(Reading time: 15 - 29 minutes)

தேதோ நினைவுகளில் சில நொடிகள் நீந்திய விக்கியின்  கண்களில்  தீவிரம்.' என்னை நிராகரித்தவளுக்கு இவன் தான் சரி!!!'.

இரவு நேரம் ஒன்பதை தாண்டிக்கொண்டிருக்க, தனது அறையில் படுத்துக்கிடந்தான்  சரவணன். அன்று அவனுடனே தங்கி விட்ட விக்கியின் வார்த்தைகள் அவனை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக்கொண்டிருந்தன.

'எங்க ஆபீஸ்லே வேதான்னு ஒரு பொண்ணுடா. செமையா இருப்பா.. நாளைக்கு அவளை உனக்கு அறிமுக படுத்தி வைக்கிறேன். அவளை பார்த்துட்டு அதுக்கப்புறம் முடிவு பண்ணு.'

சில நிமிடங்களில் கழித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக தனது கைப்பேசியை எடுத்து கோகுலை அழைத்தான் சரவணன்.

கோதையின் நினைவிலேயே மூழ்கி இருந்தவன் தன்னிலை பெற்றவனாக அழைப்பை ஏற்றான். 'சொல்லுடா...'

'ஒரு ஹெல்ப் டா. உன்கிட்டே எப்படி கேக்குறதுன்னு தெரியலை....'

'சொல்லுடா. என்ன வேணும்?

அது,...... உங்க வீட்டிலே இருக்கிற கார்லே ஒண்ணு எனக்கு தருவியாடா கொஞ்ச நாளைக்கு. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. கார் எடுத்துட்டு ஊருக்கு போயிட்டு அவங்களை இங்கே கூட்டிட்டு வந்திடலாம்ன்னு.... அதுதான். ப்ளீஸ்டா' தயக்கமே இல்லாமல் பொய் வெளியே வந்தது. சரவணனுக்கேகூட இது  கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.

'கார் தானேடா எடுத்துக்கோ. அதுக்கு ஏண்டா இப்படி தயங்கறே? நாளைக்கு வந்து எடுத்துக்கோ சரியா? 'அம்மாவுக்கு என்னடா ?"

'எப்பவும் வர ஆஸ்துமாதாண்டா. இப்போ ரொம்ப ஜாஸ்தியா போச்சு.'. 'டேய்... இன்னொரு விஷயம் நான் உங்க வீட்டுக்கு வந்தா உங்க  அப்பா ஏதாவது கேட்பாரு. நீயே உங்க அப்பாகிட்டே சொல்லிட்டு காரை கொண்டு வந்து தரியா டா?  என்றான் சரவணன்.

'ஏன்டா தேவை இல்லாம பயப்படறே? சரி விடு நானே கொண்டு வந்து தரேன்.'

றுநாள் காலையில், தனது காருடன் சரவணன் வீட்டை அடைந்தான் கோகுல். கார் சாவியை அவனிடம் கொடுத்தவன், தனது பர்சிலிருந்து ரூபாய் நோட்டுக்களை அள்ளி சரவணனின் கையில் திணித்தான்.

'டேய்... இதெல்லாம் வேண்டாம்டா.....

'வெச்சுக்கோடா. தேவைப்படும்.'

ஒரு நொடி சரவணின் மனசாட்சி அவனை லேசாக கீறியது 'கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி அள்ளிக்கொடுக்கிறானே இவனிடமா பொய் சொல்கிறேன்'?' அடுத்த நொடி விக்கி வேதாவை பற்றி சொன்ன வார்த்தைகள் அவனது மனசாட்சியை மொத்தமாய் அடக்கி விட்டிருந்தன.

மாலை ஐந்து மணி. 'கோகுலின் காரை சரவணன் செலுத்திக்கொண்டிருக்க அருகில் அமர்ந்திருந்தான் விக்கி.

'கார் யாரோடதுடா?' நேத்து போன்லே பேசினியே அந்த ஜி.கேவோடது தானே?' கேட்டுக்கொண்டான் விக்கி. முன்னால் ஒரு முறை கோகுலை இவனுக்கு அறிமுகப்படுத்தியிருந்தான் சரவணன்.

'எனக்கு கொஞ்சம் பயமா இருக்குடா.....' கலவரம் கலந்த குரலில் சொன்னான் சரவணன்.

'போடா  அறிவு கெட்டவனே....' 'அவனவன் என்னென்னமோ பண்றான் ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண இப்படி பயப்படறே. அந்த வேதாவை மடக்குறது ரொம்ப ஈஸிடா. அவ கிட்டே போய், ஆம்பளைங்க ரொம்ப மோசம், பொண்ணுங்களை அடக்கியே வைக்குறாங்க, பெண்களுக்கு சுதந்திரமே இல்லை அப்படி, இப்படின்னு பேசு போதும். அப்படியே விழுந்திடுவா. உன்னை அப்படியே நம்பிடுவா '.

சில நிமிடங்களில், தனது அலுவலகத்தில் கணினிக்குள் முகம் புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்த  வேதாவின் முன்னால் நின்றிருந்தனர் விக்கியும், சரவணனும்.

'ஹாய் வேதஸ்' இதழ்களில் புன்னகையை பொருத்திக்கொண்டு அழைத்தான் விக்கி.

நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னிடம் வந்து பேசும் விக்கியை யோசனையுடன் பார்த்தபடியே எழுந்தாள் வேதா. அவள் முகத்திலேயே சிக்கிக்கொண்டன சரவணனின் விழிகள்.

அவள் அணிந்திருந்த ஜீன்சும், டி-ஷர்ட்டும் அவளை வெகு நாகரீகமாக காட்ட முற்பட்டாலும், அவள் முகத்தில் நிறையவே அப்பாவித்தனம் குடிக்கொண்டிருப்பதை போன்றதொரு எண்ணம் பிறந்தது சரவணனுக்கு. 'இவளை ஏமாற்ற வேண்டுமா?'

'இப்படி இருக்கே வேதஸ்?' உன்கிட்டே பேசியே ரொம்ப நாளாச்சு. இவன் என்னோட க்ளோஸ் பிரென்ட்'. இவனை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன்'. சரவணனை பார்த்தபடியே சொன்னான் விக்கி

அவளையே விழி மூடாமல் பார்த்துக்கொண்டிருந்த சரவணனை, பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் வேதா.

'சார் பெரிய ஆளு தெரியுமா உனக்கு? ஜி. கே குரூப் ஆப் இன்ஸ்டிடுஷன்ஸ்' கேள்வி பட்டிருக்கியா அதோட ஏகபோக வாரிசு சாட்சாத் இவனேதான்'

அதிர்ந்து போய் திரும்பியவனை, கண்களால் அடக்கியபடியே சொன்னான் விக்கி ' இவங்க தான் 'வேதா தி கிரேட்'. வரும்போது நான் பேசிட்டே வந்தது இவங்களை பத்திதான். மேடம்க்கு ஹாய் சொல்லி வெச்சுக்கோ. பின்னாலே உனக்கு வசதியா இருக்கும்.'

பேச்சே எழவில்லை சரவணனுக்கு. 'டேய்.... ஹாய் சொல்லுடா...' பல்லைக்கடித்துக்கொண்டு விக்கி சொல்ல, சுதாரித்து, நிமிர்ந்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டு வேதாவின் பக்கம் திரும்பி அவளை நோக்கி கை நீட்டினான் சரவணன் ' ஐ யாம் கோகுல் கண்ணன்'

'ஓ! க்ளாட் டு மீட் யு மிஸ்டர் கோகுல்'  மலர்ந்த புன்னகையுடன் சரவணனை நோக்கி கை நீட்டினாள் வேதா.

அவன் கை குலுக்க, அவன் கையில் 'ஜி.கே' என்ற எழுத்துகளுடன் மின்னிக்கொண்டிருந்தது அந்த பிரேஸ்லெட். கோகுல் அவனிடம் கொடுத்த அந்த பிரேஸ்லெட்.

கீதம் தொடரும்.....

Episode # 01

Episode # 03

{kunena_discuss:890}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.