(Reading time: 22 - 43 minutes)

கைப்பேசியில் அவர் விரல்கள் விளையாட அவரது கண்ணில் விழுந்தது அந்த எண்!!! ரிஷியின் லண்டன் எண். அதை தனது கைப்பேசியில் பதித்துக்கொண்டு, இந்திரஜித்தின் கைப்பேசியை இருந்த இடத்தில் வைத்துவிட்டு சத்தமில்லாமல் கட்டிலில் சென்று படுத்துக்கொண்டார் மேகலா.

றுநாள் காலை, தினசரியை புரட்டிக்கொண்டிருந்த சஞ்சீவின் கண்ணில் தென்பட்டது சில புகைப்படங்களும் அந்த வாக்கியமும்.

'தன்னை சூழ்ந்திருக்கும் சாபங்கள் தீர சஞ்சீவினி மூலிகையை மறுபடியும் தேடுகிறாரா அகல்யா???' அவர்கள் இருவரும் நேற்று ப்ரிமியரில் ஒன்றாக அமர்ந்திருந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. தன்னை மறந்து கலகலவென சிரித்தான் சஞ்சீவ். எப்படித்தான் எழுதுகிறார்களோ இப்படி எல்லாம்???

வேறொரு பத்திரிக்கையில் நேற்றைய ப்ரிமியரில் அவன் பேசியது செய்தியாகவும், அதுவே அந்த படத்திற்கு விளம்பரமாகவும் வந்திருந்தது. பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை அவனுக்கு. இதெல்லாம் அவன் எதிர்பார்த்த விஷயங்கள் தானே.!!!!

ஆனால் அவனை சுற்றி ஒரு வலை பின்னப்பட்டுக்கொண்டிருப்பதை அறியவில்லை அவன்.!!!! அவன் கொடுத்ததாக சொல்லி அகல்யாவுக்கு கொடுக்கப்பட்ட பூங்கொத்தை பற்றியோ, அவள் அவனது தங்கையின் திருமணதிற்கு வந்து நிற்க போவதை பற்றியோ அறியாதவனாக சின்ன சிரிப்புடன் அந்த தினசரியை சோபாவின் மீது போட்டுவிட்டு எழுந்தான் சஞ்சீவ்.

அந்த நாள் மெதுமெதுவாக கடந்துவிட்டிருந்தது. ரிஷி அருந்ததியை சந்தித்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. கொஞ்சம் நன்றாகவே தேறி இருந்தாள் அவள்.

நேரம் இரவு பதினொன்றை தாண்டி விட்டிருந்தது. இரவு உணவுக்கு பின் நிலவின் ஒளியில் சில நிமிடங்கள் நனையும் எண்ணத்தில் ,மருத்துவரின் அனுமதியை பெற்றுக்கொண்டு, அந்த மருத்துவமனையின் தோட்டத்தில் இறங்கி நடக்க துவங்கினாள் அருந்ததி. அங்கே ஆள் நடமாட்டம் இல்லை.

மங்கிய விளக்கொளியில் குளித்திருந்த அந்த தோட்டத்தில் நடந்தபடியே நிமிர்ந்து வானத்தை பார்த்தவளின் பார்வையில் விழுந்தது சப்தரிஷி மண்டலத்தின் நட்சத்திரங்கள். எதை எதையோ நினைத்து எங்கெங்கோ சென்று திரும்பியது அவள் இதயம்.

'வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம்' சொல்லிக்கொண்டே நகரப்போனவள், சட்டென மோதிக்கொண்டாள் அவன் மீது. சடக்கென வெளிவந்த 'சாரி'யுடன் விலகி நிமிர்ந்தவளின் முன்னால் கைகளை கட்டியபடி, அவள் மனம் படித்ததினால் எழுந்த குறுஞ்சிரிப்புடன் நின்றிருந்தான் ரிஷி.

அவனை பார்த்த மறுநொடியில் கோபமும், ஆற்றாமையும், ஆதங்கமும், உள்ளத்தின் ஓரமான பகுதியில் ஒளிந்துக்கொண்டிருக்கும் காதலின் சின்ன சின்ன கீற்றுகளுமாய்.....பலநூறு பாவங்கள் ஓடி மறைந்தன அவள் முகத்தில்.

அவளையே பார்த்திருந்தான் அவன். கையில் கட்டுகளும், முகத்தில் அங்கங்கே ப்ளாஸ்த்ரிகளுமாக இருந்தவளை பார்க்க, பார்க்க  சுருக்கென வலித்தது அவனுக்கு. அவளை சுற்றித்திரியும் பட்டம்பூசியாகவே பார்த்து பழக்கம் அவனுக்கு.

'கை ரொம்ப வலிக்குதாடா?' இதமான குரலில் கேட்டான் அவன்.

பதில் மொழி இல்லை அவளிடமிருந்து. அவள் கண்கள் ஒரு முறை தரை தட்டி சுதாரித்து நிமிர்ந்து அவனை கடந்து விலக அவள் எத்தனித்த நேரத்தில், வழி மறித்து நின்று 'பொண்டாட்டி...' என்றான் அவன். 'ப்ளீஸ் டா.... என்னை மன்னிச்சுக்கோடா ப்ளீஸ்... '

'உன் கோபம் எனக்கு புரியுது. தப்புதான். தப்புதான். உன்னை ரொம்ப தப்பா பேசிட்டேன்... என்னாலேதான் உனக்கு இந்த வலியெல்லாம். ப்ளீஸ்டா என்னை மன்னிச்சுடு .' கெஞ்சல், கெஞ்சல், கெஞ்சல் மட்டுமே அவன் வார்த்தைகளில்.

'நான் உள்ளே போகணும்...' விழி நிமிர்த்தவில்லை அவள்.

'இப்படி பண்ணா... நான் என்ன பண்றது பொண்டாட்டி???'

'ப்....ளீஸ் மிஸ்......டர் ரிஷி......' கொஞ்சமாய் உயர்ந்தது அவள் தொனி,

'மிஸ்டர் ரிஷியா? என்னதிது கண்ணம்மா??? திடீரென்று 'வசி' காணாமல் போய்விட்டதினால்  ஏற்பட்ட தவிப்பு தெரிந்தது அவன் குரலில்.

'கண்ணம்மாவா? ஆஹா...'. என்றாள் அவள். இந்த கண்ணம்மா, ரோஜாப்பூவெல்லாம் எங்கே இருந்தது இத்தனை நாளா?  இதெல்லாம் கூட வேண்டாம், நான் உன்....உ...உங்க முன்னாடி ஓடி வந்து நிக்கறப்போ எல்லாம் என்னை பார்த்து ஒரு ஸ்மைலாவது பண்ணி இருப்பீங்களா மிஸ்டர் ரிஷி?' ஆதங்கத்தில் மூழ்கி எழுந்த வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.

பொங்கி எழுந்த உணர்வுகளை எல்லாம் மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டவளாக, கண்களை சுழற்றி அவர்கள் அருகில் யாருமில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டாள் அருந்ததி.

ஒவ்வொரு வார்த்தையிலும் மரியாதை சேர்த்து சேர்த்து பேசும் அவளது தொனியே ஊசி முனையாய் குத்தியது அவனை. நிராகரிப்பின் வலி இப்படிதான் இருக்குமா? இதைத்தானே இத்தனை நாள் அனுபவித்து இருப்பாள் அவள்.???

'அருந்ததி.... நான் செஞ்சது தப்பாவே இருக்கட்டும்... ஆனால்....... '

'மிஸ்டர் ரிஷி....' சட்டென இடைமறித்தாள் அவள். உங்களுக்குன்னு சொல்ல ஆயிரம் காரணம் இருக்கு. எனக்கு வேறெதுவும் வேண்டாம். நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு மட்டும் நீங்க 'ஆமாம்'னு பதில் சொல்லிடுங்க. அதுக்கப்புறம் எந்த கேள்வியும் கேட்காம உங்க கையை பிடிச்சிட்டு நீங்க கூப்பிட்ட இடத்துக்கு நான் வரேன்'

அவன் இமைக்காமல் பார்க்க, அவன் கண்களை நேராக பார்த்துக்கேட்டாள் 'எனக்கு இந்த ஆக்சிடென்ட் நடக்கலைன்னா நீங்க எனக்கு தாலி கட்டி இருப்பீங்களா மிஸ்டர் ரிஷி?

பேச்சிழந்து போனான் ரிஷி. பதிலில்லை அவனிடத்தில். ஆம் என்று சொல்ல முடியவில்லை அவனால்.

'சொல்லுங்க கட்டி இருப்பீங்களா? கட்டி இருக்க மாட்டீங்கதானே? தவிக்கும் அவள் கண்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திரும்பிக்கொண்டன அவன் விழிகள்.

'காலையிலே என்னை, என் காரெக்டரை, என் காதலை எல்லாத்தையும் அசிங்கப்படுத்தி தூக்கி எறிஞ்சிட்டு, மத்தியானம் எனக்கு தாலி கட்டிட்டீங்க. அது எப்படி மிஸ்டர் ரிஷி? என்னாலே ஏத்துக்க முடியலை.' உணர்ச்சி பெருக்கில் மூச்சு வாங்கியது அவளுக்கு.

'சரிடா.... மூச்சு வாங்குது உனக்கு. கொஞ்ச நேரம் உட்காரு முதலிலே. நாம அப்புறம் பேசுவோம்..... மனம் கேட்காமல் சொன்னான் அவன்.

'எனக்கு பதில் சொல்லு. ப்ளீஸ் ... எதுக்கு தாலி கட்டினே??? இவ செத்து போயிடுவாளே அப்படிங்கற பரிதாபத்திலேயா? இல்லை நம்மளாலே இவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுங்கிற குற்ற உணர்சியிலேயா??? இப்படி ஒரு கல்யாணம் எனக்கு வேண்டாம்!!!. வேண்டாம்!!!' அவனிடம் கத்தி முடித்துவிட்டு, வேறு பக்கம் திரும்பி ஒரு நிதானமான மூச்சை எடுத்துக்கொண்டாள் அருந்ததி.

இரண்டு மூன்று நொடிகள் விட்டு மெல்ல சொன்னான் ரிஷி  'அருந்ததி.... நீ என் உயிர்டி. என் உயிர் என்னை விட்டு போயிடுமோங்கிற பயத்திலே கட்டினேன் தாலியை. வேறே என்ன சொல்ல??..' என்றான் தளர்ந்து போன குரலில்.

'வேண்டாம். எனக்கு நீங்க காமிரா முன்னாடி பேசுற டயலாக் எல்லாம் எனக்கு வேண்டாம் மிஸ்டர் ரிஷி' அங்கிருந்து அகன்று சென்று அருகில் இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள் அருந்ததி.

கொஞ்ச நேரம் அவளை தனியே அமர விட்டு, பின்னர் அவளருகில் சென்று அமர்ந்தான் அவன். அருகில் இருந்த மரத்திலிருந்து அந்த பெஞ்சின் மீது விழுந்து கிடந்த பூவை கையில் வைத்துக்கொண்டு அதையே பார்வையால் துழாவிக்கொண்டிருந்தாள் அவள்.

'அருந்ததி.....' என்றான் நிதானமான குரலில் 'தப்பெல்லாம் என்னோடதுதான். நீ என்ன சொன்னாலும் நான் கேட்கறேன், ஆனா அதுக்கு முன்னாடி......' அவன் கொஞ்சம் நிறுத்த , கேள்வியுடன் அவனை நோக்கி திரும்பினாள் அவள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.