(Reading time: 11 - 21 minutes)

06. நேசம் நிறம் மாறுமா - தேவி

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக் குலுங்கிடச் செய்திடு வான்; -- மனஸ்

தாபத்தி லேயொன்று செய்து மகிழ்ச்சி் தளர்த்திடச் செய்திடுவான்; -- பெரும்

ஆபத்தினில் வந்து பக்கத்தி லேநின்று அதனை விலக்கிடுவான்; -- சுடர்த்

தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந் தீமைகள் கொன்றிடு வான்;

                                                              -பாரதியார்   

Nesam niram maaruma

வெண்மதிக்கு சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும் ஆதியின் வாழ்கையில் நடந்தது தெரிந்தால் ஆதியை பற்றி புரிந்து கொள்ள உதவும் என அதிதி சொல்வதை கேட்க ஆரம்பித்தாள்.

“அண்ணி .. அப்பாவும் என் அத்தை பத்மாவும் உடன் பிறந்தவர்கள். மாமா வாசுதேவன் அப்பாவின் நண்பர். இவர்கள் இருவரும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தவர்கள். இர்வருக்குமே சொந்த தொழில் தொடங்க வேண்டுமென சிறு வயதிலிருந்தே கனவு.

இருவரும் வசதியானவர்கள் என்றாலும், தனியாக தொழில் தொடங்கும் அளவு வசதி இல்லை. கல்லூரி முடித்த பின் இருவரும் வங்கியில் கடன் வாங்கி இந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆரம்பித்தனர். இதற்கு அவர்களுடைய இன்னொரு நண்பரும் உதவினார் என்று சொல்வார்கள். ஆனால் அவரை பற்றி அதிகம் தெரியாது,

அப்பா, அம்மாவின் திருமணம் முடிந்த பின் மாமா  அத்தையை திருமணம் செய்து கொள்ள கேட்டார். அப்பாவிற்கு அம்மா அதாவது பாட்டி சிறிய வயதிலேயே இறந்ததால் அத்தைக்கு எல்லாம் அண்ணன்தான். அதனால்  எங்கள் அப்பா கேட்டவுடன் அத்தையும் சரி என்றார்கள்.

மாமாவிற்கும் அம்மா, அப்பா இல்லாமல் ஒரு உறவினர் வளர்த்து வந்ததால் அவர்களும் அவருக்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை. இரு வழியிலும் பெரிய உறவுகள் இல்லாததால் உடனே திருமணம் முடித்து எல்லாரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தோம்,

அப்பா , மாமாவிற்கு திருச்சி அருகே ஒரு சிற்றூர். அங்கிருந்து அவர்கள் சென்னை வந்து தொழில் தொடங்கிய புதிது. ஒருவருக்கொருவர் துணையாக எல்லாரும் ஒரே வீட்டில் இருந்தோம். எனக்கும் ஆதி அண்ணாவுக்கும் 6 வயது வித்தியசம். நானும் சூர்யா அண்ணாவும் 3 வயது வித்தியாசம்.

சூர்யா அண்ணா பிறந்து அடுத்த வருடம் அத்தைக்கு வந்தனா பிறந்தாள். அதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் நான் பிறந்தேன். கிட்டத்தட்ட நானும் வந்தனாவும் ஒத்த வயதுடையவர்கள் போலே தான் இருப்போம். சூர்யா அண்ணாவும், நாங்களும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அதே போல் கல்லுரியும் ஒன்றே. ஆதி அண்ணா கொஞ்சம் பெரியவர் என்பதால் வேறு பள்ளி, கல்லுரி.

சில வருடங்களுக்கு பிறகு இருவரும் தனி தனியாக வீடு கட்டி கொண்டார்கள். ஆனால் அது டாக்ஸ் சேவிங்க்ஸ்காக மட்டுமே.  நாங்கள் மூவரும் இங்கே எங்கள் வீட்டில் இருப்பதை விட அத்தை வீட்டில்தான் அதிகமாக இருப்போம். அதில் அம்மாவிற்கு கூட வருத்தமே. ஆனால்  அப்பா அம்மாவை கன்வின்ஸ் செய்து விடுவார்.

ஆதி அண்ணா டீனேஜ் வரை எங்கள் எல்லோருடும் விளையாடுவார். பிறகு படிக்க வெளியூர் போய்விட்டதால் எங்களோடு அவ்வப்போது போனில் பேசுவார். ஆனால் அத்தைக்கு அவரிடம் நிறைய பாசம் உண்டு. அதனால்  தினம் ஒருமுறை அத்தையோடு பேசி விடுவார்.

நானும் வந்தனாவும் ரொம்ப க்ளோஸ். அவள் சேர்ந்த எல்லா படிப்புகளிலும் நானும் சேர்ந்தேன். எனக்கு அவள் ஒரு ரோல் மாடல் போல் இருந்தாள். அவளோடு சேர்ந்து பாட்டு, பரதம், கராத்தே எல்லாம் கற்று கொண்டேன்.

அண்ணா திரும்பி வந்த பிறகுதான் நாங்கள் மூவரும் இங்கே தங்க ஆரம்பித்தோம். நாங்கள் இருவரும் வந்தனாவோடு அதிகம் இருந்ததால் எங்களுக்கு இங்கே இருப்பதும் அங்கே இருப்பதும் ஒன்றாகதான் இருந்தது. ஆனால் அண்ணாவுக்கு நிறைய நாட்கள் வெளியூரில் தங்கி இருந்ததால் ஒரு ப்ரைவசி வேண்டி இங்கேயே வந்து விட்டோம்.

ஆதி அண்ணாவுக்கு முதலில் இருந்தே பைனன்ஸ், அக்கௌன்ட்ஸ் சம்பத்தப்பட்ட துறையில் விருப்பம். அதனால் நிர்வாகம் படித்தார்.. முதலில் அப்பா, மாமா தொழிலில் பங்கேற்கவில்ல. தனியாகதான் நிதி நிறுவனம் ஆரம்பித்து பின் வெற்றிகரமாக நடத்தினார். ஏனோ அத்தைக்கு அதில் மட்டும் அண்ணா மேல் வருத்தம். அண்ணாதான் அவரை சமாதானபடுதினார்.

சூர்யா கல்லூரியில் சிவில் இஞ்சினீரிங் எடுத்தார். அத்தை வந்தனாவையும் இஞ்சினீரிங் படிக்க கட்டயபடுதினார். நானும் இன்டீரியர் டிசைனிங் படித்தேன். வந்தனாவின் கடைசி வருஷ படிப்பின் போது அத்தை வந்தனா, ஆதி கல்யாண பேச்சை எடுத்தார்.

இது சிறு வயதிலேயே பேசியதுதான். வந்தனா அண்ணாவை மிகவும் விரும்பினாள். முதலில் எதற்கு அவசரம் என்று மறுத்த அண்ணா பிறகு வந்தனாவின் விருப்பத்தை பார்த்து அவரும் சம்மதித்தார்.

நிச்சயதார்த்தம் நடந்த பிறகு திருமணத்திற்கு நாள்  குறித்தனர்.. திருமணத்திற்கு பத்து நாள் இருக்கும் போது குலதெய்வம் கோவிலுக்கு மூவரும் சேர்ந்து சென்றவர்களின் கார் ஆக்சிடென்ட் ஆகி மூன்று பேரும் அங்கேயே இறந்து விட்டார்கள். முதலில் நாங்கள் எல்லாரும் சேர்ந்து செல்வதாகத்தான் இருந்தோம். அண்ணாவிற்கு தீடிரென்று ஒரு அலுவலக பிரச்சினை வரவே எல்லோரும் மறுநாள் செல்லலாம் என்றதற்கு மாமாவும், அத்தையும் அவர்கள் வேறு கோவிலுக்கு போய்விட்டு நேராக எங்கள் கோவிலுக்கு வருவதாக கூறினார்.

ஆனால் அவர்கள் திரும்பி வரவேயில்லை. அன்று வரை எனக்கு எல்லாமாக இருந்த வந்தனாவும், என் அம்மாவை விட நெருக்கமாக இருந்த அத்தையும் இல்லை என்பதை என்னால் இன்று கூட நம்ப முடியவில்லை.

அவர்கள் மறைவிற்கு பிறகு அண்ணா மிகவும் மாறிப் போனார். யாரிடமும் பேசுவதில்லை. இரவுகளில் தூங்குவதில்லை. அண்ணாவை அப்படி பார்த்த பிறகு நானும், சூர்யாவும் சிரிக்க கூட தயங்குவோம்.

அப்பாவிற்கும் மாமாதான் பெஸ்ட் பிரெண்ட். மாமவும் இல்லை. சூர்யாவும் அப்போது மாஸ்டர்ஸ் செய்து கொண்டிருந்ததால், பிசினெஸ் டென்ஷன் தாங்காமல் ஸ்ட்ரோக் வந்தது. அதற்கு பிறகுதான் அண்ணா கன்ஸ்ட்ரக்ஷன் பிசினெஸ் பார்த்து கொள்ள ஆரம்பித்தார்.

அதற்கு பின் அண்ணா ஓரளவு பராவயில்லை என்றாலும், முழுவதும் மாறவில்லை. இந்த நிலையில் தான் அப்பா உங்களை திருமணம் செய்ய சொல்லி அண்ணாவை கட்ட்யபடுத்தினார். இதனால் பெரிய வாக்கு வாதம் ஏற்பட்டது. பின் உங்கள் திருமணம் நடந்தது.

இது எனக்கும் சூர்யாவிற்கும் பிடிக்கவில்லை. வந்தனாவின் இடத்தில வேறு யாரோ என்று எண்ணவே எங்களுக்கு வெறுப்பாக இருந்தது. எங்கள் பங்கிற்கு நாங்களும் அப்பாவிடம் சண்டை போட்டோம். ஆனால் அன்றைய அப்பாவின் உடல் நிலையால் ஒரு கட்டத்திற்கு மேல் எங்களால் மறுக்க முடியவில்லை. அப்பாவின் மேல் ஏற்பட்ட கோபமும், வந்தனாவின் இடத்தில வேறு யாரோ என்ற எண்ணமும் தான் இத்தனை நாள் எங்களை உங்களிடத்தில் இருந்து விலக்கி வைத்தது.

அண்ணாவின் ஆக்சிடென்ட்க்கு பிறகு அப்பா எங்களை எல்லாம் இன்னும் எத்தனை நாள் அண்ணா இப்படி இருக்க வேண்டும் என்று கேட்ட போதுதான் எங்கள் தவறு புரிந்தது. மேலும் உங்கள் நிலையில் இருந்து பார்த்த போது நடந்த விஷயங்களால் உங்களை வருத்தப்படுத்துவது தவறு என்று உணர்ந்தோம்.

அதன் பின் உங்களோடு சாதாரணமாக பழக ஆரம்பித்தேன். உங்களிடம் பிரின்ட்லியாக பழக எண்ணினாலும் , உங்களை அண்ணியாக பார்த்ததினால் என்னால் முடியவில்லை. ஆனால் வாணியை பார்க்கும் போது எனக்கு வந்தனாவை பார்ப்பது போல் இருக்கிறது. அவளிடம் பழகுவது எனக்கு இதமாக இருக்கிறது.

ஆனால் இன்னும் கூட என்னால் அவள் நினைவிலிருந்து வெளி வர முடியவில்லை. அதனால்தான் என்னால் கலகலப்பாக இருக்க முடியவில்லை.” என்று அதிதி முடித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.