(Reading time: 15 - 30 minutes)

காதல் நதியில் – 28 - மீரா ராம்

துப்பாக்கியிலிருந்து வெளிவந்த தோட்டா, ஆதர்ஷின் உடலை துளைத்து நின்றது…

சைதன்யா, கையிலிருந்த கத்தி தானாகவே கீழே விழுந்திருந்தது…

அதிர்ச்சியுடன் செய்வதறியாது சற்று நேரம் நின்ற இலங்கேஷ், கல்லென நின்றிருந்த தங்கையை அங்கிருந்து அழைத்துச் சென்றான் வேகமாய்…

kathal nathiyil

உடனே விமானத்தின் மூலம் இலங்கை வந்தடைந்தவன், தங்கையை வீட்டிற்குள் அழைத்துவரும் வரை, அமைதியாக இருந்தான்…

அவளைப் பார்த்தான்…. அவள் இன்னும் அதிலிருந்து மீளாதது அவனுக்கு புரிந்தது…

சது… என்றழைத்தான்… அவளிடம் அசைவு தெரிந்தது…

நடந்தது நடந்து விட்டது… இனி நடக்கப் போவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்… உனக்காக மட்டுமே நான் வாழ்ந்து வருகிறேன்… அது உனக்கு ஓரளவு புரிந்தாலும் நான் சந்தோஷம் கொள்வேன்… - இலங்கேஷ்

அ…..ண்……ணா………….. - சைதன்யா

நான் தான்… அந்த நினைவு உனக்கு கொஞ்சமேனும் இருந்தால், இனி நான் சொல்வதை நீ கேட்பாய்…. உனக்கு நான் முக்கியமா, இல்லை உன் பிடிவாதம் முக்கியமா என்று முடிவு செய்து கொள் சது… உன் பிடிவாதம் ஜெயித்திருந்தால், உன் வாழ்வில் கொஞ்சமும் நிம்மதி இருந்திருக்காது…

என் வாழ்வுக்கென, என் சந்தோஷத்திற்கென நீ சொன்னபோது உன் கண்மூடித்தனமான பாசம் என் கண்களை மறைத்து விட்டது, நீ செய்யும் தவறான செயல்களை…

நான் புரிந்து கொண்ட போதே, எப்பாடு பட்டாலும் உனக்கும் புரிய வைத்திருந்தால் இந்நேரம் அவனுக்கும் அப்படி ஓர் நிலை ஏற்பட்டிருக்காது…

ஹ்ம்ம்… விடு… விதிப்படி தானே நடக்கும் என்று விதியின் மேல் பழி போட நான் விரும்பவில்லை… உன் பிடிவாதத்தினால் தான் நடந்தது என்று உன்னை குறை சொல்லவும் நான் எண்ணவில்லை…

என் சந்தோஷமே நீ தான் என்று நான் வாழ்ந்து வருகிறேன்… அதை நீ புரிந்து கொண்டால் போதும்டா சது…

உனக்கு அப்பா-அம்மாவாக நான் இருக்கிறேன் என்று நம்புகிறேன் மிக… ஆனால், எனக்கென்று இருப்பது நீ மட்டும் தானே… அதை நீ ஏன் மறந்து போனாய்?... யாரோ ஒருவனுக்காக உன்னை மாய்த்து கொள்ளவும், அவன் நேசிக்கும் பெண்ணை கொல்லவும் துணிந்தாயே… ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து பார்த்திருப்பாயா?...

இப்படி சதி செய்து ஒருவரோடு வாழ்க்கை பிணைக்கப்பட்டு நீண்டால், அந்த வாழ்வு மகிழ்ச்சியாக இருக்குமா?... இல்லை… பிரிந்து போனவர்களின் நினைவு இல்லாமல் அவர்கள் நம்முடன் நிம்மதியாக தான் வாழ்ந்து விடுவார்களா?... அதனால் யாருக்கு இலாபம்?.... நிச்சயம் நமக்கு ஒரு நாளும் இல்லை… நட்டம் மட்டுமே நமக்கு மிஞ்சும் சது…

உனக்கு அறிவுரை சொல்ல நான் முயலவில்லை… எதார்த்தத்தை உனக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்…

என் முயற்சி தோல்வியும் அடையலாம்… ஒரு வேளை அப்படி நிகழும் பட்சத்தில், என் வாழ்வின் அடுத்த கட்ட முயற்சியையும் நான் எடுப்பேன் கையில்…

அவள் என்ன என்று அவனை நிமிர்ந்து பார்க்கையில், என் சாவு தான்…. அது… என்றான் நிதானமாக அவளையேப் பார்த்தபடி…

அவள் கண்களில் கண்ணீர் அருவியென வழிகையில், உன்னை மிரட்ட, உன்னை அடிபணிய வைக்க நான் இந்த வார்த்தைகளை சொல்லவில்லை… நாம் விரும்பின வாழ்க்கை நமக்கு கிட்டாத போது என்ன, இனி கிட்ட வாய்ப்பே இல்லாத நிலை வந்துவிட்ட பிறகு, அதை விட்டு விலகுவதும், அதை அடியோடு மறப்பதும் தான் உத்தமம்….

முதல் காதல் மறக்க முடியாதது என்று சொல்வதில் உண்மை எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவு உண்மை அதை மறக்க முடிவதும் சாத்தியம் தான் என்பதிலும் இருக்கிறது…

சாத்தியம் தான்… நாம் நேசிக்கும் உறவுகள் நம் வாழ்வில் இருப்பது எவ்வளவு சந்தோஷமோ, அதே விட அதிக சந்தோஷம் கொடுக்கும் நம்மை நேசிக்கும் உறவுகள் நம் வாழ்வில் இருப்பது…

முதலில் காதலித்தேன்… அது தோல்வியில் முடிந்தது… அதனால் இனி காதலே என் வாழ்வில் இருக்க முடியாது என்று சொல்வதில் கொஞ்சமும் எதார்த்தம் இல்லை…

சாலையில் செல்லும்போது, விபத்து நேர்ந்து விட்டால், மீண்டும் அந்த சாலையில் செல்லவே மாட்டேன் என்றா சொல்ல முடியும்?... இல்லை அது தான் சாத்தியமா?...

எப்படியும் ஒருநாள், அந்த சாலையில் சென்றே ஆக வேண்டும் என்ற நிலை வரும்… அப்போது இந்த சாலையில் தானே நமக்கு அடிபட்டது என்று நெஞ்சம் எண்ணுவதில் எவ்வளவு நிதர்சனம் இருக்கிறதோ, அந்த எண்ணத்திற்கு காயத்திற்கு மருந்தாக, நம்முடன் அதே சாலையில் கூடசேர்ந்து பயணிக்க ஒருவர் இருக்கும் பட்சத்தில், அந்த காயத்தை நாம் ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்?... அந்த காயமும் நமக்கு ஏன் வலிக்க வேண்டும்?...

அப்படி ஒருவர் நம் வாழ்வில் வந்த பின், நிச்சயம், காயம் இராது… மீறி அது கொண்ட தழும்புகள் இருந்தாலும், பழைய நினைவுகள் அதனை ஆக்கிரமிக்காமல், நம்மை நேசிக்கும் உறவு நம்மை காக்கும்…

நம்மை நேசிக்கும் உறவின் காதல், அன்பு, பாசம் மட்டுமே, நம் நெஞ்சில் நிறைந்து நிற்கும்…

வேறெதுவும் எண்ணக்கூட தோணாது…

அப்படி உன்னை நேசிக்கும் ஒருவரை உன் வாழ்வில் உன் துணையாக அமைத்து தருவது என் பொறுப்பு… என் ஆசையும் அது தான்…

அந்த நாள் எத்தனை சீக்கிரம் வர வேண்டுமோ, அத்தனை சீக்கிரம் உன் வாழ்வில் வந்தே தீரும்… நான் வர வைப்பேன்…

ஆனால், பழைய நினைவுகள் என்னும் வேண்டாத சில நியாபகங்களை நீ முதலில் தூர அகற்ற வேண்டும் உன் மனதிலிருந்து…

அகற்றுவது எளிது என்று நான் சொல்ல மாட்டேன்… ஆனால், அது சத்தியமாக கடினமாக இருந்திடாது சிறிது நாட்களுக்குப் பின்…

உனக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால், நான் சொன்னதை எல்லாம், மனதினுள் எண்ணிப்பார்… சரியென்று பட்டால், என்னிடம் சொல்… உனக்கு வேண்டிய கால அவகாசம் தருகிறேன்… அது வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை… உன் மனம் மாற நான் காத்திருப்பேன்…

எனக்கு வேண்டியது என் பழைய தங்கை… சிரித்த முகத்துடன் வலம் வந்த என் தங்கை… அவ்வளவு தான்… என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர முற்பட்டவனின் காலைப் பிடித்துக்கொண்டாள் சைதன்யா…

என்னம்மா… இது… என் காலைப் பிடித்துக்கொண்டிருக்கிறாய்… என்று பதறியவனாய், தங்கையை எழுப்பினான்… அவள் அசைந்தே கொடுக்கவில்லை..

அழுதாள்… எதுவும் சொல்லாமல் அழுதாள்… அழுது ஓய்ந்து போனவளாக நிமிர்ந்தவள், என்னை மன்னித்துவிடுண்ணா… என் பிடிவாதத்தினால் உன் வாழ்க்கையையும் சேர்த்தே அழிக்கப் பார்த்திருக்கிறேனே… என்னை மன்னித்துவிடுண்ணா…  என்றவள்,

நீ காட்டும் பாதையில் நான் நடக்கத்தயார் என்னை விரும்பும் ஒருவருடன் கைகோர்த்து…. என்றாள் அழுத்தமாக…

தங்கையை எழுப்பி, அவளையேப் பார்த்திருந்தான்…

நான் பொய் சொல்லவில்லை அண்ணா… எனக்கு பரிபூரண சம்மதம்… ஆனால், நீ உன் மனைவியுடன் சேர்ந்து என் வாழ்விற்கான பாதையை காட்ட வேண்டும்… அதை மட்டும் செய்வாயா அண்ணா?... என்று கேட்ட தங்கையை அணைத்துக்கொண்டான் அவன் விழிகளில் உண்டான நீருடன்…

அவள் மனம் மாறியது அவனுக்கு பெரும் உவகையாக இருக்க…. இனி அவள் வாழ்வு நன்றாக இருக்கும்… என்றெண்ணியவன், மனதிற்குள், ஆதர்ஷிற்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது, என்று கடவுளை வேண்டிக்கொண்டான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.