(Reading time: 20 - 40 minutes)

 

நேற்றிரவு, திருமணத்திற்கு முன்பு

ஒரு பக்கம் அபிராமி அணைத்திருக்க, இன்னொரு பக்கம் ஜானகி படுத்திருக்க, அவர்களுக்கு நடுவில் படுத்திருந்த சுபாத்ராவிற்கு  உறக்கம் வரவில்லை .. எவ்வளவு நேரம்தான் இப்படியே இருப்பது ? மெல்ல சத்தம் வரமால் எழுந்தவள், அங்கு தன்னுடன் உறங்கி கொண்டிருந்தவர்களின் முகத்தை பார்த்தாள் .. வள்ளி பாட்டி, அபிராமி, சிவகாமி, லக்ஷ்மி, பானு, மீரா , ஜானகி மற்றும் மற்ற பெண்கள் .. காலையில் ஏதோ ஒரு பாட்டி சொன்னது  ஞாபகம் வந்தது ....

வள்ளி பாட்டி ஏதோ சொல்லி அவளை கொஞ்சி கொண்டிருக்கும்போது, ஒரு பாட்டி " அதுவும் சரிதான் .. நம்ம வீட்டுல இருக்குரவரைதானே இப்படி செல்லம் கொஞ்ச முடியும் ..என்னதான் ஆனாலும் கல்யாணம் ஆனபிறகு இப்படி இருக்க முடியுமா ? " என்றுவிட்டு போனார் .. அவளின் முகம் போன போக்கை பார்த்துப் பாட்டி " அட ஒண்ணுமில்ல மா .. நீ கவலை படாதே " என்றார் .. ஆனால் சுபாத்ராவிற்கோ  நல்ல கனவில் இருந்தவளை தட்டி எழுப்பியது போல இருந்தது ..

" நாளைக்கு கல்யாணம் ஆகி, அப்பறம் சென்னை போய்ட்டா நான் அத்தை அர்ஜுன் கூட தானே இருப்பேன் .. அப்போ பெரியப்பா ,பெரியம்மா , அப்பா,ம் அம்மா , கிருஷ்ணா அண்ணா, மீரா அண்ணி, ஜானு, ரகு .. இவங்களை  எல்லாம் விட்டுட்டு போகணுமே .. கடவுளே .. இதை எப்படி மறந்து போனேன் ??" ஏதோ ஒன்று இதயத்தை அழுத்தவது போல பாரமாய் உணர்ந்தாள் .. சுற்றி அனைவரும் இருப்பதால்  அவளால் அதை வெளிகாட்ட முடியவில்லை .. இரவுவரை காத்திருந்தவள் இப்போது மீண்டும் அந்த எண்ணங்களை அசை போட்டாள் .. மெல்ல மாடிப்படி ஏறி சென்றாள் .. அங்கு உறக்கத்தில் இருந்தனர் அவளின் தந்தையும் பெரியப்பாவும் .. இன்னொரு பக்கம் ரகுவும் , கிருஷ்ணனும் ..

அவர்களை பார்த்ததுமே அவளது விழிகள் நீர் கோரத்தன .. அருகில் இருந்த தூணில் அமர்ந்துகொண்டு மௌனமாய் கண்ணீர் வடித்தாள் .. திடீரென்று யாரோ அவள் முதுகில் கை வைக்க , திட்டுக்கிட்டு திரும்பினாள் ...

" அம்மா ??"

" ஷ்ஷ்ஷ்ஷ்" என்று சமிக்ஞை காட்டியவரை கட்டிக்கொண்டு அழுதாள்  சுபத்ரா ..

" சுபா .. சுபா .. அழாத .. இங்க வா.. " என்று அவளை வெளியில் அழைத்து வந்தார் ..

" அம்மா " என்று மீண்டும் அவரை கட்டிகொண்டு அழுதாள் .. பெற்ற மனமும் பாகாய்  உருகிவிட அவரும் அழுதார் ..

" ஷ்ஷ்ஷ் .. சுபா என்னடா இது ? யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க ? நாளைக்கு கல்யாணத்தை வெச்சுகிட்டு இப்போ நீ இப்படி அழுதா தப்பா நினைப்பாங்க கண்ணா " என்றார்...

" அம்மா .... கல் ..... கல்யாணம் .. இந்த கல்யாணம் "

" சொல்லு "

" எனக்கிந்த கல்யாணம் வேணாம்மா "

" என்னடீ சொல்ற ?" என்று விழி விரிய கேட்டார் சிவகாமி

" ப்ளீஸ் மா .. எனக்கிந்த கல்யாணம் வேணாமா .. நான் உங்க கூடவே இருந்திடுறேன் மா " என்று அழுதால் சுபத்ரா...

" சுபா ..என்னனு சொல்லாமல் நீ இப்படி அழுதா அம்மா என்னடா நினைப்பேன் .. இங்க பாரேன் .. ?? செல்லம் அம்மாவை நிமிர்ந்து பாருடா ? சொல்லு என்னாச்சு ? மாப்பிளை ஏதும் சொன்னாரா ? அவரூ ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரே .. என்னாச்சு டா "

" அம்மா அர்ஜுன் ஒன்னும் சொல்லல .. ஆனா எனக்கு கல்யாணம் வேணாம்மா .. நான் உங்களை நம்ம வீட்டை விட்டு போக மாட்டேன் "

" ..."

" என்னால முடிலம்மா .. எப்போதும் எனக்கு சப்போர்ட் பண்ற பெரியம்மா, பெரியப்பா, என்னை கொஞ்சிகிட்டே இருக்குற அப்பா, என்னை திட்டிகிட்டே செல்லம் கொஞ்சுற நீங்க, எனக்கு என்ன வேணும்னு புரிஞ்சு செய்ற கிருஷ்ணா அண்ணா , என்னை எப்பவுமே சீண்டுற ரகு .. உங்களை எல்லாம் என்னால எப்படி விட முடியும்? ப்ளீஸ் மா ... நான் போகமாட்டேன் ,, என்னை இப்படியே விட்ருங்கம்மா " என்று கையெடுத்து கும்பிட்டாள் .. தன் மகளின் நிலையை பார்த்து கண் கலங்கினார் சிவகாமி ..காதலில் ஜெயித்த ஆனதத்தில் இத்தனை நாள் இருந்ததென்ன, இன்று இவள் அழுவதென்ன ? அன்றும் சரி இன்றும் சரி பெண்ணுக்குத்தான் இந்த நிலை .. இறைவனை நொந்துக் கொண்டார் சிவகாமி .. அவரின் சிந்தனை அதில் சிக்கி கொள்ள  சுபாவோ பிதற்ற ஆரம்பித்தாள் ...

" இனிமே பெரியம்மா எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்களா மா ? "

" இனிமே பெரியப்பா கண்ணாடியை நான் மறைச்சு வெச்சு விளையாட முடியாதா ? "

" இனி உங்க திட்டை கேட்க மாட்டேனா ? "

" கிருஷ்ணா அண்ணா மடியில் தூங்க மாட்டேனா ? "

" அப்பா இனிமே என்னை கொஞ்ச மாட்டாரா ? "

" ரகு என்னை ............ " என்றவள் வெடித்து அழுதாள் ..அவளை பொருத்தவரை கிருஷ்ணன் மீதுதான்  அவள் உயிரையே வைத்து இருந்தாள் ..ரகு பேசமால் கோபமாய் இருந்தால் கூட " போடா " என்று விட்டு விடுவாள் .. ஆனால் இன்றுதான் அவன்மீது தான் எத்தனை அன்பாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்தாள் .. ரகு அவளுக்கு அண்ணன் ஸ்தானத்தில் இருந்தாலும் அவர்கள் பழகியது நண்பர்கள் போல் அல்லவா ???

" ரகு .. ரகு என்னை மறந்திடுவானாம்மா ? " என்று கேட்டு அப்படியே அமர்ந்து அழுதாள் .. அவளின் அழுகை வேகமாக சிவகாமி தான் தன்னிலைக்கு வந்தாள் .... வழக்கம் போல அவரின் கோபத்தையே ஆயுதம் ஆக்கினார் ..

" ஏய் .. ஏந்திரி  டீ ... சொல்றேன் ல " அவரின் அதட்டலில் எழுந்தாள்  சுபத்ரா ..

" கண்ணை துடை .. கண்ணை துடைன்னு சொல்றேன்ல ???"  மெல்ல கண் துடைத்து கொண்டாள் ... அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அருகில் அமர்ந்தார் சிவகாமி .. அதே போலியான கோபக்குரலில்  பேசினார் ..

" மனசில் என்னடி நெனச்சுகிட்டு  இருக்க நீ ? "

" உலகத்திலேயே நீ மாடும்தான் மகாராணியா ??"

" ..."

" ஏன் நான் எங்கம்மா வீட்டை விட்டுதானே வந்தேன் ??? அவங்களை விட்டு இருக்க முடில்லன்னு இப்போ நான் போயிடவா ?"

" ம்ம்மா "

" பேசாதே .. "

" ..."

" உங்க பாட்டி அவங்க அமா வீட்டுல இருந்துதான் வந்தாங்க .. அபி அக்கா  அவங்க அம்மா வீட்டுல இருந்துதான் வந்தாங்க .. நானும் என் பிறந்த வீட்டை விட்டுடுதான் வந்தேன் .. இது இயல்பு .. இதுதான் எதார்த்தம்.. என்னமோ இந்த உலகத்துலேயே முதன் முதலில் கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு போற மாதிரி பேசுற ? அதுவும் பானுவை மாமியாரா வெச்சுகிட்டு ...உன்னை அவ மருமகளாகவா  பார்க்குறா ??? மகலாதானே பார்க்குறா ?? "

"...."

" அவங்க வீடும் சென்னையில தானே இருக்கு ??? அங்கிருந்து நம்ம வீடு வர ஒரு பதினஞ்சு நிமிஷம் ஆகுமா ? எத்தனை பொண்ணுங்க இப்போலாம் நாடுவிட்டு  நாடு போயி குடும்பம் நடத்துறாங்க .. எத்தனை பேருக்கு கொடுமைக்கார மாமியார் கிடைச்சிருக்காங்க ? அவங்களாம் வாழலையா ?? நீ எங்க செல்ல பொண்ணுதான் இல்லைன்னு சொல்லல .. ஆனா உன்னை விட செல்லமாய் வளர்ந்த எத்தனை பேரு அவங்க குடும்பத்தை விட்டுட்டு இருக்காங்க ?? வீட்டுல ஒரே வாரிசாய் வளர்ந்து பெண்கள் என்ன செய்வாங்க ??? "

"..."

"இதெல்லாம் விடு ....மாப்பிள்ளையை நினைச்சு பார்த்தியா ?? இந்த கல்யாணத்தை நிறுத்தினா அவர் என்னாவார் ??" அவரின் கேள்வியில் அவளது உடல் நடுங்கியது .. அர்ஜுனன் தைரியசாலிதான், திடமானவந்தான், துன்பங்களை கடந்துவந்தவன் தான் .. ஆனால் இவளை விட்டுவிட்டு அவன் வாழ்வானா ? அன்று அந்த மலையிலிருந்து குதித்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்பதை உயிர் நடுங்க சொல்லியவன் அல்லவா அவன் ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.