(Reading time: 14 - 28 minutes)

09. இரு கண்ணிலும் உன் ஞாபகம் - வத்ஸலா

டி வயிற்றிலிருந்து பந்தாக மேலுழும்பிய பயத்தை உள்ளுக்குள்ளேயே அழுத்திக்கொண்டு, குரலில் சற்று கடுமையை புகுத்தி உயர்த்தினாள் மாதங்கி  'நான் அவரை பார்க்கணும்'

வேண்டாம் மாதும்மா...... என்றாள் ராஜி. ராஜியின் விரல் நகங்கள் மாதங்கியின் மீது. அழுந்தின..

வேண்டாமா??? என்ன வேண்டாம்? இதோ ஒரு நிமிஷம் இப்போ தாத்தா வந்திடுவார். பின்னாடியே வரேன்னு சொன்னார். அவர் கிட்டே சொல்லுங்க வேண்டாம்னு........

iru kannilum un nyabagam

தாத்தாவின் பெயரை கேட்ட மாத்திரத்தில் ராஜியின் பிடி தளர்ந்தது. அவள் முகம் சட்டென மாறி அதில் சட்டென கனிவு படர்ந்தது. சரி. சரி வா நாம முகுந்தன் கிட்டே போகலாம். வேகமா போயிடலாம் வா. அவன் இருக்கிற இடம் எனக்கு தெரியும்.

மறுபடியும் மாதங்கியின் கையை பிடித்துக்கொண்டு நடந்தாள் ராஜி. நீண்ட நாட்களுக்கு பிறகு தனக்கென கிடைத்துவிட்ட தனது சொத்தை தவற விட்டு விடக்கூடாது என்ற வேகம் அவளிடத்தில்.

'பொழுது விடிவதற்குள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு நாங்கள் சென்று விட வேண்டும். இந்த பூமியை விட்டு எங்காவது சென்று விட வேண்டும்.'

சாலையில் நடந்தார்கள் இருவரும். அங்கே நின்றிருந்தது ஒரு ஆட்டோ. அதனுள்ளேயே அதன் ஓட்டுனர் உறங்கிக்கொண்டிருந்தார்.

அந்த ஆட்டோவின் அருகில் சென்று நின்றாள் ராஜி. அந்த ஆட்டோவை அவள் தட்டிய வேகத்தில் திடுக்கிட்டு விழித்துக்கொண்டார் அந்த ஓட்டுனர்.

ராஜியின் முதுகுக்கு பின்னால் நின்றிருந்தாள் மாதங்கி. அவள் முன்னால் நின்ற அந்த ஓட்டுனரின் முகத்தை அவளால் பார்க்க முடிந்தது.

முதலில் அவர் கண்களில் தெறித்த கோபம், சட்டென பறந்துபோய் முகம் வெளிறிப்போனது.

அவர் கண்களுக்கு என்ன தெரிந்தது என்று மாதங்கிக்கு புரியவில்லை. மாதங்கியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ராஜி ஆட்டோவில் ஏறி அமர, எதற்கோ கட்டுப்பட்டவராக ஆட்டோவை செலுத்த துவங்கினார் ஓட்டுனர்.

ராஜியினுள் இருக்கும் அமானுஷ்ய சக்தியின் கட்டுப்பாட்டில் அந்த ஓட்டுனர் இருப்பதை மட்டும் புரிந்துக்கொள்ள முடிந்தது மாதங்கியால்.

தலை முதல் கால் வரை திகில்  பிடித்தாட்டிக்கொண்டிருக்க, கண்களை மெல்ல நிமிர்த்தி ராஜியை பார்த்தாள் மாதங்கி. அவளை திரும்பி பார்த்து புன்னகைத்தாள் ராஜி.

சின்னதான புன்னகையுடன் தலை கவிழ்ந்துக்கொண்ட மாதங்கியினுள்ளே பிரளயம். முகுந்தனுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணம் அவளுக்கு மன உறுதியை தந்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தாத்தாவின் வார்த்தைகள் அவள் நினைவில் ஆடின.

சில நிமிட மௌனத்தை தொடர்ந்து தன்னையும் அறியாமல் மாதங்கியிடம் ஒரு பெருமூச்சு எழ, நிமிர்ந்து  ராஜியை பார்த்து மெலிதான் குரலில் 'அம்மா......' என்றாள்.

சர்வமும் குலுங்க நிமிர்ந்தாள் ராஜி.

'அம்மா......' என்றாள் மறுபடியும். ஏன் மா அப்படி பார்க்கிறே? கேட்டவளின் கண்களில் நீரேற்றம். தாத்தாவின் வார்த்தைகள் திரும்ப திரும்ப நினைவில் ஆட, மாதங்கியின் மனம் கனத்து வலித்தது.

அவளுக்காகவே தவித்து தவித்து உயிரை விட்ட ஒரு ஜீவன். இப்படி எனக்காக ஒரு உயிர் உருகி உருகி கரைந்து போனதை நான் அறியாமலே போனது என் துரதிஷ்டமா? அவள்  துரதிஷ்டமா? எனக்காக  எத்தனை அழுதிருக்கும் அந்த உள்ளம். எத்தனை வலிகளை சுமந்திருக்கும்.

உடலிலும் உள்ளத்திலும் பரவிக்கிடந்த பயமும், நடுக்கமும், குறைந்து போய் விட்டதை போன்றே ஒரு உணர்வு. தன்னையும் அறியாமல் ராஜியின் தோள் மீது சாய்ந்துக்கொண்டாள் மாதங்கி. 'அம்மா.....'

என்னாச்சு மாதும்மா..... பதற்றத்துடன் ஒலித்தது ராஜியின் குரல். தலைய வலிக்குதா??? பசிக்குதா????

வியப்புடன் நிமிர்ந்தாள் மாதங்கி.

முகமெல்லாம் வாடிப்போயிருக்கே. பசிக்குதுதான் போலிருக்கு. டிரைவர் சார் இப்போ இங்கே ஏதாவது சாப்பிட கிடைக்குமா?

ஏதோ மயக்கத்திலிருந்து சட்டென விடுப்பட்டதை போல் திரும்பி பார்த்தார் அந்த ஓட்டுனர். பின்னர் எதுவும் பேசாமல் இடம் வலமாக தலை அசைத்தார் அவர்.

எதுவுமே இல்லையா????  ராஜியின் குரல் கொஞ்சம் கரகரப்பாக மாற, நடுக்கத்துடன் வெளி வந்தது அவர் குரல் 'என்... என்கிட்டே பி.. பிஸ்கட் ..இரு ...க்கு'

அவர் தேடி எடுத்த பிஸ்கட் பாக்கெட்டை அவசரமாக நீட்டினாள் ராஜி 'இந்தா சாப்பிடு மாது...ம்மா.

மாதங்கி இடம் வலமாக தலை அசைக்க, அதை பிரித்து அவளுக்கு ஊட்டி விட்டாள் ராஜி சாப்பிடு மாதும்மா. கொஞ்சமா சாப்பிட்டுக்கோ... காலையிலே உனக்கு ஏதாவது நல்லதா செஞ்சு தரேன்.

கண்ணீரில் கலந்த புன்னைகை மாதங்கியிடம். 'இதற்கு பேர்தான் தாய்மையா?

ஏண்டா செல்லம் அழறே சாப்பிடுடா........

ஒரு பெருமூச்சுடன் கண்ணீரை துடைத்துக்கொண்டவள், நிதானமான குரலில் மீண்டும் அழைத்தாள், அம்மா.... முகுந்தன் எங்கேமா..????..

அம்மா என்ற வார்த்தையிலே கரைந்து போனவளாக பேசத்துவங்கினாள் ராஜி முகு... முகுந்தனா??? அவன்... அவன் அங்கே அந்த கட்டிடத்திலே.....

கட்டிடமா???? புரியாமல் கேட்டாள் மாதங்கி.....

ஆமாம்... அங்கே இருக்கு ஒரு பாதி கட்டின கட்டிடம் .அந்த ராஜி இருக்காளே ராஜி அவ தான் கிராமத்திலிருந்து ஆளெல்லாம் கூட்டிட்டு வந்திருக்கா போலிருக்கு. அந்த ஆளுங்க ரயில்வே ஸ்டேஷன்லேர்ந்து முகுந்தன் வரும் போது அவனை அடிச்சு தூக்கிட்டு போயிட்டாங்க. நான் பார்த்திட்டே பின்னாடியே போனேன். அவனை அந்த கட்டிடத்திலே கொண்டு வெச்சிட்டாங்க. என்னை அவங்க எல்லாரும் ராஜி ராஜின்னு கூப்பிட்டாங்க....

முகுந்தனை அடித்தார்களா???? அதிர்ந்து போனவளாக  ராஜியையே பார்த்திருந்தாள் மாதங்கி.

மாதும்மா... உனக்கு முகுந்தனை ரொம்ப பிடிக்குமா மாதும்மா? சட்டென கேட்டாள் ராஜி

ம்.... கண்ணீருடன் வேகமாக தலை அசைத்தாள் மாதங்கி. அம்மா...... அவர் இருக்கிற இடத்துக்கு என்னை கூட்டிட்டு போயிடுமா. அவரை காப்பத்திடுமா. நீ அவரை காப்பாத்திடு. அப்புறம் நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்

கேட்பியா மாதும்மா? நிஜம்மா கேட்பியா.? என் கூட வந்திடுவியா?

'வரேன் மா' என்றாள் மாதங்கி உறுதியான குரலில். நீ எங்கே கூப்பிட்டாலும் வரேன்.

மாதங்கியை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் ராஜி. அப்படி ஒரு நிறைவு பிறந்தது அவளுக்குள்ளே. 'கிடைத்துவிட்டாள். என் மகள் எனக்கு கிடைத்து  விட்டாள்.'

மாதும்மா.... என்னை அம்மான்னு கூப்பிடு மாதும்மா...  என்னை அம்மான்னு கூப்பிடு மாதும்மா...

அவள் சொல்ல சொல்ல திரும்ப திரும்ப அழைத்துக்கொண்டிருந்தாள் மாதங்கி.

அவளது பயங்கள் முற்றிலுமாக காணாமல் போயிருந்தன 'என்னை அழைப்பது என்னை பெற்றவள். என்னை பெற்றவளுக்கு என் மீது இல்லாத உரிமையா?  சென்று விடுகிறேன். அவள் எங்கே அழைத்து சென்றாலும் சென்று விடுகிறேன்.'

சரியாக அதே நேரத்தில் அங்கே இருந்தவர்களை ஏமாற்றி தாக்கிவிட்டு அந்த கட்டிடத்திலிருந்து தப்பித்து வெளியேறி இருந்தான் முகுந்தன்.

அவன் அங்கிருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அந்த கட்டிட வாசலுக்கு வந்து நின்றது இவர்களின் ஆட்டோ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.