(Reading time: 28 - 55 minutes)

 

நீ செய்வது கொஞ்சம் கூட சரியில்லை மயில்… பாவம் உன்னைப் பார்க்க எத்தனை ஆசையாய் வந்திருக்கிறார்… அவரிடம் நீ பேச வேண்டாம்… ஆனால் முகம் திருப்பிக்கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா… என்றவளிடம் மயில் ஏதோ சொல்ல முனைய… சாகரியே அவளை தடுத்து, நீ என்ன சொல்ல போகிறாய் என்று எனக்கு தெரியும் என்றவள், அவருடன் நீ இப்போது காதலியாக பேசு என்று நான் சொல்லவில்லை தாயே… அலுவலக ரீதியாக பார்த்தால் அவர் நம் ஹெட்…. அந்த முறையிலாவது சிரிக்க கூடாதா நீ…. இதுதான் அனைவருக்கும் நீ கொடுக்கும் மரியாதையா?... இது தான் நீ கற்றுக்கொண்ட பண்பாடா?... என்று அவளின் மனதை கரைத்தாள் சாகரி…

அதன் பிறகு மயூரியும் முகம் திருப்பிக்கொள்ளவில்லை… முகிலனும் அவள் நிலையை புரிந்து கொண்டு அருகில் வரவில்லை… வர முயற்சிக்கவுமில்லை…

தினேஷ் ஆதி கொடுத்திருந்த எஸ்.எம்.எஸ் ல் புரிந்து கொண்டு தாய் தந்தையரையும் காவ்யாவையும்  அழைத்துக்கொண்டு முகிலன் இருந்த இடத்திற்கு எதிர் இடத்தில் அவன் பார்க்காத வண்ணம் நின்று அவனை கை காட்டினான் ராசுவிற்கு….

உணர்ச்சிகள் கலவையாக அவரின் முகத்தில் வந்தது புரிந்தது அனைவருக்கும்… இந்த திருமணம் ஒருநாளும் நடக்காது… நான் வீட்டிற்கு செல்கிறேன் என்றபடி நடந்தவரின் பின்னே ஜனாவும் தினேஷும் வேகமாய் செல்ல, செல்விக்கோ என்ன சொல்ல என்று தெரியாமல் கணவரின் பின் நடந்தார்… தாமரையும் வேறு வழி இன்றி செல்வியிடம் பேசிக்கொண்டே பின்னே சென்றார்….

காவ்யா சாகரி-மயூரியிடம் சென்று நாங்கள் முன்னே வீட்டிற்கு செல்கிறோம்… நீங்கள் பின்னே வாருங்கள், சமையல் எல்லாம் முடிக்க வேண்டுமே அதான்… நீங்க மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வாங்க… கோவிலில் இன்று சிறப்பு பூஜை எல்லாம் இருக்குல்ல… அதை எல்லாம் பார்த்துட்டு வாங்க… என்றபடி கிளம்பி சென்றுவிட்டாள்…

சரி என்று நால்வரும் திண்ணையில் அமர, நந்து சாகரியிடம் பூப்பறிக்க போகலையா நீ இன்னைக்கு என்று கேட்டதும் தான் அவளுக்கு அது நினைவு வர, அட ஆமாம் நான் மறந்தே போயிட்டேன்…. என்றபடி அவள் எழ,

ஹேய்… என்னை விட்டுட்டு எங்கேடி போற… இரு நானும் வரேன்…. என்றபடி மயில் எழ முயற்சிக்க, அவளை வலுக்கட்டாயமாக அமரவைத்து, உன்னை யாரும் வந்து தூக்கிட்டு போயிடமாட்டாங்க… சித்து உங்கூட இருப்பான்… சரியா… என்றவள், சித்து நீ மயிலைப் பார்த்துப்ப தானே… என்று கேட்டாள்…

கண்டிப்பா சாகரி… நான் பார்த்துக்கறேன்… நீங்க போயிட்டு வாங்க… என்று விடை கொடுத்தான் சித்துகுட்டி…

சிறிது தூரம் நந்துவுடன் சென்றவள், பின் செல்லில் முகிலனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு, நந்துவையும் மயிலின் அருகே இருக்கும்படி அனுப்பி வைத்தாள் வலுக்கட்டாயமாக…

பின் தனியாக சென்று பூப்பறித்துவிட்டு அவர்களின் கண்ணில் படாதவாறு அங்கிருந்த மற்றுமொரு தூணின் மறைவில் அமர்ந்து கொண்டு தன்னவனை சிந்தையில் உலவ விட்டாள்…

அவரைப் பார்த்து பேசி ஒரு மாதம் ஆகப்போகிறது…. ஹ்ம்ம்… அவருடன் போனிலாவது பேசலாமா இப்போ என்று யோசித்து, தனது கைபேசியை எடுத்து அவனின் எண்ணை அழுத்தியவளின் எதிரே நிழலாட, யாராக இருக்கும் என்று நிமிர்ந்தவளின் முன் கம்பீரமும் வசீகரமும் ஒன்றுக்கொன்று போட்டி போடும் அளவு பட்டுவேஷ்டி,சட்டையில் நின்றிருந்தான் ஆதர்ஷ்…

சட்டென்று எழுந்தவள் கைபேசியை நழுவ விட்டாள்… அவள் மடியில் வைத்திருந்த பூக்களும் அவனது பாதத்தில் சரண் புகுந்தது அவளின் மனதை போல…

பிரமிப்பின் உச்சக்கட்ட நிலையில் இருந்தான் ஆதர்ஷ்… தான் வாங்கி கொடுத்த புடவையில் தன்னவள்….. நினைக்கவே அவனுக்கு இனித்தது… அதை விட புடவையில் அவள் தேவதையாய் ஒளிர்ந்தாள்…. புடவை அழகா, இல்லை அவளால் அந்த புடவைக்கு அழகா என்று எண்ணமிட்டுக்கொண்டிருந்தது அவன் மனது…

பூ ஒன்று தன் முன் புடவையில் இருந்து தன்னை சுண்டியிழுப்பதாக உணர்ந்தான் ஆதர்ஷ்…. கர்ப்பகிரகத்தில் இருக்கும் சிலையும் இவளும் ஒன்றுதானோ… காற்று கூட வேகமாக மோதாதடி என் ஊதாப்பூவே உன் மேல்…. ஒரு திங்கள் உன்னைப் பிரிந்திருந்தேனேடி… நீ நலம் தானே என் சகி…?..... உன் தேன் வார்த்தைகள் கேட்காது இத்தனை நாள் தவித்துவிட்டேனடி… நீ என்னை காணாது வாடிடக்கூடாதடி என் ஊதாப்பூவே… என்றும் நீ உதிராமல் இருக்க வேண்டுமடி என் சகி…

உன் நினைவில் என்றும் பூத்திருக்கும் பூ நான் தான்… ஆகாயமாக நானிருந்தாலும் என் மேல் ஊதக்காற்று பட கூட நீ விடமாட்டாய் எனக்கு வலிக்குமோ என்று… நீ என்னுடன் இருக்கும்போது எவ்வாறு நான் தவிக்க முடியும்???... உன்னைப் பிரிந்திருந்த வலி… இன்று நீ பார்த்ததுமே நலமாகிவிட்டதே… உன் தோள் சாயும் நாள் கிடைக்கும்போது உன்னைப் பிரிந்திருக்கும் நாட்களில் நான் கொண்ட காயம் அத்தனையும் சுகமடையுமே என்னவனே… வாடுவது என்ன பிரமாதம்…. நீ என்னை விட்டு விலகினால் இந்த பூ வாழ்ந்திடாது இம்மண்ணில்…

உடலோ இல்லை என் மனமோ, இரண்டிலும் நீ தான் இருக்கிறாய்… ஆம்… தேகத்தில் குருதியாய் நீ… உள்ளத்தில் நினைவாய் நீ… இனிமேல் என் உயிர் கூட எனக்கென்று இல்லை ராம்… முதலாம் பார்வையிலே என்னை நீ மொத்தமாய் உன்னுள் எடுத்துக்கொண்டாயடா தர்ஷ்….

உன் கூந்தல் மீது அன்று நான் சூடியது மல்லிகையல்ல சீதை… என் மனம்… நான் தனியாக நடக்கும் ஒவ்வொரு வேளையில் நிலம் கேட்கிறது உன் நிழல் எங்கே என…  நான் என்ன சொல்வது சகி?...

அந்த உமையாள் சிவனின் பாதி என்று அறிவீர்கள் தானே… எனில் நீ நடக்கும்போது என் நிழல் தெரியாமல் என்ன செய்யும் ராம்….??. நான் உங்களில் பாதி… அது உங்களுக்கு தெரியும் தானே???

அறிவேன் என்னவளே… அறிவேன்…. நீ என்னில் பாதியல்ல… என் எண்ணம், நான் அனைத்துமே நீ தான் என் சகி….

அப்பா என்ன ஆயிற்று… ஏன் உங்களுக்கு முகிலனை பிடிக்கவில்லை… எதற்காக இந்த திருமணம் நடைபெறக்கூடாது என்று கூறுகிறீர்கள்… என்று தினேஷ் நூறு முறை கேட்டும் அசையாமல் இருந்தார் ராசு…

அதற்கு மேலும் பொறுமை காக்க தினேஷால் முடியவில்லை… சரிப்பா, அந்த பையன் வீட்டில் எங்களுக்கு சம்மதம் என்று நான் சொல்லிவிடுகிறேன்… என்று அவன் முடிக்கும் முன் அது நான் செத்தால் தான் நடக்கும் என்றார் ராசு….

அப்பா… என்ற அவன் குரல் அதிர, ஆம்… என் பிள்ளைக்கு யாரை திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று எனக்கு தெரியும்… நீ இதில் இதற்கு மேல் தலையிடாதே…  என்றதும்,

என்ன வார்த்தை சொல்கிறாய் நீ… அவனைப் பார்த்தா தலையிடாதே என்கிறாய்??... என்று முகம் சிவக்க கேட்டார் ஜனா…

ஆமாம் என் பிள்ளைக்கு மாப்பிள்ளை தேட அவன் யார்?...

சொல்லியே விட்டார் ராசு அந்த வார்த்தையை… நீ யாரோ என்று… மனத்தை கனத்த பாராங்கல் கொண்டு அடித்ததை போல் உணர்ந்தான் தினேஷ்… அவன் சற்று தள்ளாட, ஜனா அவனை பிடித்துக்கொண்டு,

அவன் யாரென்று உனக்கு தெரியாமல் இருக்கலாம்… எனக்கு தெரியும்…. தங்கை என்ற உரிமையில் தான் மாப்பிள்ளை பார்த்தான். அது உனக்கு தவறாக தெரிகிறதா??... நம் பிள்ளைகள் இருவரையும் இங்கே எப்படி விட்டு செல்ல என்று தவித்த போது நானிருக்கிறேன் என்று கை கொடுத்தவன் என் பையன்… அதை மறந்து விட்டு பேசாதே ராசு… என்றார் ஜனா கோபத்தில்…

அந்த உண்மை ராசுவையும் சுட, அவர் தலைகுனிந்து மௌனமாக நின்றார்….

என் பிள்ளையை என் முன்னாலே யார் என்று கேட்டுவிட்டாயே… என் பிள்ளை துடித்து போய்விட்டான் நீ சொன்ன ஒரு சொல்லால்… பாருடா.. இப்போது சொல்கிறேன் கேள்… நன்றாக கேள்… அவன் வேறு யாரும் இல்லை… இந்த ஜனகனின் மூத்த மகன்… நான் தொலைத்த என் சொத்து… நான் பெத்த மகன் இவன் தாண்டா ராசு… இவன் தான்… என்றவர் தரையில் அப்படியே சரிந்து அழ ஆரம்பித்தார்…

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, ராசு ஜனாவிடம் நீ சொல்வது…. என்று இழுத்தார்…

உண்மைதான் ராசு… தினேஷ் என்மகன் தான்… எல்லாம் எங்கள் விதி… இத்தனை காலம் பிரிந்திருந்துவிட்டேன் என் மகனை… என் முன்னாடியே நீ அவனைப் பார்த்து யார் என்று கேட்கிறாய்… என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதவரிடம் மன்னித்துவிடு ஜனா… நான் கோபத்தில் அப்படி பேசிவிட்டேன்… மன்னித்துவிடு… என்று மன்னிப்பு கேட்டார் ராசு…

என்ன சொல்லுறீங்க… தினேஷ் நிஜமாவே என் வயிற்றில் பிறந்த மகனா?... இத்தனை நாள் நான் பறிகொடுத்துட்டேன்னு நினைச்ச என் பையன்… என் பையன்…. என்றவர் அப்படியே மயங்கி விழ, அப்படியே அவரை ஓடிச்சென்று தாங்கிக்கொண்டான் தினேஷ்…

தொடரும்

Go to episode # 15

Go to episode # 17

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.