(Reading time: 12 - 24 minutes)

04. இரு கண்ணிலும் உன் ஞாபகம் - வத்ஸலா

வள் கொஞ்சம் அசைய அவள் முகத்துக்கு மிக அருகே சென்றது அது. அதன் சிவந்த கண்கள் கோரமாய் விரிந்தன.

மாதும்மா... என்னை விட்டு போயிடாதே... வெறியும் கோபமும் கண்களில் தெறிக்க, கருவிழி பிதுங்கி வெளியே வர, நகங்களும், பற்களும் நீண்டு போய் கோரமான உருவமாய் அவளை நெருங்கியது.

அவள் உறக்கம் கொஞ்சமாய் கலைந்து அவள் இமைகள் அசைய துவங்கிய அந்த நேரத்தில் அதனுள்ளே ஏதோ ஒரு மாற்றம்,. அய்யோ! என்னைப்பார்த்து, என் உருவத்தை பார்த்து என் மாதங்கி பயந்து போவாளே, அலறிவிடுவாளே .....

iru kannilum un nyabagam

இல்லை.... இல்லை...வேண்டாம்..... அவள் இமைகள் பிரிவதற்குள் விலகி கலைந்து ஒரு சிறு குழந்தையின் உருவாய் மாறியது அது.

தோள்கள் வரை விரிந்து பரவிய கூந்தலுடன், அலைப்பாயும் பார்வையும் நெஞ்சோடு இறுக்கிப்பிடித்துகொண்டிருந்த பொம்மையுமாய் நின்றது அந்த சின்ன பெண் குழந்தை.

இரவின் இருள் இன்னும் முழுவதுமாக விலகிவிடாத அதிகாலை நேரமது. மெல்ல கண் திறந்தாள் மாதங்கி.

அவள் கண் திறந்து எழுந்து அமர அவளையே தவிப்புடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது அந்த குழந்தை.

யார் இந்த குழந்தை? இவள் எப்படி என் அறைக்கு வந்தாள் என்று யோசித்தபடியே மாதங்கி அந்த குழந்தையை பார்த்துக்கேட்டாள் ‘யாரும்மா நீ? உனக்கு என்ன வேணும்.

அவளது இதமான பேச்சில் கரைந்து போனதைபோல் சில நொடிகள் அவளையே பார்த்திருந்த அந்த குழந்தை பின்னர் மெல்லக்கேட்டது ‘நீ .... நீ ... என்கூட வரியா?

எங்கே? என்றாள் மாதங்கி புரியாமல்.

அங்கே.... அந்த பக்கம்.... அந்த கிணத்து பக்கம்....

மாதங்கிக்கு திடுக்கென்றது. அங்கே எதுக்கு பா?

அங்கே... அங்கே... உன்னை அவர் கூப்பிட்டார்....

என்னையா? யாரு?

அதான் நேத்து கூப்பிட்ட அந்த அங்கிள்....

அங்கேயா? மறுபடியுமா? லேசாக பயம் பற்றிக்கொள்ள ‘ இல்லை... நான் .... அப்புறம்....’ அவள் ஏதோ சொல்ல முயல

அவள் கண்களுக்குள் பார்த்தது அந்த குழந்தை.

நீ.... வரியா.... அங்கே.... என் கூட ... அந்தப்பக்கம் ....

ம்????? என்றாள் அவள்.

நீ.... வரியா.... அங்கே.... என் கூட ... அந்தப்பக்கம் ....

அது திரும்ப திரும்ப அதையே சொல்ல எதற்கோ கட்டுப்பட்டதைப்போல் அந்த குழந்தையை பின் தொடர்ந்தாள் மாதங்கி.

நடந்தது அந்த குழந்தை. அதைப்பர்த்துக்கொண்டே பின் தொடர்ந்தாள் மாதங்கி. இருள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகிக்கொண்டிருந்தது. அங்கே மனித நடமாட்டம் தென்படவில்லை.

அவள் கொலுசொலியை ரசித்தபடியே நடந்தது அந்த குழந்தை. அந்த கண்களில் தீவிரம். தனது கையில் இருந்த பொம்மையை தன்னோடு அணைத்துக்கொண்டது அது.

தான் இத்தனை நாட்கள் கிடைத்துவிடாதா எனக்காத்திருந்த தனது சொத்து தன்னை சேர்ந்துவிடப்போகிறது என்ற சந்தோஷத்தில் வேகமாய் கிணற்றை நோக்கி நடந்தது அந்த குழந்தை.

அந்த தண்டவாளத்தை இருவரும் நெருங்கிய அந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் இருள் விலகி சூரிய கதிர்கள் தங்களது ஒளியை பரப்ப துவங்க, அந்த குழந்தையின் நடை ஏனோ தடுமாற துவங்கியது.

அய்யோ! என் பலம் குறைய துவங்குகிறதே.........செய்வதறியாது தவித்தது அது .அதன் சக்தி முழுவதும் கரைந்து போனதைப்போல் நடுங்கியது. அது.

எப்போதுமே இரவில் அதனிடம் இருக்கும் பலமும் வேகமும் பகலில் இருப்பதில்லை. வெளிச்சம் பரவ ,பரவ அதன் உருவம் மாற துவங்கியது. கோர முகமும், குழியான கண்களும், நீண்ட பற்களும் கொண்ட புகைவடிவமாய் அந்த குழந்தை மாறத்துவங்கியது.

அந்த குழந்தையே பார்த்தபடி நடந்துக்கொண்டிருந்த மாதங்கி அந்த கோர உருவத்தை பார்த்த மாத்திரத்திலேயே அதிர்ச்சியின் எல்லைக்கு சென்றவள் ,அலறி துடித்து மயங்கி தரையில் சரிந்தாள்.

அங்கே அந்த நேரத்தில் வந்த இரண்டு பெண்கள் மாதங்கி மயங்கி சரிந்ததை பார்த்து அவளை நோக்கி ஓடி வர, அவளை அப்படியே விட்டு அவள் வீடு நோக்கி பாய்ந்தது அந்த புகை வடிவம்.

அதன் சக்தி கொஞ்ச கொஞ்சமாய் குறைந்துக்கொண்டிருக்க பாய்ந்து சென்று அந்த பூனைக்குள் நுழைந்து குடிக்கொண்டது அது.

டுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையில் இருந்தாள் மாதங்கி. முகுந்தனுக்கு சென்றது அழைப்பு.

அவனது எண்ணம் முழுவதும் தாத்தாவின் வார்த்தைகளிலேயே இருந்தது. உடனே கிளம்பி வந்துவிடு என்கிறாரே? நிஜமாகவே மாதங்கிக்கு எதுவும் ஆபத்து வருமா என்ன?

தாத்தா சொன்னதை அவனால் மொத்தமாய் ஒதுக்கவும் முடியவில்லை. தனக்கு ஏதாவது வருமென தாத்தா சொல்லி இருந்தால் கூட வருவது வரட்டுமென இருந்திருப்பான். மாதங்கி விஷயத்தில் அப்படி இருக்க முடியவில்லை அவனால்.

யோசித்தபடியே மருத்துவமனைக்கு கிளம்பினான். மருத்துவமனைக்கு வரும் வரை அங்கே இருப்பது மாதங்கிதான் என்று அவன் அறியவில்லை.

அங்கே வந்து பார்த்தவனின் உள்ளம் உடைந்துதான் போனது. அங்கே மயங்கிக்கிடந்தாள் அவன் தேவதை. அவள் கீழே விழுந்த வேகத்தில் முன்நெற்றியில் காயம் பட்டு ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது.

அவனது மருத்துவ பணியில், தினம் தினம் அவன் சந்திக்கும் விஷயம்தான் ரத்தமும், வலியும் வேதனையும்.

ஆனால் ஏனோ அவள் நெற்றியிலிருந்து வழியும் ரத்தம் அவனை மொத்தமாய் புரட்டிப்போட்டது.

அவள் ரத்தத்தை துடைத்து கட்டுப்போட்டு, ஊசிப்போட்டு நிமிர்வதற்குள் அவன் நெஞ்சு படபடத்து கண்கள் குளமாகி விட்டிருந்தன.

என்னவாயிற்று அவளுக்கு.? நேற்று நான் அவளை கிணற்று பக்கம் அழைத்ததிலிருந்து துவங்கிய பிரச்சனையா? அதுதான் இன்னமும் தொடர்கிறதா?

பேய்கள் மீதெல்லாம் அவனுக்கு துளியும் நம்பிக்கை இல்லைதான். ஒரு மருத்துவனாய் அதற்கு பல விளக்கங்கள் அவனால் கொடுக்க முடியும். ஆனால் இன்று எதையுமே யோசிக்க தயாராக இல்லை அவன்.

'அவ இனிமே கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுக்குள்ளேயேதான் இருக்கணும். இது மட்டும்தான் அவளுக்கு பாதுகாப்பான இடம். சீக்கிரம் கூட்டிட்டு வந்திடு.' தாத்தாவின் வார்த்தைகள் அவன் நினைவில் ஆட, அதுதான் சரியென்று ஒப்புக்கொண்டுவிட்டிருந்தது அவன் மனம்.

'முதலில் அவளை கொண்டு அவன் வீட்டில் சேர்த்து விடுவது தான் நலம். அதன் பிறகு என்ன செய்யலாம் என யோசிக்கலாம்'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.