(Reading time: 25 - 49 minutes)

"ம்மா.. யூ ஆர் கரெக்ட்.. உன்னை கிண்டல் அடிச்ச அப்பாவுக்கு கிச்சடி கட்.. எதோ உன்னை சொன்னா பரவாயில்லை, நான் பாடினதை ஏதோ தொண்டை தண்ணி வத்த நான் கத்துவது மாதிரி பில்டப் கொடுக்கிற அப்பாவுக்கு, புல்லும், கொள்ளும் தான் சரி படும் .. அதை சாப்பிட்டு விட்டு ' ம்மா" ..என்று கொஞ்சம் கத்தினா சரியாயிடும் என்று கிண்டலடித்தாள் பைரவி.

"அடி உன்னை.. அப்பாவையா கிண்டல் செய்யறே?.. கழுதை .. சரி சரி.. வாங்க இரண்டு பேரும்.. டயமாகிறது.. வந்து கிச்சடியை சாப்பிடுங்க" என்றபடி அவர்கள் இருவருக்கும் தட்டை வைத்தார் அந்த பாசமான தாய்.

அது தான் கமலா.. அவரது உலகம் அவள் மீது உயிரேயே வைத்திருக்கும் பாசமான கணவரும், எப்பொழுதும் சீண்டி கொண்டிருக்கும் அவரது மகளை சுற்றியே இயங்கிக் கொண்டிருக்கும்.

"நீயும் உட்கார் கமலா.. வா அவரவர்களுக்கு வேண்டியதை போட்டு கொள்ளலாம்"

என்ற கணவரது சொல்லுக்கு தலையாட்டியவர், முதலில் அவருக்கும் , தன் மகளுக்கும் வேண்டியதை தட்டில் எடுத்து வைத்து விட்டே, பிறகு தனக்கு உணவை வைத்து கொண்டார் கமலா.

"பைரவி, இன்று உனக்கு எங்கேயாவது போக வேண்டுமா? இல்லையென்றால் நாம் மூவரும் இண்டியன் ஸ்டோர்ஸ்க்கு போகலாமா?" என்று கேட்ட தன் அன்னைக்கு,

"சாரி மா .. இன்று எனக்கு கொஞ்சம் லேப்பில் வேலை இருக்கிறது.. அங்கிருந்து நானும் , அஜய்யும், ஏதாவது தமிழ் சினிமாவுக்கு போகலாம் என்று இருக்கிறோம்.. எதுவும் சரியாக திட்டமிடவில்லை.. வேண்டுமானால் நாளை உங்களுடன் வருகிறேன்.. ஆனா, வேதா டீச்சர் வீட்டுக்கு சங்கீத பிராக்டீஸ்க்கு நாளை மாலையில் போக வேண்டும்" என்று இழுத்தாள் பைரவி.

"ஒன்றும் பெரிய விஷயமில்லை.. நானும் , உன் அப்பாவும் போய் விட்டு வருகிறோம்.. ஜஸ்ட் மன்திலி கிராசரீஸ்தான் வாங்க வேண்டும்.. எதாவது உனக்கு தேவையானால் சொல்லு, நாங்களே வாங்கி வந்து விடுகிறோம்.. அதை விடு, இன்னிக்கு ரொம்ப நல்லா சாதகம் பண்ணினே!..என்னென்ன பாட்டுன்னு செலெக்ட் செஞ்சுட்டியா?..இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு உன்னோட ப்ரொக்ராமிற்கு..வேண்டுமானால் உன் ரிசர்ச் ஒர்க் எல்லாம் கொஞ்சம் தள்ளி போடேன்"

"கஷ்டம்ம்மா.. அது பாட்டுக்கு அது..இது பாட்டுக்கு இது.. வேண்டுமானால் ஒரு இரண்டு நாள் கடைசியில் லீவ் போடலாம்..எங்க சீப் டாக்டர் ரொம்ப கண்டிப்பு.. அதுவும் நாங்க இப்ப செய்யற இந்த மரபு ஆராய்ச்சி..' பரம்பரை பரம்பரையாக மரபு தொடர்புடையதா இந்த இசை ஞானம்?, இல்லையென்றால், பயிற்ச்சியின் மூலமே ஒருவர் இசையில் பிரபலமாகலாமா?' என்று ஆரார்ச்சி செய்கிறோம்.. இப்பொழுதான் கொஞ்சம் சூடு பிடித்திருக்கிறது.. பார்ப்போம்..எங்க சீப் டாக்டர் இதுக்காக எத்தனையோ போஸ்ட் டாக்டரேட் பட்டமெல்லாம் வாங்கியிருக்கிறார்.. அவர்கிட்ட வாய்ப்பு கிடைத்ததே எனக்கு பெரிய பாக்கியம் தான்.. அவருக்கு பிடிக்காதது, வேலையை தள்ளி போடுவது?" என்றாள் பைரவி.

"என்னவோ போ பைரவி, நீயும் உங்க அப்பா மாதிரி எதாவது மெடிக்கல் பீல்டில் சிறப்பு படிப்பு படிப்பேன்னு நினைச்சேன்.. அது என்னவோ, நீ மருத்துவம் படித்திருந்தாலும், இப்பொழுது என்னவோ உனக்கு பிடித்த இசை தொடர்பா ஆராய்ச்சி செய்ய ரிசர்ச் பீல்டை தேர்ந்து எடுத்து விட்டாய்.. உனக்கு என்ன செய்ய தோன்றதோ அதை செய்" என்றவர்,

"அதெல்லாம் போகட்டும் .. அஜய் எப்படி இருக்கிறான்? அவனும் உன்னை மாதிரிதானா?.. ஒரு நாள் அவனை அழைத்து வாயேன், அவனுக்கு பிடித்த பொடி தோசை செஞ்சு தரேன்" என்று பேச்சை மெல்ல தொடங்கினார் கமலா.

"அதான் , தினமும் அவனுக்கு பிடிச்ச உணவுன்னு எனக்கு மதிய உணவு கொடுப்பதோடு, அவனுக்கும் ஒரு டப்பா ஸ்பெஷலா கட்டி கொடுக்கிறீயே? அது போதாதா? ..இன்னும் வீட்டுக்கு வேறு அழைத்து வர வேண்டுமா என்ன?" வாயில் கிச்சடியை அடைத்தபடியே கேட்டாள் பைரவி..

அவளுக்கு தெரியாதா என்ன.. தன் தாய் எதற்கு அஜய்யின் பெயரை அவ்வப்பொழுது இழுப்பார் என்று.

"அதுக்கில்லை பையூ.. உன் அம்மா என்ன சொல்ல வரான்னா?" என்று ஆரம்பித்த தன் தந்தை விஸ்வனாதனை பார்த்த பைரவி,

"எனக்கு தெரியாதாப்பா.. அம்மாவுக்கு நான் கல்யாணம் செய்து கொள்ளனும்.. அதுக்கு தான் மெல்ல அடிபோடுகிறார்?.. அம்மா .. இங்க பாருங்க.. அஜய் இப்போ என்னோட நண்பன் மாத்திரம் தான்.. இன்னும் நாங்க அடுத்த லெவலை பற்றி யோசிக்கவே இல்லை..அவனோட பேசறதுக்கு எனக்கு பிடிச்சி இருக்கு.. நல்லா பழகறான்..என்னோட மெடிக்கல் ரிசர்சுக்கு எல்லா ஹெல்பும் செய்யறான்.. ஆனால் இதெல்லாம் திருமண வாழ்க்கைக்கு போதுமா? .. நான் அவனை காதலிக்கவில்லையே .. எனக்கு தெரியவில்லை.. அதெல்லாம் விடுங்க, இன்னிக்கு லஞ்சுக்கு என்ன பாக் பண்ணீங்க.. அதை சொல்லுங்க முதலில்"

"எல்லாம் உனக்கு பிடிச்ச லைமன் ரைசும், பொட்டேடோ ஃபிரையும்.. அஜய்கும் சேர்த்து இரண்டு டப்பா ரெடி செய்து ஆல்ரெடி வைச்சாச்சு.. அதெல்லாம் விடு.. இப்ப நான் நேரடியாகவே கேட்கிறேன் , நீ ஏன் அஜய்யை திருமணம் செய்து கொள்ளக் கூடாது?? .. உங்க இரண்டு பேருக்கும் சாப்பாட்டு விஷயத்திலிருந்து எல்லாமே ஒத்து போகிறது?..பார்க்கவும் ஆள் அழகாக இருக்கிறான்.. தனி கட்டை.. நீ திருமணம் செஞ்சுண்டு போனாலும், எந்த தொந்தரவும் இல்லை..இதே ஊரு.. ஒத்த வேலை?.. ஏன் நீ அவனை யோசிக்க கூடாது?.. நீயும் எங்க கண் எதிரிலேயே இருக்கலாம்?"

"என்ன கமலா, என்ன பேச்சு இது?.. அவளுக்கு தெரியாதா?..இந்த ஊர் பழக்கப்படி நாகரீகமா, சுதந்திரமா வளர்ந்த பொண்ணு..அவளுக்கு அஜய் மேலே விருப்பம் இருந்தால் நமக்கு சொல்லாம யாருக்கு சொல்லுவா?..என்ற விஸ்வநாதன், பைரவியிடம் திரும்பி,

"பைரவி, நீ எதுவும் குழப்பி கொள்ளாதே டா.. காதலித்து தான் கல்யாணம் செய்யனும் என்று இல்லை.. காதல் திருமணத்துக்கு பின்னாலே கூட தோன்றலாம்.. எங்க காலம் மாதிரி இப்ப இல்லை.. அந்த மாதிரி நாங்க உன்னை வளர்க்கவும் இல்லை..நீ அமெரிக்காவிலேயே வளர்ந்த பெண்.. இந்த ஊர் நாகரீகப்படி டேட்டிங், பாய் பிரண்ட் என்று கன்னாபின்னாவென்று நீ சுற்றவில்லையென்றாலும், உனக்கு இவர்கள் வழக்கம் எல்லாம் தெரியும்..உங்க அம்மாவும் உன்னை நம்ம நாட்டு இத்திய முறைப்படிதான் வளர்த்து இருக்கா..உனக்கு நாங்க சொல்ல வேண்டியதில்லை.. உன் திருமண விஷயத்தில் நாங்க முழு சுதந்திரம் கொடுக்கிறோம்" என்றவரை

"ஏன்னா நான் என்ன சொல்ல வரேன்னா" என இடையிட்ட கமலத்தை ,

"ஒரு நிமிஷம் கமலா.. நான் சொல்லி விடுகிறேன்.. பைரவி, உன்னை பெத்தது , வளர்த்தது நாங்க தான் என்றாலும், நீ வாழற இந்த வாழ்க்கை முழுசா உன்னோடது தான்.. உனக்கு முழு சுதந்திரமும் உண்டு.. உனக்கு மனசுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்மா..நீ மெடிக்கல் பிராக்டீஸ் செய்யாமல், எதோ மேலே ஆராய்ச்சி செய்யனும்ன்னு முடிவெடுத்த பொழுது கூட நாங்கள் உன்னை தடுக்கலை.. சின்ன வயசிலிருந்தே நீ கேட்டது எல்லாமும் செய்யறோம்..நீயும் எங்களுக்கு பெருமை தான் செய்திருக்கே.. இவ்வளவு தூரம் பார்த்து பார்த்து உன் இஷ்டப்படி செய்ய இவ்வளவு நாளாக அனுமதித்தவங்க, முக்கியமான விஷயமான திருமணத்திலே தடுப்போமா?"

"உன் அம்மாவுக்கு, உனக்கு கால காலத்திலே திருமணம் செய்யனும்ன்னு ஆசை.. அது எல்லா தாய்க்கும் உண்டானதுதான்.. நீ உனக்கு விருப்பமிருந்தால் மட்டும் அஜய்யை திருமணம் செய்து கொள்.. எங்களுக்காக பார்க்க வேண்டாம்..ஒரு வேளை, அஜய் ஜஸ்ட் உன் நண்பன் மாத்திரம் என்று நினைத்தால், நாங்கள் வேறு யாரையாவது இந்திய ஆண்களை பார்க்கட்டும்மா?.. இல்லை உன் மனதில் வேறு யாராவது இருந்தாலும் தயங்காமால் சொல்லு" என்ற விஸ்வநாதன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.