(Reading time: 10 - 19 minutes)

ஹேய் தேவிப் பொண்ணு.  வா வா வா.  அம்மா, அப்பா எல்லாம் உன் மார்க் கேட்டு சந்தோஷமா ஆகிட்டாங்களா.  என்ன படிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டியா”, ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்றார் தேவியின் கணித ஆசிரியை.

“ஹ்ம்ம் அம்மாக்கு ஒரே சந்தோஷம் டீச்சர்.  நேத்து என்னை கடைக்கு கூட்டிட்டுப் போய் புதுத் துணி எல்லாம் வாங்கி கொடுத்து அசத்திட்டாங்க”, தேவி சொல்ல, மற்ற பாடப் பிரிவு ஆசிரியர்களும் வந்து தேவியை பாராட்டினார்கள். 

“மேடம் தேவி இத்தனை மார்க் எடுத்ததுக்கு உங்க எல்லாருக்கும்தான் நான் நன்றி சொல்லணும் மேடம்”, அஞ்சலை கண்கலங்க அனைவரையும் பார்த்து கை கூப்பினார்.

“என்னங்க நன்றி எல்லாம்.  இது எங்க கடமைதானே.  சரி தேவி, மேல என்ன படிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டியா?”

“மேடம் நான், வணிகத் துறையே எடுக்கலாம்ன்னு இருக்கேன்.  உங்களுக்கே எங்க  வீட்டு நிலைமைத் தெரியும்.  இதுன்னா மூணு வருஷம் முடிச்ச உடனே எதுனா சின்ன வேலைல சேர்ந்துட்டு அப்படியே மேல படிச்சுடுவேன்”

“தேவிக்கண்ணு நீ செலவுக்காக பார்க்காதடா.  அம்மா எப்பாடு பட்டாவது உன்னைய படிக்க வைக்கறேன்.  அம்மாக்காக நீ பிடிக்காத படிபெல்லாம் படிக்க வேணாம்”

“இல்லைம்மா, நான் இதுதான் படிக்கணும், அப்படின்னு  எதையுமே முடிவு பண்ணி வைக்கலை.  எந்தத் துறையா இருந்தாலும், சரின்னுதான் இருந்தேன்.  அதுனால பிடிகாமலாம் இல்லைமா”

“இங்க பாருங்கம்மா.  அவ எடுக்கப் போற துறைலயும் நல்ல பெரிய ஆளா வரலாம்.  இப்போலாம் ஒரு வீட்டுல நாலு பேரு இருந்தாங்கன்னா அதுல மூணு பேரு இன்ஜினியரா இருக்காங்க.  அதுனால போட்டி ரொம்ப அதிகமாப் போச்சு.  இப்போ அவ எடுக்கப் போற துறைல, மேல படிக்க நிறைய options இருக்கு.  நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா?”

“எனக்கு புரியாட்டி என்ன மேடம்.  நீங்க தேவிக்கிட்ட என்னது, எப்படி பண்ணனும் அப்படின்னு சொல்லிடுங்க.  அவ அதே மாதிரி படிக்கட்டும்.  எனக்கு அவ படிச்சு பெரிய ஆளா வரணும்.  அது மட்டும்தான்”

“கவலையேப் படாதீங்க.  தேவி என் பொண்ணு மாதிரி.  அவளுக்கு மேலப் படிக்க எல்லா உதவியும் நான் பன்றேன்”

“எங்களுக்கு உதவி பண்ணவே  கடவுள் உங்களை அனுப்பி வச்சா மாதிரி இருக்குது மேடம்.  நீங்க பண்ணப்போற இந்த உதவியை, நாங்க உயிர் உள்ள வரை மறக்க மாட்டோம்’

“என்னங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க.  ஒரு ஆசிரியரா இது என்னோட கடமை.  சரி தேவி, நீ ஆபீஸ் ரூம் போய் application வாங்கி fill up பண்ணிக் கொடுத்துடு.  புக்ஸ் எல்லாம் இந்த வருஷம் +2 முடிச்ச பொண்ணுங்க கிட்ட சொல்லி வாங்கி வச்சிருக்கேன்.  மத்த புக்ஸ், நோட் புக்ஸ் எல்லாம் ஸ்கூல் தொறந்தப்பறம் பார்த்துக்கலாம்”

“சரிங்க டீச்சர்.  அப்படியே பண்ணிடறேன்.  இப்போ நாங்க கிளம்பறோம் டீச்சர்”, கணித ஆசிரியரிடமும், மற்ற ஆசியர்களிடமும் சொல்லிக்கொண்டு அலுவக அறையை நோக்கிச் சென்றனர் தேவியும், அஞ்சலையும்.

தேவிமா, உங்க டீச்சருங்க எல்லாம் உன்னைய புகழ்ந்து பேசும்போது எனக்கு எத்தினி சந்தோஷமா இருக்குது தெரியுமா.  இதே மாதிரி அடுத்த அடுத்த வகுப்புலயும் நல்லபடியாப் படிச்சு நல்ல பேரு வாங்கணும் சரியா”

“கண்டிப்பாமா, நீ கவலையேப்படாத.  நான் நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்குவேன்”

“அது சரி உங்க டீச்சருங்க கூடலாம் நீ பேசும்போது வேற மாதிரி பேசற.  என்னாண்ட பேசும்போது வேற மாதிரி இருக்குது நீ பேசறது”

“ஹாஹாஹா அதுவாம்மா, ஏற்கனவே என்னைய நைனாவும், அண்ணனும் மொறைக்கும், இதுல நான் நம்மக் குப்பத்துல பேசறா மாதிரி பேசாம ஒழுங்கா பேசினேன்னு வைய்யி.  அம்புட்டுதான்.  அடிச்சே கொன்னுடும்.  அதுதான் வீட்டுல ஒரு மொழி, வெளில ஒரு மொழி”

“கொழுப்பெடுத்த கழுத.  நல்லாத்தான் பேசற.  சரி, ஆனா இனிமே அம்மாக்கூட   பேசும்போது மட்டும்  டீச்சருங்க கூட நீ  பேசறா மாதிரி பேசுடா.  கேக்கவே நல்லா இருக்குது.  உன்னோட சேர்ந்து அம்மாவும் ஒழுங்கா பேசுவேன்”

“சரிம்மா இனிமே நீயும், நானும் ஒழுங்கா பேசலாம் சரியா”,  பேசியபடியே அலுவலக அறையை அடைந்து விண்ணபப் படிவத்தை வாங்கினர்.

ஊரில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டியபடியே, விண்ணப்பப் படிவத்தை தேவி பூர்த்தி செய்து அவளின் தாயிடம் கையொப்பம் வாங்கி அங்கிருந்த அலுவலரிடம் கொடுத்தாள்.  ஆனால் அந்தோ பரிதாபம்.  அந்தத் தெய்வங்கள்தான் அவள் வேண்டும் நேரத்தில்  தூங்கிவிட்டனப் போலும். 

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.