(Reading time: 11 - 21 minutes)

13. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

ன்ன நைனா இது, நம்ம பொழைப்பு இப்படி ஆகிப்போச்சு.  என்னால வேலை செய்யவே முடில நைனா.  ராவானா ஒடம்பெல்லாம் வலிக்குது.  அந்தாள் துட்ட வேற நேரா தேவிக்கைல கொடுத்துட்டான்.  சரக்கடிக்கன்னு அதுக்கிட்ட கேக்க என்னவோ மாதிரி இருக்குது”, தினம் புலம்புவது போல அன்றும் புலம்ப ஆரம்பித்தான் வெற்றி.

“நான் மட்டும் இஷ்டப்பட்டாடா போவறேன்.  எனக்கும் கடுப்பாத்தான் இருக்குது.  இந்தாள்  மிரட்டினானேன்னு தேவியை வேற பாதி வேலையை விட்டு நிக்க சொல்லிட்டோம்.  இப்போ இன்னா பண்ண முடியும் சொல்லு.  நாம வேலைக்குப் போய்த்தான் ஆவணும்”

“அது எதுக்கு நைனா.  தேவிக்கிட்ட உனக்கு உடம்பு முடியலை.  வேலை செய்ய சொல்ல உனக்கு நெஞ்செல்லாம் வலிக்குதுன்னு ஒரு பிட்டை போட்டா உடனே அது பதறி அடிச்சுட்டு பழையபடி எல்லா ஊட்டு வேலைக்கும் போவும் நைனா” 

Vidiyalukkillai thooram

“அவ போவாடா.  ஆனா அந்தாள் நம்ம சங்க அருத்துடுவானே.  ஏற்கனவே இப்போ ஒரு வாரமா, அவளை காலை வேலைக்கும் அனுப்பாத, உனக்கு கூலி ஏத்தி தரேன்னு சொல்லிட்டு இருக்கான்.  இதுல மறுபடி அவ சாயங்காலமும் போறான்னு தெரிஞ்சா அம்புட்டுதான்”

“ஏன் நைனா, அவன் ஏன் தேவியை வேலைக்கு அனுப்பாம பள்ளிக்கூடம் அனுப்ப சொல்றான்.  அவ நல்லபடியா படிக்கணும்ன்னு நினைக்கற அளவுக்கு அவன் நல்லவன் இல்லையே”

“எனக்கும் அதுதாண்டா ரோசனையா இருக்குது.  இவன் எதுனா தேவியை ரூட் விடறானா தெரியலை.  நானும் ரெண்டு, மூணு தபா அவ பின்னாடி காலைல போய் பார்த்தேன்.  ஆனா அந்தாள் அவ பின்னாடிலாம் போவல.  ஏன் என்கிட்ட கூட தேவியைப் பத்தி எதுவும் கேக்கல.  ஆனா அவ படிக்கறாளா, பள்ளிக்கூடத்துக்கு எதுனா பணம் கட்டணுமா, இப்படித்தான் கேக்கறான்”

“ஹ்ம்ம் நீ என்ன சொன்னாலும், என்னால நம்ப முடியலை.  ஆனா, நைனா நான் அந்தாள்கிட்ட சொல்லி வேலையை விட்டு நிக்கப்போறேன்”

“டேய் வெற்றி அவசரப்படாதேடா.  இந்த ஊருல நம்மையும் மதிச்சு அஞ்சோ, பத்தோ கொடுக்கறது அவன் ஒருத்தன்தான். அதும் தவிர சாராயக்கடை வச்சிருக்கவனும் அவன் சொந்தக்காரந்தான். அந்தாளை மொரச்சுட்டா, எல்லாத்துக்கும் சேத்து மொத்தமா ஆப்பு வச்சுப்புடுவான்.  ஒரு நாளப் போல பக்கத்து ஊருக்குப் போய் குடிச்சுட்டு வர முடியுமா.  இல்லை உன்னோட கூட்டாளிங்ககிட்ட சொல்லமுடியுமா.  அவனுங்களும்  உன்னைய மாதிரியே தண்ட சோறுதான்.  அதால இன்னும் கொஞ்ச நாளைக்கு வேலை செய்யலாம்.  மெது மெதுவா எதுனா காரணம் சொல்லி கழண்டுக்கலாம், சரியா?”, மணி கேட்க, தீவிர யோசனைக்குப் பின் வெற்றி அரை மனதுடன் ஒத்துக்கொண்டான்.

அன்றும் மனதில்லா மனதுடன் வேலைக்கு வந்த வெற்றி, தன்னை வேலைக்கு வரக் கட்டாயப்படுத்திய நல்லதம்பியை திட்டிக்கொண்டே வேலை செய்து கொண்டிருந்தான்.  மணி, நல்லதம்பி வரும் நேரம் ஆகிவிட்டதால் வெற்றியை வாயை மூடிக்கொண்டு வேலை செய்ய சொல்ல அந்த நேரம் சரியாக நல்லதம்பியும் வந்து சேர்ந்தான்.

“எலேய் வெற்றி, மணி ரெண்டு பேரும் இங்க வாங்க”, நல்லதம்பி கூப்பிட…. வந்ததும், வராததுமாக இந்தாள் எதுக்கு நம்மளை கூப்பிடறான், என்று யோசித்தபடியே வெற்றியும், மணியும் அவன் அருகில் வந்து சேர்ந்தனர்.

“ஏன்யா மணி.  நான் தேவியை வீட்டு வேலைக்கெல்லாம் அனுப்பாதன்னு சொன்னேனே.  நீ அதை சொல்லலையா.  இன்னமும் காலைல எல்லா வீட்டுக்கும் போகுது போல”

“ஐயா, நான் சொல்லிட்டேன்யா.  ஆனா அதுதான் கேக்க மாட்டேங்குது.  வெற்றியும், நானும் கொண்டுட்டு வர்ற கூலி மாசம் முழுக்க சமாளிக்க போதாதுன்னு சொல்லுது.  அதுவும் அதுல பாதி சாராயக்கடைலையே போகுது.  ஏற்கனவே தேவி, துட்டு பத்த மாட்டேங்குது ,  மறுபடி சாயங்காலமும் வேலைக்கு போவப்போறேன்னு சொல்லுதுய்யா.  இதுல எங்க இருந்து அது  காலைல வேலைக்கு  போவறதை  நிப்பாட்டறது”

“ஐயா, நைனாக்கும் இங்க வேலை செய்ய முடியலையா.  வேலை முடிச்சுட்டு வந்து உடம்பு நோவுது, கை காலெல்லாம் இழுக்குதுன்னு சொல்லிட்டே இருக்குது.  இன்னும் எத்தனை நாள் அதால வர முடியும்ன்னு தெரியலை”, மணி சொல்லவேண்டாம் என்று கூறியும், வெற்றி எந்த நேரமும் வேலையை விட்டு நின்று விடுவோம் என்று கூறினான்.

“என்னா வெற்றி இப்படி சொல்ற.  நான் உங்களுக்கு என்னலாம் பண்ணலாம் அப்படின்னு யோசிச்சுட்டு இருக்கேன்.  நீ என்னடான்னா வேலையை விட்டு நிக்கறத பத்தி பேசற.   இனி தினமும் நானே சாராயம் வாங்கித் தரேன்.  மணி, நீயி உன்னால முடிஞ்சவரைக்கும் செய்யி.  வெற்றி மணிக்குதானே உடம்பு சரி இல்லை உனக்கு என்ன ஆச்சு.  இங்க பாருங்கய்யா.  நான் சொல்றதக் கேட்டு நடந்தீங்கன்னா, உங்கள எங்கியோ கூட்டிட்டுப் போய்டுவேன்.  அப்படி இல்லாம, உடம்பு நோவுது அது இதுன்னு நான் சொல்றதக் கேக்காம தேவியை வேலை செய்ய வுட்டுட்டு நீங்க அப்படியே ஊரை சுத்திட்டு வரலாம்ன்னு நினைச்சீங்கன்னா அப்பறம் நல்லதம்பி ரொம்ப கெட்ட தம்பி ஆகிடுவான் சொல்லிட்டேன்.  எனக்கு டேக்கா கொடுக்கணும்ன்னு மட்டும் நினைக்காதீங்க.  சாரயக்கடை வச்சிருக்கறவன்லேர்ந்து, தண்டு பீடி விக்கற பொட்டிக் கடை வச்சிருக்கறவன் வரை அத்தனை பேரும் என் சொந்தக்காரங்கதான்.  அப்பறம் உங்களுக்கு எதுவும், எங்கியும் கிடைக்காம பண்ணிடுவேன்”, நல்லதம்பி மிரட்ட, மணியும், வெற்றியும் இவன் நம் அடி மடியிலேயே கை வைக்கிறானே என்ற யோசனையோடு வேலை செய்ய சென்றார்கள்.

தன் பின்னர், நல்லதம்பியின் தயவால் மணிக்கும், வெற்றிக்கும் தாராளமாக சாராயம் கிடைக்க,  வீட்டிற்கு ஆடிக்கொண்டாவது வரும் நிலையில் இருந்தவர்கள் தோப்பிலேயே நினைவு,  நீச்சிலாமல் கிடக்கும் அளவிற்கு மாறினார்கள்.  பாதி நாட்கள் வீட்டிற்கு கூட அவர்களால் செல்ல முடியாத நிலை.  இவர்களின் இந்த நிலை தேவியை மிகவும் பாதிக்க அவள் தந்தையிடமும், அண்ணனிடமும் பேச எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.  இந்த நிலையே அந்த மாதம் முழுதும் நீடிக்க தேவி நேரடியாக நல்லதம்பியை சந்திக்க சென்றாள்.

“வாம்மா தேவி.  இன்னைக்கு  சம்பள நாலு இல்லையே, எதுனா பிரச்சனையா?”

“ஐயா, நைனாவப்பத்தியும், அண்ணனப்பத்தியும் உங்கக்கிட்ட பேசிட்டு போகலாம்ன்னு வந்தேனுங்க”

“அவங்களப் பத்தியா, என்ன சொல்ற.  இப்போதான் ஒழுங்கா வேலை செய்யறாங்களே.  அவங்க வேலை செஞ்சு சம்பாதிக்கறதால உன்னையக் கூட சாயங்கால வீட்டு வேலைக்கெல்லாம் அனுப்பறது இல்லைன்னு சொன்னாங்க”, ஏதோ அந்த விஷயத்திற்கும் தனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்பது போல் பேசினான் நல்லதம்பி.

“ஐயா, அவங்க வேலை செய்ய ஆரம்பிச்சாங்களேன்னு சந்தோஷப்பட்டேன்.  அது எல்லாம் ஒரு வாரம்தான்.  இப்போலாம் ரொம்ப குடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.  பாதி நாளு வீட்டுக்குக்கூட  வர்றதில்லை.  நான் உங்ககிட்ட இருந்து வாங்கிட்டு போற பணத்தையும், எங்க ஒளிச்சு வச்சாலும் எப்படியோ கண்டுபிடிச்சு எடுத்துட்டுப் போயிடறாங்க.  நானாச்சும் வேலைக்குப் போயி இவங்கள பாத்துக்கலாம்ன்னாலும் அதுக்கும் விட மாட்டேங்கறாங்க.  காலைல செய்யற வேலையும் நிறுத்த சொல்லி ஒரு வராமா ஒரே தகராறு பண்ணிட்டு இருக்காங்க.  இவங்களும் பணம் கொடுக்காம, நானும் வேலைக்குப் போகாம எப்படி எல்லாரும் சாப்பிடறது, சொல்லுங்க”, தேவிக்கு பேசும்போதே கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.  அதைத் துடைத்தபடியே மீண்டும் நல்லதம்பியிடம் பேச ஆரம்பித்தாள்.

“பாதி நேரம் நான் சாப்பிடாமத்தான் பள்ளிக்கூடத்துக்குப் போறேன்.  அதுக்கூட  பரவாயில்லை, இவங்க குடிச்சுப்புட்டு  எங்க விழுந்து கெடக்காங்கன்னே தெரியலை.  வீட்டுக்கு வர்றதேயில்லை.  நான் ஒரு பொண்ணு தனியா இவங்களைத் தேடி போவ முடியுமா.  நீங்கதான் அவங்களுக்கு புத்தி சொல்லி கொஞ்சம் திருத்தணும் ஐயா”, என்று சாத்தானிடமே வேதம் ஓத சொன்னாள் தேவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.