(Reading time: 13 - 26 minutes)

02. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி

குல்பர்காவிலிருந்து பேங்களூர் வந்தது எதோ நாடுவிட்டு நாடு போனது போல் சாதனையாக தெரிந்தது நல்லிசைக்கு. காரணம் அவளது அப்பா. அப்பாவிற்கு இவளென்றால் கொள்ளைப் பிரியம்.

மகள் அருகிலிருந்து படிக்க வேண்டும் என்பதற்காக சொந்த பள்ளி தொடங்கியவர், இப்பொழுது ஒரு டீம்டு யுனிவர்சிட்டிக்கு சொந்தக்காரர். இவளை ஹாஃஸ்டல் வாழ்க்கைக்கு அனுமதிக்கவே மாட்டேன் என பிடிவாதம் பிடித்தார்.

“உன்ன கண்காணாத இடத்துக்கு அனுப்பிட்டு நான் எப்டிமா இருப்பேன்….?”

Nagal nila“இங்கயும் நான் க்ளாஸ்ரூம்குள்ள போய்ட்டா ஆஃபீஸ்ல இருக்ற உங்க கண்ணுக்கு தெரிய மாட்டேன்தனேபா…அப்ப எப்டி அட்ஜஸ்ட் செய்வீங்களோ அப்டியே நான் பேங்களூர் போனதும் அஜெஸ்ட் செய்துகோங்க…”

“என்னமா இது பிடிவாதம்?”

“உங்க பொண்ணுப்பா நான், உங்கள மாதிரி தான இருப்பேன்….”

“எந்த கோர்ஸ் இங்க இல்லைனு அங்க போனும்னு சொல்ற….அது எதுனாலும் அப்பா என்ன செலவு செய்தாவது இந்த அகாடமிக் இயர்லயே நம்ம காலேஜ்ல கொண்டு வர்றேன் பட்டு…”

“அப்டியா…நீங்க என்ன பாடுபட்டாலும் கொண்டு வர முடியாத கோர்ஸ் நேம்லாம் சொல்லுங்க…..அதுல ஒன்னு தான் ஜாய்ன் செய்ய போறேன்…”

பெருமூச்சு விட்டார் அப்பா.

“அப்ப முடிவு செய்துட்ட….?”

“அஃப் கோர்ஸ் டாட்”

“ஏய் மலர்…..அப்ப வீடு காடெல்லாம் பேக் பண்ணு, நாமளும் பேங்களூர் போறோம்…ஒரு ரெண்டு வருஷம்….நான் அங்கயும் இங்கயுமா அலைஞ்சு பிஸினஸை பார்த்துகிடுறேன்….பட்டு படிச்சு முடிச்சதும் இங்க வந்துகிடலாம்…”

“அம்மு என் அம்மா…எடுத்து வைக்றப்ப என் திங்ஸை மட்டும் விட்டுட்டு பேக் செய்ங்க…ஒரு ரெண்டு வருஷம்…அப்பாவும் நீங்களுமா ஹாயா ஹனிமூன் மாதிரி பேங்களூர் போய்ட்டு வாங்க… ஐயோ அம்மா விடுங்கம்மா…அப்பா காது வலிக்குதுப்பா…விட சொல்லுங்கப்பா…”

“ஏய்…அவ காதவிடுடி…பேசிக்கிட்டு இருக்றப்பவே கை நீட்டிகிட்டு….”

“பிறகு…பெரியவங்க…பெத்தவங்கன்னு ஒரு மரியாதை இருக்கா இவளுக்கு…வாய்க்கு வந்ததெல்லாம் பேசிகிட்டு….போற இடத்துல இந்தா வாயால என்னல்லாம்….”

அதற்கு மேல் அம்மாவை பேசவிடவில்லை அப்பா. கர்ஜித்தார்.

“நிறுத்துடி….போற இடத்துல என் பிள்ள மகராணியாதான்டி இருப்பா…இவ சொல்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் பத்து பேர் அங்கயும் இங்கயும் ஓட ஆள் இருப்பாங்க…எத்தனை தடவை சொல்லிருக்கேன் பிள்ளய பத்தி பேசுறப்ப நல்லதா பேசுன்னு….”

அம்மா அரண்டு ஒடுங்கி நின்றிருந்தார்.

எப்பொழுதும் கோபப்படுவது அப்பாவின் வழக்கம் என்றால் இது இயல்பாய் தோன்றி இருந்திருக்கும்.

ஆனால் எதற்கும் அதிர்ந்து கூட பேசாத அப்பா…..இவள் எதிர்காலத்தை பத்தி மட்டும் யாரும் கவனமின்றி விளையாட்டாக குறை சொல்லிவிட்டாலும் கொதித்து கொந்தளித்துப் போவார். இப்படிப் பட்ட அப்பாவிடம் அனுமதி வாங்கி ஹாஸ்டல் வருவதென்றால் சாதனை தானே.

அப்படி அப்பாவைவிட்டு வெளியே வர இவள் நினைத்ததற்கு காரணம் கட்டுப்பாட்டை விரும்பாமல் என்றில்லை.

கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான் என்ற நம்பிக்கை இவளுக்கு அதிகம். தப்பு செய்யத்தான் ஒளிந்து மறைய வேண்டும் என்று நினைப்பாள்.

ஆனால் அப்பா பள்ளியிலாவது இறுதி வகுப்பு தேர்வு அரசு பொதுத்தேர்வு. ஆனால் அவர் கல்லூரியில் சர்வ அதிகாரமும் அப்பா கையில்.

அப்பா இவளுக்கு தேர்வுக்கு முன்னதாக கொஸ்டினை குறிப்பாக  கொடுங்கள் என்றோ, மார்க்‌ அதிகமாய் போடுங்கள் என்றோ, எல்லா போட்டிகளிலும் இவளுக்கே முதலிடம் கொடுங்கள் என்றோ, இவள் வந்தால் நீங்கள் எழுந்து நில்லுங்கள் என்றோ எதையும் சொல்லவில்லைதான். ஆனால் செக்யூரிட்டி முதல் அந்த சிவப்பு ரோஜா ப்ரின்ஸிபால் சிரோன்மணி வரை எல்லோரும் இவளுக்கு இதைத்தான் செய்தார்கள்..

மொத்தத்தில் இவள் இப்பொழுது வாங்கி இருக்கும் பட்டமும் பதக்கமும் பாராட்டும் இவள் கடின உழைப்பின் கனியாய் இவளுக்கு தோன்றவில்லை. கல்லூரி ஊழியர்களின் விஸ்வாச காணிக்கையாய் தோன்றுகிறது.

இவளுக்கு படித்து பட்டம் வாங்க ஆசை. பாத காணிக்கை அல்ல.

விழ நேர்ந்தாலும் சொந்த காலில் நின்று பழக விருப்பம் அப்பாவைப் போல. அவரது பூர்வீகம் ஊட்டி. ஆனால் ஒரு சிறு வேலைக்காக குல்பர்கா வந்தவர். கடின உழைப்பாளி. இன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கும் நிலையில் இருப்பவர்.

அவர் மகளாய் இருந்து கொண்டு அவர் நிழலில் கருக ஆசையில்லை. வெயில் விழும் இடத்தில் வேர்விட ஆசை. அதை அவள் தன் ஆசையாக அல்ல தேவையாக கருதினாள்.

எப்பாடியோ ஒரு வழியாய் முதுகலை படிப்பிற்கு பேங்களூர் கல்லூரியில் சேர்ந்தாயிற்று.

ல்லூரி தொடங்கி இரண்டு மாதமாகி இருந்தது. இன்டெர் டிபார்ட்மென்ட் கல்ச்சுரல்ஸ். பாட்டுப் போட்டிக்கு இவள் பெயர் கொடுத்திருந்தாள். சொந்த பாடலாக இருக்க வேண்டும் என்று தொடங்கிய போட்டிக்கான நிபந்தனை லிஸ்ட் நீளமானது.

சவாலை எதிர்கொள்ள ப்ரியபட்டு வந்தவள் தானே, ஆக அதற்கு பெயர் கொடுத்ததோடு, பெரு முயற்சி பயிற்சி எல்லாம் எடுத்திருந்தாள்.

போட்டியும் வந்தது.

இதுவரை மேடை பயம் என்பது நல்லிசைக்கு கிடையாது. அவள் பள்ளியில் கல்லூரியில் பலமுறை மேடை ஏறி இருக்கிறாள். ஆனாலும் இங்கு மேடை ஏறியதும் எதோ ஒன்று அவளுக்குள் குப் என்றது.

கீழே பார்வையாளர்களில் இவளுக்கு தெரிந்தவர்கள் யாரும் கண் படும் இடத்தில் இல்லை.

மேடையில் இவள் இடப்பக்கம் நடுவர் குழு. திரும்பி அவர்களுக்கு வணக்கம் சொன்னாள் இருந்த படபடப்பை எல்லாம் மறைத்துக் கொண்டு.

அப்பொழுதுதான் அவன் கண்ணில் பட்டான். அந்த மூவர் குழுவில் நடுவிலிருந்தவன். ப்ளூ ஷர்ட்….க்ளீன் ஷேவ்….வெரி அஃபீஷியல்….ஆனால் அப்படி ஒரு தன்மயமாக்கும் புன்னகை…..வெரி ஃப்ரெண்ட்லி….அன்யோன்யம்…..மதுரன்.

“ஆல் த பெஸ்ட் “ என்றான். சட்டென சூழ்நிலை மாறி தன் வீட்டில்….தன்னவர் முன் தான் இருப்பதாய் உணர்ந்தாள் நல்லிசை.

முன்பே அவனை அவ்வப்போது தூரத்தில் பார்த்திருக்கிறாள் இவள் செல்லும் சர்ச்சில். காலேஜ் கிரிகெட் டீம் கேப்டன். அதோடு ஸ்டூடண்ட்ஸ் ப்ரெசிடெண்ட் . அவன் மீது ஒருவித மரியாதை உண்டு. ஆனால் இப்படி அருகில் அறிமுகமாய்……பழக்கமில்லை.

இந்நேரம் உள் மனதிற்குள் ஒரு இயல் நிலை பிறழ்வு.

உடன் ஒரு உற்சாகம் உற்சவம் செய்ததது.

நன்றாகத் தான் பாடினாள். அப்படித்தான் அவளுக்கு தோன்றியது..

பாடி முடிக்கவும், நடுவர் குழுவில் இருவர் 9.8/10 மதிப்பெண் கொடுக்க மூன்றாவது நடுவரான அவனோ போட்டியில் பங்கு பெறும் தகுதி இல்லை அவள் பாடலுக்கு என்றான்.

குறைவாக மதிப்பெண் கொடுத்திருந்தால் கூட அவளுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கும். தகுதி நீக்கம் செய்தால்….? கட்டுப்பாட்டையும் மீறி கண்ணில் நீர் கட்டியது….

போட்டி விதிகளில் ஒன்று பாடும் போது இன்ஸ்ட்ருமென்ட் எதையும் உபயோகிக்க கூடாது என்பது. இவள் பாடும் போது கையில் நாட்டிய சலங்கை ஒன்றை வைத்து அதில் தாளமிட்டபடி பாடினாள்.

அது பாடலுக்கு இசை நயம் சேர்க்கவென இவள் பயன் படுத்தியது தான். இருந்தாலும் அதை இசை கருவி என முடியாதே என்பது இவள் எண்ணம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.