(Reading time: 10 - 19 minutes)

09. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

தேவியின் தந்தைக்கு, மகள் மேலே படிப்பதில் விருப்பம் இல்லாவிட்டாலும், எங்கே எதிர்த்தால் தினம் தோறும் தன் மனைவியிடமிருந்து கிடைக்கும் பாட்டா கட் ஆகி விடுமோ என்ற பயத்தில் வாயை மூடிக் கொண்டிருந்தார். 

“எம்மா, இது மேல படிக்க எம்புட்டு செலவாகும்ன்னு தெரியுமா?  எனக்கு நேத்து ஒரு நூறு ரூவா குடுன்னா மூஞ்சிய காமிச்ச.  இந்த சின்னக்குட்டிக்கு மட்டும் அம்புட்டு செலவு பண்ணப் போறியா”, தனக்கு நூறு ரூபாய் கொடுக்காத அம்மாவைப் பார்த்து கத்தினான் வெற்றி.

“ஏய், எதுனா பேசினே அப்படியே மொளகாத் தூள எடுத்து அடிப்பட்ட இடத்துல அப்பிருவேன்.  இத்தனை நாளா உங்க ரெண்டு பேத்துக்கும் நான் அழுத தண்ட காச சேத்து வச்சிருந்தா எம்பொண்ண நான் டாக்டருக்கே படிக்க வச்சுருப்பேன்.  மூடிட்டு சாப்பிடு”, அஞ்சலை எகிற இதற்கு மேல் பேசினால் நிஜமாகவே அம்மா மிளகாயை அப்பி விடுவாள் என்ற பயம் இருந்ததால் வெற்றியும் வாயை மூடிக்கொண்டான்.

Vidiyalukkillai thooram

“அம்மா இந்தாம்மா என்னோட மார்க் ஷீட்.  ரெண்டு பாடத்துல நூத்துக்கு நூறு வாங்கி இருக்கேன்”

“கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.  மொதல்ல சாமிக்கிட்ட வச்சு கும்பிடு தேவி.  அப்புறம் அம்மாவாண்ட கொடுக்கலாம்”, தன் தாயின் பேச்சிற்கு தலை அசைத்தபடியே சாமி மாடத்தில் வைத்து கும்பிட்டு விட்டு தன் தாயிடம் கொண்டு வந்து மதிப்பெண் சான்றிதழை கொடுத்தாள் தேவி.

“பாருய்யா நம்மப் பொண்ணு எம்புட்டு மார்க்கு வாங்கி இருக்குது.  இது என்னாக் கண்ணு.  எல்லாத்துலயும் தொண்ணூறும், நூறும் வாங்கிட்டு ஆங்கிலத்துல  மட்டும் கொறச்சலா வாங்கிட்ட”

“எம்மா தேவிக்குட்டி என்ன மாதிரி இங்கிலீஷ் தொரையா என்ன.  இதுக்குதான் அண்ணன் கூடப் பேசும்போது இங்கிலிஷ்ல பேசிப்பழகுன்னு சொன்னேன், அப்படிப் பண்ணி இருந்தின்னா இப்போ அதுலயும் நல்ல மார்க் வாங்கி இருப்ப”

“டேய் வேணாம், என் வாய்ல நல்லா வந்திரும் சொல்லிட்டேன்.  நீ படிச்சு கிழிச்ச ஏழாம் வகுப்புக்கு இம்புட்டு தெனாவட்டு உனக்குக் கூடாது சொல்லிபுட்டேன்”

“நாளைக்கு எப்போக் கண்ணு பள்ளிக்கூடத்துக்கு போவணும்?”

“அம்மா காலைல ஒரு பதினோரு மணிப் போல போலாம்மா.  அப்போதான் எல்லாரும் ஃப்ரீயா இருப்பாங்க.  அப்படியே மத்த டீச்சருங்களையும் பார்த்துட்டு வந்துடலாம்.  கணக்குல நூத்துக்கு நூறு மார்க் வாங்கினதுக்கு எங்க டீச்சர் இந்தப் பேனா பரிசா கொடுத்தாங்கம்மா.  நல்லா இருக்குதா”,  தன் அன்னையிடம் தான் வாங்கியப் பரிசை ஆசையுடன் காட்டினாள் தேவி. 

“ரொம்ப அழகா இருக்குதும்மா.  சரி கண்ணு.  நாளைக்கு பதினோரு மணிக்கே போவலாம்.   நானும் எல்லா வீட்டு வேலையும் முடிச்சுட்டு வந்துடுவேன் அதுக்குள்ளாற.  சரி நீ சீக்கிரம் சாப்பிடு.  நாம கடைக்கு போலாம் கண்ணு.  நீ நல்ல மார்க் வாங்கி இருக்க இல்லை.  அம்மா உனக்கு எதுனாச்சும் வாங்கிக்கொடுக்கறேன்”, அஞ்சலை கூற, வெற்றி அவளுக்கு மட்டுமா என்ற பார்வையை வீசினான்.  அஞ்சலை முறைத்த முறைப்பில் அவன் தலை மீண்டும் தட்டை நோக்கி குனிந்தது.

“அம்மா இப்போ எதுவும் வேணாம்மா.  காச வீணாக்காத.  மேலப் படிக்க சேர்ந்தா அப்போ புஸ்தகம்  வாங்க அது இதுன்னு தேவப்படும்......”

“தேவிம்மா, அம்மா இருக்கற வரை துட்டப் பத்தி நீ எந்தக் கவலையும் படாத.  உனக்கு எம்புட்டு படிக்கணுமோ, அம்புட்டு படி.  நான்தான் படிக்காத கூமுட்டயா இருந்து இப்படி நாலு வூட்டு வேல செஞ்சு கஷ்டப்படறேன்.  உனக்கு அது வேணாம்.  நீ நல்லா படிச்சு பெரிய ஆபீஸர் வேலைக்கு போவணும், சரியா.  இப்போ சீக்கிரம் சாப்பிடு.  நாம கிளம்பலாம்.  யோவ், ரெண்டு பேரும் சாப்பிட்டு நடையக் கட்டுங்க.  வூட்டப் பூட்டிட்டு நாங்க கிளம்பறோம்”

“அம்மா, நீங்க ஊர் சுத்த நாங்க இன்னாத்துக்கு வீட்ட விட்டுப் போவணும்.  எனக்குத் தூக்கம் வருது.  நான் இங்கதான் இருப்பேன்.  நைனா நீ இன்னாப் பண்ணப் போற”

“எனக்கும் தூக்கம் வருதுடா வெற்றி.  நானும் அதத்தான் பண்ணப் போறேன்’

“இந்தப் பேச்சே தேவ இல்லை.  நாங்க அந்தப் பக்கம் போன உடனே இந்தப் பக்கம் வீட்டுல உள்ள சாமானோட மொத்த வீட்டையும் வித்துடுவீங்க.  அதனால மரியாதையா கிளம்புங்க”, அஞ்சலை அவர்களை துரத்தி, தன் மகளுடன் கடைக்கு கிளம்பினாள்.

துதான் தேவியின் குடும்பம்.  அப்பாவும், அண்ணனும் பொறுப்பில்லாமல் சுற்ற, தேவியின் அன்னை, ஏழெட்டு வீடுகளில் வேலை செய்து போதாதற்கு மதிய நேரத்தில் அரசு சத்துணவு கூடத்தில் உணவு சமைத்து, அனைவர் வயிறும் வாடாமல் காக்கிறார்.  தேவி மிக மிக நன்றாகப் படிக்கும் பெண்.  அவர்கள் ஊரில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி இல்லாத காரணத்தால், அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கும் பக்கத்து ஊரில் படிக்கிறாள்.

மறுநாள் தாயும், மகளுமாக சென்று தேவியின் தலைமை ஆசிரியரை சந்தித்தனர். 

“வாங்கம்மா.  வாழ்த்துக்கள்.  உங்கப் பொண்ணு இந்தப் பள்ளிலேயே முதல் மாணவியா வந்து இருக்கா”

“ரொம்ப நன்றிங்க மேடம்.  அவ கஷ்டப்பட்டதுக்கு கடவுள் கை மேல பலன் கொடுத்துட்டான்.  அதுக்கும் மேல நீங்கள்லாம் அவளுக்கு உதவி செய்து அவளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்க.  ரொம்ப நன்றிங்க மேடம்.  நானோ, என் புருஷனோ படிச்சவங்க கிடையாது.  அப்படி இருந்தும் என் பொண்ணு இம்புட்டு நல்லாப் படிக்குதுன்னா அதுக்கு நீங்கள்லாம்தான் காரணம் மேடம்”

“சரிம்மா.  மேல என்ன படிக்க வைக்கப் போறீங்க.  அவ எடுத்த மார்க்குக்கு எந்த குரூப் வேணா கிடைக்கும்”

“மேடம் எனக்கு இதைப் பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாதுங்க.  நீங்களே என் பொண்ணுக்கு எது நல்லதோ அதை சொல்லுங்க.  அப்படியே சேர்த்துடறேன்”

“ஏம்மா தேவி, உனக்கு டாக்டர், இன்ஜினியர்  இப்படி ஏதானும்  பண்ண விருப்பம் இருக்கா”

“மேடம் எனக்கு இப்படி நாலு வருஷ கோர்ஸ் எடுத்து படிக்கறத விட, வணிகத் துறைல ஏதானும் டிகிரிக்கு படிக்கத்தான் ஆசை மேடம்.  இப்போ திரும்பின பக்கம் எல்லாம் இன்ஜினியர்களா இருக்காங்க.  டாக்டர் படிப்பு நாலு வருஷத்தோட நிக்காது.  மேல மேல படிச்சாதான் ஸ்கோப் ஜாஸ்தி.  அதுவே வணிகத்துறைனா டிகிரி படிக்கும்போதே சைடுல CA, இல்லைனா ICWAI இப்படி எதுனாப் பண்ணிடுவேன்”

“பரவா இல்லையே தேவி. ரொம்பத் தெளிவா இருக்க.  எங்க இருந்த இத்தனை information collect பண்ணின”

“இல்லைங்க மேடம்.  என்னோட கணக்கு டீச்சர்க்கு என் குடும்ப நிலவரம் நல்லாத் தெரியும்.  அவங்கதான் ஒரு நாளைக்கு கூப்பிட்டு வச்சு, ஒரு ஒரு கோர்ஸ் பத்தியும் சொல்லி, நீ என்ன படிக்கணும்ன்னு இப்போலேர்ந்தே முடிவு பண்ணிக்கோ.  எதுவா இருந்தாலும் நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் அப்படின்னு சொன்னாங்க மேடம்”

“ஓ கமலா மேடம், ஏற்கனவே உன்கிட்ட இதைப்பத்தி பேசிட்டாங்களா.  அப்போ பிரச்சனையே இல்லை.  இங்க பாருங்கம்மா, உங்க பொண்ணு எடுத்திருக்கற மார்க்குக்கு நல்ல பெரிய ஸ்கூல்லயே சீட்  கிடைக்கும்.  நீங்க அப்படி  மாத்தணும்ன்னு நினைச்சா சொல்லுங்க.  உங்களுக்கு எந்த உதவிப் பண்ணவும் தயாரா இருக்கேன்”

“என்னங்கம்மா இது, நம்ம ஸ்கூல  விட நல்ல ஸ்கூல் எதுமா.  ஸ்கூல் எதுவா இருந்தாலும், அதேப் படிப்பைத்தானே எல்லா வாத்தியாரும் சொல்லித்தரப் போறாங்க.  அதும் இல்லாம, எங்க ஊருல இருந்து இந்த ஸ்கூலுக்கு வர்றதுக்கே ஒரு மணி நேரம் ஆவுது.  இன்னும் தொலவாப் போய் படிச்சு தேவி கஷ்டப்படணுமா மேடம்”

“நீங்க சொல்றதும் சரிதான்.  தேவிய  இங்கயே சேர்த்துடுங்க.  பத்தாவதுல ஸ்கூல் first வந்தப் பொண்ணை, +2-ல மாநிலத்துலையே முதலாவதா வர வச்சுடறோம்.  ஓகே இப்போ இண்டர்வல் டைம்.  நீங்க போய் மத்த டீச்சர்ஸ் எல்லாரையும் மீட் பண்ணிடுங்க.   Application எப்போ கொடுக்கணும், எப்போ சேர்க்கணும், எல்லா விவரமும் நீங்க ஆபீஸ் ரூம்ல கேட்டுக்கோங்க”, மறுபடியும் ஒருமுறை தேவியை வாழ்த்தி அனுப்பி வைத்தார் தலைமை ஆசிரியை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.