(Reading time: 24 - 47 minutes)

 

சூர்ய சைதன்யா!!!!!....

இலங்கேஷின் தந்தை மிகப்பெரிய செல்வந்தர்… ராஜ வம்சம் கூட… இலங்கை தான் அவர்களின் பூர்வீகம்… அங்கு மாளிகை போன்ற வீட்டில் பிறந்து வளர்ந்தவன் தான் இலங்கேஷ்…

ஆறு தலைமுறைகளாக பெண் பிள்ளை என்ற ஒன்று அந்த வம்சத்தில் இல்லாமல் இருக்க, ஏழாவது தலைமுறையில் அந்த குறையைப் போக்க பிறந்தவள் தான் இலங்கேஷின் தங்கை….

நிறைந்த சூரிய கிரகணத்தில் பிறந்தவள் அவள்…. சூரியனையே நாகம் விழுங்கிய கிரகண நேரத்தில் மண்ணில் கால் பதித்தவள் என்பதால் அவளுக்கு சூர்ய சைதன்யா என்று பெயரிட்டு வளர்த்தனர்…

இலங்கேஷிற்கும் அவளுக்கும் 5 வயது வித்தியாசம்… பெண் பிள்ளையே இல்லாமல் இருந்து பிறந்தவள் என்பதால், அவள் மேல் மலை அளவு பாசத்தையும் அன்பையும் பொழிந்தனர் அவளைப் பெற்றவர்கள்…

உயிருக்கு உயிராக அவளை வளர்த்தவர்கள் மருந்துக்கும் அவளைக் கண்டிக்கவில்லை… அவளின் 12 வது வயதில் அவளைப் பெற்றவர்கள் காலமாகி விட, நன்றாக விவரம் தெரிந்திடாத வயதில் அவள் இருந்தாள்…

அன்றிலிருந்து அவளை வளர்க்கும் பொறுப்பைக் கையிலெடுத்தவன், கண்டிப்பு என்ற ஒன்றையே மறந்தவனாக அவளை வளர்த்தான்… அப்படி வளர்ந்ததாலோ என்னவோ பிடிவாதம் என்ற ஒன்று அவள் இரத்தத்தில் ஊறிப் போனது வெகுவாய்…

அவள் எதன் மேல் ஆசைப்பட்டாலும் அவள் சொல்வதற்குள் அவன் அவளிடத்தில் அதை சேர்ப்பிப்பான்…

அவள் நடை, உடை, பாவனை, படிப்பு, பழக்க வழக்கங்கள் என அனைத்தும் அவள் விருப்பப்படியே தான் அமைத்துக்கொண்டாள்…

அவனும் ஒரே ஒரு தங்கையின், அந்த வம்சத்தின் குலவிளக்கை கண்ணின் மணி போல் பாதுகாத்து அவளின் விருப்பப்படி அவனும் நடந்து கொண்டான்…

பிடிவாதத்தில் தான் அவள் குணம் சற்று பிரண்டதே தவிர, படிப்பாகட்டும், கலையாகட்டும், அனைத்திலும் முதலிடம் பிடித்தாள்…

ஆடைகள் அணிவதில் நேர்த்தியும் கண்ணியத்தையும் கடைபிடித்தாள்… தன் அண்ணனைத் தவிர, கண் துடைப்பிற்கு கூட எந்த ஆணிடத்திலும் பேச்சு வார்த்தை வைத்துக்கொண்டதில்லை அவள்…

அப்படி இருந்ததாலோ என்னவோ, இலங்கேஷிற்கு தங்கையை எண்ணி கர்வமும், மகிழ்ச்சியும் உண்டானது…

இப்படி இருந்த நிலையில் தான், தங்கையை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்தான், இலங்கேஷ்…

அங்கே தான் அவள் அவ்னீஷை சந்தித்தாள்… அவனிடம் பேசுவது பழகுவது ஏனோ அவளுக்கு தன் அண்ணனிடம் பேசி பழகுவது போல் இருக்க, தன் தமையனே தன் அருகில் இருப்பது போல் உணர்ந்து அவனிடம் நெருங்கி பழகினாள் நட்பு என்ற வட்டத்திற்குள்…

அவ்னீஷிற்கோ அவளிடம் பழகுவது ஏதோ ஒரு வகையில் தன் குடும்பத்தை நினைவூட்ட, தன் குடும்பத்தில் ஒருத்தியாய் நினைத்து அவளிடம் பழகினான் அவனும் தோழனாக…

அவ்னீஷ் உடனான நட்பு இலங்கேஷின் காதுக்கு எட்ட, அவன் தங்கையிடத்தில் எதுவும் விசாரித்துக்கொள்ளவில்லை… அவனுக்கு அவர்களின் உறவு முறை நட்பு ரீதியில் உள்ளது தான் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது…

ஒருநாள், அவளே, அதை அவனிடத்தில் தெரிவித்தாள்…

அண்ணா, எனக்கு அவ்னீஷிடம் பேசி பழகும்போது, உன்னிடம் பேசி பழகுவது போல் இருக்கிறது… அவன் அருகில் இருக்கும்போது உன்னருகில் இருக்கும் உணர்வு எனக்கு கிடைக்கிறதுண்ணா… என்றாள் தமையனின் தோளில் சாயந்தபடி…

சதும்மா, இதெல்லாம் நீ என்னிடம் சொல்லணுமாடா??... நீ என் தங்கைடா… உன்னை எனக்கு தெரியும்டா… என்றான் அவளைப் புரிந்து கொண்ட அண்ணனாக…

மேலும், அண்ணனும் இங்கேயே இருந்திடவா உன்னுடன், உன் படிப்பு முடிந்து விட்டது… இங்கே தொழிலை தானே கற்றுக்கொண்டிருக்கிறாய்… இன்னும் சில மாதங்களில் அது முடிந்து விடும்.. பின்,, நாம் ஊருக்குப் போகலாம்… என்ன சொல்லுகிறாய் சது?...

இல்லண்ணா, வேண்டாம், அப்பா உன்னை நம்பி எவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைச்சிருக்கிறார், நீ என்னுடன் இருந்தால், அதை எல்லாம் யார் கவனிப்பார்கள்?... அது மட்டும் இல்லாது, இப்போது யாரோ உனக்கு நிகராக வளர்ந்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்… நீ ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறாய்?... உடனே அதை அகற்றும் வழியைப் பாரு… என் அண்ணனுக்கு நிகர் எவரும் இருக்கக்கூடாது.. வரவும் நான் விடமாட்டேன்… என்றாள் குரோதமாக….

சது… இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்… அது யாரோ, புதியவன், யாரென்று விசாரித்துக்கொண்டிருக்கிறேன்… அவன் அபரிதமாக தான் வளர்ந்து கொண்டிருக்கிறான்… குறைவான காலத்தில் இத்தனை வளர்ச்சியை எட்டியிருக்கிறான்… நிச்சயம் அவன் திறமைசாலிடா சது… என்றான் இலங்கேஷ் சிரித்துக்கொண்டே…

சிரிக்காதே அண்ணா, உனக்கு பக்கத்தில் கூட யாரும் வரக்கூடாது… அதை நான் அனுமதிக்க மாட்டேன்… நீயாக முடிவெடுக்கப் போகிறாயா?... இல்லை நானே எடுக்கவா என்று அதிகாரத்துடன் கேட்டாள் அவள்…

சது… வெயிட்… அவன் யாரென்று முதலில் விசாரிக்கிறேன்… அவன் வளர்ந்தாலும் என் வளர்ச்சி தடைபடாதுடா… என் பெயர் அழியாதும்மா… என்றான் அவன் அமைதியாக…

நீ முதலில் விசாரித்துவை… நானே இதை இன்னும் சில மாதங்களில் பார்த்துக்கொள்கிறேன் என்றாள் அவனிடம் கோபமாக…

சரிடா… சது… நான் விசாரித்து சொல்கிறேன்… நீ அவ்னீஷைக் கேட்டதாக சொல்… அவனிடம் ஒருநாள் பேச ஏற்பாடு செய்… என்றவன் ஜாக்கிரதையாக இரும்மா… நேரத்துக்கு சாப்பிடு என்ற அக்கறையான பேச்சுடன் ஊருக்கு கிளம்பி வந்து விட்டான்…

ப்போது தான் ஒருநாள், ஆதர்ஷ் சாகரியை முதன் முதலில் கோவிலில் சந்தித்தான்… பார்த்த மாத்திரத்திலே இருவரும் ஒருவருக்கொருவர் காதலில் விழுந்த நேரம், லண்டனில் சைதன்யா, புகைப்படத்தில் அவ்னீஷின் அருகே அவனின் தோள் மேல் கைபோட்டுக்கொண்டிருந்த ஆதர்ஷிடத்தில் காதலில் விழுந்தாள்…

தன் அண்ணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பர்சில் வைத்திருந்தவன், அதை தவறவிட்டு சென்று விட, அதை குனிந்து எடுத்தவள், அவ்னீஷின் அருகே இருந்த ஆதர்ஷிடத்தில் மனதை பறிகொடுத்தாள்…

மேலும் அவ்னீஷ் ஏற்கனவே அவளிடம் தன் குடும்பம் பற்றி சொல்லி இருந்ததால், ஆதர்ஷின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் அவளுக்கு இருந்தது என்னவோ உண்மைதான்.. ஆனால், காதலா என்று கேட்டிருந்தால் இல்லை என்று தான் மறுத்திருப்பாள்…

ஏனெனில் அவ்னீஷ் தன் குடும்பம் பற்றி சொன்னானே தவிர, அவர்களின் பெயர்களையோ, புகைப்படத்தையோ காட்டிக்கொள்ளவில்லை அவளிடத்தில்…

அவளும் அதை அவனிடத்தில் கேட்டுக்கொள்ளவுமில்லை… ஏனெனில் அவனின் அருகாமை தான் அவளுக்கு அவளது தமையனை நினைவூட்டுகிறதே.. அதனால் வேறு பேச்சுக்கள் பேசாமல் இருந்து விட்டாள்… அவ்னீஷே என் பெரிய அண்ணன், சின்ன அண்ணன் என்று எதாவது சொன்னாலும், அதைக் கேட்டுக்கொள்வாளே தவிர, பதிலுக்கு கேள்வியோ, வேறெதுவுமோ விசாரித்துக்கொள்ள மாட்டாள்…

எடுத்த புகைப்படத்தை அவனிடத்தில் கொடுத்தவள், மௌனமாக இருந்தாள்…

அவன் தான் குதித்தான்… தேங்க்ஸ் சூர்யா… இவர் தான் என் பெரிய அண்ணன்… இந்த போட்டோ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா… பட் இன்னைக்கு இதை நான் தொலைக்க இருந்தேன்… தேங்க் காட்… நீ வந்து கொடுத்துட்ட… தேங்க் யூ சோ மச்… என்றான் சந்தோஷத்துடன்…

பேச்சு வாக்கில் எப்போதாவது வீட்டில் என் பெரிய அண்ணன் இருக்கிறாரே என்று அவன் சொல்லும் போதெல்லாம், அவள் மனது ஆவலுடன் அதை கேட்டு பதிய வைத்துக்கொள்ளும்… அதற்கு காரணம் அவளுக்கு அப்போது தெரியவில்லை… ஆனால், இன்று ஆதர்ஷின் புகைப்படத்தைப் பார்த்ததுமே புரிந்து போனது….

ஓ… இவர்தான் உன் பெரிய அண்ணனா… என்றவள் அதற்கும் மேல் அவனின் பெயரைக்கூட கேட்டுக்கொள்ளவில்லை… மனதில் எழுந்த நாணமா?, இல்லை தன் தமையன் போன்றவனிடத்திலே தான் விரும்பும் அவன் அண்ணனின் பெயர் கேட்பதா என்ற தயக்கமா அவள் அறியவில்லை… ஆனால், எதுவும் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.