(Reading time: 17 - 33 minutes)

த்தனை நாள் எங்களை ஏமாத்துறேன்னு சொல்லி… உன்னை நீயே ஏமாத்திட்டிருந்திருக்குற?... ஏண்டி?... எதுக்காக இப்படி?... என்று மயூரி கேட்க… மௌனம் சாதித்தாள் சாகரி…

ஹரீஷ் வந்து, அவளிடம் உனக்கு நினைவு வந்துவிட்டதாடா?... தலையில் வலி எதுவும் இருக்காடா?... ஒன்னும் செய்யலைதானேடா…?... என்று தான் கேட்டான்…

மழமழவென்று அழுதுவிட்டாள் சாகரி…

பாருடி… பாரு… எப்போ நினைவு வந்ததுன்னு கூட அவர் கேட்கலை… நீ நல்லாயிருக்கியான்னு தான் கேட்குறார்… இப்படி பட்டவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வந்தத்தென்று கேட்க அவள் முகம் மூடி அழுதாள்…

வேண்டாம்டா அழாதே… நான் உன்னை தப்பா நினைக்கலடா… நீ அழாதேம்மா… என்று தங்கையிடம் சொன்னவன், வேண்டாம் மயூரி அவளை திட்டாதே… என்றான் மென்மையாக…

இவ இப்படி மூடி மூடி மறைச்சு இன்னும் எல்லாருக்கும் கஷ்டம் கொடுக்குறதுக்கா???… நீங்களாச்சும் எப்போ நினைவு வந்ததுன்னு கேட்காம அவளைப் பற்றி விசாரிக்கிறீங்க… அவ மேல இருக்குற பாசத்துல…

தினேஷ் அண்ணன் என்னடான்னா ஊரை விட்டே போயிருக்கார்… அதும் இவ வேலையா தான் இருக்கணும்… அவரும் அதைப் பற்றி எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை… இப்போ அவரையும் தெரிஞ்சிட்டு இவளுக்கு…

ஆனா, இன்னும் ஒரு வார்த்தை ஆதர்ஷ் அண்ணன்கிட்ட பேசியிருப்பாளா இவள்?... காதலிச்சாளாம்… உயிரோட அவரை கொன்னுட்டு வந்து இங்க வாழ்ந்துட்டிருக்கா இவ... நீயெல்லாம் மனுஷியாடி… அவரையும் நீ தான் விலக சொல்லியிருப்ப… சொல்லுடி… நீதானே சொன்ன… சொல்லு என்று அவளை மயூரி உலுக்க… அவள் சிலையென நின்றாள்…

நான் இவ்வளவு கேட்கிறேன்… உனக்கு என்ன நெஞ்செழுத்தம்டி… இப்போ சொல்லப் போறியா இல்லையா என்ன நடந்துச்சுன்னு… என்ற மயூரி, சாகரி மேலும் அமைதியாக இருக்கவும், அவளை அறைந்து விட்டாள் சட்டென்று…

அவள் அடித்ததில் கீழே விழுந்தவள், எழும் எண்ணமே இல்லாமல், அப்படியே கிடந்தாள்…

ஆதர்ஷ் தான் அருகில் ஓடி வந்தான்… அவளை தூக்கிவிட எண்ணி அவன் கை நீட்டிய நேரத்தில், அவளது பார்வை வேண்டாம் என்று கூற, மனதில் கொண்ட வேதனையுடன் கையை விலக்கிக்கொண்டான்…

அதைக் கண்டு கொண்ட மயூரிக்கு மேலும் ஆத்திரம் வர, இன்னும் உன் பிடிவாதம் தான் உனக்கு பெருசா படுதுல்ல… உனக்கெல்லாம் எதுக்குடி காதல்?... சொல்லு… எதுக்கு அவரை இப்படி ஒதுக்கி வைக்குற?... ஏண்டி அவரை இப்படி சாகடிக்குற?... என்று கேட்க, சாகரி உதடு கடித்து தன் உணர்வுகளை அடக்கினாள்… அதைக் கண்ட ஆதர்ஷ் உள்ளம் வலித்தது மிக…

இன்னும் வாய் திறக்காமல் இருப்பவளை பார்த்த மயூரி, உனக்கு மனசாட்சியே இல்லையாடி பாவி… சீ…. உன்னைப் போல ஒருத்தியை பார்த்ததே இல்லடி நான்… என்று குமுற,

போதும் லக்ஷ்மி… இனி ஒரு வார்த்தை பேச வேண்டாம்… என்றவன் முகம் சிவக்க, அவளிடம் யாரும் எதுவும் கேட்க கூடாது… கேட்கிறேன் என்ற பெயரில் அவளை துன்புறுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன்… அவளாக சொன்னால் சொல்லட்டும்… நீங்கள் யாரும் அவளிடம் என்ன நடந்தது என்ன நடந்தது என்று கேட்டு என்னவளை காயப்படுத்தி துடிக்க வைக்காதீர்கள்… ப்ளீஸ்… அவள் தாங்க மாட்டாள்….. என்றவன் அனைவரைப் பார்த்தும் கையெடுத்து கும்பிட, அங்கே சில நிமிடம் மற்றவர்களின் மூச்சு விடும் சப்தம் கூட கேட்கவில்லை…

சாகரி தான் அவன் வார்த்தையில் மேலும் உடைந்தாள்… அது அவளின் மனதில் பலத்த புயலை உருவாக்க, அவளையும் அறியாது கதறினாள்… அவளின் அழுகை மட்டும் அங்கே கேட்க, அவன் துடித்தான்...

கேள்… உனக்கு கேட்கிறதா அவரின் இதயத்துடிப்பு… உன் அழுகைக் கண்டு துவண்டு போகும் உன்னவனை பார்… என்று மயூரி மெல்ல உரைக்க, அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்….

கண்கள் கலங்கி வாடிய முகத்துடன் தன்னவன், கலைகொண்ட அவன் அழகு முகம் எங்கே?... அது கொண்ட புன்னகை எங்கே?... என்று கேள்வியுடன் அவனைப் பார்க்க, எல்லாம் உன்னிடத்திலே தான் இருக்கிறது… உன் புன்னகை என்ற ஒரு மந்திரத்தில் தான் இருக்கிறது என்றான் அவன் கண்களினால்…

தரையில் அமர்ந்திருக்கும் தன்னவளுக்கு வலிக்குமோ என்றவாறு அவன் மெதுவாக நடந்து அவள் முன் மண்டியிட்டான்….

உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க இனி… மீறி கேட்டா எங்கிட்ட சொல்லு நான் பார்த்துக்கறேன்… ஆனா நீ மட்டும் அழாதடி… என்னால அதைப் பார்க்க முடியலை… என் உலகமே நீ தாண்டி… நீ அழுதா நான் கரைஞ்சு காணாம போயிடுவேண்டா சீதை…. என்றவன், காதல் நிரம்ப சொன்ன வார்த்தைகள் அங்கிருந்த அனைவரின் இதயம் தொட, ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர்….

பின் அவள் இமைக்காது தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன், நீ சொன்ன மாதிரியே நான் வெளிநாடு போயிட்டு ஒரு வருஷம் கழித்து தான் திரும்ப வந்தேன்… உன்னை விட்டு நான் விலகி இருக்கணும் அதானே உன் ஆசை…. நான் மறுபடியும் போயிடுறேண்டா… நீ என்னைப் பார்த்து அழறதை என்னால ஜீரணிக்க முடியலை… ஒருவேளை நான் உன் பக்கத்துல இல்லாம இருந்தா நீ அழமாட்ட தானே… இன்னும் இரண்டு மூன்று நாளில் நான் கிளம்பிடுவேண்டா… இனி இந்தியா வரவே மாட்டேன்… ஆனா நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தரணும்….இங்கே இருக்குறவங்க கூட தான் நீ இருக்கணும் எப்பவும்…

என் நிழலை விட்டு தான் நீ அகன்றுவிட்டாய்… ஆனால் இவங்க யார் நிழலை விட்டும் நீ அகலக்கூடாது… என அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு, பின் என் சகி இங்கே தான் இருக்குறா…. என்று அவன் நெஞ்சை தொட்டுக்காட்டிவிட்டு, உன்னை ரொம்ப விரும்புறேண்டி… அடுத்த ஜென்மத்திலாவது உன்னோட சேர்ந்து வாழணும்டி நான்…. என் கடைசி மூச்சு உள்ள வரைக்கும்…. என்று சொல்லிவிட்டு, அவள் தலையில் கை வைக்க சென்றான், பின் கை எடுத்துவிட்டு, தன்னருகில் தெரிந்த அவளின் நிழலை தொட்டுப் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் கண் மூடி அவள் ஸ்பரிசத்தை உணர்ந்தவன், விருட்டென்று அங்கிருந்து சென்றான்…

ஆதி… நில்லு… எங்கே போகிறாய்… ஆதி… மச்சான்… என்று முகிலன் அவன் பின்னே ஓட, அண்ணா நில்லுங்க… என்றபடி அவ்னீஷும் சென்றான்… இதற்கிடையில் ஷன்வி நந்து சித்துவை அப்போதே அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டாள்… சாகரி அவர்களை கட்டிப்பிடித்து அழுத பின்னர் அங்கிருந்து நந்துவையும் சித்துவையும் ஷன்வியுடன் செல்லுமாறு அவள் சொல்ல அவர்களும் ஷன்வியுடன் சென்றனர்…

தினேஷும், காவ்யாவும் சாகரியின் அருகில் வந்து, என்னம்மா என்ன சொன்னான் ஆதி?... ஏன் ஒரு மாதிரி போகிறான் என்றான்….

அவள் பதிலே சொல்லவில்லை… அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள்…

என்னடி ஆச்சு… அண்ணன் என்ன சொன்னார்… சொல்லித்தொலைடி… என்று மயூரி கேட்க அப்போது அங்கு வந்த அவ்னீஷ், அண்ணன் வெளிநாடு போகப்போகிறாராம்… இனி திரும்பி இந்தியா வரவே மாட்டாராம்… இதை அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று எங்கள் இருவரிடம் சத்தியம் வாங்கிவிட்டார்… என்று முகிலனையும் கைக்காட்ட… மயூரி வெடிக்க ஆரம்பித்தாள்…

முடிந்தது… உன் தலையில் இப்படி நீயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டாயேடி பாவி… பாவி… போச்சு… எல்லாம்… இன்னும் நீ இங்க இருந்து என்னடி பண்ணப்போற?... உயிரோட ஒருத்தரை சாகடிச்சுட்டு நீ மட்டும் கல்லாவே இருடி… என்று அழ, முகிலன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்…

தினேஷ் சாகரியிடம்… நீ தடுத்திருந்தா அவன் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டான் தானேம்மா… நீ ஏண்டா தடுக்கலை… இப்படி உன் வாழ்க்கை கேள்விக்குறி ஆகுறதை பார்க்கவா நான் இரண்டு வருஷம் கழிச்சு உன்னைப் பார்க்க வந்தேன் என்று புலம்ப, காவ்யா அவனை தேற்றினாள்…

அவ்னீஷோ அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தான்… ஹரி மட்டும் கூர்மையாக சாகரியை கவனித்தான்…

முடிந்தது சகலமும்… கொஞ்சம் கொஞ்சமாக என்னவனை நானே கொன்று கொண்டிருப்பது போதாதென்று இன்று அவரை மொத்தமாக அவரது குடும்பத்தை விட்டு விரட்டியடித்த பாவமும் என்னை வந்து சேரப்போகிறது… அவரது தாய்க்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.