(Reading time: 13 - 26 minutes)

"துசரி.. நீ சொல்லறே.. கொக்கு தலைலே வெண்ணையை வச்சு பிடிக்கணும்னு.. நான் சொல்லறேன்.. ஆசையிருக்கு தாசில் பண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்கன்னு.. இந்த ஏழை கிளார்க்குக்கு பிள்ளையா பொறந்து தொலைச்சுட்டான்.. நானே ஏதோ நல்ல பெரிய உத்யோகத்துலே இருந்திருந்தா.. நான் இப்படியா என் ஒரே பைய்யனை சொல்லியிருப்பேன்.. எல்லாம் நேரம்..கடைசி வரை பிரமோஷன் இல்லாம கிளார்க்காவே ரிடர்யர்மென்ட் ஆகணும்னு" என்று அலுத்துக் கொண்டவர்,

"சரி சரி.. போ.. போய் அவனுக்கு டிபன் குடு.. ஏதோ கிளாசுக்கு போனம்னுட்டு சொன்னான் நேத்திக்கே.. யாரோ ஒரு ரிடையர்ட் ஐ.ஏ. எஸ். ஃப்ரீயா அப்பப்போ கோச்சிங்க் குடுக்கறாராம்..பக்கத்தாத்து மாமா சொன்னார்னு சொன்னான்..போய்ட்டு வரட்டும்..நானும் என் வயத்துக்கு கொஞ்சம் சாந்தி பண்ணிக்கறேன்..இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?..அப்பவே பொங்கலும் கொத்ஸுவும் மணக்கற வாசனை வந்துது.. சரிதானே?", என்று வாசனை பிடித்தபடி டைனிங்க் டேபிளுக்கு சென்றார்.

'என்ன இருந்தாலும் பிள்ளையாச்சே.. இருக்காதா பின்னே..', என்று நினைத்தவாறு அவரை பின் தொடர்ந்தாள் சாரதா.

மணக்க மணக்க பொங்கலும் கொத்ஸுவும், சட்னியும் தயாராய் இருந்தது டேபிளில்.. மௌனமாக உண்டு முடித்தபின்,

"ஏம்மா சாரு, மஹதி எங்கே?." என்று ராமமூர்த்தி கேட்டார்.

"அவளுக்கு இன்னிக்கு ஃபர்ஸ்ட் ஷிஃப்டுங்கறதாலே ஆறு மணிக்கே ஹாஸ்பிட்டல் போய்ட்டா.."

"ஒ..அப்ப சரி.. அதானே பார்த்தேன்.. இவ்வளவு அருமையா இன்னிக்கு கொத்ஸு இருக்கேன்னு.. நிச்சயம் இது மஹதி தானே செஞ்சுட்டு போனா?"

"நாக்கு நன்னா மொழ நீளம் இருக்கு உங்களுக்கு..அதெப்பிடித்தான் தெரியுமோ உங்களுக்கு.. இது நான் பண்ணலைன்னு.. நான் தான் இன்னிக்கு அவள் கிட்டே சொன்னேன் இனிமே நீயே ஆத்துலே எல்லா பொறுப்பையும் ஏத்துக்கோ, நாளை பின்னே கல்யாணமாகி போறச்சே ஈசியா இருக்கும்னேன்.. பாவம் கொழந்தை அதான் கார்த்தாலேயே எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிருக்கா.."

"அம்மா அப்பா சொல்லறது நிஜம் தான் இன்னிக்கு பொங்கலும் கொத்ஸுவும் சூப்பர்.. என்னாலே முடிஞ்சா மஹதிக்கு தங்க வளை பண்ணிப் போடுவேன் அவ கைக்கு", என்று மனமார சொன்ன மகனை பார்த்த சாருவுக்கு, பூரிப்பில் முகம் விகசித்தது.

"ஏன்னா பார்த்தேளா?, கேட்டேளா?.. இப்படி ஒரு சிங்கக்குட்டியை பெத்துட்டு.. பணத்துக்காக பயப்படறேளே?.. நீங்க வேணா பாருங்கோ வஸந்த் இந்த வாட்டி நிச்சயம் பரிட்ச்சை கிளியர் பண்ணிடுவான்.."

"ஏதோ உன் வாய் முகூர்த்தம் பலிச்சா சரி.. டேய் நீ சரியா பத்து மணிக்கு அந்த இன்ஸ்டிடுயூட் போகனும்னியே சட்டு புட்டுன்னு கிளம்பற வழிய பாரு, சாரு உனக்கு இன்னிலேந்து ஏதோ புது டியுஷன் பாட்ச் பத்தரைக்குன்னியே.. எத்தனை பேரு வருவா?", என்று மனதுள் கணக்கிட்டபடி கேட்டார்..

"அதுவா ஒரு ஐஞ்சு ஆறு சீனியர் ஸ்டுடன்ட்ஸ் வரப் போறா.. எல்லாரும் யுனிவர்சிடியிலே எம்.ஏ. ஸ்டுடன்ட்ஸ்.. கொஞ்சம் பிரைவேட் கோச்சிங் வேணும்னு வரா, யுனிவர்சிடியிலே என்னோட ஃப்ரெண்ட் வத்ஸலா ஃப்ரொஃபசராயிருக்கா இல்லியோ, அவ தான் இவாளை ஏற்பாடு பண்ணி தந்திருக்கா.. வத்ஸலா பாவம் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணறா.. அவளுக்கு வர பிரைவேட் டியூஷன்களை எல்லாம் எனக்கு அனுப்பிக் கொடுக்கறா.. நானும் அவளை மாதிரி யுனிவர்சிடியிலே உத்யோகம் கிடைச்ச போது சேர்ந்திருந்தா இப்போ என் நிலைமையே வேற மாதிரி ஆகியிருக்கும்.. என்ன பண்ண எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்பா..உங்கம்மா மட்டும் தடுத்திருக்கலைன்னா.. நானும் இப்போ நன்னா சம்பாதிச்சுண்டு இருந்துருப்பேன்", என்று வருத்தப்பட்டுக் கொண்டாள்.

"சரி, சரி, விட்டா பிலாக்கனம் பாட ஆரம்பிக்காதே.. எங்கம்மாவை கொறை சொல்லாட்டா பொழுது நன்னா விடியாதே உனக்கு... போ போய் ஆற வேலையை பாரு.. நானும் கொஞ்சம் லைப்ரரிக்கு போயிட்டு.. அப்பிடியே மஹதிக்கு அந்த டாக்டர் பைய்யன் ஜாதகம் கொடுத்துருக்காளே அது பொருந்தியிருக்கான்னு பார்த்துட்டு வறேன்", என்று கிளம்பத் தயாரானார்.

பாத்திரங்களை எடுத்து ஒழித்து போட்டுவிட்டு வெளியே வந்த போது, வஸந்த் தயாரகி வந்து கொண்டிருந்தான்.

ஆறடி உயரத்தில் கம்பீரமாய் வெள்ளை வெளேர் என்று ராஜா போல் நின்ற மகனை பார்த்தவளுக்கு பெருமையில் பேச்சு வர மறுத்தது.. இவனா அவன் எப்படி இருந்த குழந்தை.. சோனியாய் குச்சி குச்சி கை காலுடன்.. ஈனஸ்வரமாய் அழுத குழந்தை தான் இவன் என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள்.

"ம்.." பெருமூச்சுவிட்டவளை பார்த்து புன்னகைத்தவன், " அம்மா நான் போயிட்டு வறேன்..வரதுக்கு சாயங்காலம் ஆயிடும்.. அப்பிடியே என்னோட ஃப்ரெண்டை பார்த்துட்டு தான் வருவேன்.. அதனால் பயப்படாதே லேட் ஆச்சுன்னா..", என்று சட்டை கை பொத்தானை போட்டுக் கொண்டே சொன்னவனை பார்த்தவள்,

"சரிடா குட்டி.. பத்திரம்..", என்று விடை கொடுத்தாள் சாரதா.

டுத்த அரை மணியில் சாரதாவுக்கு நிற்க நேரமில்லை.. கட கடவென்று வாசல் பக்கத்திலிருந்த மியூசிக் ரூமை திறந்தவள் பாயை விரித்து வைத்தாள்.. பின் தம்புரா ஸ்ருதி பெட்டி அனைத்தையும் எடுத்து தயார் நிலையில் வைத்தாள்.. பக்கத்திலேயே ரெண்டு பாட்டில் தண்ணீரையும் வைத்தவள் பின் அனைவருக்காகவும் காத்திருக்கத் தொடங்கினாள்.

அவர்கள் வீடு பழைய மாம்பலத்தில் இருந்த ஒரு உள்ளடங்கிய காலனியில் இருந்தது.. தெரு முனையில் அமைந்த ஒரு தனி வீடு.. இன்றைக்கு அதன் மதிப்பு பல கோடிகள்.. பரம்பரையாய் ராமமூர்த்திக்கு வந்து சேர்ந்திருந்தது.. அவர்கள் தாத்தா வழி சொத்து.. சுமார் ரெண்டு கிரவுண்ட் நிலத்தில் அமையப் பெற்றிருந்த மாடி வீடு.. கீழே நுழைந்தவுடன் ஒரு குட்டிச் சுவருடன் கூடிய வராண்டாவும் அதன் எதிரிலேயே அமைந்திருந்த ஒரு தனி ரூமும் இருந்தன.. வீட்டிற்குள் செல்லக் கதவும் இருந்தது.. அந்த தனியறையை சில வருடங்களுக்கு முன் கூட வாடகைக்கு கொடுத்திருந்தார் ராம மூர்த்தி..

இப்போது சாரதாவுக்கு பாட்டு கிளாஸ் நடத்த இடம் போதாததால் அந்த அறையை அவள் உபயோகத்திற்கு கொடுத்திருந்தார்.. உள்ளே கூடமும், அதையொட்டிய மூன்று பெரிய அறைகளும், ஒரு சமையல் கட்டும் சாப்பிடும் இடமும் சேர்ந்த பகுதியும் இருந்தது.. பின் பக்கத்திற்கு செல்ல சமையல் கட்டிலிருந்து ஒரு கதவும் அதையொட்டிய ஒரு பகுதியில் பாத்ரூம் வசதிகளும் பாத்திரம் கழுவுமிடமும் இருந்தது.. அதற்கும் பின்னால் தோட்டமும் கிணறும் துணி துவைக்கும் கல்லும் அமையப் பெற்றிருந்தது.

வாசல் வராண்டாவிலிருந்து மாடிக்கு செல்ல தனி வழி இருந்தது.. மாடியில் இரண்டு படுக்கை அறையுடன் கூடிய ஒரு சின்ன போர்ஷன் இருந்தது.

"குட்மார்னிங் மேடம்", என்று சொல்லியபடி சரியாய் பத்தரை மணிக்கு ஆறு மாணவமணிகள் பாட்டு கிளாஸிற்கு வந்து விட்டார்கள்.

"வாங்கோம்மா, வத்ஸலா சொன்னா உங்க எல்லாரையும் பத்தி,", என்று பொதுப்படையாய் அனைவரிடமும் பேசியவள் பின் அனைவரின் பெயர் மற்றும் இருக்குமிடம் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டாள்.

"சொல்லுங்கோ.. உங்களுக்கு ஸ்பெஷலா சொல்லிக் குடுக்கனும்ணு வத்ஸலா சொல்லியிருக்கா.. நான் எந்த விதத்திலே உங்களுக்கு ஹெல்ப் செய்யணும்?",

"மேடம்.. வத்சலா மேடம் ஏற்கனவே சொல்லியிருக்கா.. நீங்க தீக்ஷிதர் க்ருதியிலே ஸ்பெஷலிஸ்டுன்னு.. போதாததற்கு நீங்க மராட்டிய அபங்க் பாடல்களும் ஆத்மபூர்வமா பாடுவேள்னு சொல்லியிருக்கா.. எங்களுக்கு கொஞ்சம் ப்ரொஜெக்ட் பேப்பர்ஸ் சப்மிட் பண்ணனும்..ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டாபிக் குடுத்துருக்கா.. ஒரு சிலருக்கு அபங்க்,சிலருக்கு தீஷிதரின் சில கிருதிகள், சிலருக்கு தியாகையரின் க்ருதி.. இந்த மாதிரி.. அதனாலே.. நாங்களே கொஞ்சம் பாட்டுகள் தயார் பண்ணியிருக்கோம்..அதுக்கு கொஞ்சம் ஃபைன் டியூன் பண்ணனும்..",என்றாள் கலா.

"அதனால் என்னம்மா பண்ணிட்டா போச்சு.. நீங்க சொல்லுங்கோ என்னென்ன ராகம் போட்டிருக்கேள்னு.. அதை ஒட்டி இன்னிக்கு அந்த ராகங்களை எப்படி யூஸ் பண்ணறோம்னு எல்லாத்தை பத்தியும் விலாவாரியா சொல்லறேன்.."

அதற்குள் ஒருத்தி "மேடம் நீங்க ஸ்கய்ப்பிலேயும் சொல்லித் தரேளா?", என்று கேட்க

"அப்படின்னா.. அது என்னன்னு சொல்லுங்கோ.. என்னால முடிஞ்சதை நானும் பண்ணறேன்",என்றாள் சாரதா.

"அதுவா மேடம் கம்ப்யூட்டர் வழியா சொல்லிக் குடுக்கறது..",என்றாள் மாலா.

"ஒ.. இல்லைம்மா.. நேக்கு அதெல்லாம் தெரியாதே..சரி .. நீயென்ன ராகம் டிசைட் பண்ணியிருக்கே உன் ரிசர்ச்சுக்கு?"

"மேடம் எனக்கு வசந்த பைரவி ராகம் ரொம்பப் பிடிக்கும்.. அதனாலே தியாகைய்யரின் வசந்த பைரவி ராகங்கள் தான் என்னோட சாய்ஸ்.", என்றாள் மாலா.

கேட்டவுடன், சாரதாவிற்கு கை கால் மூளை மறத்தாற்போல் ஆகிப் போனது.. மனதின் மூலையில் ஒர் குரல், ஏதோ ஒரு ஏக்கத்துடன் ஒலித்தது

"நீ தய ராதா,

காதெனா வாரெவரோ கல்யாண ராமா"

தொடரும்

Episode 02

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.