09. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety
உருகிக் கொண்டிருந்தாள் வேரி தன்னவனின் இறுகிய அணைப்பில். அவள் உச்சந்தலையில் விழுந்த அவன் முத்தத்தின் மொத்த பொருள் நேசம். உன் வலி என்னுடையது என்ற பாச பதிவாய்.. வாழ் நாளுக்கும் நீ என்னுடையவள் என்ற உரிமை பிரகடனமாய்..... உன் யுத்தத்தில் உன்னோடு நான் ஓர் அணியாய் என்ற செய்தியின் சுருக்கமாய்...என்னை தாண்டியே தொட வேண்டும் தீங்கெதுவும் உன்னை என்ற வாக்குறுதியாய்...அதன் உட்பொருள் விரிய..
கனிந்து கனிரசமாய் கசிந்தது காதல்.
பால்வண்ண பருவமும், பகிர்ந்து கொள்ளபட்ட ஒருமையும், பத்தினி பதி என்ற உறவும், நேர்ந்திருக்கும் நெருக்கமும், திரை அகன்ற நெஞ்சமும், திரை கடலாய் ஆடும் திவ்ய மனமும்....
அன்று இரவு கவினைப்போல் தானும் குளித்துவிட்டு வந்து நின்ற வேரிக்கு வழக்கம் போல் அவர்களது அறையின் படுக்கையில் போய் படுக்க தடுமாற்றம். முன்பொரு நாள் எதுவாயினும் சம்மதம் என்று அவன் அருகில் முதல் தடைவையாக படுத்த பொழுதின் எஃகுறுதி இன்று வர மறுக்கிறது. அன்று கடமையில் இறுகி இருந்த மனம் இன்று காதலில் குழைந்திருப்பதாலா..? தெரியவில்லை.
பெண்மை புதிர்.
வாசலில் தயங்கி நின்றவளை அபொழுதுதான் பார்த்த கவின் இவள் நோக்கி வர படபடப்பு. அவன் முகம் பார்க்க ஒரு ஆர்வம், தோள் சேர ஓர் தேடல், தடையாக வெட்க தயக்கம்.
பெண்மை போர்.
கதவை தாளிட்டு, அவள் கரம் பற்றி அவன் அழைத்து சென்ற விதத்திலேயே ஒருவித ஏமாற்றத்தை உணர்ந்தாள் வேரி. பாசமாய் பற்றி படர்ந்திருந்தது அவனது விரல்கள். இன்னுமாய் அவன் இவளை முழுதாக ஏற்கவில்லை...அவளிடம் இன்னுமாய் ரகசியம் இருக்கிறதென்று நினைக்கிறானா..? எதோ ஒருவகையில் அவன் இவளை, இவள் வார்த்தைகளை நம்பவில்லை...அல்லது இவளை முழுதாய் ஏற்க அவனால் முடியவில்லை...
மனதிற்குள் கொந்தளித்த ஏமாற்றம் கண்ணில் வராமல் இருக்க படாத பாடுபட்டாள் வேரி.
“இனிமேலாவது நைட் முழுக்கவே என் கூட இருப்பதான...?”
“ம்...நீங்க தூங்கினதும் இங்கயே தரையில் படுத்துகிறேன்....”
அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அவளை தன்னோடு மெத்தையில் சரித்தவன், அவள் பின்புறமிருந்து அணைத்த படி தூங்கிப்போனான்.
வேரிக்கு தூக்கம் சுத்தமாக வரவில்லை. அவன் தூங்கிவிட்டான் என அறியவும் அதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த அத்தனை கண்ணீரும் வெளிநடப்பு.
எழுந்து சென்று தரையில் தன் வழக்கபடி புடவை விரித்து சுருண்டாள். அவள் எதிர்பாரா வண்ணம் அவள் பின்னாக வந்து அவனும் முன்போல் அவள் பின்னிருந்து அணைத்தபடி படுத்தான்.
“இ..” இவள் மறுப்பு தெரிவிக்கும் முன்
“வேர் யூ ஆர், தேர் ஐ அம், டில் டெத் செட் அபார்ட்னு கடவுள் முன்னால ப்ராமிஸ் செய்துதான் கல்யாணம் செய்தோம்...” இன்னுமாய் இறுக்கி அணைத்தவன் அவள் கண்ணீர் உணர்ந்து ஹேய்...என்று தன் புறமாக திருப்பினான்.
“என்னாச்சுடா...?”
“நீங்க என்ன நம்பல...நான் எல்லாம் சொல்லிட்டேன்....”
அவள் சொல்ல வந்ததின் அர்த்தம் புரிய,
“...நீ நினைக்கிற மாதிரி உன்னை நம்பாம இல்லடா....இன்னைக்கு ஹோம் இன்சிடன்டை வச்சு ஒரு உணர்ச்சி வேகத்துல என்னை நம்பிட்டு......நாளைக்கு நாம எடுத்த முடிவு சரியான்னு நீ குழம்ப கூடாது....இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்...நமக்குள்ள அன்டர்ஸ்டண்டிங் ஸ்ட்ராங் ஆகட்டும்னு நினச்சேன்...”
“தினம் தினம் நம்பிக்கை முந்தின நாளவிட கூடிட்டே போகும்....அப்ப எந்த நாள பெர்பக்ட்டானா நாள்னு சொல்வீங்களாம்....”கேட்டபடி அவன் மார்பிற்குள் தாய் கோழியின் இறக்கைக்குள் புதையும் சிறு குஞ்சாய் சுருண்டாள் வேரி.
அவள் மனதில் நிம்மதி வந்திருந்தது.
எத்தனை சொன்னாலும் இவன் இடம் பெயர மாட்டான் என வேரிக்கு தெரியும். அவன் பிடிவாதமும் அதை அவன் சாதிக்கும் விதமும்....அவர்கள் கல்யாணம் நடந்த முறையே சொல்லவில்லையா...?
அவன் தூங்கவும் அடுத்த இடத்திற்கு மாறிக்கொள்வது என மனதிற்குள் நினைத்திருந்தவள் மீண்டும் விழிப்பு வரும் போதுதான், தான் தூங்கி விட்டதை உணர்ந்து, பதறியபடி வழக்கமான துயில் கலையும் நேர ஈர உணர்வை, அணைத்திருந்த கணவனின் அருகாமையின் நிமித்தம் குமுறும் குற்ற மனப்பான்மையும், அவமானமுமாக தேட....அங்கு அவள் தேடிய எதுவுமில்லை.
கவினின் பிடியை மீறி துள்ளி எழுந்தவள், கைகளால் படுக்கையை துளாவ, அதற்குள் கவினும் விழித்து எழுந்தான்.
“என்ன குல்ஸ்...இந்நேரம் என்ன தேடுற...?”
வேரிக்கு பக்கென்றது....அவன் இவள் பொய் சொல்லிவிட்டதாய் நினைப்பானோ...?
“அ...து...” இவள் தடுமாற அதற்குள் சூழலை உணர்ந்திருந்தவன் அவளை அள்ளிக்கொண்டு கட்டிலுக்கு நடந்தான்.
“நைட் ஃபுல்லா நீ என் கைக்குள்ள இருந்தல்ல... அந்த போஷ்சருக்கு போயிருக்க மாட்ட....அதான்...சோ...பொண்ணு தினமும் இனி என் கைக்குள்ள தான்...”
கட்டிலில் அவளை மீண்டுமாய் தன்னுள் புதைத்தபடி தூங்கிப்போனான் கவின்.
விடிந்து எழுந்த பின்புதான் வேரிக்குமே மொத்தமாக அவ்விஷயத்தின் வீரியம் புரிந்தது.
நிஜம்தானா.....??அவள் ப்ரச்சனைக்கு உண்மையிலேயே முடிவு காலம் வந்துவிட்டதா...??? இல்லை இன்றைய ஒரு நாளை வைத்து இப்படி கனவு காண்பது சரியா?
மிர்னா, மிஹிர், வியன் மற்றும் அம்மச்சி அதாங்க ரஜத்தின் அம்மா புடை சூழ ஏதென்ஸை சென்றடைந்தபோது இயல்பான உற்சாகத்தைவிட இன்னும் 50 சதவீதம் அதிக உற்சாகத்தோடும், அதனால் இன்னுமாய் எகிறி குதித்த குறும்புத்தனத்தோடும் இருந்தாள்.
அன்று தன் பிஸினஸ் சம்பந்தமாக ஒரு க்ளையண்டை சந்திக்க வியன் சென்றுவிட, அம்மச்சியை அவளுக்காக ஒதுக்கபட்டிருந்த குவார்டஸில் விட்டுவிட்டு, மிர்னா மிஹிருடன் மலையேறும் பயிற்சிக்கு அக்ரொபொலிஸ் சென்றாள்.
அது சிறிய மலை என்பதோடு கீழிருந்து மேலேறும்படி, இவர்கள் பயிற்சி பெற விரும்பிய இடத்தில், அடிவாரம் செல்ல வழி வகை இல்லை என்பதால், பயிற்சியின் போது கீழிருந்து மேலே ஏறாமல், மேலிருந்து தொங்கும் கயிறை பிடித்துக்கொண்டு முடிந்த அளவு கீழிறங்கி, அதை பிடித்த வண்ணம் மேலே ஏறவேண்டும் என திட்டமிட்டு, மிஹிர் ஒரு கயிற்றிலும் அவனுக்கு இணையாக இவள் ஒரு கயிற்றிலும் இறங்கிக் கொண்டிருந்தனர்.
சுண்டைக்காய் சமாசாரத்திற்கெல்லாம் போட்டி போடும் மிர்னா, அவளை சீண்டி விடும் மிஹிருடன் போட்டி போடாமல் இருப்பதாவது!! அவனுடன் போட்டியிட்டவாறே வேகமாக இறங்கிக்கொண்டிருந்தாள் அந்த செங்குத்து மலையில்.
“மிர் நீ நல்லா பாடுவியாமே...வியன் சொன்னார்....ஏதாவது பாடேன்....” மிஹிர் தான் இவளை வம்பிழுத்தான்.
பி.கே இதெல்லாம் உன் வேலைதானா... இரு இரு இதுக்கெல்லாம் சேத்து முக்கியமான நேரத்துல முக்கால் மணி நேரம் பாட்டு கச்சேரி பண்றேன்....
எடுத்த சபதம் முடிப்பேன்ன்ன்ன்ன்....
மனதிற்குள் பாடத்தொடங்கியவளுக்கு அன்று விழுந்த பாறை ஞாபகம் வர மனம் கூட கப்சிப்.
“.இருந்தாலும் என் புகழ நிலை நிறுத்துறதுல உங்களுக்கு இவ்ளவு வெறி ஆகாது தயிர்...சாரி..மிஹிர்.....ஆனானபட்ட அக்ரபோலிஸையே அசைச்ச இரும்பு மங்கை மிர்னான்னு என் பேர் பேப்பர்ல வரனும்னு நீங்க ஆசைப்படுறது எனக்கும் புரியுது ...ஆனால்..அந்த நியூஸை படிக்க நாமும் உயிரோட இருக்கனுமே....” உரிய ஏற்ற இறக்கத்துடன் அவள் சொல்ல...