(Reading time: 30 - 60 minutes)

காதல் நதியில் – 15 - மீரா ராம்

ம்மா நான் செய்தது நியாயமென்று வாதாடவோ, கூறவோ மாட்டேன் ஒருபோதும்… எனினும் ஒரு மகனாய் நான் செய்தது……… ……. என்று இழுத்தவன் அதற்கு மேல் வார்த்தைகள் வராது தாயின் முகத்தை பார்த்தான்…

பெற்ற பிள்ளையின் திருமணத்தை நடத்தி கண் குளிர ரசித்துப் பார்க்க வேண்டுமென்றே பெற்றவர்களின் விருப்பம்… தான் பாதி திருமணம் முடித்துவிட்டு வந்து சொல்கிறோமே… என்று கவலை கொண்டவன் தன் மேல் கோபம் போலும், அம்மாவிற்கு நான் செய்தது பிடிக்கவில்லை போலும் என்று மனம் வருந்தி அன்னையைக் கடந்து செல்லும் வேளையில், தவறேதும் நீ செய்யவில்லை, உன்னை நேசிப்பவளுக்கு உரிமையை கொடுத்திருக்கிறாய், நான் உன்னவன், உனக்கானவன் என்ற எண்ணத்தை அவளின் மனதில் வேரூன்ற வைத்திருக்கிறாய்… மேலும் நீ ஒரு காதலனாக உன் கடமையை ஆற்றியிருக்கிறாய்… இதில் நீ என் மகனாக எந்த இடத்திலும் கடமை தவறவில்லை… எல்லையும் மீறவில்லை ஆதி… நான் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் அதைத்தான் உன்னை செய்ய சொல்லியிருப்பேன்… எனவே நீ வருந்தத் தேவையில்லைப்பா… அம்மாவிற்கு உன் மேல் சிறு துளி கூட கோபமில்லை… மனம் நிறைய சந்தோஷம் தான்…

ஏனென்றால் தாயிடம் வந்து இப்படி மன்னிப்பை யாசகம் வேண்டுகிறாயே நீ செய்தது பிழை என்று எண்ணி…. அவளை முதல் முறை பார்த்த போதும் சரி, அதன் பின் இப்போது வரை நடந்த நிகழ்வுகளையும் சரி, ஒன்றைக்கூட நீ என்னிடம் மறைக்கக்கூட முயலவில்லையே சிறிதும்…. உன் போன்ற பிள்ளையைப் பெற நான் தான் தவம் செய்திருக்க வேண்டும்… நீ வருந்தாதேடா கண்ணா என்றபடி மகனின் நெற்றியில் முத்தமிட்டார் கோதை நாச்சியார்….

kathal nathiyil

அ…ம்….மா என்றழைத்தவன் குரல் கலங்க, உங்க மடியில் படுத்துக்கவாம்மா என்று கேட்டதும், மகனை மடியில் தாங்கிக்கொண்டு அவனது தலையை பரிவுடன் வருடி கொடுத்தார்…

தாயின் மடி சொர்க்கம் என்பது உண்மைதான்… தாயின் பேச்சில், பரிவில், தனது சஞ்சலத்தையும் தொலைத்தான்…

அம்மா… நான் சீதையை ரொம்ப விரும்புறேன்மா… உங்க குணங்களும் அவளுக்கு இருக்கும்மா.. அதனால தான் அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சா?… ஹ்ம்ம்… ஆனால் அவளைப் பார்க்கும்போது மட்டும் பல ஜென்மங்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த உணர்வு எனக்கு கிடைக்குதும்மா… நீங்க கொடுத்த இந்த உயிரில் நான் அவளை சுமக்குறேன்மா… அவளோட என் காலம் முழுதும் வாழ ஆசைப்படுறேன்மா….

அந்த சீதா ராமனை பிரிந்து கடைசியில் அவங்க அம்மாவோட போயிடுவாங்கள்ள… ராமரைப் பிரிந்து சீதா தனியாக தன் பிள்ளைகளுடன் வாழ்ந்த போதும் இருவரும் மாறாத காதலில் தானே இருந்தாங்க… மனைவியைப் பிரிந்திருக்கும் கொடுமையை அவர் அனுபவித்தாரே முள்ளின் மேல் நின்று நித்தமும்… சீதா கொஞ்சம் கூட ராமரின் மேல் கோபம் கொள்ளவில்லையே… ஆனா அவங்க பிரிந்து போனது கூட ராமனின் மேல் கொண்ட காதலினால்  தானே… அவருக்காக தானே… உண்மைக் காதல்… இல்லையாம்மா… அவங்களை மாதிரி மாறாத காதலில் நாங்களும் வாழணும்மா கடைசி வரை ஒருவரின் மேல் ஒருவர் உயிரையே வைத்து……

வாழணும் என்று சொன்னானே தவிர, பிரியாமல் சேர்ந்து வாழணும் என்று சொல்லாமல் போனானே… இது தான் இறைவன் வகுத்த நாடகத்தின் பிள்ளையார் சுழியா???...

ஆதி… வாப்பா… வந்ததும் அம்மாகிட்ட தான் குசலம் விசாரிப்பியா?... என்றபடி அங்கு வந்த சுந்தரத்திடம், இப்போதான்ப்பா வந்தேன் என்று எழப்போனவனை தடுத்து மகனின் அருகில் வந்து அமர்ந்தவர், அம்மாவும் மகனும் என்ன ரகசியம் பேசிட்டிருக்கீங்க???... என்றவருக்கு பதிலாய் சும்மாதான்ப்பா பேசிட்டிருக்கோம் என்றவன், நினைவு வந்தவனாக உங்கள் இருவரிடமும் ஒன்று பேச வேண்டும் என்று சொல்ல…

நீ பேச வந்திருக்கும் விஷயத்தை உன் அம்மா என்னிடம் முன்ன்மே சொல்லிவிட்டாள்… நீ தான் உடனுக்குடன் உன் அம்மாவிற்கு தகவல்களை கொடுத்துக்கொண்டிருக்கிறாயே… பிறகு என்ன???

இல்லப்பா… வந்து என்று இழுத்தவனிடம், மயூரி-முகிலன் விஷயத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்… சிறிது காலம் ஆகும்… அதுவரை ஜாலியாக காதலித்துக்கொண்டு வாழ்க்கையை அனுபவியுங்கள் என்றார் சுந்தரம்…

எதுவும் சொல்லாது மென் புன்னகையுடன் எழுந்து சென்றவனிடத்தில், “என் மருமகள் சீதாவை கேட்டதா சொல்லுப்பா…” என்றார்…

தன்னவளின் பெயரைக்கேட்டதுமே தானாக உதடுகளில் முறுவல் தோன்றியது ஆதிக்கு… உள்ளமும் உவகையோடு ஆர்ப்பரித்தது…

யூ என்னடா இப்போ எல்லாம் ரொம்ப தள்ளியே நிற்கிறாய்??? என்று பாவம் போல கேட்டவனிடத்தில் இது தான் நமக்கு நல்லது அதனால் தான் என்றாள் முகத்தை சீரியசாய் வைத்துக்கொண்டு…

இது ஒண்ணு, தேய்ந்த டேப்ரிக்கார்டர் மாதிரியே சொல்லிட்டிரு என்று சற்றே எரிச்சலுற்ற முகிலனைக் கண்டும் காணாதவாறு, ஆமா தினமும் உங்க நண்பர்களிடம் பேசிடுவீங்களா?... என்று கேட்டவளிடத்தில், ஆமா மயூ… பேசிடுவேன்… என்றான் அவனும் ஒரே வார்த்தையில்…

யார் யாரிடம் பேசுவீர்கள் என்று அடுத்த கேள்வி கேட்டாள் அவள்… வேறு யாரிடம் டா நான் பேசுவேன்??... எல்லாம் உன் அண்ணன் ஆதியிடமும், என் தங்கை பத்மினியிடமும் தான்…

ஓஹோ… அண்ணனிடம் தொழில் சம்மந்தமா பேசுவீங்கள்ள… பத்மினி கிட்டயும் ஆஃபீஸ் விஷயமா தான் பேசி தினமும் அவளை டார்ச்சர் செய்றீங்களா நீங்க???..

அய்யய்யோ… இல்லடி மயூ… அவளை டார்ச்சர் எல்லாம் நான் செய்யவே இல்லடா… சும்மா உன்னைப்பற்றி தான் கேட்பேன்…

இங்க என்னிடம் தான் பேசுறீங்களே அது போதாதா உங்களுக்கு?... அவளிடம் வேறு பேசி இம்சை செய்யாதீங்க…

அச்சச்சோ… நான் இம்சை எல்லாம் செய்யமாட்டேண்டா… சில விஷயம் மட்டும் தான் பேசுவோம்…

ஆமா அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து இந்தியாவை வல்லரசு ஆக்குவதைப் பற்றியா பேசுவீங்க… என்னைப் பற்றி தான் பேசுவீங்கன்னு எனக்கு தெரியும் என்று அவனை நோக்கி ஒரு புன்னகை சிந்திக்கொண்டே பேச,

ஆமா மயூ… உன்னைப் பற்றி தான் பேசுவோம்… அவள் சொல்லுறதை வைத்து தானே நீ உடுத்தும் உடை கலரில் நானும் அணிந்து வருகிறேன் வாரத்தில் ஒரு நாள் மட்டும்… என்றவன், அவள் விரித்த வலையில் மாட்டிக்கொண்டதை தன் பதிலின் மூலம் அவளது முகம் கோபத்தில் சிவப்பதை வைத்து அறிந்தான்…

கையிலிருந்த ஃபைலை வைத்து அவனை நாலு அடி அடித்தவள், முதலில் அவளுக்கு இருக்கு கச்சேரி என்றபடி அவ்விடத்தை விட்டு அகன்றதும், அவள் சென்று விட்டாளா என்று உறுதி படுத்திவிட்டு அவசரம் அவசரமாக பத்மினியை கைபேசியில் அழைத்து விவரம் சொல்லி, பார்த்து இருந்து கொள் தங்கச்சி… அவள் கோபமா வருகிறாள் என்றான்… அவள் என்னை எதுவும் செய்திட முடியாது நான் பார்த்துக்கொள்கிறேன் முகிலன் சார் கவலை வேண்டாம் என்றபடி அழைப்பைத்துண்டித்தாள் பத்மினி…

அப்பாடா… என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டவனின் முன்னே கையில் நீள கம்புடன் காளி அவதாரமெடுத்தாள் அவனின் அருமைக் காதலி மயூரி…

(யாருப்பா அங்கே… அந்த பேக்ரவுண்ட் மியூசிக் போடுங்கப்பா)

ன்னங்க நாம முதலில் ஆதி விரும்பும் பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசி விட்டு வரலாமா?

இல்லை கோதை… கொஞ்ச நாள் போகட்டும்… இப்போது எதுவும் பேச வேண்டாம்மா…

ஏங்க இப்படி சொல்லுறீங்க… பாவம் சின்னஞ்சிருசுக… அவர்களை காலா காலத்தில் சேர்த்து வைத்தால் தானே நல்லது….

அது எனக்கு தெரியாதா கோதை???... இருவரின் திருமணப் பேச்சு வார்த்தையையும் ஒருங்கே ஆரம்பிக்கலாம்… ஆதிக்கு ஏற்கனவே பேசி முடித்து விட்டோமென்றால் அது இன்னும் பிரச்சினையை பெரிதாக்கும்… நான் சொல்வது உனக்குப் புரியும் என்று எண்ணுகிறேன்… என்றபடி மனைவியைப் பார்த்தார்…

அவரும் புரிந்து கொண்டதின் அடையாளமாக மௌனமாக தலையசைத்துவிட்டு, எல்லாம் நல்லபடியாக நடக்கணும்ங்க… நம் பிள்ளைகள் நிறைவா வாழணுங்க… என்றவரிடம், எல்லாம் நீ நினைத்தது போலே நடக்கும் என்று கலங்கிய மனைவியை ஆதரவாக தோளில் தட்டி கொடுத்து சமாதானப்படுத்தினார் கணவர் சுந்தரம்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.