(Reading time: 22 - 43 minutes)

மனதோர மழைச்சாரல்... - 06 - வத்ஸலா

வளது வீட்டுக்குள் வந்து நின்றது அந்த கார். ஒரு வேளை அது சஞ்சாவின் காராக இருக்குமா??? கண்ணீரை துடைத்துக்கொண்டு விருட்டென எழுந்தாள் அஹல்யா. 'அவளது சுயநலமான எதிர்ப்பார்ப்பை மனசாட்சி கேலி செய்துக்கொண்டே இருந்த போதிலும், கால்கள் தன்னாலே வாசலை நோக்கி ஓடின.

கார் கதவு திறக்க, அதிலிருந்து இறங்கினான் ஒருவன். அவனது கையில் ஒரு பூங்கொத்து. அவள் அருகில் வந்தவன் 'நான் சஞ்சீவ் சாரோட டிரைவர் தினேஷ்.' என்றான். .'சஞ்சீவ் அனுப்பி இருக்கிறானா இந்த பூங்கொத்தை???' மகிழ்ந்து போனாள் அகல்யா.

'வாங்க.... வாங்க உதடுகளில் சிரிப்பு மிளிர வரவேற்றாள் அவனை. வீட்டினுள் நுழைந்தான் அவன். அவன் பார்வை சுழன்று ஹாலை ஒரு முறை நோட்டம் விட்டு திரும்ப, அஹல்யாவின் பார்வை பூங்கொத்தையும் அவன் முகத்தையும் மாறி மாறி உரசிக்கொண்டிருந்தது.

Manathora mazhai charal

அதை உணர்ந்தவனாக பூங்கொத்தை அவளிடம் நீட்டினான் 'சஞ்சீவ் சார் கொடுக்க சொன்னார்'

அவன் கையிலிருந்து கிட்டத்தட்ட பிடுங்கிக்கொண்டாள் அதை. தனக்கு இதையெல்லாம் வாங்கிக்கொள்ளும் தகுதி கூட இல்லை. புரிந்துதான் இருந்தது அவளுக்கு. இருப்பினும் அலைப்பாயும் மனம் எதற்கும் கட்டுப்படுவதாக இல்லை.

'எல்லாரும் இருந்ததாலே ப்ரிமியர்லே உங்க கிட்டே பேச முடியலையாம். உங்க நடிப்பை பார்த்து அசந்துட்டேன்னு சொல்ல சொன்னார்' என்றான் அவன்.

பின்னர் தனது கைப்பையிலிருந்து எதையோ எடுத்தான் அவன் . அது சஞ்சீவ் தங்கையின் திருமண அழைப்பிதழ். 'இது அவர் சிஸ்டரோட கல்யாண பத்திரிக்கை. அடுத்த வாரம் கல்யாணம். நீங்க கட்டாயம் வரணும்னு சொல்ல சொன்னார்.'

நெகிழ்ந்து போய் தலையசைத்தாள் அகல்யா. 'கண்டிப்பா வரேன்னு சொல்லுங்க. ரொம்ப... ரொம்ப... சந்தோஷம்.... ரொம்ப தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுங்க' அவள் கரங்கள் பூங்கொத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டன.

அவன் காரில் ஏறும் முன் ஒரு முறை அவள் முக பாவத்தை ஆழமாக படித்துக்கொண்டு காரில் ஏறியதை கவனிக்கவில்லை அகல்யா.

கார் நகரும் வரை காத்திருந்தவள் ஓடி வந்து சோபாவில் அமர்ந்து தனது கைப்பேசியை கையிலெடுத்தாள். 'அழைக்கலாமா அவனை???' பல முறை யோசித்து முடித்து ஒரு முடிவுக்கு வந்தவளாக குறுஞ்செய்தியை தொடுத்தாள் 'ஃபீலிங் ஹான்ர்ட். வெரி வெரி ஹாப்பி. தேங்க் யூ ஸோ மச்.'

அப்போதுதான் வீட்டை அடைந்திருந்தான் சஞ்சீவ். கைப்பேசியை பார்த்தவன், குறுஞ்செய்தியை படித்து விட்டு, அதை மேஜை மீது வைத்தான். 'எதற்காம்??? பிரிமியருக்கு வந்ததற்காமா??? உள்ளுக்குள்ளே இன்னமும் கொதித்துக்கொண்டிருந்த தணலின் வெளிப்பாடாக ஆழமான மூச்சு வெளிப்பட்டது.

அந்த குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பும் எண்ணம் கூட எழவில்லை அவனுக்கு. ' ப்ரிமியருக்கு அழைத்தாள், போய் திரும்பியாகி விட்டது.!!! இதற்கு மேல் எதையும் தொடருவதாக இல்லை.' தலையை இடம் வலமாக அசைத்தபடி அங்கிருந்து நகர்ந்தான் சஞ்சீவ்.

ன்றிரவு நேரம் இரவு பத்தை தாண்டிக்கொண்டிருந்தது. தனது அறையை ஒட்டிய பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருதார் இந்திரஜித். ரிஷியிடமிருந்து வாங்கிய அவனது லண்டன் வீட்டு எண்ணை ஒரு முறை பார்த்தார். பின்னர் திரும்பி அறைக்குள்ளே பார்த்தார். அங்கே கட்டிலில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் மேகலா.

அஸ்வத் மருத்துவமனையில் தங்கிவிட, இன்று வீட்டிற்கு வந்துவிட்டிருந்தார் மேகலா. அருகில் சென்று அவர் நன்றாக உறங்கிவிட்டார் என்பதை உறுதி செய்துக்கொண்டு மறுபடியும் பால்கனியில் வந்து அமர்ந்த இந்திரஜித் தனது கைப்பேசியிலிருந்து அந்த எண்ணை அழைத்தார்..

சில நொடிகளில் மறுமுனையில் 'ஹலோ' என்றார் கல்யாணராமன்.

'வணக்கம் சார். நான் இந்திரஜித் பேசறேன்.'

'சொல்லுங்க... சொல்லுங்க சம்மந்தி.....' என்றார் மலர்ந்து போன குரலில். எப்படி இருக்கா அருந்ததி?

நிஜமாகவே அவர் குரலில் இப்படி ஒரு மலர்ச்சியை எதிர்ப்பார்க்கவில்லை இந்திரஜித். கல்யாணராமனிடம் அத்தனை நெருங்கி பழகியதில்லைதான் என்றாலும் அவரை சந்தித்த ஒன்றிரண்டு தருணங்களில் இப்படி கூட ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று அவரை வியக்க வைத்த மனிதர் கல்யாணராமன்.

இதோ மறுபடியும் அதே வியப்பு!!! அவரிடம் அனுமதி பெறுவது ஒரு புறமிருக்க, அவரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நடந்த இந்த திருமணத்தை, கொஞ்சம் கூட கோபமோ, வருத்தமோ இல்லாமல் ஏற்றுக்கொண்டு சம்மந்தி என்று அழைக்கிறாரே இவர்???

'அருந்ததிக்கு இப்போ பரவாயில்லை சம்மந்தி. நீங்க எப்படி இருக்கீங்க? ரிஷி அம்மா சௌக்கியமா?   

'ரிஷி அம்மா!!!' வைதேகியை அவர் விசாரித்த விதம் கல்யாணராமனின் உதடுகளில் புன்னகையை கொண்டு வந்தது. 'ம். நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்' என்றார் மெல்ல.

'கல்யாணம் எதிர்பார்க்காம நடந்து போச்சு. அருந்ததிக்கு கொஞ்சம் சரியானதும் கிராண்டா ஒரு ரிசெப்ஷன் வைக்கலாம்னு யோசிக்கிறேன்.... ஆமாம் நீங்கல்லாம்  எப்போ புறப்பட்டு வர்றதா இருக்கீங்க?

'நாங்களா??? வைதேகியின் உடல்நிலை பற்றிய யோசனைகள் கல்யாணராமனிடத்தில். 'வரோம் சீக்கிரம் வரோம். நான் முடிவு பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்' என்றார் அவர். வைதேகியின் உடல்நிலை பற்றி அவரிடமும் எதுவும் சொல்லவில்லை கல்யாணராமன்.

சில நிமிடங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அழைப்பை துண்டித்தார் இந்திரஜித். கண்களை மூடிக்கொண்டு சாய்ந்தவரின் முகத்தில் நிறையவே யோசனைகள்.

அருந்ததி பிழைத்து வந்த சந்தோஷம் உள்ளதை நிறைத்துவிட்டது. அவளது திருமணம் அவரை ஆனந்த கடலில் தள்ளிவிட்டது. மகளின் திருமணத்தை ஊருக்கு அறிவிக்கும் விதமாக மிகப்பெரிய வரவேற்பு நடத்தும் ஆசை அந்த தந்தையிடம். ஆனால் அதற்கு தேவையான பணம்???

ஒரு காலத்தில் மிகப்பெரிய இயக்குனர்!!! ஆனால் இன்று.???  மகன் அஸ்வதின் தொழில்களில் நஷ்டத்தில் விழுந்து விட, சமூகத்தில் தங்கள் அந்தஸ்தை காப்பற்றிக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் செய்யபடும் ஆடம்பர செலவுகளில்  சொத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பிக்க, அவருக்கென படங்களும் இல்லாத நிலையில், மிச்சமிருப்பது இந்த வீடு மட்டுமே. இப்போது அருந்ததியின் மருத்துவ செலவுகள் வேறு கண் முன்னே பூதாகாரமாய்!!!

தனது நிலை பற்றியும், அவருக்கு இருக்கும் கடன்களை பற்றியும், மற்றவர்கள் யாருக்குமே,  ஏன்? அருந்ததிக்கே கூட தெரியும் படி வைத்துக்கொண்டவரில்லை இந்தரஜித். உயரத்தில் இருந்தவன் பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேனா???

தோன்றவில்லை!!!! இந்த வீட்டை விற்பதை தவிர வேறந்த வழியும் தென்படுவதாக தோன்றவில்லை. இந்த வீட்டை விற்று விட்டால் சில பெரிய கடன்கள் அடைபடும். கையிருப்பில் கொஞ்சம் பணமும் கிடைக்கும். அதை வைத்து அருந்ததியின் வரவேற்பையும் நடத்திவிடலாம். 

நகரின் மைய பகுதியில் இருக்கும் இந்த வீட்டை வாங்கிக்கொள்ள பலர் தயாராக இருக்கிறார்கள். நாளை காலையில் முதல் வேலை, இந்த திட்டத்தை செயாலாக்குவது தான்.  ஒரு முடிவுக்கு வந்தவர் எப்போது உறங்கினாரோ??? அப்படியே உறங்கிப்போனார்.

அவர் உறங்கிய சில நிமிடங்கள் கழித்து கட்டிலில் எழுந்து அமர்ந்தார் மேகலா. மெதுவாய் நடந்து கணவரின் அருகில் வந்தவர், அங்கே இருந்த இந்திரஜித்தின் கைப்பேசியை கையிலெடுத்தார். சற்றுமுன் இயக்குனர் யாருடன் பேசிக்கொண்டிருந்தார் என்று புரிந்துதான் இருந்தது மேகலாவுக்கு. அவர் பேசியதை கேட்டுக்கொண்டு தானே இருந்தார் மேகலா.!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.