(Reading time: 10 - 20 minutes)

06. காதல் உறவே - தேவி

10 மணிவாக்கில் குழந்தை பசியில் சிணுங்கவும், ராம் கண் விழித்தான். இப்படி தூங்கி எத்தனை வருடங்களாகி விட்டது என்று  எண்ணியவன், மைதிலியை அழைக்க முற்பட்ட போது அவளே உள்ளே வந்தாள். குழந்தையை குளியலறைக்கு அழைத்துச் சென்று, குளியல் மற்றவைகளை முடித்து வெளியே வந்தாள். ராம் தன்னுடைய பையை காரிலிருந்து எடுத்து வந்தவன், குளியலறைக்குச் சென்றான். அவன் குளித்து உடை மாற்றி வரவும், மைதிலி சாப்பாடு எடுத்து வைத்தாள்.

ராம் சாப்பிட அமர்ந்து கொண்டே “ஷ்யாம் சாப்டாச்சா?” என்றான்.

“நீங்கள் சாப்பிடும் போது அவனும் சாப்பிடுவான்” என்றாள்.

Kathal urave

“என்னிடம் கொடு. நான் ஊட்டுகிறேன்”

“இல்லை. ஒரு வருடமாகவே அவனே சாப்பிடுகிறான் ஊட்டினால் பிடிக்காது.”

“உன்னை மாதிரியே பிடிவாதம்” என்றான்.

ராமை முறைத்தபடி “அவன் அப்பா மாதிரி” என்று நொடித்தாள்.

ராம் சிரித்துக் கொண்டே “சூடு தாங்கவில்லை” என்றான். அவள் முறைக்கவும் “சாப்பாட்டைச் சொன்னேன்’ என்று நழுவினான்.

பிறகு ராமிற்கு சாப்பாடு வைத்தவள், குழந்தைக்கு பருப்பு சாதம் ரசம் விட்டு பிசைந்து ஒரு பௌலில் கொடுத்தாள். அப்பாவும், மகனும் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர். சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்தவள், பாத்திரங்களை எடுக்கும் போது “நீ சாப்பிடவில்லையா?” என்றான்.

“சாப்பிடுகிறேன்” என்றாள். கிட்டத் தட்ட ஏழெட்டு வருடங்களாக அவளை சாப்பிடச் சொல்லக் கூட யாருமில்லாமல் இருந்தவள். நடுவில் ஒரு வருடம் நன்றாக இருந்த போதும் அதுவும் கானல் நீராகி விட, இப்பொழுது ராம் கேட்டது நெகிழ வைத்தது.

மைதிலியும் சாப்பிட்டு வரவும், ராம் “எல்லாம் எடுத்து வைத்து விட்டாயா?” என்றான்.

“கண்டிப்பாக வர வேண்டுமா?” என்றாள்.

“மறுபடியும் முதலிலிருந்தா? மைதிலி நான் நாளைக் காலையில் கண்டிப்பாக சென்னையில் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நீ மட்டும் தான் இந்த ஜென்மத்தில் என் மனைவி. நமக்குள் உள்ள பிரச்சினைகளைப் பிறகு பேசித் தீர்க்கலாம். இனி ஒருமுறை நீயும் நானும் பிரியாத அளவு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுவோம். இல்லை என்னை அடியோடு பிடிக்கவில்லையெனில், நம் குழந்தைக்குத் தாயாகவும், என் வீட்டிற்கு மருமகளாகவும் மட்டும் இரு. உன்னை வேறு எதற்கும் கட்டாயப் படுத்த மாட்டேன்.” என்றான்.

மைதிலி அவனைப் பார்த்தாள். அவள் மனதில் ஓடும் எண்ணங்களை ராமால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஒரு பெருமூச்சுடன் “கிளம்பலாம்” என்றாள்.

ராம் அங்குள்ள சில நண்பர்களிடம் பேசி தேவையானவற்றைத் தவிர, மற்றதை இல்லாதவர்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்தான். ஒரு மணியளவில் குழந்தைக்கு தயிர் சாதம் கொடுத்த பின் அவளுடைய அலுவலகத்திற்கு சென்றார்கள்.

அங்கே  ராம் விசிட்டிங் கார்டு கொடுக்கவும் அவர்களை கெஸ்ட் ரூமில் உட்கார வைத்தனர். அவர்கள் எம்.டி வந்து ராமிடம் கை குலுக்கி வந்த விஷயத்தைக் கேட்டார். மைதிலி தன்னுடைய மனைவி என்றும், தங்களுக்குள்ள கருத்து வேறுபாட்டினால் ஏற்பட்ட பிரிவையும், அதனால் இங்கே வேலை செய்வது பற்றியும் கூறியவன், இப்பொழுது அவளை அழைத்துப் போக எண்ணியதையும் சொன்னான்.

உடனே அவர், அவள் ராஜினாமைவை ஒப்புக் கொள்வதாகவும், உடனே ரிலீவ் செய்ய வேண்டிய நடவடிக்கையும் எடுத்தார். அவள் ஒரு மணி நேரத்தில் வேலைகளை முடித்து விட்டு அவனோடு கிளம்பினாள்.

மாலை 6 மணி அளவில் சென்னைக்குப் புறப்படனர். ராமே காரை ஓட்டினான். முதலில் கொஞ்ச நேரம் ஷ்யாம் அவர்களிடம் வளவளத்தபடி வந்தான். பிறகு தூங்க ஆரம்பித்தான்.

அவன் தூங்கவும், ராம் மைதிலியிடம், “மைதிலி, அப்பா அம்மாவிற்கு சஷ்டியப்த பூர்த்தி அடுத்த வாரம் நடக்க உள்ளது. அத்தோடு சபரியின் பையன் அஸ்வினின் ஆண்டு நிறைவும் 10 நாளில் உள்ளது. நாளையிலிருந்து அந்த ஏற்பாடுகளை பார்க்க வேண்டும். நான் வராமல் எதுவும் செய்ய மாட்டோம் என்று கூறி விட்டார்கள். அதனால் நான் பிஸியாகி விடுவேன். நீயும் ஏற்பாடுகளில் கலந்து கொள். மேலும் நமக்குள்ள பிரச்சினைகள் சரியாகி விட்டதாக நான் எல்லோரிடமும் கூறி விடுகிறேன். நீயும் அதற்கு தகுந்தாற் போல் நடந்து கொள்” என்றான்.

“எனக்கு நடிக்க வராது. ஆனால் என்னால் பிரச்சினை வராதபடி நடக்க முயற்சி செய்கிறேன்”

கொஞ்சம் கோபம் வந்தாலும் , “நீ சொல்வதும் சரிதான். அப்படிச் செய்தால் செயற்கையாகத் தெரியும். ஆனால் நான் பிரச்சினைகளை சரி செய்ய முயற்சி செய்கிறோம் என்று கூறி விடுகிறேன்.” என்று கூறினான்.

பிறகு இருவரும் எதுவும் பேசாமல் இருந்தனர். பிறகு ராம் “ஏன் மைதிலி ஷ்யாம் குறும்புக்காரானா ? “ என்று புன்னகை தவழ வினவினான்.

“இல்லையே. ஏன் கேட்கிறீர்கள்?”

“ஹம்;… அப்படியானால் என்னைப் போலவா”? என்றான்.

“ஆம். மாஸ்டர். பெர்பெக்ட்” என்று கூறியவள் நாக்கைக் கடித்தாள். அவளைத் திரும்பிப் பார்த்தான் ராம்.

10 மணி அளவில் திருச்சி வரவும், ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு விட்டு, மைதிலியிடம் “மைதிலி இங்கே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு 4 மணி அளவில் புறப்படலாம். காருக்கும் ஓய்வு தேவை” என்றான். சரி என்று இறங்கிய மைதிலியிடம் இருந்து குழந்தையை வாங்கியவன், “ஹேண்ட பேக், குழந்தைக்குத் தேவையான அவசர சாமான்கள் அடங்கிய பையை மட்டும் எடுத்துக் கொள். காலையில் அப்படியே புறப்படலாம்” என்றான். ராமின் ப்ரீப்கேஸ், இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு இருவரும் அறைக்குச் சென்றனர்,

ரூம் சர்வீஸில் அவர்களுக்கு டிபனும் குழந்தைக்கு இட்டிலி, பால் ஆர்டர் கொடுத்து விட்டு ரிபிரெஷ் செய்தனர். டின்னர் வந்ததும் சாப்பிட்டு விட்டு இருவரும் படுத்தனர். ஆனால் தூக்கம் வரவில்லை. நினைவுகள் மீண்டும் பின்னோக்கி ஓடியது.

ராம், மைதிலி திருமணம் ராமின் வீட்டின் அருகிலுள்ள கோவிலில் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் கோவிலில் தெய்வத்தை தவிர யாரையும் வணங்குவது  தவறு என்பதால் வீட்டிற்கு சென்று பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள், பிறகு ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் சென்று திருமணத்தைப் பதிவு செய்து சான்றிதழ் வாங்கி அதை விசா அலுவலகத்தில் கொடுக்க ஏற்பாடு செய்தான்.

மதிய விருந்து முடிந்ததும், மைதிலியை புடவையை மாற்றிக் கொள்ளச் சொல்ல, சபரியின் அறையில் உடை மாற்றினாள். ஒரு சில்க் காட்டன் புடவையை மாற்றிக் கொண்டு வந்தவளை,  வீட்டைச் சுற்றிக் காண்பிக்கச் சொன்னார்கள். இளையவர்களின் கேலி கிண்டல்களோடு ராம், மைதிலியும் சென்றனர். ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் காண்பித்தவன், மாடியில்  ஹால் முடியுமிடத்தில் உள்ள அவனின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

“மஹாராணியே தங்களது சாம்ராஜ்ஜியத்திற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்” என்று குனிந்து ஆங்கிலேய பாணியில் வரவேற்றான்.

சிரித்தபடி உள்ளே வந்தவள், அறையைப் பார்த்தாள். சுவரின் ஒருபுறம் தஞ்சாவூர் ஓவியங்கள் அலங்கரிக்க மறுபுறும் இரு பிரிவாகத் தடுக்கப்பட்டு ஒரு பிரிவில் நிறைய புத்தகங்களும், மறுபுறம் பைல்களும் அடுக்கப்பட்டிருந்தது. மற்ற பக்கத்தில் வால் மவுண்டிங் டிவியும், டிவிடி பிளேயரும்; சிடிக்களும் அடுக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் மேஜை நாற்காலியும், மேஜையின் மேல் லேப்டாப்பும் இருந்தது. அதற்கு எதிர் பக்கத்தில் சதுர வடிவில் மெத்தையும், திண்டுகளும் இருந்தன. , அலமாரிக்கு இரு பக்கத்திலும் இரு கதவுகள் இருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.