(Reading time: 12 - 24 minutes)

ரு முடிவுடன் நிமிர்ந்தவன், சில்லென்ற நீரில் முகம் கழுவி துடைத்துக்கொண்டு மனதை ஒரு நிலைக்கு கொண்டு வந்தவனாய் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

அவள் மயக்கம் இன்னமும் தெளியவில்லை. அவளது கையில் க்ளுகோஸ் ஏறிக்கொண்டிருக்க அவளது மற்றொரு கையை அழுத்தி வருடிக்கொடுத்தபடியே அவள் அருகில் அமர்ந்திருந்தான்.

'டார்லிங் எழுந்திடுடா என்றான் இதமான குரலில். நான் இருக்கேன் டா உன் பக்கத்திலே. இனிமே உன்னை விட்டு போக மாட்டேன். உன் பக்கத்திலேயே இருக்கேன். கண் முழிச்சு பாருடா.' அசைவில்லை அவளிடத்தில்.

சில நிமிடங்கள் கழித்து அவளது மாமாவை தொடர்பு கொண்டான் முகுந்தன். கொஞ்ச நேரம் கழித்து அவர் மட்டுமே மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

அந்த நேரத்தில் வந்தது அவனது தாத்தாவிடமிருந்து அழைப்பு. 'என்ன கிளம்பியாச்சா?' என்றார் அவர்.

இல்லை தாத்தா அவளுக்கு உடம்பு சரியில்லை. கொஞ்சம் மயக்கமா இருக்கா...

அவரிடத்தில் சில நொடி மௌனம். ஒரு தீர்க்கமான சுவாசம் பின்னர் உறுதியான குரலில் சொன்னார் 'எப்படி இருந்தாலும் அவள் ராத்திரிக்குள்ளே இங்கே வந்தாகணும்.'

இருங்க தாத்தா. அவளோட மாமாகிட்டே பேசுங்க என்றான் முகுந்தன்.

தாத்தாவின் மீது அவளது மாமாவிற்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்.

'அனுப்பி வைப்பா எங்க வீட்டு பொண்ணை. நான் பார்த்துக்கறேன் அவளை' என்ற தாத்தாவின் வார்த்தைக்கு மேல் மறுத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை அவளது மாமா.

மயக்கத்துடனே அவளை அழைத்து செல்ல விரும்பவில்லை முகுந்தன். அவளது மயக்கம் தீர காத்திருந்தான். அவனது மருத்துவம் ஏனோ அவளிடம் பலிக்கவில்லை.

மதியம் மணி ஒன்று. அதுவரை அவள் மயக்கம் தெளியவில்லை. தாத்தா அதற்குள் பல முறை அழைத்து விட்டிருந்தார்.

தான் ஒரு மருத்துவன் என்பதையும் மறந்து அவள் அருகில் அமர்ந்து புலம்ப துவங்கினான் ச்சே! என் தப்புதாண்டா. உன்னை அந்த கிணத்துப்பக்கம் வரச்சொன்னது என் தப்புதான். அதுவும் ராத்திரி நேரத்திலே.... சாரிடா.... கண் முழிச்சிடுடா ப்ளீஸ்.

அவள் விரல்களை அழுத்தியபடியே அவன் பேசிக்கொண்டிருக்க அவளிடம் சின்னதாய் அசைவு. அதை கவனிக்காதவனாய் பேசிக்கொண்டிருந்தான் அவன்.

அவள் காதில் அந்த வார்த்தைகள் விழுந்தன. 'உன்னை அந்த கிணத்துப்பக்கம் வரச்சொன்னது என் தப்புதான்'.

அவன் விரல்களின் ஸ்பரிசத்தையும் உணர்ந்தாள் அவள். கண்களை திறக்க முயன்றாள் அவள். அவளுக்குள்ளே சிலிர்த்தது. தனது அருகில் இருப்பவன் தன்னவன் என்று புரிந்தது அவளுக்கு. அவன் முகத்தை பார்த்து விட வேண்டும் என்ற தவிப்புடனே மெல்ல கண்களை திறந்தாள் அவள்.

அவள் கண் திறந்த அடுத்த நொடி அவள் முகத்தை அப்படியே கைகளில் ஏந்திகொண்டான். முழுசிட்டியாடா? என்னடா இப்படி பயமுறுத்திட்டே? என்னாச்சுடா உனக்கு? பதற்றத்துடன் வந்து விழுந்தன அவன் வார்த்தைகள்.

இமைக்க மறந்துப்போய் தன்னவனின் முகத்தையே பார்த்திருந்தாள் மாதங்கி. இவன்தானா? என் கையை பற்றியவன். இவன்தானா? அவன் முதல் முதலாக அவள் கையை பற்றிய நொடி அவள் மனதில் வந்து போனது. அவனது கைச்சிறையில், அவனது அருகாமையில் உலகத்தில் உள்ள அத்தனை நிம்மதியும் கிடைத்துவிட்டதை போன்றதொரு உணர்வில் கண்களில் நீர் சேர .ஆழமாக சுவாசித்தாள் மாதங்கி.

என்னடா? ரொம்ப வலிக்குதா? என்றான் அவன்.

ம்ஹூம்... இடம் வலமாய் தலை அசைத்தாள் அவள்.

அப்புறம் ஏன் கண்ணுல தண்ணி.?

கண்டு பிடிச்சிட்டேன். நம்ம நிச்சியதார்ததுக்குள்ளே என் கையை பிடிச்சது யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன். அவள் புன்னகையுடன் சொல்ல அவள் கண்களுக்குள் சில நொடிகள் பார்த்தவன் சட்டென சிரித்தே விட்டிருந்தான்.

பின்னர் அவள் நெற்றியை மெல்ல முட்டி சொன்னான் 'லவ் யூ டா'.

னது சிறய பெட்டியுடன் அவனுடன் கிளம்ப தயாரானாள் அவள், வீட்டு வாசலில் காத்திருந்தது அவனது கார். அங்கிருந்து ஆறு மணி நேர பயணத்தில் சென்னை சென்று சேர்ந்து விடலாம்.

'நீ தைரியமா போயிட்டு வா மா. இனிமே உனக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும் ' மாதங்கியிடம் புன்னகையுடன் சொன்னார் அவள் மாமா.

உள்ளுக்குள் பொறாமையில் புகைந்தபடியே நின்றிருந்தனர் அவளது இரண்டு அக்காக்களும். அவளுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைத்துவிட்டான் என்பதை ஒரு துளிகூட ஜீரணித்துக்கொள்ள முடியாமல் நின்றிருந்தாள் அவளது அக்கா ராஜி.

'இன்னும் ஒரு வாரத்திலே நிச்சயதார்த்தம். எல்லாரும் சென்னை வந்திடுங்க அவன் பொதுவாய் சொல்லி விட்டு கிளம்ப, தலையசைத்து விட்டு அவனுடன் நடந்தாள் மாதங்கி.

கார் கிளம்பும் முன் தாத்தாவை அழைத்து சொன்னான் அவன் 'கிளம்பிட்டோம் தாத்தா.'

ஏண்டா? இவ்வளவு நேரம் ஆயிடுச்சா? சீக்கிரம் வந்து சேருங்க. மாதங்கி பத்திரம் அவளை எங்கேயும் தனியா விடாதே.

கண்டிப்பா தாத்தா. பத்திரமா கூட்டிட்டு வரேன். சொல்லிவிட்டு காரை நகர்த்தினான் முகுந்தன்.

அவர்கள் கார் கிளம்பியதும் அவளது மாமா உள்ளே சென்று விட தனது அக்கா சுமதியிடம் சொன்னாள் மாதங்கியின் இன்னொரு அக்கா ராஜி  'இந்த கல்யாணம் நடக்கக்கூடாது அக்கா.'

கார் நகர்ந்துக்கொண்டிருந்தது. வாழ்க்கையில் முதல் முதலாக கார் பயணம். அதுவும் தன்னவனுடன். மகிழ்ச்சியும் வெட்கமும் போட்டிப்போட அவனருகில் அமர்ந்திருந்தாள் மாதங்கி.

அவள் பக்கமே திரும்பாமல் சாலையை பார்த்தே காரை செலுத்திக்கொண்டிருந்தான் அவன். அவள் எத்தனை தவிர்த்து பார்வையை சாலையை நோக்கி திருப்ப முயன்றும் அவனை நோக்கியே திரும்பிக்கொண்டிருந்தது அவள் பார்வை.

'இப்போ நேரா போய் நான் ஏதாவது லாரிமேலே மோதப்போறேன் பாரு' என்றான் அவன்.

ஏன்? அவள் திகைத்துப்போய் கேட்க,

'வேறென்ன பண்றது? என் பக்கத்திலே இவ்வளவு அழகா ஒரு  பொண்ணு உட்கார்ந்து என்னை அநியாயத்துக்கு இப்படி சைட் அடிச்சிட்டிருந்தா நான் என்ன பண்றது? நம்ம கவனம் சிதறுது இல்ல ' அவன் சிரித்தபடியே சொல்ல

அய்யோ!!!! அதெல்லாம் இல்லை.... அவள் பதறினாள் அவள்.

இல்லையா??? நிஜமா இல்லையா?? கேட்டபடியே அவன் அவள் கண்களுக்குள் பார்த்து வெட்க சிரிப்பை ரசித்துக்கொண்டிருந்தான்.

கவனிக்கவில்லை இருவரும். அந்த கார் டிக்கியின் ஒரு ஓரத்தில் சுருண்டு கிடந்த அந்த பூனையை யாரும் கவனிக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.