(Reading time: 15 - 29 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 02 - வத்ஸலா

கோலத்தை முடித்துவிட்டு திருப்தியான புன்னகையுடன் நிமிர்ந்தாள் கோதை.

'கோதைம்மா.....' உள்ளிருந்து அவளது அப்பாவின் குரல்.

'இதோ வரேன்பா...' உள்ளே நுழைந்தாள் அவள்.

Katrinile varum geetham

உள்ளே வந்த மகளை பார்த்து வாஞ்சையுடன் புன்னகைத்தார் அப்பா. தனது இரண்டு மகள்களின் மீதும் உயிரையே வைத்திருக்கும் அப்பா அவர். எந்த சூழ்நிலையிலும் தாயில்லாத மகள்களின் முகம் வாடுவதை விரும்பாத தந்தை.

'மணி அஞ்சரை ஆயிடுத்து. பெருமாளுக்கு விளக்கேத்திடு மா. நம்மாத்து பெருமாளை சேவிச்சிட்டு நான் அவாத்துக்கு கிளம்பறேன்.' என்றார் அப்பா.

'யாராத்துக்குபா?' என்றபடியே பூஜை அறையை அடைந்தாள் கோதை.

'வாசுதேவன் மாமாவாத்துக்கு மா. பெருமாளுக்கு திருவாராதனை பண்ண வரச்சொல்லி இருக்கா'

'எந்த வாசுதேவன் மாமா?'

'அதான்மா. மாம்பலத்திலே இருக்காரே. ஒரு வாட்டி உன்னை அவாத்து கிராஹப்பிரவேசத்துக்கு கூட்டிண்டு போனேனே, நியாபகம் இல்லையா நோக்கு'

பூஜையறையில் மண்டியிட்டு விளக்கேற்றிக்கொண்டிருந்தவளின் மனதில் தென்றல் காற்றாய்  வருடிப்போயிற்று கோகுல கண்ணனின் ஞாபகம். அந்த நாளில் நிகழ்ந்த அந்த விளையாட்டின் நினைவில் அவள் இதழோரத்தில் சின்ன புன்னகை மிளிர்ந்தது.'

'விளக்கேதிட்டியாமா???.' அப்பா கேட்க,

'ம்...' அவள் சட்டென கலைந்து  நகர, பூஜையை துவக்கினார் அப்பா

'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு......'

பூஜையறை வாசலில் நின்று உள்ளே புகைப்படத்தில் பூமாலைக்கு நடுவில் சிரித்துக்கொண்டிருந்த கண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தாள் கோதை.

அரை மணி நேரம் கழித்து பூஜையை முடித்துவிட்டு எழுந்தார் அப்பா. இடுப்பில் கட்டியிருந்த துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டவருக்கு என்ன தோன்றியதோ? 'ஏம்மா, நீயும் என் கூட அவாத்துக்கு வரியா? என்றார்.

அழகாக விரிந்தன அவள் கண்கள் 'நானா?? எதுக்குப்பா??"

'இங்கே ஆத்திலே தனியா உட்கார்ந்துண்டு என்ன பண்ண போறே? எப்படியும் அக்கா ஆபீஸ்லேர்ந்து வர்ரதுக்கு ஒம்போது மணி  ஆகும். அவாத்திலே  கிருஷ்ண ஜெயந்தி ரொம்ப நன்னா பண்ணுவா. அக்கம் பக்கத்து குழந்தைகளெல்லாம் கிருஷ்ணர் வேஷம் போட்டுண்டு அவாத்துக்கு வரும். எல்லாம் பாட்டு பாடிண்டு டான்ஸ் ஆடிண்டு பார்க்க நன்னா இருக்கும். நோக்கும் பொழுது போகும். வா போயிட்டு வரலாம்.

அவள் முகத்தில் கொஞ்சமாக தயக்க ரேகைகள்.

'அதுவும் இந்த வாட்டி ரொம்ப தடபுடலா இருக்கும் அவா பையன் கோகுல் வெளிநாட்டிலேர்ந்து வந்திட்டான்னோல்யோ. அமர்களப்படுத்திடுவா பாரு.'

அவன் பெயர் கேட்டவுடன் மனதோரத்தில் ஏனென்றே தெரியாத ஒரு பரவசம். 'போய்விட்டு வந்தால் தான் என்ன?"

சில நிமிடங்களில் இளம் மஞ்சள் நிற புடவையும், கூந்தலில் மல்லிகை சரமுமாய் கிளம்பி விட்டிருந்தாள் கோதை.

கோகுலின் வீட்டு வாசலில் சென்று நின்றது இவர்கள் ஆட்டோ. ஆட்டோவை விட்டு இறங்கியவளுக்குள் இனம் புரியாத தவிப்பு. 'அவனுக்கு என்னை நினைவிருக்குமா?'

'ஆமாம். உன்னை நினைவில் வைத்துக்கொள்ள நீ என்ன பெரிய தேவதையா? மேதையா?' உள்ளத்தின் மறு புறத்திலிருந்து சட்டென பிறந்தது ஒரு கேள்வி.

அந்த வீட்டின் கேட்டை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள் அப்பாவும் மகளும். அவள் கண்கள் மெல்ல சுற்றி வந்தது. அவர்கள் வீட்டு தோட்டத்திலேயே இவளுடைய வீட்டை போல் மூன்று வீடுகள் கட்டலாம் போலிருந்தது.

அப்பா சொன்னது போலவே கிருஷ்ணர் வேஷம் போட்டுக்கொண்டு சில குழந்தைகள் தென் பட்டார்கள். விருந்தினர்கள், அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் இன்னும் நிறைய பேர் இங்கும் மங்கும் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.

மெல்ல அந்த வீட்டினுள்  அடி எடுத்து வைத்தாள் கோதை.

'மாமா வாங்கோ....' அவனுடைய அப்பா வாசுதேவனின் குரல் அவர்களை வரவேற்றது. வேஷ்டியும் இடுப்பில் கட்டப்பட்ட துண்டுமாய் கம்பீரமாக நின்றிருந்தார் அவர். இவளை பார்த்தவர் 'வாம்மா கோதை எப்படி இருக்கே' ?என்றார்.

சின்ன புன்னகையுடன் தலை அசைத்தவளுக்கு அந்த வீட்டை பார்த்து எழுந்த பிரமிப்பில் சுவாசம் அடைப்பட்டுக்கொண்டதை போன்றதொரு உணர்வு. மெல்ல நிமிர்ந்த அவள் கண்கள் மட்டும் இங்குமங்கும் கொஞ்சம் அலைப்பாயந்தன.

எல்லாம் ரெடியா ஆரம்பிச்சுடலாமா ? கேட்டபடியே அவளுடைய அப்பா பூஜையறையை நெருங்கினார்.

பூஜை அறையில் பளபளக்கும் வெள்ளி விக்கிரகமாய், மலர் மாலைகளுடன் சிரித்துக்கொண்டிருந்தான் அந்த கண்ணன். இன்னொமொரு மலர் மாலையால் அந்த கண்ணனை அலங்கரித்து விட்டு திரும்பினார் அவர். தேவகி மாமி. கோகுலின் அம்மா.

கோதையை பார்த்த நொடியில் ஒரு கணம்  இதயம் நின்று துடித்தது அவருக்கு, . 'இவள் எப்படி சொல்லிவைத்தார் போல் இங்கே வந்து நிற்கிறாள்.? பூஜையறையில் நின்றிருந்த கண்ணனை தொட்டு திரும்பியது அவர் பார்வை 'விளையாட்டை துவங்கி விட்டானா இந்த கண்ணன்?'

பூஜை அறையை விட்டு வெளியே வந்தவர் சின்ன விழி அசைவில் அவளை வரவேற்று விட்டு ஓரமாக சென்று நின்றுக்கொண்டார்.

'சுக்லாம் பரதரம் விஷ்ணும்...' துவக்கினார் அவள் தந்தை. எல்லாரும் மௌனமாகிவிட அவர் குரல் மட்டுமே வீட்டில் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

எல்லார் பார்வையும் பூஜையறையிலேயே இருக்க இவள் பார்வை மட்டும் இங்குமங்கும் இங்குமங்குமாய்... 'எங்கே அவன்?'

பல நிமிட தவிப்புக்கு பிறகு அவள் செவிகளை தொட்டது அவனது அப்பாவின் குரல் 'கோகுல் எங்கே?'

சடக்கென நிமிர்ந்தாள் கோதை.

'மாடியிலே இருக்கான். கம்ப்யூட்டர்லே ஏதோ பண்ணிண்டிருக்கான்' என்றார் அவன் அம்மா.

'பெருமாள் சேவிக்க வரச்சொல்லு அவனை.....'

'ம்....' பார்வை கோதையை உரசிச்செல்ல, மெல்ல நடந்து போய் இண்டர்காமில் அழைத்தார் அவனை. 'கீழே வாடா...'

வரப்போகிறானா அவன்? அவள் மனம் சிறுபிள்ளையாய் துள்ளியது.  'வேறெதுவும் வேண்டாம் எனக்கு. என்னை அவன் நினைவில் வைத்திருந்தால் போதும். நட்பாய், சின்னதாய் ஒரு புன்னகை போதும். செய்வானா? மனதின் ஓரத்தில் குழந்தைத்தனமாய் ஒரு தவிப்பு.

தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு தலையை குனிந்துக்கொண்டாள் கோதை. சில நொடிகளில் அவன் கீழிறங்கி வருவதை அவள் உள்ளுணர்வு உணர்த்தி விட்டிருந்தது.

பூஜை அறையின் வாசலில் வந்து நின்றான் அவன். அவள் எதிரே. அவளுக்கு நேர் எதிரே.

'நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோவில் காப்போனே...'  அப்பாவின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

சில நொடிகள் கழித்து  மெல்ல விழி நிமிர்த்தினாள் கோதை. அவளுக்கு எதிரே நின்றிருந்தான் அவன். வேஷ்டியும், சட்டையும், நெற்றியில் ஸ்ரீசூரணமுமாய், பூஜையறையில் இருந்த கண்ணனை பார்த்தபடியே நின்றிருந்தான்  கோகுல கண்ணன்.

அவள் பார்வை அவனை தொட்டு தொட்டு விலகியது.  சில நிமிடங்கள் கழிந்த பின்பும் இவள் பக்கம் திரும்பக்கூட இல்லை அவன். இவளை கவனித்ததாக கூட தெரியவில்லை. ஒரு வேளை என்னை அடையாளம் தெரியவில்லையோ????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.