(Reading time: 21 - 42 minutes)

நான் உங்களை காதலித்தவள்… அந்த உரிமையில் கேட்கிறேன்… எனக்கு ஒரு சத்தியம் செய்யுங்க.. நான் சொல்வதை செய்வேன்னு…

நீ சாக சொன்னா இந்த நிமிடமே செத்து போவேன்… ஆனா, இப்போ நீ செய்ய சொல்லுறதை என் உயிர் இருக்குறவரை செய்ய முடியாதுடி….

ராம்…………. அப்படி சொல்லாதீங்க… உங்க நல்லதுக்காக தான் நான் சொல்லுறேன்… எனக்கு சத்தியம் செய்யுங்க….

உன்னைத்தான் திருமணம் செய்வேன்… அது சத்தியம்…

அய்யோ… ராம்… ஏன் புரிஞ்சிக்கமாட்டேங்கிறீங்க?...

நீ ஏண்டா என்னை புரிஞ்சிக்க மாட்டிக்கிற?... என்று வலியுடன் கேட்டவனை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவளின், கையைப் பிடித்து இழுத்து,

உன்னைப் பேச சொன்னா, நீ இங்கே கொஞ்சிகிட்டிருக்கிறியா… சாகரிகா?.... நீ அவரை சமாதானம் செய்யத் தேவையில்லை… உண்மையை நானே சொல்கிறேன்…. என்றவள்,

இவளைத் தானே திருமணம் செய்யப் போகிறீர்கள்.. தாராளமாக செய்யுங்கள்… ஆனால், அதற்கும் முன், ஒரு உண்மையை தெரிந்து கொண்டு எல்லாம் செய்யுங்கள்… என்றாள் சைதன்யா…

வேண்டாம்…. சைதன்யா… சொல்லாதீங்க… ப்ளீஸ்… அவரிடம் சொல்லாதீங்க… வேண்டாம்… என்று சாகரி சொல்ல சொல்ல கேளாமல்,

இவள் என் அண்ணனுடன் வாழ்ந்தவள்… என்று சைதன்யா சொல்ல,

சாகரி அப்படியே சரிந்து அழ ஆரம்பித்தாள்…

ஆதர்ஷ், தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள அரும்பாடுபட்டான்…

அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் வேதனையுடன், இனி உன்னை யாரும் அழ வைக்க முடியாது… இத்தனை வருடம் நீ பட்ட துன்பம் இந்த கண்ணீரோடு காணாமல் போகப்போகிறதடி பெண்ணே… என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் ஆதர்ஷ் அவளைப் பார்த்த வண்ணம்…

ஹரி, சாகரியை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்கும்போது, ஆதி, ஹரியைத் தடுத்தான்…

ஹரி அதிர்ச்சியோடு ஆதியைப் பார்க்க, அவனோ, அமைதியாக இரு என்றான் விரல்களில் அழுத்தம் கொடுத்து…

அவள் அழுவதையும் ஆதி சிலையாக நிற்பதையும் பார்த்தவள், குரூரமான திருப்தியுடன், ஆதர்ஷிடத்தில், இப்போது சொல்லுங்கள், இவளுக்கு உங்களைத் திருமணம் செய்யும் தகுதி இருக்கிறதா?....

என் தங்கைக்கு மட்டும் தான் இருக்கிறது அந்த தகுதி… பெண் என்ற தகுதி… உன் போன்றவளுக்கு எல்லாம் அந்த தகுதி இல்லை… என்றான் ஹரி கோபத்துடன்…

என்னை தகுதி இழந்தவன் என்று சொல்கிறீர்களா?... இதோ இங்கே இருக்கிறாளே… இவள் தான் தகுதியற்றவள் ஆதர்ஷைத் திருமணம் செய்வதற்கு…

சீ… நீயெல்லாம்… ஒரு பெண்ணா?... உன்னிடம் பேசுவதே அசிங்கம்… என்றான் ஹரி முகச்சுழிப்புடன்…

சாகரி அழுவதையேப் பார்த்துக்கொண்டிருந்த இலங்கேஷ், தங்கையை இழிவு படுத்தியவனை தாக்கும் வண்ணம், என்ன சொன்னாய் ஹரி நீ?... என்று ஹரியின் அருகே செல்ல முயற்ச்சித்த போது, தமையனின் விழி பார்த்து, அமைதியாய் இருக்க சொன்னாள் சைதன்யா…

அவளின் பார்வைக்கு கட்டுப்பட்டவன், அமைதியானான் பற்களைக் கடித்தபடி…

ஆதர்ஷ், ஹரி என்னை என்ன சொன்னாலும், நான் கவலைப் பட போவதில்லை… ஆனால், இவளை நீங்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது… அந்த தகுதியை இவள் இழந்தவளாவாள்…

நீ சொல்வதைக் கேட்க நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை…. என்றான் ஹரி…

ஓஹோ… அதுவும் எனக்குத் தெரியும்… ஆனால், இதைப் பார்த்தால் இது நேரம் வரை உங்களைப் பிடித்திருந்த முட்டாள்தனம் விலகலாம்… என்றவள், நீங்கள் மருத்துவர் தானே… எனில் இதைப் பாருங்கள்… என்றபடி அந்த ரிப்போர்ட்டை ஹரியிடம் கொடுத்தாள்…

அவன் அதை வாங்கி படிக்க ஆரம்பித்ததும், நான் சொல்வதைக் கேட்க நீங்கள் தயாரில்லை தான்… ஆனால், இது தெரிவிக்கும் செய்தி உண்மை இல்லாமல் போகாது அல்லவா ஹரி… என்றாள் ஏளனமாக…

ஹரி அதை படித்துவிட்டு, தூக்கி விசிறி அடிக்க, அது சாகரியின் அருகே போய் விழுந்தது..

அவள் அதை எடுத்துப் பார்த்துவிட்டு, கண்களைத்துடைத்துவிட்டு, ஆதர்ஷை நோக்கிச் சென்றாள்…

நான் ஏன் விலகிப் போனேன்னு தெரிந்துவிட்டதல்லவா இப்போது… இனியாவது உங்கள் வாழ்க்கையை வாழப்பாருங்கள் என்றாள்… கரகரத்த குரலுடன்...

நீயில்லாமலா?... அதற்கு நீ என்னை சாக சொல்லியிருக்கலாமே…. என்றான் அவனும் விரக்தியுடன்…

நான் உங்களுக்கு வேண்டாம்…. நான் களங்கப்பட்டவள்… ராம்… நான் சபிக்கப்பட்டவள்… என்றாள் அவள் அழுதுகொண்டே…

உன்னை நீங்கினால் தான் நான் சபிக்கப்பட்டவனாவேன்…. என்றான் அவனும் சட்டென்று…

நான் உங்களைச் சேர தகுதியற்றவள்… ராம்…

அதை அந்த கடவுளே வந்து சொன்னாலும் நான் காது கொடுத்து கேட்கமாட்டேன்… நீ எனைச் சேரப்பிறந்தவளடி… அது ஏனடி உனக்குப்புரியவில்லை… இவர்கள் சொல்லுவது, இந்த காகிதத்தில் எழுதியிக்கும் எழுத்து, இதை எல்லாம் நம்பும் நீ, ஏன் உன்னை நம்ப மறுக்கிறாய்?… நம் காதலை ஏன் தூர விலக்குகிறாய்?... நீ என்னவள்… எனக்கானவள்… சீதை… எனக்கானவள்… என்று அவன் தெளிவாக அதே நேரம் அழுத்தமாக உரைத்த போது,

அவள் அவனையே தான் பார்த்திருந்தாள்… அந்த நேரம், அன்று இலங்கேஷ் சொன்னது அவள் காதுகளில் ஒலித்தது…

நீ கெட்டுப்போனவளாயிருந்தாலும் அவன் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உன்னைத்திருமணம் செய்து கொள்வேன் என்று தான் சொல்லுவான்… ஆனால், உன் மனசாட்சி அதற்கு இடம் கொடுக்குமா என்ன?... என்னுடன் வாழ்ந்தவள் அவனைத்திருமணம் செய்வாயா என்ன?... சீதை என்ற பெயருக்கு களங்கம் வர வைப்பாயா என்ன?... என்ற அவன் வார்த்தைகள் அவள் செவிகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்க…

அவள், ஊமையானாள்….

அவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த சைதன்யா,

அவள் கெட்டுப்போனவள் ஆதர்ஷ்… அது உங்களுக்குப்புரியவே புரியாதா?... என்று கேட்டாள் சத்தமாக…

அதுநேரம் வரை அவளிடம் பேசாதவன், உண்மையை சாகரிக்கு புரிய வைக்க விரும்பி, அவளிடம் பேசினான்…

உங்கள் பார்வைக்கு அவள் அப்படி தெரியலாம்… என் பார்வைக்கு அவள் என்றுமே என்னவள்… என் சரிபாதி… அதில் எள்ளளவும் மாற்றம் கிடையாது… என்றான் தெள்ளத்தெளிவாக…

அவனின் பதில் கேட்டு, சைதன்யாவிற்கு கோபம் சுனாமி போல் எழ,

அவள் தகுதியற்றவள் என்று அத்தனை முறை நான் சொன்னேன்… அதை நீங்கள் நம்பவில்லை… ரிப்போர்ட் காட்டினேன்…. அதையும் நம்பவில்லை… அவள் மேல் எவ்வளவு காதல் இருந்தால், அவளைத்தவிர வேறொரு பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்வீர்கள்?....

இத்தனை வருடம் அவளை உங்களிடமிருந்து பிரிக்க நான் செய்த முயற்சிகள் அனைத்தையும் பாழாக்க எண்ணுகிறீர்களா?... என்று அவள் கேட்க…

அவளின் மேல் உள்ள என் காதல் இன்றாவது உங்களுக்குத் தெரிந்தால் சந்தோஷம்… என்றான் ஆதர்ஷ்..

போதும் ஆதர்ஷ்… இதற்கும் மேல் எனக்கு பொறுமையில்லை… இத்தனை நாட்கள் நான் செய்த சதி வேலைகள், தீட்டிய திட்டங்கள், எல்லாம் இன்று உங்கள் முன் தவிடு பொடியாகும் என்று நான் கனவிலும் எண்ணிப்பார்க்கவில்லை… என் அண்ணனுடன் வாழ்ந்தவள் என்று அவளை இத்தனை நாட்கள் பொய் சொல்லி உங்களிடமிருந்து பிரித்து வைத்திருந்தேன்… இனி அது தேவையில்லை என்று புரிந்து போயிற்று எனக்கு… என்று ஆத்திரத்தில் வார்த்தைகளை சிதற விட்டாள்… பட்டென்று…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.