(Reading time: 14 - 28 minutes)

காதல் நதியில் – 14 - மீரா ராம்

ஞ்சரிக்கும் கனவுகளில் லயித்து போகும் நிலையும் காதல் தான் கொடுக்கும்… அதில் கரைந்து காணாமல் போகும் உணர்வையும் காதல் தான் அள்ளிக்கொடுக்கும்….

அப்படி ஒரு மோன நிலையில் தான் இருந்தான் ஆதர்ஷ் ராம்…. ஒரு மாத காலமாக அவள் விரல்களின் ஸ்பரிசம் உறைந்து போக வைத்தது அவனை காதல் நதியினில்…

ஏனோ இப்பொழுதெல்லாம் அவளை அவன் வாரந்தவறாது கோவிலில் சந்திக்கின்றான்…. அன்று சித்து நந்து வற்புறுத்தி அழைத்தும் அவன் வீட்டிற்குள் செல்லவில்லை… அவள் ஏனிந்த தயக்கம் என்று கண்களால் கேட்டதும் இன்னொரு நாள் வருகிறேன் என்றவாறு விடைப்பெற்று சென்றுவிட்டான் அவனும்….

kathal nathiyil

பத்து நாட்களுக்குப் பிறகு அவளை அவன் முகிலனின் அலுவலகத்தில் பார்த்தான் மீண்டும்…

தன்னருகே அமர்ந்து வேலை செய்யும் பெண்ணை கேலி செய்து அவளிடம் அகப்பட்டுவிடாமல் தப்பித்து படிகளில் தாவியவள், அடுத்த தாவுதலுக்கு தயாரான போது, அங்கே மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி சுவரில் சாய்ந்து ஆதர்ஷ் நின்றிருந்த விதம் அவளைக் கவர்ந்தது வெகுவாய்…

காற்றுக்கு கூட தன் இமை மூடிடுமோ என்றெண்ணி பயந்தவள், தான் அவனிடத்தில் வசமிழந்து போவதை எண்ணியவாறு கருவிழியை அங்கும் இங்கும் சுழற்றாமல் அவனை நோக்கி அம்பு எய்தாள்…

அதனையே தனது இதய வில்லில் பூட்டி மாலையாக சூடினான் அவனும், சற்றும் காலம் தாழ்த்தாது….

வெட்கத்துடன் அவனின் செயலை அழகாக உள்வாங்கியவள், அவன் விழிகளோடு தன் விழி கலக்க விட்டாள் அவனின் ஆழமான காதலில் புதையுண்டு..

தன் மனதினுள் ஆழ புதைந்தவளை தன் காதல் விருச்சத்தின் வேரைக்காண அழைத்துச்சென்றான் அவனும்…

வெளி வர விரும்பாத காதல் தேசத்தில் உலவிக்கொண்டிருந்தவர்கள் ஆதர்ஷின் கை பேசி அழைப்பில் தன்னுணர்வு பெற்றனர்…

நீ முன்னே செல் என்று அவன் தலையசைக்க, மௌனமாக அவன் ஆணையை ஏற்று அவள் நடந்தாள்…

வராதவன் இன்று வந்திருக்கின்றாயே என்ற சந்தோஷத்துடன் முகிலன் அவனை வரவேற்று சாகரிக்கு அறிமுகப்படுத்தினான்… இவன் என் அண்ணன், நண்பன் மற்றும் நமக்கெல்லாம் பெரிய ப்ராஜெக்ட் ஹெட் என்று….

விரைவாக நேரம் கழிய, அப்போது வெகு நாள் விடுப்பில் இருந்த செல்வம் அங்கு வர, இன்னும் நேரம் அதிகமாக விரைந்தோடியது….

அதன் பின் சாகரியை அந்த வார கடைசியில், கோவிலில் சந்தித்த பொழுது, ஆதர்ஷ் அவளிடம் காத்திருப்பாயா சீதை… உன்னை நான் கைப்பிடிக்கும் நேரம் வரும் வரை… என்று கேட்ட மறுவினாடியே வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன் உங்களுக்காக.. என்றாள்…

அந்த நொடி, அவளிடம் தொலைந்து தான் போனான் ஆதர்ஷ்… விழி மூடி லேசான உதட்டசைவில், உறுதியான குரலில், அவள் நேசத்துடன் சொன்னது அவனை அவளின் காதலில் மேலும் விழ வைத்தது…

காத்திருத்தலும் காதல் தான்… அவனுக்காக காத்திருந்த நாட்களில் அதனை புரிந்து கொண்டாள் அல்லவா அவள் அந்த சுகத்தை… எப்போது வருவான் என்று தெரியாமலே காத்திருந்தவள் இப்போது அவன் கால அவகாசம் கொடுக்கும்போதா மறுத்து விடுவாள்???!!! நெஞ்சம் முழுவதும் அவனே நிறைந்திருக்க, அவனின் கட்டளையையா அவள் நிறைவேற்றாமல் போய்விடுவாள்???!!!

இந்த நிமிடம் மறைந்து போ என்றாலும், மரித்து போ என்றாலும் நான் உரு தெரியாமல் சிதைந்து போய்விடுவேனே என்னவனே… உனக்காக நான் காத்திருக்கவா மாட்டேன்!!!???

அவள் வலியுடன் அவனைப் பார்க்க, அவளின் பார்வை வீச்சை தாங்க முடியாதவனோ, இறைஞ்சி மன்னிப்பு கேட்டான் அவளிடம்…

மன்னிப்பு… யார் யாரிடம் கேட்பது???... அவளது ஜீவன் அவளிடத்தில் மன்னிப்பு கேட்குமா?... அதை அவளும் தான் ரசிப்பாளா?...

எனக்குள்ளே இருக்கும் தாங்கள் வேறு நான் வேறா?... என்னிடம் இந்த வார்த்தை சொல்ல உங்களுக்கு எப்படி மனம் விழைந்தது ஏன் ராம்???

என்ன செய்ய முடியும் அவனால்???... அவளின் காதலுக்கு முன்னால்… அவளின் நேசத்திற்கு முன்னால்… அவளின் அந்த அழகான மனதிற்கு முன்னால்…

எட்டியிருக்கும் நிலையிலும் அவளின் காதல் மணம் அவனை அவளிடத்தில் இழுத்தது… சொல்லிவிட்டாளே… புரியவைத்துவிட்டாளே… உன்னில் நான் பாதி, என்னில் நீ பாதி என்று… இந்த காதல் தன்னை சூழ அவன் என்ன வரம் பெற்றான் கடவுளிடம்???...

உயிராக ஒரு துணை அவனின் சரிபாதியாக கிடைக்க எந்த ஜென்மத்தில் தெய்வ அனுக்கிரகம் பெற்றான்???... எத்தனை வேள்வி யாகங்கள் நடத்தி அவளை இந்த பிறவியில் தன் இணையாக கண்டான்???...

காதலில் அன்பு எவ்வளவு முக்கியமோ, புரிதலும் முக்கியம்… புரிதல் இல்லா காதல் உப்பில்லாப் பண்டம் போல… புரிதல் இருந்தால் அந்த காதல் வாழ்வாண்டு மண்ணில் வாழும் இறுதி வரை…

ஆதர்ஷ் இப்போது புரிந்து கொண்டான் அவனது தவறை… அவளது தன்னிகரில்லா காதலை… எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இன்று தன்னைமட்டும் இதயத்தில் கோலோச்சி அரசாள விட்ட தன்னவளின் உள்ளத்தை அது சுமக்கும் தன் மீதான எல்லையற்ற காதலை எண்ணி அகமகிழ்ந்தான் அவன்…

தொடுதல் மட்டும் காதலும் அல்ல… தொடுதலை தாண்டிய புரிதலும் காதல் தான், என்பதை அவர்கள் இன்று அறிந்து கொண்டனர்…

தன்னவன் வருந்தி உணர்ந்து கொண்டதை அறிந்தவள், மெலிதாய் சிரித்தாள்… புன்னகையில் வலை வீசி கொல்லும் வித்தையை எங்கு கற்றுக்கொண்டாளோ இவள்!!!… சிறு சிரிப்பில் என்னை என் மனதில் குடிகொண்ட வருத்தத்தை. கவலையை எப்படி உருவான தடம் தெரியாது அழித்து விடுகிறாள் இவள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!…

சிறிது சிறிதாய் அவள் அவனுள் வலம் வர ஆரம்பிக்க, அவள் அவனிடம் உங்களுக்காக ஒரு சின்ன பரிசு என்றாள்… அவனின் பிறந்தநாளுக்கு எதுவும் தர முடியவில்லையாம் அவளால்… அதனால் இன்று தருகிறாளாம்…

பிரித்தவன் தனது அணுக்கள் பிரிந்து பிரிந்து அவளின் பெயரை உச்சரிப்பதை தன் உடலின் ஒவ்வொரு அசைவிலும் உணர்ந்தான்… வேல் விழியாள் தொடுக்கிறாள் கணையை… அதனை எதிர்கொண்ட அவளின் மணவாளனோ பூமாலை சூடுகிறான் கண்களினால்…

தொடுத்ததென்னவோ பெண் தான்

தாக்கியதென்னவோ வேல் விழிகள் தான்….

தடுத்ததென்னவோ ஆண் தான்

சூட்டியதென்னவோ மணமாலை தான்…”

கண்ணாடியில் இரு உருவங்கள் தெரியவில்லை அவனுக்கு… அவனும் அவளும் அந்த சிறு கண்ணாடி துண்டினுள் இருந்திட முடியுமா?... இருந்தனரே… எனில்… இது ஓவியமா?... இல்லை… அவ்விருவரின் காவியமா?...

அவள் வடித்த காவியத்திற்கு அவனை தலைவனாக்கியிருந்தாள் அவள்… அவளின் சுவாசமாக அவனை அவளின் உயிரில் கலக்க வைத்ததற்கான சான்றா இது?...

ஒரு நிமிடமா இல்லை சில நாழிகையா எதுவும் அவன் அறியவில்லை… கையில் இருந்த குங்குமத்தை அவளின் நெற்றியில் வைத்து விட்டான் பட்டென்று…

சிலிர்த்து தான் போனாள் தன்னவனின் செயலால்… அன்று விழிகளால் மாலை இட்டவன் இன்று திலகமே வைத்து விட்டானே… இனி என்ன வேண்டும் அவளுக்கு…

அவளாவது நான் உன்னில் பாதி என்று வாய் மொழியில் தான் சொன்னாள்… அவனோ செய்தே முடித்துவிட்டானே நடைமுறையில்…

கண்களில் கண்ணீர் ஊற்று… இதயத்தில் ஆனந்த கூச்சல்… உதடுகளில் ஏனோ உதிக்காத வார்த்தை… நெற்றியை தொட்டு பார்த்து கொண்டவளுக்கு நடந்தது கனவா நனவா என்றே அறியமுடியவில்லை…

நமது திருமணத்திற்கு நம் இருவர் தாய் தந்தையின் சம்மதம் எனக்கு கிடைத்துவிட்டது…

ஆனால் இப்போது இங்கே இந்த நிகழ்வு நான் எதிர்பாராத ஒன்று சீதை… நான் இவ்வாறு செய்தது உனக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம்… எனக்கு அந்த நேரத்தில் வேறெதுவும் தோன்றவில்லைடா…    

கடவுள் சாட்சியாக நீ இன்றிலிருந்து என் பாதி மனைவி ஆகிவிட்டாய்… ஊர் சாட்சியாக பெற்றவர்களின் முன்னிலையில் உன்னை விரைவில் கைப்பிடிப்பேன்… அதுவரை காத்திரு என் கண்மணி…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.