(Reading time: 25 - 49 minutes)

02. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

நியூ ஜெர்சி மாகானம்.. நியூ ஜெர்சி சிட்டி.. விஸ்வநாதன் இல்லம்.

டிசம்பர் மாதத்து குளிர் உடலை நடுக்கியது. aகுளிருக்கு அடக்கமாய் ரஜாய்யை இழுத்தி போர்த்திக் கொண்டு ரூம் ஹீட்டரின் உதவியுடன் தூங்காமல், காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து, சுவாமி விளக்கேற்றி தன் தம்பூராவை மீட்டியபடி 'மருகேலரா..ஓ ராகவா' என்று சாதகம் செய்து கொண்டிருந்தாள் பைரவி.

பைரவி ... கமலா-விஸ்வநாதனின் ஒரே சீமந்த புத்திரி.. நமது கதையின் நாயகி. பைரவி .. இருபத்தி ஆறு வயது அழகுப் புயல்.

vasantha bairavi

அமெரிக்க குளிருக்கு இதமாய் பில்டர் காபியை பருகியபடி மனைவி கமலா அருகே அமர்ந்திருக்க, மகள் பைரவியின் சங்கீத ஆலாபனையை ரசித்து கொண்டிருந்தார் விஸ்வநாதன்.

விஸ்வநாதன், மற்றும் கமலா குடும்பத்தில் சங்கீத ஞானம் சற்று குறைச்சலே.. சங்கீதத்தை ரசிப்பார்களே ஒழிய, அதை சிரத்தை எடுத்து இப்படி கற்று கொண்டு சாதகம் செய்யும் அளவு எவரும் இல்லை. அது என்னவோ தெரியவில்லை, அவரது மனைவி கமலா, மற்றும் ஆறு வயது மகள் பைரவியுடன் ,அமெரிக்காவிலேயே தங்கி சங்கீத சேவை செய்து வரும் வேதவல்லி வேங்கடாச்சாரியின் மார்கழி மாதத்து கர்னாடக இசை விழாவில் நடந்த கச்சேரியை கேட்க சென்றிருந்த விஸ்வநாதன், குடும்பத்துடன் சங்கீதத்தை ரசித்து விட்டு திரும்பிய பொழுதில்,

என்ன தோன்றியதோ, அந்த சிறுமிக்கு, .."அப்பா.. எனக்கு சங்கீதம் கற்று கொள்ளனும்" என வேண்டுகோள் வைக்க, அந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, விஸ்வநாதனும் திருமதி வேதவல்லியை தொடர்பு கொண்டார்.

முதலில் மறுத்த அந்த பாடகி, பின்னர் விடாமல் அவர்கள் தொடர்பு கொண்டதை பார்த்து விட்டு, அந்த சிறிய பெண் பைரவியை, தன்னுடைய சங்கீத வகுப்பில் சேர்த்து கொண்டார்.

அன்று தொடங்கிய இந்த இசை பயணம் இதோ இன்று வரை நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

படிப்பில் வெகு புத்திசாலியான பைரவிக்கு சங்கீத கலையின் மீது அவ்வளவு ஆர்வம்.. எந்த ராஜா எந்த பட்டணம் போனாலும், வாரத்தில் இரண்டு நாட்கள், தன் சங்கீத வகுப்புக்கு தவறாமல் செல்லுவாள். வேதவல்லி வேங்கடாச்சாரியின் ஆஸ்தான சிஷ்யை பைரவி.. இதோ இன்று கூட இவள் சங்கீத ஆலாபனை செய்வது, அந்த வார கடைசியில் அவர்கள் இசைக்குழு நடத்த போகும் 'மார்கழி மழையின் இளம் இசை புயல்கள்' .. வளர்ந்து வரும் அமெரிக்க இளம் சங்கீத மாணவமணிகளை ஊக்குவிக்க நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே தியாகராயர் கிருதிகளை பாடி தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தாள்.

காலை எட்டு மணி.. கடந்த இரண்டு மணி நேரமாக சாதகம் செய்த பைரவி, கடைசியாக தில்லானாவை பாடி தம்பூராவை எடுத்து சாய்த்து வைத்தவள், மெல்ல அங்கிருந்து எழுந்தாள். அது வரை அவளது இசை மழையில் நனைந்திருந்த விஸ்வனாதன், "அற்புதம்மா.. ரொம்ப நன்றாக இருந்தது.. என்னை மறந்து இரண்டு மணி நேரமாக உட்கார்ந்து விட்டேன்.. எப்படி தான் இவ்வளவு நன்றாக பாடுகிறாயோ.. சாட்சாத் சரஸ்வதி தேவி உன் நாவிலே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கார்.. எல்லாம் அவருடைய அருள் தான்" என்றவர்,

"அது சரி இன்றைக்கும் உன் லேப்புக்கு போக வேண்டுமா? வீக் என்ட் தானே?"

"இல்லைப்பா.. இன்றைக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. அஜய்யும் வரேன்னு சொல்லியிருக்கான்.. கொஞ்சம் நேரம் எங்க ரிசர்ச் ஒர்க் செய்து விட்டு, பிறகு நாங்க இரண்டு பேரும் ரிசன்டாக ரிலீசான புது தமிழ் படம் ஒன்றுக்கு போகலாம் என்று இருக்கிறோம்" என்றாள் பைரவி.

"பைரவி, நீயும், அப்பாவும் மேலே வர்ரீங்களா?..பிரேக்பாஸ்ட் ரெடி" என கமலா கிச்சனிலிருந்து குரல் கொடுத்தார்.

"வாம்மா பைரவி.. அம்மா குரல் கொடுத்துட்டா.. உடனே போகலேன்னா, நமக்கு இன்னிக்கு டிபன் கட்"என்று சிரித்தார் விஸ்வனாதன்.

"அப்படியே எனக்கு பயந்தவர் தான் உங்க அப்பா.. அப்படி எத்தனை நாள் இவருக்கு சாப்பாடு போடலையாம்.. பேச்சை பார் பேச்சை" என்று மாடி படிகளின் மேலிருந்து அவர்களை பார்த்தபடி சொன்னார் கமலா.

"பையூ.. உங்க அம்மாவுக்கு காது நல்ல ஷார்ப்.. காது கேட்கும் மிஷின் வாங்கும் வேலையே எனக்கு வைக்க மாட்டா, ஒரு கஸ்டமரை நான் மிஸ் பண்ணுகிறேன்.. என் தொழிலுக்கு வேற கிளையன்டை தான் நான் தேடனும்" என்று முணுமுணுத்தபடி மேலே டையினிங் பகுதியை நோக்கி மகளுடன் சென்றார் விஸ்வநாதன், டாக்டர் விஸ்வநாதன் .. ஈ.என்.டி. காது மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்.

அவர்களது வீடு .. மூன்று அடுக்குகளை கொண்ட ஒரு தனி பங்களா டைப் வீடு.. கீழே பேஸ்மெண்ட் எனப்படும் ஒரு பகுதியில், பைரவி தனது இசை பயிற்சிக்கென ஒரு பகுதியும், டாக்டர் விஸ்வநாதனின் அலுவலக அறையும் இருந்தன.. அந்த பகுதியை ஒட்டி, கார்களை நிறுத்தும் சின்ன காரேஜும் இருந்தது.

முதல் அடுக்கில் கிச்சன், டையினிங், மற்றும் சின்ன பூஜை அறை , ஒரு பெரிய ஹாலுடன் இருந்தது.. இரண்டாவது தளத்தில் மூன்று அறைகள், பெரிய ஹாலுடன் இணைந்து இருந்ததில், ஒன்றில் பைரவியின் பெற்றோர் இருக்க, இன்னொன்றில் பைரவியின் அறையாக அமைந்திருந்தது.. மூன்றாவது அறையை விருந்தினர் அறையாக பயன்படுத்தினர்.. இதை தவிர மூன்றாவது அடுக்கில் ஒரே ஒரு சிங்கிள் பெட் ரூம் பூட்டி வைக்க பட்டிருந்தது.. அதிகப்படியாக யாராவது வந்தால் அந்த அறையை உபயோகப்படுத்துவார்கள்.. இதை தவிர அங்கே உடற்பயிற்ச்சிக்கென ஒரு சின்ன அறை இருந்தது.

டையினிங் பகுதியை அடைந்தவர்கள், அங்கே முகத்தை தூக்கி வைத்து கொண்டு நின்றிருந்த தன் அன்னையை பார்த்த பைரவி,

"என்னம்மா.. என்னவாயிற்று..அதான் உன் டிபனை சாப்பிட வந்து விட்டோமே..இப்படி மூஞ்சியை தூக்கி வைச்சுண்டா அப்புறம் எப்படி நாங்க சாப்பிடமுடியும்.. ஒரு வேளை உங்க டிபன் சரியா வரலையா? .. டேஸ்ட் சகிக்கலையோ?.. கவலையே படாதே.. இந்த பைரவி இருக்கற வரை நீ எப்படி சமைச்சாலும் கவலையே பட வேண்டாம்.. கண்ணை மூடிண்டு அப்படியே வயித்துல தள்ளிடுவேன்" சிரிக்காமல் சொன்னவளை,

"அடி கழுதை.. வாய் கொழுப்பு ஜாஸ்திடி உனக்கு.. நாக்கை முழம் நீளத்துக்கு வளர்த்துண்டு பேச்சை பார் பார்.. கண்ணை மூடிண்டு சாப்பிடுவியா? .. சரி வா, உனக்கு இன்னைக்கு மாட்டுக்கு வைக்கற புல்லு,கொள்ளு, எல்லாத்தையும் பிளேட்டுல வைக்கறேன்..எப்படி கண்ணை மூடி சாப்பிடறேன்னு பார்க்கரேன்"

"கவலையே படாதேம்மா.. புல்லு ஜூஸ் இப்பலெல்லாம் ரொம்ப ஃபேமசாகிண்டு வரது.. அதோடு கொள்ளு ரசம், கொள்ளு பருப்பு இது கூட உடம்புக்கு நல்லதாம்.. கொழுப்பு குறையும்ன்னு எங்க ரிசர்சில் கூட சொல்லறாங்க?"

"ஏம்மா கமலா, உனக்கு என்ன வேணும் இப்ப.. பாவம் குழந்தை தொண்டை கிழிய பாடி களைச்சு போய் வந்தால், நீ என்னடாவென்றால், புல்லை போடவா, கொள்ளை வைக்கவான்னு.. பயமுறுத்தி ஏதோ எங்களை மாட்டை விரட்டற மாதிரி விரட்டற.. இது உனக்கே நன்னா இருக்கா.. நானே அப்போதிலிருந்து உன்னோட ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியின் மனம் மூக்கை தொலைக்கிறதே..எப்ப நம்ம பொண்ணு பாட்டை முடிப்பா, நாக்குக்கு ருசியா சாப்பிடலாம்ன்னு காத்திருந்தால், இப்படி சொல்லறே?" என்ற விஸ்வநாதனை முறைத்தனர், தாயும் மகளும்.

"பார்த்தியா பைரவி,.. உங்க அப்பா பேச்சை.. நான் ஏன் முகத்தை தூக்கி வைச்சுக்க மாட்டேன்..இவரு பெரிய ஈ.என்.டி. டாக்டர்ன்னா, அதுக்காக இப்படியா?..எப்ப பாரு, காது, நாக்கு, தொண்டை இது இல்லாம பேசவே மாட்டார்..இதுல எனக்கு காது நன்றாக கேட்பதால், இவர் ஒரு நோயாளியை மிஸ் பண்ணறாராம்..எப்படியிருக்கு பார்த்தியா இவரோட பேச்சு..இவருக்கு கிளையண்ட்ஸ் கிடைக்க நான் செவிடாக வேண்டுமாம்.. ..ம்.. இப்ப நான் யோசிக்கணும், இவருக்கு ரவா கிச்சடி கொடுக்கலாமா, வேண்டாமா?" என்று தன் கையை தலையில் வைத்து யோசித்த தன் தாய் கமலாவை,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.