(Reading time: 13 - 25 minutes)

மூங்கில் குழலானதே – 04 - புவனேஸ்வரி

னம் .. எத்தனை விந்தையானது ? நமது ஒரு கையளவு பெரிதுதான் இதயமாம் .. ஆனால் அச்சிறு இதயத்தினும் எத்தனை சுமைகள் ? எத்தனை ரகசியங்கள் ? எத்தனை மகிழ்ச்சி ? எத்தனை அதிர்ச்சி ? அத்தனையையும் மறைத்துபுன்னகைப்பவன் தான் தைரியசாலியா  ? துயரங்களை மறைக்காமல் கண்ணாடியின் பிரதிபலிப்பாய்  இதயத்தை பிரதிபளிப்பவனும், கோழையா ?

எனில் கண்ணீரின் மகத்துவம் என்ன ? அழ வேண்டிய நேரத்தில் அழாமல் இருந்தால் கல்மனம் என்கிறோம் . துயரப்ப்படும்போதேல்லாம் அழுதால் கோழைத்தனம் என்கிறோம் .. வாய்விட்டு அழுதால் பெருந்துயரம் என்கிறோம்.. வாயைமூடி அழுதால் உணர்வுகளை கையாள தெரிந்த அறிவின் முதிர்ச்சி என்கிறோம் ?

உண்மையில் கண்ணீருக்கும் அறிவிற்கும் என்ன பந்தம் ? கண்ணீர் உடல் சம்பந்தபட்ட செயல் அல்லவா ? எனில், கண்ணீருக்கும் உணர்வுகளுக்கும் என்ன பந்தம் ? பொங்கி வரும் கண்ணீரை மறைக்கும்போது கழுத்தின் சங்கில் ஒரு  அழுத்தம் பிறக்கும் .. அதை உணர்ந்தது உண்டா ? அதை தசைகளின் இறுக்கம் என்பதா ? அல்லது உணர்வுகள் போராட்டம் என்பதா ? சிந்திக்கிறேன் சகிதீபன் . 

Moongil kuzhalanathe

" ஆனால் அன்பே .. ஆனால் அன்பே

அவளுக்கு கொடுத்த இதயத்திலே

உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன்

ஆனால் அன்பே ஆனால் அன்பே

அவள் விட்டு பறந்த  உலகத்திலே

உன்னுடன் பறக்க முயலுகிறேன்  "

மீண்டும் அதே பாடல் ! அடிக்கடி அபிநந்தனை  மூச்சு திணற வைக்கும் பாடல். இந்த பாடல் கேட்டால் மட்டும் அவன் இரும்பு மனதில் கள்ளச்சாவி கொண்டு நுழைந்து கண் சிமிட்டுவாள் நந்திதா..

என் வானிலே ஓர் முகிலாய் நீ தோன்றினாய்

மெதுவாக நீ வானமாய் விரிந்தாயடி என் நெஞ்சிலே

ஆம் .. சட்டென அவனுக்கு அவர்களது திருமணநாள் நியாபகத்திற்கு வந்தது .. நந்திதா , தனது சகோதரனின் பள்ளி தோழி என அவனுக்கு தெரியும் . அவன் கண்களுக்கு சகி எப்படி சிறுவனாக தெரிந்தானோ , அப்படித்தான்  அவளும் தெரிந்தாள்  .. சிறு பெண்ணாய் அவன் கண்முன் தோன்றியவள் இந்த ஒரு வருடத்தில் அவன் விழிகள் விரிய வைக்கும் அளவிற்கு  செயலில் பெரியவளாய் இருந்தாள் .. இதோ இன்று அவன் மழலைக்கு தாயக போகிறாள் .. முகிலாய் மருண்ட விழிகளுடன் வந்தவள் இன்று அவன் வாழ்வின் வானம் ஆகி விட்டாள்  ! ஆனால் இதை ஏற்கிறதா அவன் மனம் ?

என் பூமியில் ஓர் செடியென பூ நீட்டினாய் 

மெதுவாக நீ காடென படர்ந்தாயடி என் நெஞ்சிலே

" பூ நீட்டினாய் " என்ற வரிகளை கேட்டதுமே அவன் முகத்தில் தன்னையும் மீறி புன்னகை அரும்பியது .. அவர்கள் வீட்டு தோட்டத்தில் தினம் ஒரு பூவை பறித்து கொண்டு வந்து அவனிடம் நீட்டுவது நந்திதாவின் வழக்கம் .. அப்படித்தான் அவர்கள் திருமணம் நடந்து முடிந்த மறுநாள் , மஞ்சள் நிற புடவை அணிந்திருன்தவள் அதே நிற ரோஜாவை கொண்டு வந்து  அவசரமாய் ஓடிய பலனாய்  அவனை மோதி நின்றாள்  நந்திதா ..

" பார்த்து வர மாட்டியா நீ ?"

" ஐயோ மன்னிச்சிருங்க உங்களை பார்க்கத்தான் வந்தேன் "

" என்ன விஷயம் "

" இந்த , இந்த பூவை கொடுக்கத்தான் " என்று மூச்சு வாங்கி கொண்டே கூறினாள்  அவள் ..

" இது எதுக்கு , என் காதில் வைக்கிறதுக்கா ? அதான் மொத்த குடும்பமும் சேர்த்து வெச்சுட்டாங்களே  அது போதாதா ?" என்றான் அவன் எரிச்சலாய் .. அவன் கோபத்தை கூட மனதிற்குள் ரசித்தபடி

" இல்லைங்க தோட்டத்தை சுற்றி பார்த்தேனா , இந்த பூ ரொம்ப அழகா இருந்துச்சு .. அதுதான் என்கிட்ட சொன்னிச்சு , என் அன்பை உங்ககிட்ட வெளிப்படுத்தனும்னு ..அதான் கொண்டு வந்தேன் " என்றாள்  விழி விரிய !

" இது பாரு , உனக்கு கதை , கவிதை எழுதனும்னு ஆசையா இருந்ததுன்னா புக் ல எழுது .. அதை விட்டுட்டு என்கிட்ட  இப்படி எல்லாம் பேசாதே .. இப்போ வழிவிடு நான் ஆபீஸ் போகணும் " என்றான் .. அவளோ அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு

" அப்போ இந்த பூ ?" என்று புருவம் உயர்த்தி கேட்டாள்  ..

" ஹான் ..உன் காதில் வெச்சுக்க "

" சரிங்க " என்றவள் தனது அடர்ந்த கூந்தலின் ஓரமாய் வைத்து கொண்டாள்  .. மிகவும் அழகாய் அவள் கூந்தலில் குடியிருந்து கொண்டது அந்த ரோஜா .. அன்று அவனுக்கு எரிச்சலாய் இருந்தாலும் இன்று அதை நினைத்து பார்க்கும்போது அவனால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை .. ஆரம்பத்தில் விக்ரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் போல , தினமும் பூவுடன் நிற்பவள் இப்போதெல்லாம் பூச்சூடி கொள்வதும் இல்லை , அவனை சீண்டுவதும் இல்லை .. அவளை அதிகமாய் ஒதுக்கி வைக்கிறேனோ ? என்று அவனுக்கே தோன்றியது .. !

உன்னாலே விழியோடு சிரிக்கின்றேன் மீண்டும் இங்கு

உன்னாலே என்னில் மீண்டும் பிறந்தேன் பெண்ணே

இருளோடு நேற்றை நான் தேடினேன்

எதிர்கால தீபம் காட்டினாய்

உண்மைதான் .. இருளிலே இருந்தவன் அவன் . இப்போதும் இருளில் தான் இருக்கிறான் .. வெளிச்சத்தை காண விருப்பம் இன்றி இருக்கிறான் . ஆனால் நந்திதா தீபமாய் அவனையும் மீறி அவனுக்குள் ஒளி  வீசி கொண்டிருந்தாள். எத்தனையோ நாட்கள் பாதி உறக்கத்தில் இருந்து விழிப்பவன், அவள் குழந்தை முகம் பார்த்து மனம் இதமாகிட , நிம்மதியாய் உறங்கி இருக்கிறான் .. அவள் மீது அவன் கொண்டுள்ள உணர்வுகள் அவளுக்கே தெரியாத பொக்கிஷம் .

அவள் அவனுக்கு வழங்கியதேல்லாம் அன்பும் அரவணைப்பும் தான் .. ஆனால் பதிலுக்கு அவன் என்ன தந்தான் ? கண்ணீரும் விரக்தியும் தானே  ? அதுவும் இன்று , அவள் மனதில் எவ்வளவு கணம் இருந்திருந்தால் குழந்தை வேண்டாமென முடிவெடுத்திருப்பாள்  அவள் ?  என்று அவனே மருகினான் .. அதற்கும் அவன் உள்மனமே கேள்வியும் கேட்டது

" அவளும் நீயும் மனதால் இணைந்து இசைந்து உருவாகிய குழந்தையா இது ?" என்று அவன் மனம் ஈட்டியாய் கேள்வி எழுப்ப, அந்த நாளை எண்ணி பார்த்தான் அபி ..அவனை அவனே முழுதாய் வெறுத்தது அன்று தான் .. அவன் ஆண் என்பதற்கு தலை குனிந்ததும் அன்றுதான் ..!

அன்று , ஏற்கனவே ஒரு கசப்பான நிகழ்வின் ஞாபகத்தோடு வீட்டில் இருந்தான் அபி. கணவனின் மனதில் இருப்பதை புரிந்து கொள்ளாமல் எப்போதும் போல உற்சாகமாய் இருந்தாள்  நந்திதா .. அப்படித்தான் அன்று குழந்தையை பற்றி பேச்செடுத்தாள் .. அன்றவன் இருந்த மனநிலையில் என்ன நடக்கிறது என்று அறியும் முன்னவே அவளை ஆக்ரோஷமாய்  அடைந்திருந்தான் அபிநந்தன் .. " குழந்தை தானே வேணும் உனக்கு ? இபோ சந்தோஷமா ?" என்று அவன் கர்ஜித்தது இன்னமும் அவன் செவிகளில் எதிரொலித்தது ..

கூறிய அவனுக்கே , மனம் வேகிறது என்றால் அதை அனுபவித்தவள் எப்படி தவித்திருப்பாள் ? அன்றோடு தான்  அவனிடம்  கலகலப்பாய் பேசுவதை குறைத்து விட்டிருந்தாள்  நந்திதா .. " கணவன் தானே ?" என்று அவளால் அதை எளிதாய் எடுத்து கொள்ள முடியவில்லை .. ஏற்கனவே இறுகிய உணர்வுகளோடு இருப்பவன் அன்றைய  நாளுக்கு பிறகு குற்ற உணர்விலேயே  விலகி போக ஆரம்பித்தான் .. ஆனால் இன்று , அவள் அந்த நற்செய்தியை கூறியவுடன் அவளை தட்டாமலையாய் சுற்றி இருக்க வேண்டாமா ? கண்ணீருடன் அவளிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டாமா ? ஆனால் ஏன் அதற்குள் அவளை கை நீட்டி அறைந்தேன் ? அப்படி என்றால் என்னையும் மீறி அவளையும் குழந்தையையும் நான் நேசிக்கிறேன் என்று தானே  அர்த்தம் ? அதனால் தானே கை நீட்டினேன் ? அவனே அவனுக்குள் வாதாடினான் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.