(Reading time: 21 - 42 minutes)

காதல் நதியில் – 27 - மீரா ராம்

ன்ன அண்ணா?... அப்படியே நிற்கிறாய்…. பேசு…. இப்போது…. என்றாள் சைதன்யா…

அவன் என்ன பேசுவான், தன் மனதை பறித்தவள் ஆதர்ஷின் அருகே இருப்பதையும், அதை தூரத்தில் நின்றபடி அவன் மனம் நொந்து போய் பார்த்து பரிதவிப்பதையும், புகைப்படமாய் கைபேசியில் கண்டால், அவனால் தான் என்ன பேச முடியும்???

சது…. இது…. என்றவனுக்கு அதன் பின் வார்த்தைகள் வராது போக, அவள் தமையனைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்தாள்…

kathal nathiyil

என்ன அண்ணா?... நீ அன்று நின்றவிதம் தானே இந்த புகைப்படத்தில் உள்ளது… இது என் கைக்கு இன்று காலையில் தான் கிடைத்தது… உனக்காக நான் பார்த்து வைத்த பெண்ணைப் பற்றி விசாரிக்க சொல்லிய போது, என் கை சேர்ந்தது தான் இந்த புகைப்படம்… பார்த்தவுடன் கூட நான் இதை நம்பவில்லை… அவளருகில் அவர் காரில் சிரித்துக்கொண்டே சென்றதை இன்று கண்டவுடன் தான் இதயமே நொருங்கி போனது சுக்கு நூறாய்…

அவர்களை பின் தொடர்ந்து சென்ற நான், ஒரு கட்டத்தில், அவர்களை முந்தி செல்ல நினைத்து முயன்ற நேரம் தான் விபத்துக்குள்ளானேன்…

அந்த விபத்தில் நான் செத்திருந்தால் கூட நிம்மதியாக போயிருப்பேன்…

இப்போது பிழைக்க வைத்து அதுவும் அவரால் காப்பாற்றப்பட்டு என்ன பிரயோஜனம்?... அவர் என்னை விரும்பவில்லையே…

உனக்காக நான் யாரைப் பார்த்து வைத்திருந்தேனோ அவளைத்தானே விரும்புகிறார்… எதற்கண்ணா, நமக்கு இப்படி நடக்கிறது?... நான் ஆசைப்பட்ட வாழ்வு தான் எனக்கு கிடைக்காமல் போனதென்றால் நீ ஆசைப்பட்ட வாழ்வும் அப்படித்தான் ஆக வேண்டுமா?... என்று சொல்லி நெடுநேரம் அழுதவள்,

பின், இல்லண்ணா, நீ வாழ்க்கையில் எதற்கும் பெரிதாய் எப்போதுமே ஆசைப்பட்டதில்லை எனக்கு தெரிந்து… நீ முதன் முதலில் ஆசைப்பட்டது அவள் மேல் தான்.. அவள் தான் உனக்கு மனைவியாவாள் அண்ணா… என்றாள் தீர்மானத்துடன்…

நீ முதலில் குணமாகணும் சது… எனக்கு அது தான் முக்கியம்… என்றான் இலங்கேஷ் அமைதியாக ஆனால் அழுத்தமாக…

உனக்கு நான் எந்த அளவு முக்கியமோ அதே போல் நீ எனக்கு முக்கியம் அண்ணா..… அதனால் தான் சொல்கிறேன்… நீ எனக்காக அவள் மேல் வைத்திருக்கும் காதலை மறைக்க தேவையில்லை… நீ மறைத்தாலும் உன் முகம் எனக்கு காட்டி கொடுத்து விடும்…  என்று அவள் சொல்ல,

அதெல்லாம் எதுவுமில்லைடா… அவள் ஆதர்ஷின் காதலியாக இருப்பது தான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது… நீ மிக விரும்பினாயே அவனை… அதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது… மேற்கொண்டு என்ன செய்ய என்றே புரியவில்லை சதும்மா…

இன்னும் என்ன அண்ணா புரியவில்லை… அவர்கள் சேரக்கூடாது… அவ்வளவுதான்…

எனக்கு ஆதர்ஷ் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால், உன் வாழ்வில் கண்டிப்பாக அவள் இருப்பாள்… இருந்தே தீருவாள்…. என்றபடி அவள் பேச…

அவன் திகைத்தான்… தன் மனதுக்கு பிடித்தவன் தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை… ஆனால், என் காதல் நிஜமாக வேண்டும் என்று துடிக்கிறாளே… இவளுக்கு என்ன செய்து இவள் பாசத்துக்கு ஈடு தருவேன்???...

அவள் விரும்பும் ஆதர்ஷ் ஒன்று தான் அவளுக்கு நான் அளிக்கும் பரிசு…

ஆம், என் வாழ்வு எப்படி ஆனாலும் எனக்கு கவலையில்லை.. என் தங்கையின் வாழ்வு சிறக்க வேண்டும்… என்று முடிவெடுத்தவன்,

தங்கையின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ஆதர்ஷை மறந்திட முடியுமா சது உன்னால்? என்று கேட்டான்…

அவளோ, அமைதியாக, தலை குனிந்தாள்… அவள் முகம் நிமிர்த்தி பார்த்தவன் எதிர்பார்ப்பு அவனை ஏமாற்றவில்லை…

அவள் விழிகள் கண்ணீரை சிந்தியது மௌனமாய்…

அதை சட்டென்று துடைத்தவன், உன்னால அவனை மறக்கவே முடியாது… பொதுவா, பார்த்து பேசி, பழகி காதலிப்பவர்கள் தான் உலகில் அதிகம்… ஆனால், அவனைப் புகைப்படத்தில் மட்டும் பார்த்து காதலித்து அவனுக்காக ஏங்கி சாகவும் துணிந்தாயே…

உன் காதல் ஜெயித்தே ஆகணும்… நான் ஜெயிக்க வைப்பேன் சதும்மா… என்று சொன்னதும் அவள் அவனை அணைத்துக்கொள்ள, அவன் உள்ளுக்குள் அடுத்து என்ன செய்ய என்று சிந்திக்கலானான்…

பார்த்து மட்டும் காதலிக்கத்தொடங்கிய தன் தங்கையின் காதலை சேர்த்து வைக்கும் எண்ணம் கொண்ட அவனுக்கு, பார்த்து, பேசி, பழகி, ஈருடல் ஓருயிராய் காதலிக்கும் அவர்கள் இருவரின் காதல் ஏன் புரியாமல் போனது?

தன் தங்கை அவள் காதலிப்பவனைப் பிரிந்திடாமல் வாழ வேண்டுமென்று முடிவு செய்த அவனுக்கு, ஒருவரின் மேல் ஒருவர் உயிரையே வைத்துப் பிரிவு என்ற ஒன்றே அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் காதலைப் பிரிக்க எண்ணுவது தவறு என்று ஏன் உரைக்காமல் போனது?

முதன் முதலில் சாகரியைப் பார்த்த போது தோன்றிய காதல், அவள் ஆதர்ஷின் காதலி என்று அறிந்ததும், உடைந்து தான் போனான்… மேலும் தங்கையிடம் எப்படி புரிய வைக்க என்று சற்று குழம்பி தான் போனான்…

அவன் சாகரியை காதலித்தான் தான்… ஆனால் அவள் விரும்புவது வேறொருவரைத் தான் என்று தெரிந்த பின் தன் மனதை மாற்றிக்கொள்ள முயற்சித்தான் தான்… அவளாவது விரும்பிய வாழ்க்கையை வாழட்டும் என்றெண்ணினான் தான்… ஆனால், அவள் தேர்ந்தெடுத்த வாழ்வு தன் தங்கையின் வாழ்வோடு பின்னப்பட்டிருப்பது அறிந்த பின்னர் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை…

தான் புரிந்து கொண்டது போல் தன் தங்கை புரிந்து கொள்ள மாட்டாளே… அவளுக்கு அந்த அளவு பக்குவம் இருந்திடாதே.. சின்னப்பெண்ணாயிற்றே அவள்… அவள் மனம் உடைந்திடாத வண்ணம் அவளிடத்தில் பேசி சரி செய்ய வேண்டும் என்றெண்ணியிருந்தவனின் யோசனையை தான், சைதன்யாவின் பேச்சு கலைத்து விட்டது..

எனக்கு அவன் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை… உனக்கு அவள் மனைவியாக வேண்டும் என்ற தங்கையின் பேச்சு அவனை திகைக்க வைத்து திணற வைத்தது… இப்படி தன் நலனுக்காக யோசிக்கும் அவள் வாழ்வை பரிதவிக்க வைக்க அவனால் முடியவில்லை…

அந்த கண்மூடித்தனமான பாசம் தான் திரையாக, அவனுக்கு ஆதர்ஷ்-சாகரியின் காதலை புரிய வைக்காமல் மறைத்து விட்டது…

அதன் பின்னர், சைதன்யாவின் திட்டப்படி அவர்கள் இருவரையும் கண்காணிக்க ஆரம்பித்தனர்…

தர்ஷின் காவலை மீறி சாகரியை நெருங்க அவர்களால் முடியவில்லை… அவனின் பாதுகாப்பு ஏற்பாடு அவர்களை மலைக்க வைத்தது… எப்படி அவளை அதிலிருந்து வெளியே கொண்டு வர என்று அவர்கள் குழம்பிக் கொண்டிருந்த போது தான், அவளாகவே ஒரு நாள் தனியே கோவிலுக்குச் சென்றாள்…

சைதன்யா அந்த தகவலை இலங்கேஷிடம் தெரிவித்த போது, அவன், நீ என்ன செய்யணுமோ செய் சது என்றான்…

தனியாக சாலையில் வந்து கொண்டிருந்தவளின் அருகே சென்று காரை நிறுத்திய சைதன்யா, சாகரி மயங்கி சரிந்ததும், அவளைத்தூக்கி காரில் போட்டுக்கொண்டு, அந்த பெரிய வீட்டிற்குள் வந்தாள்…

இலங்கேஷ் வர, இரண்டு நாட்கள் ஆகும் என்று அவன் சொல்லியதால், சாகரியை மயக்க நிலையிலேயே வைத்திருந்தாள் சைதன்யா…

சாகரி கண் விழித்த அந்த அரை மயக்க நிலையின் சில மணித்துளிகள் மட்டும், அவளருகில் ஆண் போல் உடை அணிந்து செல்வாள் சைதன்யா… அவள் மீண்டும் மயங்கியதும், சாகரி அணிந்திருந்த உடையை அகற்றிவிட்டு, வேறு உடையை அணிவித்தாள் சைதன்யா…

மூன்றாம் நாள் காலையில் தமையன் வந்ததும், அவனிடம் இவ்வாறு நீ பேசிவிடு… மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்…

சைதன்யா சென்றதும், சாகரி இருந்த அறைக்குள் நுழைந்தவன் அவள் சுயநினைவின்றி படுத்திருந்ததைப் பார்த்து வருந்தினான்… என்னால் தானே உனக்கு இந்த நிலை என்றெண்ணி வருந்தினான்… பின் அவளிடம் அசைவு ஏற்படுவதை உணர்ந்து சட்டென்று அறையை விட்டு வெளியேறி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் அறைக்குள் நுழைந்து அவளிடம் தங்களின் நாடகத்தை செயல்படுத்த துவங்கினான்…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.