(Reading time: 10 - 19 minutes)

01. இரு கண்ணிலும் உன் ஞாபகம் - வத்ஸலா

பேய்க்கதை எழுத வேண்டும் என்பது எனது நீண்ட  நாள் ஆசை. ஆனால் எழுத வருமா என்றும் தெரியவில்லை. அதனால் முதல் முயற்சியாக ஒரு சின்ன தொடர் எழுதலாம் என இந்த கதையை துவங்கி இருக்கிறேன். இந்த கதையை படித்துவிட்டு கொஞ்சமாவது பேய் கதை மாதிரி இருக்கிறதா என்று சொல்லுங்கள்.

கொலுசு.!!!!

அணிகலன்களிலேயே மாதங்கிக்கு மிகவும் பிடித்தது கொலுசுதான்.

iru kannilum un nyabagam

பளபளவென துடைத்து வைத்திருந்த தனது கொலுசை அணிந்துக்கொண்டாள் மாதங்கி. அவளிடம் நகை என்ற பெயரில் இருப்பது அது மட்டுமே. அவளுக்கென்று அவள் அம்மா கொடுத்ததில், அவளிடம் இருப்பது இந்த கொலுசு மட்டுமே. மற்றபடி கை நிறைய கண்ணாடி வளையல்கள். கழுத்திலும், காதிலும் கவரிங் நகைகள் மட்டுமே.

மாலை மணி ஐந்து. தனக்குள்ளே என்ன விதமான உணர்வுகள் எழுந்துக்கொண்டிருக்கின்றன என்று புரிந்துக்கொள்ளவே முடியவில்லை மாதங்கியால்.

காலையில் எழுந்த போது கூட இதையெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை அவள்.

வீட்டின் பின்னால் இருந்த கிணற்றடியில், காலை ஐந்து மணிக்கு அவள் பல் தேய்த்துக்கொண்டிருந்த போது அங்கே ரகசியமாய் வந்த அவளது மாமா, அவளது பெரிய அக்காவின் கணவர் ரவி அவளிடம் மெல்ல சொன்னார். 'இன்னைக்கு உன்னை பெண் பார்க்க வராங்கமா.'

அவள் முகத்தில் பரவிய திகைப்பை புரிந்துக்கொண்டவராய் சொன்னார் 'நல்ல வாழக்கை உன்னை தேடி வருதும்மா. சந்தோஷமா சரின்னு சொல்லு.' சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார் அவர்.

யார் மாப்பிள்ளை? எப்படி திடீரென்று? எதுவுமே புரியவில்லை அவளுக்கு. அவரிடம் அதற்கு மேல் எதுவும் கேட்கவும் முடியாது. வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? தெரியாதா? அதுவும் புரியவில்லை அவளுக்கு.

அவள் இருக்கும் இந்த ஊர் ஒரு கிராமம். நிறைய மரங்களும், வயல்வெளிகளும் நிறைந்த ஒரு அழகான கிராமம். ஊர் கோடியில் ஒரு மருத்துவமனை, ஊருக்குள் ஒரு பள்ளிக்கூடம், ஒரு அழகான கோவில்  இவையே இந்த கிராமத்தின் அடையாளங்கள்.

அப்பா அம்மாவுடன் இருந்தவரை வாழ்கை வேறு விதமாக இருந்தது. படித்து முடித்து விட்டு அவள் முன்பு இருந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள் மாதங்கி. ஆனால் இப்போதுதான் மாறிப்போனதே அவள் தலைவிதி.

காலை முதல் இரவு வரை வீட்டில் எல்லாருக்கும், எல்லா வேலைகளையும் செய்து கொண்டே இருக்க வேண்டும் அவள். வேலை செய்வது கூட பெரிய விஷயம் இல்லை. வீட்டில் இருக்கும் யாருமே அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டார்கள். அதுதான் அவளுக்கு  பெரிய வலி. அவளது பெரிய அக்காவின் கணவர்  எப்போதாவது  பேசுவார் அவளிடம். அவளையும் ஒரு மனிதப்பிறவியாய் பார்ப்பது அவர் மட்டுமே.

தெரிந்தவர்களோ. தெரியாதவர்களோ யாரவது தன்னிடம் பேசி விட மாட்டர்களா? என்று மனம் ஏங்கிகொண்டே இருக்கும் அவளுக்கு.

னக்கு தெரிந்த வரையில் தன்னை எளிமையாக அலங்கரித்துக்கொண்டாள் மாதங்கி.  கருநீல நிற சேலையும், நெற்றியில் வட்டமான போட்டும், பின்னி முடித்த நீள் கூந்தலுமாய். தன்னைதானே  கண்ணாடியில் பார்த்து புன்னகைத்துக்கொண்டாள் .மற்றவர்கள் யாரும் அவள் அருகில் கூட வரவில்லை. பின்னியிருந்த அவள் கூந்தலுக்கு ஒரு முழம் பூ சூட்டி விடகூட ஆளில்லை அங்கே.

ஆனாலும் அவள் மனதின் ஓரத்தில் ஒரு இனம் புரியாத, வெளியில் சொல்ல முடியாத  சந்தோஷம் இருக்கத்தான் செய்தது.

எனக்கு திருமணமா? யாராம் அது என்னை திருமணம் செய்துக்கொள்ளபோவது.? உனக்கு ஒரு நல்ல வாழ்கை தேடி வருதும்மா' என்றாரே அவர். நிஜம்தானா? நான் இத்தனை நாட்களாய் கிடைத்து விடாதா ஏங்கிக்கொண்டிருக்கும் அன்பு எனக்கு கிடைத்து விடுமா?

வீட்டு ஹாலில் பேச்சு சத்தம் கேட்க உள்ளுக்குளே சில்லென்ற ஒரு உணர்வு பரவியது. வந்து விட்டார்களா எல்லாரும்.? சுவாசம் கொஞ்சம் தடுமாறுவது போலே கூட இருந்தது.

சில நிமிடங்கள் கழித்து  அவளது பெரிய மாமாவின் அழைப்பு கேட்டது. மனதிற்குள் நிறைய வெட்கமும் கொஞ்சம் சந்தோஷமும் போட்டி போட, , மெல்ல நடந்து ஹாலுக்கு வந்தாள் மாதங்கி.

அங்கே அவளது இரண்டு அக்காக்கள் சுமதியும், ராஜியும் நின்றிருந்தனர். இரண்டாவது அக்கா ராஜிக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. அவர்களின் பார்வை அவளை அப்படியே விழுங்கியது.

சம்பிரதாயமாய் எல்லாரையும் வணங்கியவள், மனமெங்கும் நிறைந்திருக்கும் வெட்கத்துடனும் நிறைய தயக்கத்துடனும் மெல்ல மெல்ல இமைகளை நிமிர்த்தினாள் மாதங்கி.

வந்திருந்தவர்களின் மீது அவள் பார்வை படர்ந்தது. அங்கே ஒரு கணவன் மனைவி, ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்தனர்.

புரியவில்லை அவளுக்கு. மாப்பிள்ளை வரவில்லையோ?

'பாவம். கண்ணெலாம் இப்படி தவிக்குதே உனக்கு. நீ தேடுற ஆள் இன்னைக்கு வரலையே என்ன செய்ய?.' என்றபடியே அவளருகே குழந்தையுடன் வந்தாள் அந்தப்பெண்.

மாதங்கியை விட இரண்டு மூன்று வயது மூத்தவளாக இருக்ககூடும் அவள். அவள் யாரென்று புரியதாவளாய் பார்த்தாள் மாதங்கி.

'என்ன இப்படி திரு திருன்னு பார்க்கிறே? என்னைப்பத்தி எல்லாம் உன்கிட்டே சொன்னதே இல்லையா உன் ஹீரோ. நான் அவனோட அண்ணி கவிதா'.

ஓ! என்று நட்பாக புன்னகைத்தவளுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. 'யாராம் அந்த ஹீரோ.?

அங்கே இருந்த மற்ற இரண்டு அக்காக்களின் கண்களில் பொறாமையும், கொஞ்சம் கோபமும் பரவ துவங்கியது. ' மாதங்கி காதலிக்கிறாளா என்ன?

நல்ல வேளையாக ' சரி சரி உள்ளே வா பேசுவோம் என்றபடி உள்ளே நகர்த்திக்கொண்டு சென்றாள் கவிதா.

உள் அறைக்கு சென்று அறையை சுற்றி பார்வையை சுழலவிட்டபடி அங்கே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தாள் கவிதா.

அவள் மடியில் இருந்தது அந்த மூன்று வயது பெண் குழந்தை. அதன் அழகும் புன்னகையும் மாதங்கியின் மனதை அப்படியே கொள்ளையடித்தது. அதை நோக்கி மாதங்கி கை நீட்ட அவளிடம் தாவியது அந்த குழந்தை.

உன் பேரென்ன? என்றாள் மாதங்கி.

அபூர்வா..

ஹை! அப்போ அப்புக்குட்டியா நீ? குழந்தையை தன்னோடு இறுக்கிக்கொண்டாள் மாதங்கி. அவளுக்கென்று ஒரு புது சொந்தம் கிடைத்தது போலே ஒரு உணர்வு பிறந்தது.

'ஆங். போதும். போதும் கொஞ்சம் மிச்சம் வெச்சுக்கோ' என்றபடியே எழுந்து அவள் அருகில் வந்த கவிதா அவளிடம் கேட்டாள் 'அப்படி என்ன மந்திரம் போட்டே அவனுக்கு? கட்டினா உன்னைதான் கட்டுவேன்னு ஒத்தை காலிலே நிக்கறான்.

யாரு? நிஜமாகவே எதுவுமே புரியாமல் கேட்டாள் மாதங்கி.

யாரா? அது சரி. எல்லாம் உன் ஹீரோதான்.

எனக்கு.. என..க்கு அப்படியெல்லாம் யாரையும் தெரியாதே.! கொஞ்சம் தவிப்பாய் சொன்னாள் மாதங்கி.

ஹேய்! பொய்யெல்லாம் சொல்லாதே. கொஞ்ச நாள் முன்னாடி கூட கையை பிடிச்சிட்டு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தீங்கன்னு சொன்னான் அவன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.