(Reading time: 10 - 19 minutes)

01. கிருஷ்ண சகி - மீரா ராம்

செம்மை நிறக் கதிரை வானெங்கும் பரப்பியபடி அந்த அழகு நிறைந்த ஆதவன் வானில் உதயமாகிக் கொண்டிருந்தான் இனிதே....

குயிலும் தன் இன்னிசையால் மரம், செடி, கொடிகளை எழுப்பி வருடிக்கொண்டிருந்த வேளை, காற்றும் தன் பங்கிற்கு சலசலத்தது அழகாய்….

தன் மேல் பட்ட பூங்காற்றை கண் மூடி அனுபவித்தவள், மெல்ல கைகூப்பி தனது நாளை துவங்க ஆரம்பித்தாள்…

krishna saki“குறை ஒன்றும் இல்லை…

மறை மூர்த்தி கண்ணா…

குறை ஒன்றும் இல்லை கண்ணா…

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா…

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா…

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நீ இருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா…

மணிவண்ணா… மலையப்பா… கோவிந்தா…. கோவிந்தா….”

என மனம் உருக பாடியவளின் விழி ஓரம் சில நீர்த்துளிகள் கோர்க்க, அதை கொஞ்சமும் பொருட்படுத்தாது மெல்ல விழி திறந்து, மயக்கும் விழிகளும், அழகு கொஞ்சும் முகமும், புல்லாங்குழல் இன்னிசையால் கட்டிப்போடும் காந்த கீதமும் தன்னகத்தே கொண்ட அந்த மாயக்கண்ணனை இமைக்காது பார்த்தாள் அவள்….

“கண்ணா… இன்னைக்கு நான்….” என அவள் சொல்ல ஆயத்தமான போது, அவளின் செல்போன் சிணுங்கியது

“யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே

கண்ணனோடு தான் ஆட…

பார்வை பூத்திட பாதை பார்த்திட

பாவை ராதையோ வாட….

இரவும் போனது பகலும் போனது

மன்னன் இல்லையே கூட….

இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட…

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ…

ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ…

பாவம் ராதா….”

என்ற இனிமையான பாடலுடன்….

கண்ணனுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் தடைப்பட்ட அவளது கவனம் பாடலில் பதிய, அவள் தன் எதிரே இருந்த அந்த மாயக்கண்ணனையும், செல்போன் இருந்த திசையையும் திரும்பி பார்த்து சிரித்துக்கொண்டாள்…

செல்போனை எடுத்தவள், அதில் தெரிந்த கோகி என்ற பெயரை பார்த்துவிட்டு,

“சொல்லு கோகி…. எழுந்துட்டியா?..” எனக்கேட்டாள்….

“நான் எழுந்தது இருக்கட்டும்டீ… நீ என்ன செஞ்சுட்டு இருக்குற?..” என எதிர்முனையிலிருந்து கேள்வி வர,

“என்ன செய்வாங்க இந்த நேரத்துல??...” என கோகியிடம் வினவினாள் அவள்….

“எல்லாரும் என்ன செய்வாங்களோ அத தான் நீ செய்ய மாட்டீயே… நீதான் தனிப்பிறவி ஆச்சே….”

“ஹேய்…. கோகி…. நேத்து எம்.ஜி.ஆர் படம் பார்த்த போல…. சொல்லவே இல்லை….”

“அடியே… நான் என்ன கேட்குறேன்…. நீ என்ன பேசுற?... ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லுறியா?... எதிர்கேள்வி கேட்டுட்டே இரு…. என்னைக்குத்தான் இத விட போறியோ தெரியலை….”

“அதான் தெரியலைல்ல விட்டுடு… சிம்பிள்….”

“காலையிலேயே எனக்கு ஏண்டி ப்ரெஷர் ஏற வைக்குற?....”

“சும்மா நீயே அப்படி சொல்லிக்க வேண்டியது தான்… அதெல்லாம் உனக்கு எதுவும் ஆகாது… இன்னும் நீ இருந்து பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு….”

“சரிதான்… என்னவோ கடைசியில ஒரு வார்த்தை சொன்னியே அது கண்டிப்பா நடக்கத்தான் போகுது…. அங்க வரும்போது நான் பார்க்க வேண்டியது நிறைய தான் இருக்கு…..” என பேசிய கோகியின் வார்த்தைகளில் ஒரு அழுத்தம் தெரிய, அவள் விழிகள் சட்டென்று மூடி திறந்தது…

“இப்படியே நீ பேசிட்டே இருந்தேன்னு வை, நான் போக வேண்டிய இடத்துக்கு போன மாதிரி தான்…” என்று அவள் குறைப்பட்டுக்கொள்ள,

“அடிங்க…. மணியை பாருடி முதலில்…” என கோகி சொன்னதும் அவள் கடிகாரத்தை திரும்பி பார்க்கவில்லை…

ஏனெனில் அவளுக்குத் தெரியும், மணி என்னவாக இருக்கும் என்று…. அது தெரிந்ததும் அவள் இதழ்களில் சிறு புன்னகை மலர,

“என்னடி கடிகாரத்தை பார்த்தீயா?...” - கோகி

“பார்க்கலைன்னு சொன்னா விடப்போறியா?....”

“அப்ப நீ பார்க்கலை… தெரியும்டீ… எனக்கு உன்னைப்பத்தி… விடிஞ்சும் விடியாம இருக்குற இந்த நேரத்துல நான் போன் பண்ணியிருக்கேன்… இதுல நீ கிளம்ப லேட் ஆகும்னு குறைப்படுற எங்கிட்டயே…. எல்லாம் என் நேரம்டீ….”

“விடிஞ்சும் விடியாமலா?... நல்லாப்பாரு கோகி… உன் சோடாபுட்டி கண்ணாடியை போட்டு… மணி 6.30 ஆகப்போகுது….”

“அதெல்லாம் பார்த்துட்டு தாண்டீ உனக்கு நான் போன் பண்ணியிருக்கேன்….”

“ஹப்பாடா கோகி… இப்போவாச்சும் உனக்கு புரிஞ்சதே… நீ எனக்கு போன் பண்ணினன்னு… சந்தோஷம்….”

“அடிப்பாவி கிராதகி… எதுக்கு போன் பண்ணினன்னு சொல்லாம சொல்லுறியா?...”

“அத என் வாயால வேற சொல்லணுமா கோகி நான் இப்போ?...”

“யாரு நீதான?.... நீ சொல்லிட்டாலும்… வாயத்திறந்தாலே கண்ணன் புராணம் தான்…”

“இப்போ எதுக்கு நீ என் கண்ணனை உள்ளே இழுக்குற?.... வீணா கோபத்தை கிளறாதே கோகி சொல்லிட்டேன்…”

“ஆமாடி… நான் இழுக்குறேன் அவனை… நீதாண்டீ தினமும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணான்னு பாட்டு பாடி அவனை தொந்தரவு பண்ணுற….”

“தினமும் இத ஒரு குறையா சொல்லிக் காட்டிடாட்டா உனக்கு பொழுதே விடிஞ்ச மாதிரி இருக்காதே….”

“ஆமாடி… அப்படியேதான்…”

“இதோடா நானா பாட்டு கிளாஸ் போறேன்னு உங்கிட்ட அடம்பிடிச்சேன்… வலுக்கட்டாயமா என்னை கொண்டு போய் சேர்த்தீங்க… என் நேரம் எனக்கு பாட்டு வந்துடுச்சு… அப்போ இருந்து இப்போவர என்னை தினமும் பாடு பாடுன்னு தொந்தரவு பண்ணுறது என்ன?... இப்போ இப்படி பேசுறது என்ன?... ஹ்ம்ம்… கோகி… நீ இங்க வருவல்ல… அப்போ உன்னை பார்த்துக்கறேன் நான்…” என அவள் சொன்னதும், மறுமுனையில் கோகியின் நிறைந்த சிரிப்பு சத்தம் கேட்டது…

“சரிடீ தங்கமே… நேரத்துக்கு இன்னைக்கு போக வேண்டிய இடத்துக்கு போயிட்டுவா… நான் அப்புறம் பேசுறேன்….”

“ஹ்ம்ம்… சரி….”

“பார்த்து பத்திரம் மா….”

“சரி பாட்டி… பயப்படாத…. நான் அங்க போனதும் என்ன நிலவரம்னு உனக்கு போன் பண்ணுறேன்… சரியா….?...”

“உன் கண்ணன் உனக்கு நல்ல வழியே காட்டுவார் நதி… நான் போனை வச்சிடுறேன்…” என போனை வைத்துவிட்டார் நதி என்று அவளை அழைத்த அவளின் பாட்டி கோகிலவாணி….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.