(Reading time: 16 - 31 minutes)

21. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி

ரவெல்லாம் உறங்காமல் விழித்திருந்தாள்  தீப்தி. நந்துவின் வார்த்தை தன்னை இவ்வளவு பாதிக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை .. கனிவு , பணிவு , நட்பு , கேலி, கிண்டல் , ஆத்மார்த்தமான நேசம் இதெல்லாம் அவள் வாழ்வில் அனுபவிக்காத ஒன்று தான் .. வசதியின் உயரம் எது என தெரிந்தவளுக்கு அன்பின் அணுவை கூட அறிந்திருக்க முடியவில்லை .. அதனால்தான் அன்பும் குறும்பும் நிறைந்த கவீன்  அவளது கண்களுக்கு பளிச்சென தெரிந்தான் .. அவனிடம் எப்போதும் குடிகொண்டிருக்கும் கலகலப்பு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது .. கேட்டால் கிடைத்துவிடும் வாழ்க்கையை வாழ்ந்ததாலோ என்னவோ அன்பையும் அதட்டி பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணி கொண்டாள்  அவள் .. நேற்றுவரை மற்றவரின் தூற்றுதலுக்கு வருத்தப்படும் அளவிற்கு பலவீனமானவள் அல்ல அவள் .. அவள்தான் யாருடைய வார்த்தைகளையும் மதிப்பதே இல்லையே .. ஆனால் நந்து ?  தீப்தியை பொருத்தவரை அவர்களில் அவள் மனதில் எப்போதும் வளம் வருபவர்கள் நான்கு பேர்தான் ..

அடாவடி அனு, ஸ்வீட்  கவீன் , எனிமி ஜெனி , அப்பாவி நந்து ... என்னதான் நந்து அனு  ஆருவுடன் சேர்ந்து தைரியமாய் இருந்தாலும்கூட அவளுக்குள் இருக்கும்  சிறுபிள்ளைத்தனமும் குழந்தை மனமும் வளராமல்தான் இருக்கிறது .. ( குழந்தை மனசு காதலிக்குமான்னு நீங்க கேக்குறது புரியுது ! அது நம்ம பிரபு அத்தானை கேட்டாதானே தெரியும் .. அச்சச்சோ , நம்ம அத்தான் இல்லைங்க ..நம்ம நந்துவின் அத்தான் தான் .. நந்து  நீ பாட்டுக்கு என்மேல கோபப்படதம்மா ..அறியாபிள்ளை  தெரியாமல் சொல்லிட்டேன் )

நந்துவிற்கு அவ்வளவு சீக்கிரம் பொய் உரைக்கவோ அல்லது முகத்திற்கு நேராய் கோபப்படவோ வராது என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தாள் தீப்தி .. பல நாட்கள் அனைவரின் முன்னிலையில் தீப்தி நடந்துகொள்ளும் விதத்தில் நந்துவிற்கு கோபம் வந்தாலும் கூட அதை நேரடியாய் காட்டாமல் இரண்டு நாட்களுக்கு ஒதுங்கியே இருப்பாள் .. மீண்டும் ஓரிரு வார்த்தைகள் இயல்பாய் பேசுவாள் .. அப்படி பட்டவளின் மனதில் கூட தன் மீது இவ்வளவு கோபம் இருக்கிறதே என்று எண்ணி பார்த்தவளுக்கு ஏதோ நெருடியது .. மெல்ல எழுந்து நந்துவின் அருகில் வந்தாள் .. சீரான மூச்சோடு, கனிந்த முகமாய் உறங்கிகொண்டிருந்தாள்  நந்து .. நிம்மதியான உறக்கம் கூட வரம்தானோ ? ஏதேதோ யோசித்தவள், விடிந்தும் விடியாத காலை பொழுதிலேயே வெளியே கிளம்பி விட்டாள் ..

ninaithale Inikkum

தே வேளையில், ஆருவை  எழுப்பி கொண்டிருந்தாள் அனு..

" ஹே , ஆரு  எழுந்திரு  டீ "

" ப்ச்ச்ச் ... இன்னைக்கு தான் காலேஜ் இல்லையே அனு  .. கொஞ்சம் தூங்க விடேன் "

" ஹே இன்னைக்கு சனிக்கிழமை .. கோவிலுக்கு போகணுமே மறந்துட்டியா ? சந்துரு அண்ணாவும் , நளினி அம்மாவும் வருவாங்க .. வா கெளம்பலாம் "

" பொய் சொல்லாத..கூட கதிரும் வராருன்னு தானே நீ சீக்கிரமா எழுந்த ? நீ தூக்கத்தை தியாகம் பண்ணுறதுக்கு ஒரு காரணம் இருக்கு .. நான் ஏன் பண்ணனும் .. போடி " என்று சிணுங்கினாள் ஆரு ..

" ஆமா , காரணமாய் இருந்தவனையும் புரிஞ்சுக்காம சண்டை போட வேண்டியது .. அப்பறம் நமக்குன்னு யாரும்மில்லைன்னு பீல் பண்ண வேண்டியது ... " என்று வாய்க்குள் முணுமுணுத்த அனு 

" இந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் இதே பொலப்பா போச்சு " என்றாள்  சத்தமாய் .. அதை மட்டும் காதில் வாங்கிக்கொண்ட  ஆரு  லேசாய் சிரித்தபடி

" பொண்ணுங்கன்னா , அப்போ நீ யாராம் ? அதுசரி நீ மனித இனத்துலேயே சேர்க்க முடியாத ஜென்மம் ஆச்சே .. கதிர் எப்படித்தான் உன்னை பார்த்து லவ் பன்னாரோ  தெரில " என்று சிரித்தாள் ..

" கொழுப்பு டீ .. நீ சீக்கிரம் எழுந்திரி .. நான் போயி நம்ம நந்திதா மேடத்தை எழுப்பிவிட்டு வரேன் " 

" அங்க உன் செல்ல ராட்சசியும் இருப்பா ..பரவாயில்லையா ? காலையிலேயே தீப்தியை பார்க்க இவ்வளோ ஆர்வமா ?" என்றாள்  ஆரு ..

" மங்குனி .. உன்னையெல்லாம் நம்பி நான் ப்ளான்  போட்டா நடுரோட்டில் தான் நிற்கணும் .. அவ எப்பவோ கெளம்பிட்டா " என்று அனு  கூறவும் தூக்கம் களைந்து திருதிருவென விழித்தாள்  ஆரு ..

" என்ன அனு  நிஜம்மாவா ?"

" ஹப்பாடி .. தூக்கம் போச்சா ?  இப்படியே இரு அவளையும் கூட்டிட்டு வந்தபிறகு உன்னை கவனிச்சுக்கிறேன் " என்றாள் .. அனுவின்  ஆலோசனையின்படி அன்று காலை தீப்தியிடம் பேசவேண்டியது ஆருவின் வேலை ..அதை மறந்ததும் இல்லாமல் ஆழ்ந்து தூங்கிவிட்டாள் .. " போச்சு , இவ ரிட்டர்ன் வந்து என்ன பண்ண போறாளோ தெரியலையே " என்று முனுமுனுத்தாள் ஆரு..

னது அறையில் நல்ல உறக்கத்தில் இருந்தாள்  நந்து .. ஏதோ கனவில் இருந்தாள்  போலும் ..இதழில் லேசாய் புன்னகை கீற்று .. முதலில் தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் ஊற்றிவிடலாம் என்றுதான் நினைத்தாள்  அனு .. ஆனால் இங்கு இவள் உறங்கிகொண்டிருந்த விதைத்ததை பார்த்ததும் வழக்கமாய் தோன்றும் வாலுத்தனம் எட்டி பார்த்தது .. (ம்ம்ம்கும்ம் ..அது எப்போ ஒளிஞ்சு இருந்தது இப்போ எட்டி பார்கறதுக்கு ? )

அன்று கவீனுக்காக ஜெனியின் தந்தையிடம் ஆண் குரலில் பேசிய பராக்கிரம சாலி அனு  .. இப்போது சந்துருவின் குரலில் பேச தயாரான படி , அருகில் இருந்த துப்பட்டாவினால் நந்துவின் கண்களை அவளுக்கே தெரியாமல் கட்டினாள் ..

" நந்து "

" ....."

" நந்து செல்லம் "

".... "

" நெண்டி "  என்று மிக மென்மையாய் அச்சு அசல் சந்துருவின் குரலில் அழைத்தாள்  அனு .. ஆழ்ந்த உறக்கத்தின்  விளைவால்

" போங்க அத்தான்.. எனக்கு தூக்கம் வருது " என்று முணுமுணுத்தாள்  நந்து ..

" சரி நீ தூங்கு ... உன் வார்டன் வந்ததும் நீதான் என்னை இங்க வர சொன்னன்னு சொல்லிடறேன்

" என்றதும் தான் தான் இருக்கும் இடம் நினைவில் வர சட்டென எழுந்தாள்  நந்து ..

" என்ன இது கண்ணு கட்டி இருக்கு ?"

" ஷ்ஷ்ஷ் அது சர்ப்ரைஸ் ..."

" ஐயோ நீங்க ஏன் இங்க வந்திங்க அத்தான் .. அனு  ஆருவுக்கு தெரிஞ்சா என்னாகும் " என்றவள் அணு பேசுவதற்கு முன்னரே அது சந்துரு இல்லை என புரிந்து கொண்டாள்  .. மேலும் அது யாராக இருக்கும் என்று சிந்திக்கும்போதே அனு  வந்து அகக்கண்ணில் நாட்டியம் ஆட "திருடி " என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்  நந்து ..

" ஆரு  கூட பரவாயில்லை .. ஆனா அனு  இருக்காளே " என்று இழுத்தாள்  நந்து ..

" அனுவா  ? அடிப்பாவி என்னை பத்தியே போட்டு கொடுக்குரியா ?" என்று மனதிற்குள் எண்ணியவளாய்

" ஏன் அனுவுக்கு என்ன ?" என்று கேட்டாள்  சந்துருவின் குரலில் ..

"  நான் கொஞ்சம் குரல் கொடுத்தா போதும் .. அனு  இப்போவே வந்து என்முன்னே நிற்பா தெரியுமா ? எனக்கு ஒண்ணுன்னா அவ துடிச்சு போயிருவா .. என்னதான் எங்களை காலாய்ச்சாலும் அவ அன்புக்கு ஈடே இல்லை " என்று கூறி அனுவையே  அசர வைத்தாள் ..

" என்ன இவ நம்ம தலையிலேயே மெட்ரோ ட்ரைன் ஓட்டுறாளே  " என்று யோசித்தாள்..அவள் மௌனத்திலேயே நந்துவிற்கு சிரிப்பு வந்துவிட

" இப்போ கூட , எங்க நான் கனவில் உங்க கூட டூயட் பாடிருவேனோன்னு பயந்து உங்களை மாதிரியே  பேசி என்னை ஏமாத்த பார்குறா தெரியுமா ?" என்றபடி கண்கட்டை திறந்தாள் நந்து ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.