(Reading time: 22 - 43 minutes)

'.நீ என்கூட வந்திடு அருந்ததி. நாம ஊருக்கு போயிடலாம். அங்கே போய் நீ என்ன சொன்னாலும் நான் கேட்கறேன். இங்கே நம்மை நிம்மதியா இருக்க விட மாட்டாங்கடா.....'

எழுந்தே விட்டிருந்தாள் அவள். 'மாட்டேன்... நோ... எனக்கு நடந்தது கல்யாணம் இல்லை. வரமாட்டேன்...நீங்க தாலி கட்டிடீங்கங்கிற ஒரே காரணத்துக்காக உன்...உங்க கூட நான் எங்கேயும் வர மாட்டேன் '

'ப்ளீஸ் அருந்ததி கொஞ்சம் புரிஞ்சுக்கோ....' எழுந்தான் ரிஷி.

'வேண்டாம்... எனக்கு எதுவுமே புரிய வேண்டாம். எதுவுமே வேண்டாம்...'

'என்ன வேண்டாமா? அப்போ நான் வேண்டாமா உனக்கு?

அவன் முடிக்கவில்லை தவித்து விரிந்தன அவள் விழிகள். 'ம்???'

கொஞ்சமாய் தணிந்தது அவள் முகத்தில் இருந்த இறுக்கம். அவனுக்குள்ளே பனிச்சாரல் .'உனக்கு நான் வேண்டாமான்னு கேட்டேன்' என்றான் மெலிதான குரலில்.

'எ... எனக்கு... எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்...' வார்த்தைகள் கொஞ்சம் தடுமாறி வெளியேற, அவன் முகத்தை சில நொடிகள் பார்த்துவிட்டு மெல்ல தாழ்ந்தன அவள் கண்கள். அவை சற்றுமுன் அந்த பூவில் செய்துக்கொண்டிருந்த ஆராய்ச்சி தொடர்ந்தது.

'அருந்ததி...' என்றான் வாஞ்சையுடன். 'நிஜமாவே உன்னை மனசார கல்யாணம் பண்ணிகிட்டேன்டா... நான் என்ன பண்ணா என்னை நீ நம்புவே? சொல்லு செய்யறேன்....'

கையிலிருந்த பூவை கீழே போட்டு விட்டு இடம் வலமாக தலை அசைத்தாள் அவள். மனம் இன்னும் ஆறவில்லை.

'நான் என்னை ப்ரூவ் பண்ண ஒரே ஒரு சான்ஸ் கொடு ப்ளீஸ்,,, நான் என்ன செய்யணும்?

'என் கூட இனிமே பேசவேகூடாது முடியுமா? இந்த பூ, புடலங்காய் இதெல்லாம் வாங்கிட்டு வந்து கண்ணம்மா, ரோஜாப்பூ, முக்கியமா பொண்டாட்டின்னு என் பின்னாலே வரக்கூடாது முடியமா?' வெடித்து வந்தன வார்த்தைகள்.

ஒரு நொடி திகைத்து போனவன், கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு கேட்டான் 'எத்தனை நாளைக்கு இந்த தண்டனை???'.

......

'சொல்லு அருந்ததி. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கணும் இல்லையா? எத்தனை நாளைக்கு நான் உன்கிட்டே பேசக்கூடாது?

'நான் திரும்ப உன்னை 'வசி'ன்னு கூப்பிடற வரைக்கும்......' உதடுகள் துடிக்க சொல்லிவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் அருந்ததி.

சில நொடிகள் மௌனம் இருவரிடத்திலும். பின்னர்  'சரி...' என்றான் ரிஷி உறுதியான குரலில். 'நான் இனிமே உன்கிட்டே பேச மாட்டேன். நீ என்னை 'வசி ன்னு கூப்பிடுற வரைக்கும் பேச மாட்டேன். போதுமா?' அவன் உள்ளத்தின் ஓரத்தில் ஒரு சின்ன நம்பிக்கை. அவள் வசி என கூப்பிடும் நாள் சீக்கிரம் வந்து விடுமென ஒரு நம்பிக்கை.

அவன் அப்படி சட்டென ஒப்புக்கொள்வான் என நினைக்கவில்லை அவள். திகைத்து திரும்பினாள் அவனை நோக்கி. மொத்தமாக தோற்றுத்தான் கிடந்தது அவன் முகம்..

சரியாக அந்த நொடியில் 'அருந்ததி....' கேட்டது மேகலாவின் அழைப்பு. 'இங்கே இருட்டிலே என்ன பண்றே நீ'  என்றபடி அவர்கள் அருகில் வந்தார் அவர்.

அடுத்த நொடி ரிஷியின் கையோடு தனது வலது கையை கோர்த்துக்கொண்டுவிட்டிருந்தாள் அருந்ததி. 'அன்று அறைக்குள்ளே இவள் குரல் உயர்ந்த போது மேகலா பார்த்த பார்வை அவளுக்கு பல விஷயங்களை உணர்த்தி இருந்தது!!!! இனி மேகலாவின் முன்னால் அவனை எந்த வகையிலும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்ற தவிப்பும், அவசரமும் நிறையவே இருந்தது அவளிடத்தில்'

அவள் செயலுக்கான காரணம் நன்றாகவே புரிந்தது ரிஷிக்கு. தனது உதடுகளில் புன்னகை ஓடுவதை தடுக்கவே முடியவில்லை அவனால்.

அவன் தோளோடு ஒட்டிக்கொண்டு நின்றபடியே 'என்னமா வேணும் உனக்கு? என்றாள் குரலில் சேர்த்துக்கொண்ட சலிப்புடன். 'எங்க ரெண்டு பேருக்குள்ளே பேசிக்க ஆயிரம் விஷயம் இருக்கும். நீ எதுக்கு நடு நடுவிலே வந்து நிக்கறே. கொஞ்ச நேரம் தனியா விட மாட்டியா எங்களை?

'அது சரி.... 'எல்லாம் தெரியும்டி எனக்கு.' மேகலாவின் குரல் நிறையவே கேலியுடன் ஒலித்தது 'போ முதலிலே கொஞ்சம் ரெஸ்ட் எடு. உனக்கு உடம்பு சரியாகட்டும் அப்புறம் பேசலாம் எல்லாம் .. போ.....போய் படு போ' 

'வா ரிஷி 'அவனை தன்னோடு சேர்த்து இழுத்துக்கொண்டு, அவனோடு ஒட்டிக்கொண்டு  நடந்தாள் அருந்ததி. அப்படியே நடந்தவர்கள் அவனது கார் அருகே வந்தனர். அவளையே பார்த்திருந்தான் அவன். அவள் விடுவித்துக்கொண்டாள் தனது கையை.!!!! எதுவுமே பேசாமல், முகத்தில் எந்த பாவமும் காட்டாமல், திரும்பி நடந்து உள்ளே சென்று விட்டிருந்தாள் அருந்ததி.!!!!

'எது எப்படியானாலும் அவள் என்னுடன், என் கண் பார்வையில் இருந்தே ஆகவேண்டும்!!!! எப்படி நடத்திக்கொள்வது இதை????. அவளிடம் பேசி அவளை அழைத்து செல்வது இனி சாத்தியமில்லை. என்ன செய்யலாம் இப்போது??? அவன் அவளை அழைத்துப்போகும் வரை அவள் பாதுக்காப்பாக இருப்பதற்கு ஏதாவது ஏற்பாடுகள் செய்தாக வேண்டும்.' பல நூறு சிந்தனைகளுடன் காரில் ஏறப்போனவனை கலைத்தது அந்த கிண்டலான குரல்......

'பாவம் இன்னைக்கும் கிளீன் பவுல்ட் போலிருக்கே??? தனது சிந்தனையிலிருந்து மீண்டு அவன் திரும்ப அங்கே மேகலா!!!

'சும்மா சொல்லகூடாது என்கிட்டேயே நல்லா நடிக்கிறா என் பொண்ணு. சிரித்தார் மேகலா. அடுத்து என்ன செய்ய போறே.??? பேசாம மறுபடியும் ஊரை விட்டே ஓடிப் போயிடு. அதுதான் உனக்கு நல்லது'

திரும்பி காரில் சாய்ந்துக்கொண்டு நின்று அவர் முகத்தை பார்த்தவன். 'என் பொண்டாட்டி என் கூட வராம நான் இந்த ஊரை விட்டு போறதா இல்லை' என்றான் அழுத்தமாக.

'போ. தாராளமா அவளை கூட்டிட்டு போ. நான் குறுக்கே வர மாட்டேன். உங்க ரெண்டு போரையும் பிரிக்கணும்ங்கிற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. நானும் டைரக்டரை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கும் இதெல்லாம் புரியும். என் பொண்ணு மனசை நான் நிச்சயமா உடைச்சு போட மாட்டேன். ஆனா அதுக்கு முன்னாடி வேறே ஒண்ணு நடக்கணும்...' என்றார் மேகலா. அவர் கண்களில் தீவிரம்.

தெரியும் அவனுக்கு.!!!! மேகலா அவனை எங்கே உரசுவார் என தெரியும் அவனுக்கு.!!! சுறுசுறுவென பொங்கியது இதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம்.

'நீ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போறதுக்கு முன்னாடி நீயும், அந்த சந்திரிகாவும் என் காலிலே வந்து விழணும். அந்த சந்திரிகா கண்ணிலேர்ந்து ரெண்டு சொட்டு தண்ணியாவது வரணும். அதை நான் பார்க்கணும்' .

'அந்த சந்திரிகா கண்ணிலேர்ந்து ரெண்டு சொட்டு தண்ணியாவது வரணும்!!!!'. ஒரு பெண்ணை அழ வைத்து பார்ப்பதில் இன்னொரு பெண்ணுக்கு இவ்வளவு சந்தோஷம் இருக்க முடியுமா???' நினைக்கும் போதே கோபம் அக்னியாய் எழ......

'ஹேய்....' தன்னையும் அறியாமல் மேகலாவை நோக்கி நீண்டது அவனது விரல். யாரோ ஒருவன் அவர்களை சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டே கடக்க, வெடிக்க தயாராகி இருந்த கோபத்தை கடிவாளமிட்டு கட்டியபடியே......

'கனவு காணாதீங்க மிசஸ் மேகலா. நீங்க நினைக்கற மாதிரி எதுவுமே நடக்காது. இன்னும் சரியா நாலு நாளைக்குள்ளே, என் பொண்டாட்டியை என் கூட கூட்டிட்டு நான் போயிட்டே இருப்பேன். உங்களாலே முடிஞ்சா தடுத்துப்பாருங்க' அழுத்தமான குரலில் கொதித்துவிட்டு காரில் ஏறி பறந்தான் ரிஷி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.