்லையா, வாங்கன்னு கூட சொல்ல மாற்ற” என்றாள்.

தலையை உதறிக் கொண்டு தெளிவானவன் “வான்னு சொல்லலைன்னா வர மாட்டியா, வா வா” என்றவன் தேன்மொழியைப் பார்த்து “வாங்க தேன்மொழி, இவங்க, ஓ இவங்க உங்களோட தங்கச்சியா, வாம்மா, வாங்க உள்ளே போகலாம்”

‘இவன் மச்சினியை இந்த தாங்கு தாங்கறான். என்னை இப்படி இன்சல்ட் செஞ்சிட்டு போறான், இரு மகனே உனக்கு இருக்கு’ என்று சபித்துக் கொண்டே உள்ளே சென்றாள் ஜமுனா.

திரும்ப விசாலாட்சி வந்து இவர்களை வரவேற்க, சுபஸ்ரீயும் வந்து பேசினாள்.

சிறிது நேரம் எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

இவர்களிடம் வந்த விசாலாட்சி எதேர்ச்சையாக தேன்மொழியின் கைகளை பார்த்தவர் “என்னம்மா. வளையல் போடாம இருக்கியே” என்றார்.

அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் பார்த்தாள்.

மலர் தான் அவள் என்ன சொல்வாள் என்று ஆவலுடன் பார்த்தாள்.

பின்னே, அவள் தாய் எத்தனை தடவை சொல்லியிருப்பார் வளையல் போடுடி என்று. ஆனால் அக்கா கேட்டாளா, அவளுக்கு வேண்டும் என்று எண்ணியவாறு அவள் திணறுவதை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் விசாலாட்சி அவர் கையில் இருக்கும் வளையலை கழட்டி “இந்தா போட்டுக்கோ, கையில வளையல் இல்லாம இருக்கக் கூடாது. அதுவும் சாமி கும்பிடும் போது வளையல் இல்லாம இருக்கவே கூடாது” என்று தந்தார்.

“ஐயய்யோ என்ன ஆன்ட்டி இது. இப்படி கோல்ட் வளையல் கிழட்டி தறீங்க. ஏதாச்சும் கண்ணாடி வளையல் இருந்தா தாங்க. ப்ளீஸ்”

அவளின் ப்ளீஸ் எல்லாம் அங்கு வேலை செய்யவே இல்லை.

“ஏதும் பேசாத. போடு” என்றவறாக அவள் கையில் அணிவித்து விட்டே சென்று விட்டார் அவர்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனம் ‘இதிலிருந்தே தெரியவில்லையா, அவள் தான் இந்த வீட்டின் மருமகள் என்று’ என்று கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தது.

அதற்கு பதில் தராதவனை பார்த்து ஏளனமாக சிரித்து ‘அவளின் ஆடைகளில் இருந்து, அவள் கையில் வளையல் அணிகிறாளா என்பது வரை துள்ளியமாக தெரிந்து வைத்திருக்கிறாய். ஆனால் நீ அவளை காதலிக்கவில்லை இல்லையா’ என்று கேட்டது.

அது அவனுக்கே கூட ஆச்சரியம் தான். அவன் எப்போதும் உன்னித்து இதை எல்லாம் கவனித்ததாக அவனுக்கு நினைவில்லை. ஆனால் இதெல்லாம் அவனுக்கு தெரிந்திருக்கிறதே.

எல்லோரும் அவனை ஒரு மாதிரி பார்ப்பதை போல இருக்க, இந்த சிந்தனையை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி அங்கு என்ன நடக்கிறது என்று கவனம் செலுத்தினான்.

க்கம்பக்கத்தினரும், சில உறவினர்களும் வந்த பின்பு யாராவது பாட வேண்டும் என்று கூற ஒவ்வொருவரும் மற்றவர்களை கூற, எல்லோரும் மறுத்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டில் ஒரு சிறு பெண் பாடினாள்.

பின்பு சுபஸ்ரீயின் மகள் கீர்த்தி பாடினாள். அவள் இப்போது தான் சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறாள். ஓரளவு நன்றாகவே பாடினாள்.

திரும்ப எல்லோரும், யாரையாவது பாட சொல்ல, ஸ்ரீராம் தேன்மொழி பாடுவாளா என்று ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையைக் கண்ட ஜமுனா சிரித்துக் கொண்டே, தேன்மொழியை பாட சொன்னாள்.

“ஐயய்யோ, எனக்கு பாட வராது, என் தங்கச்சி நல்லா பாடுவா” என்று மலரை மாட்டி விட்டாள்.

மலர் எவ்வளவோ கதறியும் விடாமல் அவளை பாட வைத்தார்கள்.

மலர் ஒரு கிருஷ்ணன் பாடலை பாடினாள்.

அவள் குரல் அவ்வளவு தெளிவாக இருந்தது. பாடலை லயித்துப் பாடினாள்.

எல்லோரும் மலரை மிகவும் பாராட்டினார்கள்.

பின்பு எல்லோரும் ஏதோ அவரவர் சின்ன வட்ட மேஜை மாநாடு நடத்திக் கொண்டிருந்தனர். ஸ்ரீராமின் கண்கள் மட்டும் தேன்மொழியையே சுற்றி வந்துக் கொண்டிருந்தது.

அக்கம்பக்கத்து வீட்டிலிருந்த எல்லா சிறுவர், சிறுமியர்களும் அங்கு வந்திருக்க, மலர் எல்லோருடனும் சேர்த்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். ஜமுனாவும் அவளுடன் சேர்ந்துக் கொண்டாள்.

அங்கு எல்லோரும் சிறுவர்களோட சிறுவர்களாகி விட, தேன்மொழி அதை எல்லாம் ஒரு தாய்மையுணர்வோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அக்கம் பக்கத்திலிருந்து வந்தவர்கள் எல்லோரும் கிளம்பி விட, தேன்மொழியும் “நேரமாயிடுச்சி. கிளம்பலாம்” என்று ஜமுனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதற்குள் அங்கு சென்ற ஸ்ரீராம் “எல்லாரும் போட்டோ எடுத்துக்கலாம். அப்புறம் கிளம்பலாம்” என்று சொன்னான்.

பின்பு எல்லோரும் மாற்றி மாற்றி போட்டோ எடுத்துக் கொண்டே நேரத்தை கடத்தினர்.

நண்பர்கள் எல்லோரையும் சேர்த்து சுபஸ்ரீ போட்டோ எடுத்தாள்.

ஸ்ரீராமின் பேமிலியோடு சேர்த்து இவர்களை கிருஷ்ணா போட்டோ எடுத்தான். அதில் எல்லோரும் மாற்றி மாற்றி நின்றுக் கொண்டிருக்க, சுபஸ்ரீயின் பக்கத்தில் தேன்மொழி நின்று கொண்டிருந்தாள்.

தேன்மொழியை பார்த்தவள் சிறிது புன்னகை புரிந்து “கொஞ்சம் மாத்தி நின்னுக்கோங்க. நம்ம ரெண்டு பேரும் பக்கத்துல நின்னா கான்ட்ராஸ்ட்டா இருக்கும்” என்று கூறவும் மலர் டென்ஷன் ஆகி விட்டாள்.

அவள் கோபத்தில் ஏதோ கூற வர, அவள் கையைப் பிடித்து தடுத்த தேன்மொழி, “பரவால்ல இருக்கட்டும். கான்ட்ராஸ்ட்டாவே இருந்துட்டு போகட்டும். இன்னும் நீங்க என் பக்கத்துல அழகா தானே தெரிய போறீங்க” என்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.