(Reading time: 11 - 21 minutes)

தேவி நல்லதம்பியை நம்பி பேசியதில் அவள் தவறு ஏதும் இல்லை.  தேவி சிறு பெண், அவளுக்கு புரியும் வயது இல்லை என்று அஞ்சலை இருந்த வரையில் அவனைப் பற்றி பேசியதே இல்லை.  அவளே சொல்லாதபோது, மணியும், வெற்றியும் எங்கிருந்து அவனைப்பற்றி சொல்வார்கள்.  எனவே நல்லதம்பியை தன் தந்தைக்கும், தமையனுக்கும் வேலை கொடுத்த நல்லவனாகாத்தான் பார்த்தாள் தேவி.

வாடி வா, இப்போத்தான் என் பிளான் ரூட்ல ஒழுங்கா போகுது.  மொதல்ல காசுக்கு அல்லாட ஆரம்பிங்க.  அப்பறம் ஒண்ணு ஒண்ணுதுக்கா அல்லாட வச்சு உன்னை என் பக்கம் இழுக்கறேன், என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டபடியே வெளியில் அவள் சொல்வதை மிக வேதனையுடன் கேட்பதைப் போல் பாவனை செய்தான் நல்லதம்பி.

“அவனுங்க அப்படியா பண்றானுங்க தேவி.  எனக்கு தெரியவே இல்லை.  நான் ஒரு பதினோரு மணிக்கா வந்துட்டு மூணு மணியோட கிளம்பிடுவேன்.  அதுவரைக்கும் அவனுங்க ரெண்டு பேரும் ஒழுங்காத்தான் இருப்பாங்க.  ஆறு மணிக்கு மேல எல்லாரும் கிளம்பினப்பறம் தண்ணியடிக்க ஆரம்பிக்கறாங்க நினைக்கறேன்.  ஏன்னா அப்போதான் தோப்புல யாரும் இருக்க மாட்டாங்க.  நீ கவலைப்படாதே, நான் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசி இனி ஒழுங்கா இருக்க சொல்றேன்.  நீ நல்லாப் படிக்கற வேலையை மட்டும் பாரு.  இந்த முறையும் நல்ல மார்க் வாங்கி நம்ம கிராமத்துக்கு பேர் வாங்கித் தரணும்”, மிக மிக ஒழுக்க சீலன் போல தேவியிடம் பேசினான்.

“ரொம்ப நன்றிங்க ஐயா.  நீங்க மட்டும் அவங்களை நல்லபடியா மாத்திட்டீங்கன்னா உங்களுக்கு பெரிய புண்ணியமா போகும் ஐயா.  இவங்க இப்படி இருக்கறதால, பாதி நேரம் என்னாகுமோன்னு பயத்துலயே படிக்க முடியலை.  இப்போ நீங்க பேசினத கேட்டப்பறம், பாதி பயம் போய்டுச்சுய்யா.  இனி ஒழுங்கா படிப்பேன்”, அவனுக்கு மீண்டும், மீண்டும் நன்றி உரைத்தபடியே அவனிடமிருந்து விடை பெற்றாள் தேவி.

கடந்த இரண்டு மாதங்களாக மீனாவும், பலவழிகளில் நல்லதம்பியைக் கண்காணித்தாள்.  ஆனால் சம்பளம் கொடுக்கும் நாள் தவிர அவன் தேவியை சந்திக்கவோ, பேசவோ முயற்சிக்காததால், மீனாவும் நல்லதம்பி தேவியை விட்டுவிட்டான் என்ற முடிவுக்கு வந்து அவனைக் கண்காணிப்பதை நிறுத்தினாள்.  அவனை வேவு பார்க்க எப்படியும் மீனா முயல்வாள் என்று தெரிந்தே நல்லதம்பி தேவியை முற்றிலும் தவிர்த்தான். 

தேவி நல்லதம்பியிடம் பேசிய பின்னர்  பெரிய மாற்றம் எதுவும் நேரவில்லை.  இன்னும் சொல்லப்போனால், மாலையில் மட்டும் குடித்துக் கொண்டிருந்தவர்கள், பகலிலும் குடிக்க ஆரம்பித்தார்கள்.  நல்லதம்பி முடிந்தவரை அவர்களை போதையிலேயே வைத்திருந்தான்.  அவர்கள் வேலை செய்யாவிடினும் அந்த மாத சம்பளத்தை மட்டும் மிகுந்த பரிவுடன் தேவியிடம் கொடுத்தான்.  தேவி மறுபடியும் அவனிடம் முறையிட அவனும் அவனால் முடிந்தவரை திருத்த முயற்சிப்பதாக கூறி அனுப்பினான்.  மணியாலும், வெற்றியாலும் ஒரு நாள் கூட சாராயம் இல்லாமல் இருக்க முடியாத  நிலைக்கு வந்தார்கள்.  அதை அபரிமிதமாகத் தரும் நல்லதம்பிக்காக உயிரையும் விடத்தயாராக இருந்தார்கள்.  அவன் யாரையேனும் கொலை செய்து விட்டு வா என்றாலும் செய்வதற்கு தயாராக இருந்தார்கள்.

நாளுக்கு நாள் மணி மற்றும் வெற்றியின் குடிவெறி அதிகமாகிக் கொண்டே சென்றதால் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளான தேவி நல்லதம்பியை மீண்டும் சந்தித்து முறையிட அவனும் தானும் அவர்களை திருத்த எத்தனையோ முயன்றதாகவும் ஆனால் அவர்கள் திருந்திய வழியாக தெரியவில்லை என்றும் கூறினான்.

“எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ஐயா.  போன வாரம் புல்லா நைனா ஒரே வயத்து வலின்னு பொலம்பல்.  சரின்னு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் மருந்து வாங்கி கொடுத்து எல்லாம் பண்ணினா.  டாக்டர் வீட்டுலேர்ந்து நேரா குடிக்க போய்டுச்சு.  அண்ணனும், அவரு  கஷ்டப்படறதை பார்த்துட்டும் அவரை இழுத்துட்டுப் போறான்.  அவன் மட்டும் நல்லாவா இருக்கான்.  நேத்து முழுக்க அவனும் ஒரே வாந்தி.  அம்மாதான் இல்லாம போய்டுச்சு.  இவங்களும் குடிச்சே அழிஞ்சுடுவாங்களோன்னு கவலையா இருக்குதுய்யா”, தன் மனபாரம் அத்தனையையும் நல்லதம்பியிடத்தில் அழுதபடியே கொட்டித் தீர்த்தாள் தேவி.

“அய்யே என்னப் புள்ள இது அழுவாத.  வருஷக்கணக்கா  கெட்டு அழிஞ்சவங்களை எல்லாம் நல்லபடியா டாக்டருங்க குணப்படுத்தி இருக்காங்க.  வெற்றியும், மணியும் இப்போ ஒரு ரெண்டு, மூணு மாசமாத்தானே இப்படி இருக்காங்க.  கவலைப்படாதே.  குணப்படுத்திடலாம்.  நீ உங்கப்பாவை எங்க கூட்டிட்டுப் போய் காட்டின”

“எங்க ஸ்கூல் பக்கத்துல இருக்கற டாக்டர்கிட்டத்தான் காமிச்சேன் ஐயா.  அவருதான் இப்படியே குடிச்சுட்டே இருந்தேன்னா குடல் வெந்தே சாக வேண்டியதுதான்.  கொஞ்ச கொஞ்சமா நிறுத்துற வழியப்பாருன்னு சொல்லி அனுப்பினாரு”

“அது டாக்டர்ன்னா அப்படித்தான் சொல்வாங்க.  உனக்கு இப்போ அரைப்பரிட்சை லீவு வரும் இல்லை.  அப்போ நாம சென்னைக்கு கூட்டிப்போய் அங்க பெரிய டாக்டர்கிட்ட காட்டலாம்.  இப்போ குடியை மறக்கடிக்க ஏகப்பட்ட சிகிச்சை வந்துடுச்சு”

“அப்படிங்களாய்யா, ஆனா அதுக்கெல்லாம் எக்கச்சக்கமா துட்டு செலவாகுமே.  அதுக்கு நாங்க எங்க போவோம் ஐயா”

“அதப்பத்தி எல்லாம் நீ கவலைப்படாத தேவி.  நான் பார்த்துக்கறேன். இம்புட்டு நாளா என்கூடவே சுத்திட்டு இருந்தவங்களுக்காக நான் இதுக்கூட செய்ய மாட்டேனா?”, என்ற நல்லதம்பி, அவளை ஆருதல்படுத்துகிறேன் என்ற பெயரில் அவளின் தோளை வருட ஆரம்பித்தான்.  தேவியும் அவளிற்கு இருந்த மனவருத்தத்தில் அவனின் குள்ள நரி செய்கையை கவனிக்கவில்லை.  

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.