(Reading time: 16 - 31 minutes)

13. காதல் உறவே - தேவி

ராம் “மிது, இதையெல்லாம் நான் சொன்னது என்னை உனக்கு புரிய வைக்கத்தான். நான் செய்த தவறுக்கு உன்னால் எப்பொழுது மன்னிக்க முடிகிறதோ அதுவரை நான் காத்திருப்பேன்.“

சற்று நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த ராம் திரும்பிய போது மைதிலியின் கண்களில் அருவியைக் கண்டவன் சட்டென அருகில் வந்து அவளைத் தன் நெஞ்சோடு அணைத்தான்.

மைதிலி சில நிமிடங்கள் இந்த 4 வருடங்காக பட்ட வேதனையைக் கண்ணீரால் கரைத்தாள். ராமின் கண்களும் கலங்கியது. ராமின் கண்ணீர் மைதிலியின் கன்னத்தில் தெறிக்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், அவன் கண்ணீரை துடைத்தாள்.

Kathal urave

ராம் அவளிடம் “மைதிலி என் முட்டாள்தனமான பேச்சிற்காகவும், அதனால் உனக்கு ஏற்பட்ட வேதனைகளுக்காவும் என்னை மன்னித்து விடு. உன்னைப் புண்படுத்தும்படி இனிமேல் நடக்க மாட்டேன். இது என்மேல் சத்தியம்.” என்று கூறினான்.

மைதிலி அவன் வாயைப் பொத்தி “ உங்களிடம் ஸ்ருதியைப் பற்றிப் பேசியபோது உங்கள் போன் பேச்சை மட்டும் வைத்துக் கேட்கவில்லை. ஏற்கனவே நம் திருமணம் முடிந்த புதிதில் அத்தையும், சுபத்ரா சித்தியும் பேசியதை கேட்க நேர்ந்தது. அதே போல் நம் இருவரின் பிரச்சினை பெரிதான சமயமும் அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்டான். அவர்களுக்கு தெரிந்திருக்கிறதே. ஆனால் நமக்கு யார் என்று கூட தெரியவில்லையே என்ற எண்ணத்தில்தான் கேட்டேன். அது தவறு போல் நீங்கள் பேசியதில் நான் உங்களைச் சற்று அதிகமாக பேசி விட்டேன்.

அதே போல் நீங்கள் நினைத்து போல் நான் மீண்டும் குழந்தைக்காகவோ கடமைக்காகவோ வரவில்லை. உங்கள் மேல் கொண்ட காதலால் மட்டுமே வந்தேன். எனக்கு நீங்கள் என்னைத் தவிர யாரையும் காதலிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையிருந்தது. ஆனால் உறவுகளுக்கு அன்பும் பாசமும் காட்டத் தெரிந்த நீங்கள், மனைவி என்று என்னிடம் கடமையை மடடுமே காட்டுகிறீர்களோ என்று எண்ணினேன். அதனால்தான் உங்களைப் பிரிந்தேன்.

உங்கள் மேல் எனக்கு ஏற்பட்டது கோபமும் வருத்தமும் தானே தவிர வெறுப்பல்ல. பார்த்தவுடன் என் மனதில் காதலை ஏற்படுத்திய உங்களை என்னால் வெறுக்கவும் முடியாது. ஆனால் நீங்கள் ஏன் என்னிடம் ஸ்ருதியைப் பற்றிக் கேட்கும் போது மறைப்பது போல் பேசினீர்கள்.?” என்று கேட்டாள்.

“உனக்கு ஏற்கனவே அவளைப் பற்றித் தெரியும் என்று எண்ணவில்லை. நீ என்னிடம் கேட்டபோது வெறும் போனில் பேசியதைக் கேட்டு என்னைச் சந்தேகப்படுகிறாய் என்று எண்ணிவிட்டேன். தங்கை முறை உறவிலுள்ளவளை இணைத்துப் பேசிவிட்டாய் என்று கோபம் கொண்டேன். அது உனக்குத் தெரியாது என்பது கூட எனக்குத் தோன்ற வில்லை.

மேலும் ஸ்ருதி யார் என அம்மாவிற்கும், அத்தைக்கும் மட்டுமே தெரியும் வேறு யாரிடமும் சொன்னதில்லை. அதுவரை சந்தோஷிற்கு அவள் மேல் எந்த அபிப்ராயமும் இல்லை. அவர்கள் திருமணம் நடக்குமா என்பது தெரியாமல் சந்தோஷை சலனப்படுத்த விரும்பவிலை. அது மட்டுமில்லாமல் இந்த விஷயம் தெரிந்தால் நீ அத்தையைப் பற்றிக் குறைவாக எண்ணுவாயோ என்று எண்ணி உன்னிடம் சொல்லத் தயங்கினேன். ஆனால் உன்னைப் பிரிந்த பிறகு உன்னிடம் எதையும் மறைப்பது தவறு என்று புரிந்து கொண்டேன்.” என்று முடித்தான்.

“ஸ்ருதியிடம் என்ன கோபம் உங்களுக்கு?”

“அவளிடம் கோபமில்லை மிது. நானானால் என் தாயைக் குடும்பத்தோடுச் சேர்த்து வைக்க முயல்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் அத்தை உங்கள் உறவுகளோடு இருந்தால் மடடும் போதும் என்று எண்ணுகிறீர்களே. நீங்கள் முயற்சி செய்தால் இரண்டு குடும்பமும் உறவாகி விடும் என்று என்னை நச்சரித்தாள். அந்த எரிச்சல்தான்.”

இருவரும் சற்று நேரம் மௌனமாகினர்;.

மிது “இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்” என்றாள். இதைக் கேட்ட ராமிற்கு ஏமாற்றம் ஏற்பட்டது. பிறகு ஒரு பெருமூச்சுடன் “சரி. உனக்கு வேண்டும் அவகாசம் எடுத்துக் கொள். ஆனால் எதுவாயிருந்தாலும் நீ என் உயிர். உன்னை இனிமேல் எக்காரணம் கொண்டும் பிரிய மாட்டேன் மிது. இப்போது படுத்துக் கொள்” என்று கூற, இருவரும் படுத்தனர்.

மைதிலியின் மனம் ராம் கூறியவற்றையே அசை போட்டது. இப்பொழுது ராமிடம் அவளுக்கு கோபம் இல்லை. ஆனால் அவன் குடும்பத்தினரிடம் வருத்தம் ஏற்பட்டது. ராம் சொல்லியிருந்தாலும் அவர்கள் அவனுக்கு எடுத்துக் கூறியோ அல்லது அவளை சமாதானமோ செய்து இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இதை அவர்களிடம் கேட்க அவளுக்கு மனம் வரவில்லை. அவர்களைக் குறை கூறியது போல் ஆகி விடுமோ என்று யோசித்தாள். யோசனையுடனேயே கண்ணயர்ந்தாள்.

இன்னும் இரண்டு நாளில் எல்லோரும் சுற்றுலா செல்லப் போவதால் பேக்கிங்கில் இருந்தனர். ராம், அவன் அப்பா இருவரும் அன்றைக்கு அலுவலகம் சென்று வேலைகளை முடித்தனர். அன்று மதியம் சாப்பிட்ட பிறகு மாடிக்குச் செல்ல முயன்ற மைதிலியை தாத்தா அவர் அறைக்கு அழைத்தார்.

அங்கே பாட்டியும், அத்தையும் வந்தனர். தாத்தா “மைதிலி, உன்னிடம் சற்றுப் பேசத்தான் அழைத்தேன். ராமிற்கும் உனக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளை பேசினீர்களா?” என்றார். மைதிலி மௌனமாக ஆமென தலையசைத்தாள்.

ஒரு பெருமூச்சுடன் “உனக்கு பெரியவர்கள் நாங்கள் யாரும் தலையிடாதது வருத்தமாக இருக்கும். நாங்கள் சபரியின் கல்யாணத்தின்போது கண்டுபிடித்து கேட்டபோது கௌசல்யா “எனக்கு என்ன பிரச்சினை என்று தெரியாது மாமா. ஆனால் திருமணம் முடிந்தவுடன் ராம் பேசி சமாதானப் படுத்துகிறேன் என்று சொல்லியிருக்கிறான்” என்றாள். அப்படியென்றால் சரி என்று விட்டோம். கணவன் மனைவி பிரச்சினையில் நாம் தலையிட வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தோம். ஆனால் நீ வீட்டை விட்டுச் சென்று விட்டாய் என்ற பிறகுதான் எங்களுக்குப் பிரச்சினை பெரிது எனப் புரிந்தது.

இந்த விஷயத்தைத் தவிர கௌசல்யாவும் ராமும் நாங்கள் கண்டிக்குமாறு என்றுமே நடந்ததில்லை. நாங்கள் அவர்கள் இருவரையும் கண்டித்தோம். அப்பொழுதும் ராம் எங்களிடம் எதுவும் கூறவில்லை.

உன்னை அழைத்து வந்த பிறகு தான் அவன் விஷயத்தைக் கூறினேன். உன்னை ராம் என்று திருமணம் செய்து கொண்டானோ அன்றிலிருந்து நீயும் எங்கள் குடும்பத்தில் ஒருத்திதானே. இது புரியாமல் அவன் ஏதோதோ பேசி விட்டான். நான் அதைச் சொல்லும் போது அவனும் அதை ஏற்கனவே உணர்ந்து கொண்டதாகக் கூறினான்.

நீ கௌசல்யாவிடமே ஸ்ருதியைப் பற்றிக் கேட்டிருக்கலாம். உனக்கு அதற்கான முழு உரிமையும் உண்டு. இனிமேல் இந்தக் குடும்பத்தைப் பற்றிய எந்த விஷயத்தையும் நீ எங்கள் யாரிடமும் கேட்கலாம்.

உங்கள் பிரிவை நாங்கள் தடுக்காமல் விட்டதற்கு எங்களை மன்னித்து விடும்மா” என்று முடித்தார்.

அவர் அவ்வாறு கூறியதும் பதறிய மைதிலி “மன்னிப்பெல்லாம் எதற்கு கேட்கிறீர்கள் தாத்தா நீங்கள் யாரும் கேட்காததினால் உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ என்ற வருத்தம்தான் இருந்தது. மற்றபடி வேறு எதுவும் நான் எண்ணவில்லை தாத்தா. இன்று வரை யாரிடமும் எந்த பேச்சும் வாங்கியிராத அத்தைக்கு என்னால் வாங்கும்படி ஏற்பட்டு விட்டது. அதற்கு நீங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும். அத்தை, பாட்டி ப்ளீஸ் என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள்.

அவளை அணைத்த பாட்டியும், கௌசல்யாவும் “ அதெல்லாம் எதுவும் வேண்டாம் மைதிலி. நீ ராமுடன் சந்தோஷமாக வாழந்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நீயும் ராமும் இந்த பத்து நாள் எங்காவது சென்று வாருங்கள். நாங்கள் ஷ்யாமை பார்த்துக் கொள்கிறோம்”. மைதிலியும் சரி என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.