மனதில் இருப்பதை கூறாமல் அவளே புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதில் எவ்வித நியாயமுண்டு ? என்று மீண்டும் அவன் மனம் முரண்பட்டது .. அவளிடம் மன்னிப்பு கேட்கவும் , அவளோடு இணைந்து வாழவும் எந்த விதத்தில் நான் தகுதியானவன் ? முடியாது நிச்சயம் முடியாது .. அவளது தூய்மையான அன்பின்முன் அவன் தோற்று போனவனாய் உணர்ந்தான் .. கலவை உணர்வகளில் இருந்து விடுபட்டவனாய் இறுகிய முகத்துடனே வீடு திரும்பினான் அபிநந்தன்.
அவன் வரும்வரை உண்ணாமல் , வழக்கம்போல காத்திருந்தாள் நந்திதா .. அவனது முகத்தை பார்த்தவுடனேயே சண்டை போடும் எண்ணத்தை கைவிட்டு விடலாமா என்று தோன்றியது அவளுக்கு .. எனினும் , என் நந்து எனக்கு வேணுமே என்றெண்ணியவள் அனைவரின் முன்னிலையிலும் அவனுடன் பேச தொடங்கினாள் ..
" என்னங்க , ஒரு அஞ்சு நிமிஷம் உங்ககிட்ட பேசணும் " என்று கூறி அனைவரின் கவனத்தையும் அவர்களது பக்கம் திருப்பினாள் நந்திதா .. பொதுவாக அவள் இப்படி எல்லாம் அவனை அனைவரின் முன் நிறுத்தி பேசுபவள் அல்ல .. அதனாலேயே அனைவரின் முகத்திலும் கேள்விகுறி .. மற்றவர்களே ஆச்சர்யத்தில் இருக்கும்போது அபிநந்தனை சொல்லவா வேண்டும் ?
"ம்ம்ம் என்ன விஷயம் ?" என்றான்
" என்ன விஷயமா ? அதான் நான் காலையிலேயே சொன்னேனே " என்றாள் நந்திதா .. இவள் ஏதோ ஒரு முடிவோடுதான் இருக்கிறாள் என்றெண்ணினான் அபி ..
" எதுவா இருந்தாலும் தனியா பேசிக்கலாம் நந்திதா "
" அது எப்படிங்க முடியும் ?"
" எப்படின்னா , இவ்வளவு நாள் எப்படி பேசினோமோ அப்படி !"
" அப்படி பேசினதினால் தானே நான் இன்னைக்கு இங்க நிற்க வேண்டிய நிலைமை ?" முதல் முறையாய் அவனை பார்த்து கேள்வி கேட்டாள் நந்திதா .. அவன் பார்வையில் தன்னை புதியவளாய் காட்டி கொண்டாள் .. அவனே தடுமாறித்தான் போனான்.. எனினும் இதயத்திற்கு விட, மூளைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் அல்லவா அவன் ? உடனே குரலை தாழ்த்தி கொண்டு
" லுக் , ஐ எம் டயர்ட் .. இன்னைக்கு இத பத்தி பேச வேணாம் " என்றான் ..
" ஈவன், ஐ எம் டயர்ட் ஆப் திஸ் ... எனக்கு இன்னைக்கே ஒரு முடிவு தெரியனும் " என்றாள் இவளும் பிடிவாதமாய் .. பார்வையளானாக அங்கு அமைதி காக்க முடியாமல் எழுந்தார் வேணுகோபாலன் ..
" இது பாரும்மா, எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு " என்று இடைபுகுந்தார் ..
" அப்பா " என்று இடைபுகுந்த மகனை பார்த்து முறைத்தபடி
" நீ சொல்லுமா " என்றார் ..
" நான் ... நான் எங்க வீட்டுக்கு போறேன் மாமா " என்றாள் நந்திதா தழுதழுத்த குரலில் ..
" இதுதானே உன் வீடு " என்றபடி எழுந்தார் சாரதா ..
" தெரியும் அத்தை நீங்கள் இப்படித்தான் சொல்விங்கன்னு ! நீங்க எல்லாரும் இதற்கு ஒப்புகொள்ள மாட்டிங்கன்னு எனக்கு தெரியும் .. உங்க எல்லாரை பத்தியும் தெரிந்து கொண்ட எனக்கு என் கணவரின் மனதை புரிந்து கொள்ள முடியலையே " என்று அவள் குறைபடவும் ஆடித்தான் போனான் அபிநந்தன் .. தன்னை பற்றி இப்படி கூறிவிட்டாள் என்ற கோபத்தில் அவன் நடுங்கவில்லை , தன்னை புரிந்துகொள்ள முடியவில்லையே என்று அவள் பரிதவித்த விதத்தில் தான் அவன் நொறுங்கி நின்றான் ..
" அப்படின்னு யார் சொன்னது ?" அவனையும் மீறி அவன் கேட்டுவிட்டிருந்தான் .. லேசாய் அவள் மனதிற்குள் இன்பச்சாரல் .. அதை மறைத்தபடி
" அதெல்லாம் தெரியும் .. " என்று குறை பட்டு கொண்டாள் அவள் .. அவளது முகபாவனையில் லேசாய் சிரித்து விட்டான் அவன் .. அவ்வளவுதான் எதற்காக இந்த பேச்சை எடுத்தோம் என்பதையே மறந்துவிட்டாள் அவள் .. எல்லோரும் முகத்தில் குழப்ப ரேகையுடன் அவளை பார்க்க , அவளோ இயல்பாய்
" சரி , சரி வாங்க சாப்பிடலாம் " என்றாள் ..
" போச்சு கவுத்துட்டியா ?" என்று மானசீகமாய் தலையில் அடித்து கொண்டார் தாத்தா ..
" என்னம்மா , ஏதோ பேசணும்னு சொன்னியே !" என்று வேணுகோபாலன் கேட்கவும்
" மனசுல என்ன இருந்தாலும் சொல்லு நந்திதா .. தாத்தா இருக்கேன்ல !" என்று மீண்டும் அவளை தனது நாடக வலையில் இழுக்க முயன்றார் தாத்தா ..
இதற்கு எல்லாம் அசந்துவிடுவாளா நந்திதா ?
" அதெல்லாம் ஒண்ணுமில்ல தாத்தா .. இன்னைக்கு அம்மாவோடு போனில் பேசினேன் .. என்னையும் அவரையும் பார்க்கணும் போல இருக்குன்னு சொன்னாங்க ...நீங்க தானே சொன்னிங்க , வரவர என் குறும்புத்தனம் குறைஞ்சுகிட்டே போகுதுன்னு ? அதான் இப்படி பேசி பார்த்தேன் " என்று கண் சிமிட்டினாள் ..
" அவ்வளவுதானா அண்ணி ? நான் பயந்தே போயிட்டேன் " என்றாள் விஷ்வாநிகா .. சாரதா மருமகளை ஆராயும் பார்வையுடன் பார்க்க
" அச்சோ லைட் ஆ சிரிங்க என் செல்ல அத்தை " என்று அவரது கன்னத்தை பிடித்து கொஞ்சினாள் நந்திதா ..
" நீ கொஞ்சினா அவ எப்படி சிரிப்பா ?" என்று இருபோருளில் கேட்டு மனைவியை பார்த்து கண்சிமிட்டினார் வேணு ..
" போதும் அசடு வழியுது " என்று சாரதா கூறவும் மீண்டும் சிரிப்பலை ! சிரித்துக்கொண்டே மனைவியின் புறம் திரும்பியவனின் கண்கள் அவளது கண்களை தழுவியது .. ஏதோ ஒன்று அவனை அவள் பால் இழுக்க , அதற்மேல் அங்கு நிற்க முடியாமல் நகர்ந்தான் அபிநந்தன் ..
" அடடே என் நந்துகுட்டி , எவ்வளவு நாள் கழிச்சு இப்படி லுக் விடுறார் ? இதுக்காகவே இந்த டிராமாவை நிறுத்திடலாம் போலிருக்கே " என்று மனதிற்குள் கூறினாள் நந்திதா .. அருணாச்சலம் தாத்தாவோ சகிதீபனின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தான் ..
" அவ ஒரு லூசு தாத்தா , எப்படியும் மனசு மாறிடுவா .. கிடைக்கிற சான்ஸ் ல தூபம் போட்டு விடுங்க " என்று ஏற்கனவே எச்சரித்து இருந்தான் அவன் !
" போச்சு , இதற்கு மேல இவன்கிட்ட பேசினா , நம்மை காலி பண்ணிடுவான் .. சோ நாம ஸ்கைப் பக்கம் போகாமல் சீக்கிரமா தூங்கிடனும் " என்று திட்டமிட்டார் அருண் ..
அபிநந்தன் தனது அறைக்குள் நுழைய அவனோடு பின்னே வந்தாள் நந்திதா ..
" இது என்ன புது நாடகம் ?"
" நாடகமா ?" - நந்திதா
" நீ உண்மையிலேயே விளையாட்டிற்கா அப்படி பேசின?"
" உண்மையா பொய்யான்னு அவங்களுக்கு தெரியாது .. ஆனா உங்களுக்கு தெரியுமே !"
" அப்போ சொல்ல வந்ததை சொல்லி இருக்கலாமே நந்திதா ?" என்றான் அவன் கழுத்து பட்டையை கழற்றி கொண்டே .. அவன் தனது பெயரை அழைத்து விட்டானாம் .. அந்த மகிழ்ச்சியில் அவனையே பார்த்து நின்றாள் அவள் .. அவளிடம் இருந்து பதில் வராமல் போகவும் புருவம் உயர்த்தி பார்த்தான் அபிநந்தன் ..
" கேள்விக்கு பதில் இன்னும் வரல "
" உங்களுக்கு ஏ ஆர் ரஹ்மான் சார் தெரியுமா ?" என்று கேட்டாள் அவள் ..
" இதென்ன அபத்தமான கேள்வி .. ? அவரை தெரியாமல் இருக்குமா ? அவரது பாட்டு கூட எனக்கு ரொம்ப பிடிக்கும் " என்றான் அவன் ..
" அவர் பாட்டு எல்லாருக்கும்தான் தெரியும் .. அவர் அன்பை பற்றி ஒரு வாசகம் சொல்லி இருக்கார் தெரியுமா ?"