(Reading time: 14 - 28 minutes)

ம் என தலையசைத்தாள் மாதங்கி.. அவள் கண்களில் பல நூறு குழப்பங்கள். திடீரென கேட்டாள்  என்னை வளர்த்த எங்க அம்மா இறந்து போனதும் அந்த கிணத்திலே விழுந்துதான். அப்போ அவங்களை கொன்னது...

இல்லைமா.... அது சில ரௌடி பசங்க, அவங்க போட்டிருந்த நகைக்காக அவங்களை கொன்னுட்டு பழியை தூக்கி இந்த பேய் மேலே போட்டிருக்காங்க. உன்னை பெத்தவளை பொறுத்தவரை அவ ஏங்குறது  உன் அன்புக்காக மட்டும் தான்.

மாதங்கி தாத்தாவையே விழி அசைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க உறுதியான குரலில் சொன்னார் அவர் நீ இப்போ ராஜியோட போ.

தலை முதல் கால்வரை அதிர்வலைகள் பரவ அவரையே இமைக்காமல் பார்த்திருந்தாள் மாதங்கி.

பயப்படாதே மாதங்கி. உங்க அம்மா உன்னை ஒண்ணும் பண்ண மாட்டா. அவ சுவாசமே உன் பேரும் உன் கொலுசு சத்தமும் தான்.

ஒரு அம்மா உயிரோட இருந்தாலும் சரி, இறந்தே போனாலும் சரி, தன்னோட குழந்தைகள் அழிஞ்சு போகணும்னு நினைக்கவே மாட்டா. அவளாலே உன்னை கொல்ல முடியாது. அவளுக்கு இருக்கிறது ஏக்கம். எப்படியாவது உன்னை தன்னோடயே வெச்சுக்க முடியாதா அப்படிங்கிற ஏக்கம் அவ்வளவுதான்.

நீ ஒண்ணுமே பண்ண வேண்டாம். அவளை அம்மான்னு கூப்பிடு போதும். அந்த வார்த்தையே அவளை சாந்தமாக்கிடும். நீ அவகூட போ. உங்க அம்மா உன் பக்கத்திலே இருக்கும் போது  உனக்கு எந்த ஆபத்தும் வராது. தைரியமா அவ கூட போ.

நானே முதலிலே நிறைய யோசிச்சேன். இப்போ எனக்கு உங்க அம்மா பத்தி தெளிவா புரிஞ்சிடுச்சு. நான் சொன்னதை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ. அவளை அம்மான்னு கூப்பிடு.

விடிஞ்சா அமாவாசை. அவ ஆத்மா சாந்தியாக நான் செய்ய வேண்டியதை செய்யறேன். அதுக்கு முன்னாடி இறந்த பிறகும் தவிச்சுக்கிட்டே இருக்கிற அவ மனசை நீ தான் சாந்த படுத்தணும். எல்லாம் சரியா நடக்கும்.

தனது தாயை பற்றிய சிந்தனைகளே மனதை நிறைத்திருக்க, அங்கே நடந்துக்கொண்டிருந்த பிரளயத்தை அதிர்ச்சி விலகாமல் பார்த்தபடி நின்றிருந்தாள் மாதங்கி.

திடீரென்று ஒரு குரல் அவளை எச்சரித்தது. மாதும்மா... நீ முகுந்தனோட இந்த கட்டிடத்தை விட்டு வெளியே போ மாதும்மா...

அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு அவள் அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறிய மறுநொடி அந்த கட்டிடம் நொறுங்கி தரைமட்டம் ஆனது.

நிசப்தம். எங்கும் அமைதி. ஒரு பெரிய பூகம்பத்துக்கு பின் நிலவும் இமாலய அமைதி.

எதையோ உணர்ந்தவராக நொறுங்கிக்கிடந்த குவியல்களுக்கு அருகில் சென்றார் தாத்தா. அங்கே உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்தாள் ராஜி. அவளையும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரானார்கள் அனைவரும்.

ஏனோ காரில் ஏற மனம் வரவில்லை மாதங்கிக்கு. திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே நடந்து காருக்கு அருகில் வந்து நின்றவளின் காதில் மட்டும் கேட்டது அந்த குரல் 'போ... மாதும்மா.... முகுந்தனோட போ... சந்தோஷமா இரு .... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மாதும்மா.... வருவேன்.... உன் பொண்ணா உன் கிட்டேயே திரும்ப வருவேன்.... '

நிறைவின் எல்லையை தொட்டவளாக காரில் ஏறி அமர்ந்தாள் மாதங்கி. அவள் முகமெங்கும் சந்தோஷ கீற்றுகள்.

ராஜியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, கோபத்தின் எல்லையில் நின்றவனாக எல்லாரையும் திட்டிக்கொண்டிருந்தான் முகுந்தன். தாத்தா சொன்னதை எதையும் நம்ப தயாராக இல்லை அவன்.

'சரியா கட்டாத கட்டிடம் இடிஞ்சு விழுந்திடுச்சு அவ்வளவுதான். நாம நல்லவேளை வெளியே வந்திட்டோம். பேய் பிசாசுன்னு, ராத்திரி ஒரு மணிக்கு எல்லாரும் ரோட்டிலே சுத்திட்டு இருக்கீங்க. யாருக்காவது ஏதாவது ஆகியிருந்தா என்ன செய்யறது.? என்னை காப்பாத்த வந்தீங்களாக்கும்.? எந்த நிலைமையிலும் என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும். நல்லவேளை உங்க யாருக்கும் எதுவும் ஆகலை.'

எதுவுமே பேசவில்லை தாத்தாவும், மாதங்கியும். ஒருவரை ஒருவர் பார்த்து மௌனமாக புன்னகைத்துக்கொண்டனர்.

சில நாட்களில் பிழைத்து எழுந்திருந்தாள் ராஜி. மரண வாயிலை தொட்டு திரும்பிய அந்த அனுபவமே அவளை மொத்தமாக மாற்றிப்போட்டிருந்தது.

சில நாட்கள் கழித்து எல்லா நல்ல மனங்களும் வாழ்த்த முகுந்தன் - மாதங்கி திருமணம் மகிழ்ச்சியாக நடந்தது. ஆனந்தத்தில் மூழ்கி திளைக்க துவங்கினர்  இருவரும். அவளது தாய் மகளாக அவளிடம் வந்து சேரும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்க துவங்கினாள் மாதங்கி. 

நிறைந்தது.

Episode # 08

{kunena_discuss:781}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.