(Reading time: 24 - 47 minutes)

காதல் நதியில் – 26 - மீரா ராம்

திகாலை விடியலை கடற்கரையில் ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவே நின்று பார்த்துக்கொண்டிருந்தான் ஆதர்ஷ்… வழக்கம் போல் அவனுக்கு அந்த விடியல் பெரும் உவகை அளிக்கவில்லை…. கதிரவன் வானில் தோன்றி, வானத்தில் எங்கும் பரவி, கடலின் அந்த கடைசியில் இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலப்பது போல் இருந்த காட்சியை அவன் கண் அகற்றாமல் கண்டான்….

மனதில் பெரும் கவலை உண்டாக நின்றிருந்தவனின் முகத்தில் கடலின் நீர் வந்து விழுந்தது அருகிலிருந்த பாறையின் மீது பட்டு தெரித்து…

சட்டென்று மோன நிலையிலிருந்து விடுபட்டு, கடலின் முன் மண்டியிட்டவன், அம்மா, கடல் அம்மா, கடலின் இளவரசி என்பது தான் என்னவளின் பெயருக்கு அர்த்தமாம்…

kathal nathiyil

அவளைப் பெற்ற என் மாமன் சொன்னார்… எனில் அவள் உன் மகள் தானே… தனியே ஏனம்மா என்னவளை தவிக்க வைக்கிறாய்… அவளுடன் சேர்ந்து நான் மேற்கொண்ட பயணம் பாதியிலேயே ஏன் நிற்கிறதும்மா?...

என்னவள் என்னை விட்டு பிரிந்து தனித்தீவில் பாறைகளின் நடுவில்… நானோ தனியொரு கட்டுமரத்தில் அவளில்லாமல் தவிக்கிறேன்… என்றுதான் நான் கரை சேருவேன் அவளுடன் இணைந்து???... பதில் சொல்லும்மா… எங்கிட்ட என்னவளை கொடுத்துடும்மா… கொடுத்துடும்மா… என்று கடல் அன்னையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தபோது,

அங்கே சாகரியின் விழிகளில் இருந்து நீர் வழிந்து கன்னங்களை நனைக்க, அவள் கை சட்டென்று அதை தொட, அவள் விரல்களில் ஒட்டிக்கொண்டிருந்த கண்ணீரையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள், அது காற்றில் காய்ந்து உப்பு கலந்த கண்ணீர் கைகளில் இருந்த தடம் தெரியாமல் மறைந்திருக்க, இதுதான் ராம்… நான் உங்களுக்கு கொடுத்து கொண்டிருப்பது இன்றளவும், என் காதல் கண்ணுக்கு தெரியாது தான் இந்த காய்ந்த கண்ணீரைப்போல, ஆனால், என்றும் அது உங்களுடன் இணைந்திருக்கும் விரல்களில் அது ஒட்டிக்கொண்ட தடம் கூட தெரியாமல்… எப்போ வருவீங்க ராம்?... உங்களைப் பார்க்கணும்… ஒரு தடவை உங்களைப் பார்க்கும் யோகம் எனக்கு மீண்டும் வேண்டும்… அது கிட்டிடுமா எனக்கு?... என்று அவள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள் தனக்குள்…

அலைகள் எழுப்பிய சத்தம் அவனை நனவுக்குக்கொண்டுவர, கண்களை மெதுவாகத்திறந்தவனின் பார்வை கண்டது சுற்றிலும் நீரைத்தான்… ஏனோ அது அவனுக்கு அவளுடைய விழிகள் சிந்திய நீராக பட, வார்த்தைகள் சொல்லும் நா ஒட்டிக்கொண்டது சொற்கள் இல்லாது…

அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் அவன் பெயரை சொல்லி கூச்சலிட, அவள் அவனை சேர முடியாத, அவனை நினைக்கக்கூட தான் தகுதியில்லாத நிலையில் இருப்பதாக உணர்ந்தவள் அவள் உயிர் இற்றுப்போவதை அறிந்தாள் கொஞ்சம் கொஞ்சமாய்…

உன்னை விட்டு பிரிந்து இருக்கும் இந்த நிலை மேலும் நீடித்தால் என் உடலில் உயிரும் இருக்காது, உன்னை எண்ணிய என் நெஞ்சமும் மாறாது, என்னை துண்டு துண்டாக வெட்டி கடலுக்குள் போட்டாலும், என் உயிரற்ற உடலை மீன்கள் தின்னாலும் ஏன் என் உடலை எரித்தாலும் கூட என் மனம் வேகாது சீதை… என்று குனிந்து இரு கைகளிலும் கடல் நீரை அள்ளியவன், வேதனையுடன் அதை மீண்டும் கடலிடத்திலே வீசி எறிந்தான் கோபத்துடன்….

நெஞ்சில் வைத்த கையை இறுக்கியவள், உள்ளுக்குள் எதுவோ செய்வதை உணர்ந்து, அவனைப் பார்க்கும் ஆவலை கூட்டினாள்… உன்னைப் பாராமல், உன் காலடியில் என் உயிர் சேர்க்காமல் கண்களில் இருந்து வழியும் நீரும் நிற்காதா?.... என்றவள் முகத்தில் திடீரென்று வானத்தில் இருந்து தூறிய சிறு தூரல் அவள் கன்னங்களில் பட்டு தெறித்தது….

வலியுடன், அதை வரவேற்றவள் புன்னைகை மாறாமலே, தன்னவனை எண்ணி மீண்டும் ஊமையானாள் மொழிகள் இல்லாது…

இத்தனை வலிகளும் எதற்காகடா… எனக்காகவா?... என் நலத்திற்காகவா?... நீ உண்மையில் என்னைக் காக்கும் காதல் கவசம் தான்… ஆனால், இப்படி வருத்தி எனக்காக ஏன் கண்ணீர் சிந்துகிறாய்?... இது தேவைதானா என்னவளே???... அப்படி ஒரு நலம் எனக்கு வேண்டுமா உன் கண்ணீரில்….

கண்ணீர் சிந்துவதால் நானும் இறந்துவிட மாட்டேன், என் கண்ணீரும் ஒன்று விடாமல் வற்றியும் விடாது… சிந்தியது கண்ணீர் தானே… உனக்காக உயிரையே தர இருப்பவளுக்கு கண்ணீர் எம்மாத்திரம் என்னவனே???... என்றவள் தரையில் விழுந்த தன் ஒரு துளி விழி நீரைப் பார்த்து புன்னகைத்தபடி அங்கிருந்து அகன்றாள், தினேஷின் குரல் கேட்டு…

சிறிது நேரம் அங்கேயே இருந்தவன், பின் மனதை தெளிவுபடுத்திக்கொண்டு, அந்த சீதையை அவள் அன்னை கடைசியில் அவர்களிடத்தில் எடுத்துக்கொண்டது போல், உன் மகளை உன்னிடம் எடுத்துக்கொள்ளும் எண்ணமிருந்தால் அதை மாற்றிவிடும்மா… அவள் எனைச் சேரப்பிறந்தவள்… ஒரு தாயாய் உன் மகளுக்கு நல்லதை செய்மா… என்னிடமிருந்து பிரித்துவிடாதேம்மா… என்ற வேண்டுகோளோடு வீட்டினை அடைந்தான்…

ஹரியும் அவ்னீஷும் ஆதி சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர் இரண்டு நாட்களாக… இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து ஆதியை எப்படிக் காப்பாற்ற என்று இருவரும் பலவாறு யோசித்தும் எந்த வழியும் அவர்களுக்கு கிட்டிடவில்லை…

மூன்று நாட்களுக்குப் பிறகு…

வா ஆதர்ஷ் என்ன சாப்பிடுகிறாய்?... என்று வினவினான் இலங்கேஷ் ஆதியிடம்…

ஆதர்ஷ் பேசாமல் இருக்க, இலங்கேஷ் மேலும் ஒருமுறை அழுத்தி வினவினான்,,, உன்னிடம் தான் கேட்டேன் ஆதர்ஷ்… என்று…

ஆதியோ ஒன்றும் வேண்டாம் என்றான் சலிப்புடன்…

சரி விடு… அப்புறமா விருந்தே சாப்பிடலாம்… நீ சொல்லப்போற பதில் தான் ஆதர்ஷ் இன்னைக்கு இப்போ முக்கியம்… என்றவன் ஆதி கல்லாக இருப்பதைப் பார்த்துவிட்டு, ஹரியிடம், இவன் ஏன் ஹரி இப்படி இருக்கிறான் சந்தோஷமே இல்லாமல்…. நீயாவது சொல்லக்கூடாதா இவனிடம் கொஞ்சம் சிரிக்க சொல்லி… என்றான் இலங்கேஷ்…

மொத்தமா அவன் மனதைக் கொன்னுட்டு சிரிக்க சொல்லுறியாடா பாவி… உனக்கெல்லாம் கண்டிப்பா நரகம் தாண்டா… என்றான் ஹரி கோபத்துடன்…

ஹாஹாஹா… என்று பலமாக சிரித்தவன், ஹ்ம்ம்.. உன் போன்ற நல்ல நண்பன் கிடைக்க ஆதர்ஷ் கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும் இல்லையா ஹரி… எவ்வளவு பாசம் அவன் மேல் நீ வைத்திருக்கிறாய்?... கொஞ்சம் சொல்லமுடியுமா?... என்று கேட்டான்…

என் பக்கத்தில் வா சொல்லுகிறேன் என்றான் ஹரியும் கையை முறுக்கிக்கொண்டு…

சண்டையில் என்னை வெல்ல ஒருத்தன் பிறந்து தான் வரணும் ஹரி… என்றான் இலங்கேஷ் அலட்சியமாக…

ஹரிக்கு அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல், வாடா போகலாம் என்றான் ஆதியைப் பார்த்து…

ஆதி கண் மூடி இமைத்துவிட்டு, போகலாம் சற்று நேரம் காத்திரு என்றான் அமைதியாக…

சே… என்னமோ செய்… என்றவாறு ஹரி, தன் இயலாமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தான் கோபமாக…

சரி… ஆதர்ஷ்… நேரத்தை மேலும் வீணாக்க வேண்டாம்… சொல்… சம்மதம் தானே??? என்று கேட்டான் இலங்கேஷ்…

எதற்கு??? – ஆதி

திருமணத்திற்கு… - இலங்கேஷ்…

யாருடைய திருமணத்திற்கு???.. – ஆதி

இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி… உன் திருமணத்திற்கு தான்…. – இலங்கேஷ்

அதற்கு என் சம்மதம் மட்டும் போதாது, என்னைக் கைப்பிடிக்கப் போகிறவளும் சம்மதம் சொல்ல வேண்டும் என்றான் ஆதி இலங்கேஷைப் பார்த்துக்கொண்டே…

ஆதர்ஷ் அவள் எப்போதோ சம்மதம் சொல்லிவிட்டாள்… உன் சம்மதத்திற்காக தான் அவளும் காத்துக்கொண்டிருக்கிறாள் இத்தனை வருடங்களாய்… -இலங்கேஷ்

ஆம்…. காத்துக்கொண்டு தான் இருக்கிறாள்… இனியும் அவளை காத்திருக்க விட மாட்டேன் - ஆதி…

மிக்க மகிழ்ச்சி ஆதர்ஷ்… உன் பதில் எனக்கு உவகை அளிக்கிறது வெகுவாய்… என் தங்கை இந்த பதிலுக்குத்தானே இத்தனை நாட்கள் பொறுத்திருந்தாள்… அவள் இந்நேரம் உன் வார்த்தைகளை கேட்டிருந்தால் மிக மகிழ்ந்திருப்பாள்… என்று இலங்கேஷ் சொல்லி முடிக்கும் தருணம்,

அண்ணா, நிஜமாகவே மகிழ்ச்சியின் உச்சத்தில் தான் நான் இருக்கிறேன்…. என்றாள் அங்கு வந்த இலங்கேஷின் தங்கை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.