(Reading time: 14 - 27 minutes)

 

வாங்கோ வாங்கோ, I am Raman, Ramanathan (இது என்ன அப்பா I’m bond, james bond லெவெல்ல  intro கொடுக்கறார், உள்ளறையில் இருந்து கௌரி மனதிற்குள் கேட்டுக்  கொண்டாள்),  இது என்னோட wife ஜானகி, son ஹரி.  அப்புறம் இவர் என்னோட மச்சினர் வைத்தி.  LICல வேலையா இருக்கார்.”, எல்லோரையும் அறிமுகப்படுத்தியபடியே கூடத்தில் இருந்த சோபாவில் அமர வைத்தார்.

“ரொம்ப சந்தோஷம் உங்களை எல்லாம் மீட் பண்ணினதுல. நான் பத்மநாபன் அலைஸ் பத்து (ஹா இந்த மாமாவும்  நம்ம அப்பாக்கு மிஞ்சினவர் இல்ல போல இருக்கே, again நம்ம கௌரிதான் மனசோட talking), இது என்னோட தர்ம பத்தினி லக்ஷ்மி, அண்ட் எம்பொண்ணு ஸ்வேதா, வைத்தி உங்க டிபார்ட்மென்ட்லதான் என் ஷெட்டகரோட, சித்தப்பாவோட, ஒண்ணு விட்ட மச்சினன் பையன் வேலை செய்யறான்.  அவன் பேரு கூட, லக்ஷ்மி அவன் பேரு என்னடி”, என்று படு ஆர்பாட்டமாக பெண் பார்க்கும் படலத்தைத்  துவக்கி வைத்தார் பத்து.

ஆமா இவருக்கு எம்பேரே பாதி நேரம் மறந்து போகும், இதுல மூணு விட்ட உறவுமுறை ரொம்ப முக்கியம், மனதுக்குள் பேசியபடியே (சாதரணமா நம்ம லச்சு மாமி மைக் செட் வைச்சு எல்லாருக்கும் கேக்கறா மாதிரிதான் சொல்வா, இன்னொரு வீடா அதுவும் பொண்ணு வீடா வேற போய்ட்டதால மனசோட நிறுத்திட்டா)

“எனக்கும் சட்டுன்னு ஞாபகத்துல வரல.  நம்மளே பேசிண்டு இருந்தா எப்படி பொண்ணை வர சொல்லுங்கோ. பாவம் அவ மட்டும் உள்ளுக்குள்ள மொட்டு மொட்டுன்னு உக்கார்ந்து இருக்கா.”(ஹா மாமி வாழ்க.  எத்தனை நேரம்தான் இந்த புடவையை கட்டிண்டு உக்கார்றது.  சீக்கிரம் பார்த்துட்டு போய்ட்டா  மொதல்ல அவுத்துட்டு நைட்டி மாத்திக்கலாம், வேற யாருங்க எல்லாம் நம்ம கௌரிதான்)

“நீங்க மொதல்ல பலகாரம் எடுத்துக்கறேளா, அப்பறமா அவளை வர சொல்லட்டா”, ஜானகி படு பதவிசாக கேட்டாள்.(கௌரி ஒரு நிமிடம் இது நம்ம அம்மா குரல்தானா, இல்லை பின்னாடி ஏதானும் ரெகார்டிங் ஒடறதான்னு confuse ஆகிட்டா,ஏன்னா மாமி குரல்ல அத்தனை softness)

“எதுக்கு மாமி அவளும் வரட்டும், எல்லாரும் சேர்ந்து பேசிண்டே எடுத்துக்கலாம்.  இது ஒரு friendly visit மாதிரிதான்.  நீங்க ரொம்ப formalaa இருக்காதீங்கோ.   நீங்க போய் உங்க பொண்ணை  கூட்டிண்டு வாங்கோ, அப்புறம் எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம்”, ஜானுவைவிட  படு  பதவிசாக பதிலளித்தாள் லச்சு மாமி. (ரெண்டு மாமாக்களும்தான், பேஸ்த்து அடித்து உக்கார்ந்து இருந்தார்கள், இத்தனை பதவிசா பேசறது நம்மாளுதானா என்று)

ஜானகி உள்ளே சென்று கௌரியை அழைத்து வர, கௌரி எல்லாருக்கும் பொதுவாக ஒரு நமஸ்காரம் பண்ணினாள்.  (உள்ள இருந்து வரும்போதே ஜானகி காதோரம் ஓதியபடியேதான் வந்தார், அதுதான் அந்த நமஸ்காரம், இல்லேன்னா நம்ம கௌரி ஒரு சல்பேட்டா வணக்கம் வைக்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தாள்)

“வாம்மா வந்து பக்கத்துல உக்கர்ந்துக்கோ, நான்தான் லக்ஷ்மி, இவர் என் ஆத்துக்காரர், இவோ என் பொண்ணு ஸ்வேதா, உன்னை மாதிரியே இன்ஜினியரிங் முதல் வருஷம் படிக்கறா”, மறுபடியும் கௌரிக்காக ஒரு முறை அறிமுகப் படலத்தை நடத்தினார் லச்சு மாமி.

“அப்படியா.  நீ எந்த காலேஜ்ல படிக்கற, மெயின் என்ன கிடைச்சுருக்கு”, என்று உடனே வள வள என்று ஸ்வேதாவுடன் கதை பேச ஆரம்பித்தாள் கௌரி.(பாவம் அவளுக்கும் முதல் முறைங்கரதால என்னதான் முயற்சி பண்ணியும் வாய மூடிண்டு அடக்க ஒடுக்கமா performance கொடுக்க முடியலை)

அவள் பேச ஆரம்பித்த மறு நிமிடம் ஸ்வேதா பிளாட்.  ஆஹா இவங்க நம்மளை விடப் பெரிய ஆளு போல இருக்கேன்னு.  நம்ம ஜானு மாமிக்குத்தான் நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் ஆச்சு.

இவளை விட்டால் வந்தவர்களை பேசியே ஓட வைத்து விடுவாள்  என்று ஜானு  மாமி, “கௌரி வா, உள்ளப் போய் எல்லாருக்கும் டிபன் எடுத்துண்டு வரலாம்”, என்று சமயலறைக்கு கௌரியை கடத்திக் கொண்டு போனார்.

டிபன், காபி முடிந்த பின் தன் கெத்தை கொஞ்சமாவது காட்ட வேண்டும் என்று எண்ணி நம்ம லச்சு மாமி, “பாட்டு கத்துண்டு இருக்கியா கௌரி, தெரியும்ன்னா ஏதானும் பாடேன்”, என்று கேட்க

ஜானகி அலறி அடித்துகொண்டு, “இல்ல மாமி, கொழந்த படிப்பு படிப்புன்னே இருந்துட்டா, மத்ததுக்கெல்லாம் நேரமே இல்ல”,  என்று பூசி மொழுகினார்.

அவருக்குத்தானே தெரியும் அவள் கார்த்தாலேர்ந்து சபாலன்கிடி கிரி கிரி கிரி என்ற பாட்டை ப்ராக்டிஸ் பண்ணினது. மானம் போகாமல் காப்பாற்றிய தன் பத்தினியை ஏக காதலுடன் பார்த்தார் ராமன்.

“ஒ சரி அதுனால என்ன பரவா இல்ல, இப்போ கத்துண்டவா எல்லாம் என்ன தெனமும் பாடவா செய்யறா.  அவா அவாளுக்கு  கார்த்தாலேர்ந்து ஓடறதுக்கே சரியா இருக்கு. எங்காத்துலயும்தான் ஸ்வேதா ஒரு 10 வருஷமா கத்துக்கறா.  நவராத்திரியத் தவிர அவ பாடி நாங்க கேட்டதே இல்ல.  நல்ல காலம் காலேஜ் போனப்புறம் இப்போ டைம் கிடைச்சிருக்கு practice பண்றதுக்கு ”, தன் பெண்ணின் பெருமையை எடுத்து விட்டார் லக்ஷ்மி.

ஸ்வேதா மனதிற்குள் அலற ஆரம்பித்தாள், ஐயோ இந்த அம்மாவோட, எங்க வந்தாலும் என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டா.  ஆண்டவா அந்த மாமி என்னை அப்படியே ஒரு பாட்டுப் பாடுன்னு சொல்லாம இருக்கனுமேன்னு இன்ஸ்டன்ட் வேண்டுதல் வைத்தாள்.

ஆனால் பாவம் கௌஷிக்கின் சாபமோ என்னவோ ஸ்வேதாவின் வேண்டுதலை கடவுள் ரிஜெக்ட் செய்ய, நம்ம ஜானு மாமி லச்சு மாமியை குளிர்விச்சே தீருவது என்று ஸ்வேதாவை பாடச் சொன்னார்.   அவளும் ஸ்வாகதம் கிருஷ்ணாவை பாடி எல்லோரின் அபரிமித பாராட்டையும் பெற்றாள்.

“ஓகே ராமன்.  இது எங்க பையன்  கௌஷிக்கோட போட்டோ. கௌரிகிட்ட காமிச்சு பிடிச்சிருக்கான்னு கேளுங்கோ. அதே மாதிரி உங்க பொண்ணு போட்டோவும் நாங்க அவனுக்கு மெயில்ல அனுப்பறோம்.  ரெண்டு பேருக்கும் போட்டோ பார்த்து பிடிச்சிருந்தா skypeல பேசிக்கட்டும். அப்புறம் அவா decision தெரிஞ்சுண்டு நாம மேல்கொண்டு proceed செய்யலாம்.  இப்போ நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்.  நம்ம சம்மந்திகள் ஆகாட்டாலும் நல்ல friend-ஆ இருக்கலாம். அடிக்கடி போன் பண்ணுங்கோ. கிளம்பலாமா லக்ஷ்மி”, எழுந்தபடியே கேட்டார் பத்மநாபன்.

“மாமி தாம்பூலம் வாங்கிக்கோங்கோ”, என்றப்படியே ஜானகி வர, லக்ஷ்மி கௌரியிடம், “கௌஷிக் போட்டோ பார்த்து உனக்கு பிடிச்சுருந்தா மட்டும் சொல்லு, அப்பா அம்மா கம்ப்பெல் பண்றான்னு ஒத்துக்காதே, சரியா.  நானும் மாமா சொன்னதேதான் சொல்றேன்.  நீ எங்காத்து மாட்டுபொண்ணா வந்தா சந்தோஷம்தான். இல்லாட்டாலும் எப்பவும் எங்க ஸ்வேதாவோட friend-ஆ ஆத்துக்கு வரலாம்”,கடைசியாக ஒரு சூப்பர் பிட்டை போட்டுவிட்டுக் கிளம்பினாள் லக்ஷ்மி.

வர்கள் கிளம்பியதும் கூடத்தில் ஆசுவாசமாக அமர்ந்தனர்.   “ஏன்னா எல்லாரும் ரொம்ப நல்லவாளா இருக்கா இல்ல, நீ என்னடா சொல்ற வைத்தி, உனக்கு என்ன தோணறது”, ஜானகி தம்பியை பார்த்து கேட்க,  இவா  எப்போ போட்டோ நம்மகிட்ட காட்டப் போறா என்று அதையே பார்த்தாள் கௌரி.

கௌரியின் முகத்தைப் பார்த்தே அவள் நினைப்பதை ஊகித்த ஹரி, “அம்மா, மத்ததெல்லாம் அப்பறம் பேசலாம், முதல்ல போட்டோவ எடு. பார்க்கலாம் எப்படி இருக்காருன்னு”

ஜானகி போட்டோவை எடுத்து முதலில் ராமனிடம் கொடுக்க அது ஒரு ஒருவராக மாறி கடைசியில் ஹரி கையை வந்து சேர்ந்தது.

“கௌரி சும்மா சொல்லக் கூடாது, மாப்பிள்ளை நீ கேட்ட மாறியே ஜில்லுன்னு ஜோரா சிக்குன்னு கூலாதான் இருக்கார். ஆனா என்ன கொடுமைன்னா இதே டயலாக்கை அவர் உன் போட்டோ பார்த்து சொல்ல முடியாது”, போட்டோவை கௌரியிடம் கொடுக்காமல் ஆட்டிக்கொண்டே அவளை வெறுப்பேத்தினான்.

“ஹரி சும்மா இரு.  போட்டோவை கௌரிட்ட குடு.  கௌரி நீ ரூம்ல போய்ப் பாரு.  அப்பறமா நிதானமா யோசிச்சு உன்னோட முடிவை சொல்லு”, நம்ம பஞ்சாயத்துத் தலைவர் ராமன் கௌரி சார்பாக தீர்ப்பை வழங்கினார்.

கௌரி அப்பாவிற்கு மனதிற்குள்ளேயே பாராட்டு விழா நடத்தி முடித்து ஹரியிடம் இருந்து போட்டோவை பிடுங்கி கொண்டு, அவனுக்கு எக்ஸ்ட்ராவாக  ஒரு பழிப்பு வேறு காட்டிவிட்டு ரூமிற்குள்  சென்றாள் .

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.