(Reading time: 27 - 54 minutes)

ஷாலுவுக்கு சரித்ரன் கிளம்பிப் போனதும் முதலில் பிறந்தது நிம்மதியே…..வில்லனிடம் இருந்து தப்பிவிட்டது போன்ற ஒரு நினைப்பு….சித்தப்பா சித்தியும் எதுவும் கேட்கவுமில்லை கூறவுமில்லை. இரவு உணவிற்குப் பின் அவள் நன்றாக தூங்கியும் கூடவிட்டாள்.

ஆனால் மறுநாள் காலை மனதில் ஒரு இழப்புணர்வு தலைகாட்டியது. சனி இரவு வருவதற்குள் ஞாயிறு எப்பொழுது வரும் எப்பொழுது ஹாஸ்டல் கிளம்பலாம் என்றாக செய்தது அது. ஹாஃஸ்டல் சென்ற பின்பும் சுத்தி கூட்டம் கும்மி அடித்தாலும் கழுத்துவரை இவளை இறுக்கிப் பிடித்தது அது.

சில மாதமாய் நன்றாக ஊர் சுத்திப் பழகிவிட்டு இப்பொழுது ஒரு அறையில் அடைந்து கிடப்பதால் இப்படி ஆகிறது என தானே காரணம் கண்டு முடிந்தவரை தோழிகளுடன் வெளியே சென்று வர தொடங்கினாள் அவள். ஒன்றும் உதவவில்லை. உள்ளுக்குள் இருந்த தவிப்பு வளர்ந்து கொண்டே வந்ததேயன்றி தேய மறுத்தது. மிகவும் பயந்துவிட்டேனோ? அவனுடன் பழகி தவறு செய்துவிட்டேன் என உள்ளுக்குள் மறுகுகிறேனோ? அதானால் தான் இத்தகைய தவிப்போ என்று நினைத்தாள் ஷாலு.

இப்படி இருக்க இவள் வகுப்புத் தோழி சஞ்சனா இவளை பீச்சிற்கு அழைத்தாள். இவளை மடுமல்ல இவர்கள் தோழி குழுமத்தையே….”சர்ப்ரைஃஸ் பார்டி, நம்ம சர்கிள் மட்டும்தான்” என்று சொல்லி அவள் அழைக்க ஷாலுவும் கிளம்பிவிட்டாள்.

அங்கு சென்ற பின்புதான் சஞ்சனாவின் காதலை அவள் பெற்றோர் ஏற்று திருமணம் நிச்சயத்திருப்பது தான் அந்த சர்ப்ரைஃஸ் என என ஷாலு உட்பட அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. சஞ்சனா காதலிக்கும் விஷயமே ஷாலுவுக்கு இதுவரை தெரியாது. அப்படி இருந்திருந்தால் அவளுடன் இப்படி வெளி வரும் அளவு பழகி இருக்கக்கூட மாட்டாள்.

இந்த ஆறு தோழிகளுக்குமாக உணவு வகைகளை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தார் சஞ்சனாவின் அவர். ஷாலுவுக்கு உள்ளுக்குள் பயம். அப்பாவுக்கு தெரிந்தால்????? அவளால் அங்கு இயல்பாய் இருக்க முடியவில்லை. எந்த உணவையும் விரும்பாமல் முரட்டடியாய் அதை மறுக்கவும் முடியாமல் பெயருக்கு ஒரு தோசையை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

சாப்பாடு தொண்டையில் தட்டியது. அந்த அளவிற்கு ஒரு சாப்பாடு அவளை இன்று வரை கொடுமை செய்திருக்குமா என தெரியவில்லை. அப்பொழுதுதான் கவனித்தாள் தோசை அன்று சரித்ரன் வாங்கி இருந்த அதே ஹோட்டலிலிருந்து வந்திருந்தது. அதே பீச்….

அன்றைக்கு உலகின் தலை சிறந்த சாப்பாடாக தோன்றிய ஒன்று இன்று தொண்டையை இடிப்பது ஏன்? சரித்ரனுடன் பேசிக் கொண்டு சாப்பிட்ட ஞாபகம் வருகிறது. அவனுடன் ப்ரச்சனை வரும் அந்த நொடிக்கு முந்திய நொடி வரை இவள் எத்தனை இன்பத்தில் இருந்திருக்கிறாள். எல்லாம் நன்றாய் தோன்றியது அவனாலேதானா????

தடவிய கையில் எதுவும் தட்டுப்படவில்லை குனிந்து பார்த்தாள், காலியாகி இருந்தது உணவுத் தட்டு. சரித்ரனை நினைத்துக் கொண்டேசாப்பிட்டு முடித்திருக்கிறாள் அதுவரை தொண்டை தாண்ட மாட்டேன் என சத்யாகிரகம் செய்த ஒன்றை. விருப்பமே இல்லை…. போகவே கூடாது….. ஐயோ அது தப்பு,…. ஷாலு யூ ஆர் சின்னிங்……மனம் கூவிய எல்லா கூக்குரல்களையும் தாண்டி  சரித்ரனுடன் சென்ற இடங்களுக்கு சென்றுவரத் தொடங்கினாள் ஷாலு. தினமுமே….ஏதோ ஒருவித ஆறுதல் முதலில்.

அப்படி செல்லும் இடங்களில் அங்கு அவனோடு சென்ற போது நடந்தவை ஞாபக ஊர்வலம்…..மெல்ல மெல்ல ஆறுதல் நீங்கி அந்த இடங்கள் சோகமும் சுயத்தின் மீது வலியையும் வாரி இறைத்தன. அப்படி எங்கும் செல்லவில்லை எனினும் கூட அந்த வலி நிரந்தரமாகிப் போனது.

ஷாலு சரித்ரனின் இழப்பை பெரிதாக உணரத் தொடங்கினாள். விஃஸ்வரூம் எடுத்து அவளை வெட்டித் தின்றது அவன் இல்லை என்ற நிலை. ஆராயத் தொடங்கினாள் சரித்ரனை ஒரு நடுநிலை பார்வையோடு.  அவனோடு பேசிய பேச்சுகள், கருத்துப் பகிர்வுகள், அவன் எண்ண ஓட்டம். அவன் நடைமுறை வாழ்வு எதிலாவது தீமை கண்டிருக்கிறாளா அவள்? இவளை தீங்காய் பார்த்தான் தீமை செய்ய நினைத்தான் என்று எப்படி நினைத்தாள் இவள்?

அவன் தன் மேல் கொண்டது காதல் என்றால் அந்த காதலில் எங்கு இருக்கிறது தீமையும் பாவமும் பெரும்குற்றமும்? இவள் அருவருப்பாய் உணரும் படியாகவோ இல்லை நெளியும் படியாகவோ ஒரு வார்த்தை  அல்லது ஒரு பார்வை பார்த்திருப்பானா அவன்? எத்தனை தனிமைகள் அவனோடு கார் பயணமாய்? கோடு தாண்டி இருப்பானா அவன்?

பாதுகாவலனாய், பாசம் பகிர்பவனாய், பாவையை கண் பாவையாய் காண்பவனாய்….. எதற்கு வெறுத்தேன் அவனை? திருமணத்தைப் பற்றி தானே பேச தொடங்கினான். கல்யாணத்திற்கு பின்னும் படிக்கலாம் என்றானே…திருமணம் செய்து வாழநினைப்பது பாவமா?

ஒவ்வொரு நாளை என்ன ஒவ்வொரு மணி நேரத்தை தாண்டுவது கூட இமயமலையை இதயத்தால் சுமப்பது போல இயலாமையாகி, இழுத்துவிடும் மூச்சுக் காற்று கூட கிடைக்காமல் மாட்டிக் கொண்டது போல் உணரத் தொடங்கினாள் அவள். சர்வம் சரன் சந்ததம்.

ஒரு கட்டத்தில் தாங்கவே முடியாமல் அவன் எண்ணை அழைத்தேவிட்டாள் ஷாலு. அதன் பொருள் என்ன என்பது அவளுக்கு தெரியாமலில்லை. அப்பா  கொன்றே போட்டுவிடுவார்தான்…அப்படி விஷயம் தெரியும் போது கொன்று போட, இன்று இவள் உயிருடன்  நிற்க வேண்டுமே…அதற்கே அவன் தேவை என்றான பின்பு…?

இதயம் துடிப்பு என்ற பெயரில் வெடித்துக் கொண்டு இருக்க இவள் சரித்ரன் எண்களை அழுத்தியேவிட்டாள். ஆனால்………………. எண் ஸ்விட்ச்ட் ஆஃப்… இந்த நேரத்தில் என்ன? ஆனால் அந்த நேரத்தில் மட்டுமல்ல அதன்பின் அவள் அழைத்த எல்லா நேரத்திலுமே அப்படித்தான். சரித்ரன் எண்ணை மாற்றிவிட்டானா? நிரந்தரமாக அவனை இனி இவள் பார்க்கவோ பேசவோ முடியாதா? அவனை இழந்தேவிட்டாளா ஷாலு??? தாங்கமுடியவில்லை ஷாலுவால். மனவலியில் துடித்தவள் துணிந்து சித்தியிடம் போய் கேட்டேவிட்டாள்.

“சரித்ரன் எங்க சித்தி…? அவங்க நம்பர் ஸ்விட்ச்ட் ஆஃப்னு வருது….”

சித்தி அவளை ஒரு விதமாய் பார்த்தார்.

“அவன் அன்னைக்கு உன்னைவிட்டுட்டு பாம்பே போனவன் தான், இன்னும் வரலை…..”

1990 ஆம் ஆண்டு

காலையில்….. காலை தானா அது? மெல்ல கண்விழிக்கும்போதே மலர்விழி

கண்ணில் பட்டது பக்கவாட்டில் வைத்து படுத்திருந்த அவள் கையும் அதில் இரண்டு இடங்களில் தோண்டப்பட்டிருந்த சதைப் பள்ளங்களும் தான். திறந்திருக்க வேண்டுமென கட்டிடாமல் விட்டிருந்தனர் மருத்துவர். அதில் மருந்திட்டுக் கொண்டிருந்தான் வசீகரன்.

இடித்துவிடக் கூடாதென்று மிக கவனமாக அந்த வெண்பொடி டப்பாவை மெல்ல அசைவாட்டிக் கொண்டிருந்தான் அவள் புண் மீது. மயிலிறகின் வருடலாய் சுக பரவல்… காயத்தை கூட சுகம் சேர்க்க பயன்படுத்த முடியுமா?

அவன் முகத்தைப் பார்த்தாள் முழு கவனமும் அவன் செயலின் மீதே…. காயத்தைப் பார்த்தாள்…சற்று பெரிதுதான் ஆனாலும் ஆறிவிடும்…..அதுவும் இப்படி கவனித்துக் கொண்டால் ஆறாமல் போவதெப்படியாம்?

அவள் மனமும் கூட இப்படித்தான் காதல் என்ற இல்லாத ஒன்றினால் காயம்பட்டிருக்கிறது. சுயத்தில் சில இழப்புகள் கண்டிருக்கிறது…..தோல்வி உணர்வும், தன் மீதே வரும் நோவும், குற்றமனப்பான்மையும், இலக்கற்று தோன்றும் எதிர்காலமும் கொல்கிறதுதான் அவளை. ஆனால் இந்த மயிலிறகுகாரன் அதில் கூட சுகம் சேர்த்து காயமாற்றுவானே…. அவனிடம் இவள் குழப்பம் குறித்து பேச வேண்டும்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.