(Reading time: 27 - 54 minutes)

09. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

1990 ம் வருடம்

விழி தட்டாது இமை கொட்டாது வந்தவனை பிரமிப்புடன் பார்த்திருந்தாள் அவள். 

“எங்க செஷன் முடிஞ்சுட்டுது டாக்டர்….இங்க இன்னும் க்ளாஸ் போய்ட்டு இருக்கிறதைப் பார்த்ததும் வந்தேன்….”

Eppadi solven vennilaveஅவனது ஒவ்வொரு அசைவும் இவள் விழிகளுக்களுக்குள்…… சொல்லிக் கொண்டே அந்த ஆன்ட்ரூ பாடம் சொல்லும் மருத்துவர் அருகில் வந்து நின்று கொண்டான். அவன் நடை….அவன் நிற்கும் முறை... அவன் குரல்….. இவள் காயங்களை கண்களால் படித்தான்.

அவன் கை அவன் முகம் தொட்டுச் செல்லும் பாங்கு….அவன் விரலில் இருக்கும் AB என்ற மோதிரம்….இமைத் துடிப்பு…..யோசிக்கும் போது நெற்றி செல்லும் விதம்….

அவளுக்குள் ஏதோ ஒரு வெறுமை………………..

அவன் கண்களை, அதன் கருவிழிகளை பின்பற்றினாள்…….

“திரும்பவும் 2ன்ட் இயர்க்கே வரச் சொன்னாலும் ஆன்ட்ரூ சார் வந்துடுவார்…..பாவம் அவரைப் போய் தேர்ட் இயர்க்கு அனுப்பிட்டாங்க….நம்ம பாட்ச்னா அவர்க்கு அவ்ளளவு இஷ்டம்…” யாரோ சொல்வது கேட்கிறது. இவன் முகத்தில் இங்கு விரிய துடிக்கும் புன்னகை அடக்கப்படுகிறது.

அவன் உதடசைவு…..புன்னகைக்கும் விதம்………

“என்னாச்சு? ஆக்சிடெண்ட் கேஸ் ஸ்டடியா? பாவம் டாக்டர்….அவங்களுக்கும் கஷ்டமாதான இருக்கும்….டைம் வேற ஆகிட்டுது…” அந்த மருத்துவரை நோக்கி சொன்னவன் இவளை நோக்க அவன் புருவம் தூக்கும் முறை, முகம் திருப்பும் செயல்…..

“பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லைமா…உங்க கூட யார் வந்துருக்காங்க?” என்றபடி சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டான்.

வெறுமை ஆழ்ந்தது; அகன்றது; விரிந்தது………

“உங்கள பார்த்துக்க யார் வந்துருக்காங்க…..?”

அழுத்தமாய் அவன் பேசிய தொனி அவளை, அவனையும் தாண்டி அவன் கேள்வியை சிந்திக்க வைத்தது. வசீகரனிடம் சொல்லி இருந்தால் இதற்குள் விழுந்தடித்துக் கொண்டு வந்திருப்பான் தான் அவன். ஆனால் தகவல் சொல்லத்தான் வழியே இல்லையே……. பே என முழித்தாள் மலர்விழி. விபத்து அது தந்த  வலி, அதோடு இவனது எதிர்பாராத வரவு என உச்சகட்ட அதிர்ச்சி, குழப்பம் என எல்லாவற்றிலுமாய் தத்தளித்துக் கொண்டிருந்தவளின் எண்ண ஓட்டம் புரிதல் திறன் எதுவும் இயல்பாய் இல்லை.

“அ..து….வீட்டுக்கு இன்னும் சொல்லலை…”

“ஓ….தட்ஸ் பேட்..…போன் நம்பர் சொல்லுங்க நானே இன்ஃபார்ம் செய்துடுறேன்…”

வீட்டிற்கு அழைத்து என்ன ப்ரயோஜனம்? வசீகரன் அலுவலகத்திற்குத்தான் அழைக்க வேண்டும். இருந்த மன நிலையில் வசீகரனின் எண் ஞாபகம் வர மறுக்கிறது. அதை அவள் அவ்வளவாக பயன்படுத்தியது  இல்லையே…. அவசரமாக நினைவு படுத்திப் பார்த்தாள். இவள் முகம் பார்த்த ஆண்ட்ரூ அதை மாற்றிப் புரிந்து கொண்டான் போலும்.

“டென்ஷனாகாதீங்க….உங்க வீட்டுக்கு நான் கால் செய்யலை….எதாவது ஒரு கேர்ளை கால் செய்ய சொல்றேன்….”

ஆணோ பெண்ணோ அழைப்பது யாராய் இருந்தால் என்ன, விபத்து விஷயம் கேட்டதும் வேறு எதையும் ஆராயமல் விழுந்தடித்து வருவான் வசீகரன். ஆண் ஏன் அழைத்தான் என்றெல்லாம் ஆராய்வானாமா வசீகரன்? மறுப்பாய் இவள் எதுவும் சொல்லும் முன்னமே, அந்த மாணவர்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்த மருத்துவர் “ ஓகே டாக்‌டர்ஸ், டைம் அப்…சி யூ இன் நெக்‌ஃஸ்ட் செஷன்” என்றபடி கிளம்பிவிட்டார்.

மாணாக்கர் பலர் கலைந்து செல்ல தொடங்கினர். இன்னும் பலர் அங்கேயே அவர்களுக்குள் கலகலக்க தொடங்கினர். ஆன்ட்ரூவோ அங்கிருந்த மாணவியரில் ஒருத்தியைப் பார்த்து

“மிஸ். வாட்சன் நீங்க இவங்க சொல்ற நம்பர்க்கு கால் செய்து அவங்க பேரண்ட்ஸுக்கு இன்ஃபார்ம் செய்துறுங்க ப்ளீஸ்…” என்றான் .

“ஓகே அதி” தலையை ஆட்டுகிறாள் அவள்.

“இல்ல….பேரண்ட்ஸ் இல்ல…..என் ஹஸ்பண்ட்” அவசரமாக திருத்தினாள் மலர்விழி.

“பார்டா…” தன் கையை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு இப்பொழுது இவளை ஒரு பார்வை பார்த்தான் அந்த ஆன்ட்ரூவாகிய அதி.  விளையாட்டுத்தனமும் கேலியும் கலந்த விகல்ப்பம் இல்லாத பார்வை அது.

வெறுமை அது விரிந்து இவளுக்குள் இவளாய் இருந்த அனைத்தையும் அதிவேகமாய் வெற்றிடமாக்குகிறது……

அவள் மனதில் பார்த்த மாயக்காரன் இப்படிக் கிடையாதே…..அவன் பார்வையில் வார்த்தையால் வடிக்கமுடியாத வலி நிறைந்த காதலிருக்கும்…..குழந்தையாய் இவளை அவன் பார்த்தால் கூட அதில் தாய்மை இருக்கும்….இதென்ன வம்பிழுத்து சண்டை போடும் இவள் தங்கையின் பார்வை???

“கொடுத்து வச்சவங்க நீங்க…..உங்க வீட்ல இந்த வயசுல இது தேவையான்னு கேட்காம, கல்யாணம்லாம் செய்து வச்சுருக்காங்க பாருங்க உங்களையும் பெரிய மனுஷின்னு ஒத்துகிட்டு….”

வீட்ல கல்யாணம் செய்துவச்சா அதுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்குதா?

அடிநாக்கு வரை வெறுமை உணர்வு……

சிறு வயதில் கல்யாணமாகிவிட்ட ஒரு பெண்ணைக் கண்டு இரக்கப்படாமல் இதென்ன  பேச்சு…? அவளது மாயக்காரன் இப்படி விஷயங்களில் கேலி  பேச மாட்டானே……. உதடளவில் புன்னகைத்து வைத்தாள் மலர்விழி. உள்ளுக்குள் வெறுமை ஆறு தன் சுழழுக்குள் வலிமையாய் விகாரமாய் அவளை இழுத்து புதைக்கிறது. புதைபடாமல் இருக்க அவள் தவிக்கும் தவிப்பு பலனற்று போகிறது…

இவள் கேஃஸ் ஷீட்டை எடுத்துப் பார்த்தவன், “கொஞ்சம் வெய்ட் செய்ங்க உங்கள டிஸ் ஷார்ஜ் செய்ற ப்ரோசிஜரை ஃபாலோ அப்செய்துட்டு வர்றேன்…..அப்ப தான் நீங்க இம்மிடியட்டா கிளம்பலாம் “ சொல்லிவிட்டு எங்கோ சென்றான். நின்றிருந்த மாணவர்களுமே வெளியேற தொடங்கினர்.

வெறுமைக்குள் புதைந்து மூச்சுத் திணறுகிறது பெண்ணவளுக்கு….தவித்து துடித்து அந்த சுழலைவிட்டு வெளியேற துடிக்கும் ஒரு புயல் ப்ராவகம் அவளுள்…கைதூக்க கரை சேர்க்க யாராவது ஒரு தேவ தூதன் தேவை இக்கணம்… உண்டே இவளுக்கான தேவதூதன் ஒருவன் உண்டே…..

அன்னை தந்தையுடன் ப்ரச்சனை ஆனால் கூட, ஏன் இவளுடன் இவளுக்கே யுத்தம் என்றாலும் கூட இவளை கை தூக்கி கரை சேர்க்க அவன் வார்த்தைகள் உதவுமே…..உண்மை நண்பன்…. உள்ளூரில் நல்ல பள்ளி இல்லை என 6ஆம் வகுப்பிலிருந்து ஹாஃஸ்டலில் தங்கிப் படித்தவள் மலர் விழி.

உடல் நிலையோ மனமோ எது சரியில்லை எனினும் தானே தாங்கி சமாளித்து தான் அவளுக்குப் பழக்கம், ஆனால் இப்பொழுதெல்லாம் சிறு சோர்வென்றால் கூட வசீகரனை தேடுகிறது மனம்.

அப்படி அனைத்தையும் அவனிடம் பகிர்ந்து பழகிவிட்டாளே. அவனும் அவளது ஒவ்வொரு விஷயத்திலும் அவள் பார்க்காத புதிய கோணத்தில் விஷயங்களை பார்க்க கற்று கொடுத்து கணத்த இதயம் கவலையின்றி இருக்க எப்போதுமே வழி செய்திருக்கிறான். இன்றைய சூழ்நிலைக்கு அவனிருந்தால் நிச்சயம் உருப்படியாக எதாவது சொல்வான் அவன். அதி திரும்பி வரும் போது அனைத்து மாணவர்களும் கலைந்து சென்றிருந்தனர்.

அதே நேரம் அந்த மிஸ் வாட்சனும்  “உங்க ஹஸ்பண்ட சொல்லிட்டேன்ங்க…இப்போ வந்துடுவாங்க “ என்றபடி வந்தாள்.

எதோ ஒன்று முனுக்கென்றது. அந்த மிஃஸ் வாட்சன் சிரித்துக் கொண்டே சொன்னதா? அங்கு வசீகரன் எவ்ளவு பதற்றமாகி இருப்பான்? இவளுக்கு என்ன இளிப்பு வேண்டிக் கிடக்கிறது? நானே பேசியிருக்கலாம். அவன் பயப்படாமலாவது வருவான். காரை ட்ரைவ் செய்துட்டு வர்றப்ப டென்ஷனா வந்தால் எவ்ளவு ப்ராப்ளம்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.