(Reading time: 25 - 49 minutes)

"சூப்பர்" என்றவன், "அம்மா கொடுத்த உணவை சொல்லவில்லை. அது எப்படியும் நன்றாக தான் இருக்கும்.. நான் சொன்னது உன்னை.. நீ நிஜமாகவே அழகாய் தான் இருக்கிறாய்..அப்புறம் ஏன் மார்க் உன் பின்னாலே சுற்ற மாட்டான்" என்று சொன்னவன்,

"ஏன் பைரவி, என்னை பற்றி என்னை நினைக்கிறாய்?.. நான் அன்று கேட்டதை யோசித்தாயா?"

அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்திருந்தாலும் கண்டு கொள்ளாமால், லாப் டாப்பை மூடியவள், தங்கள் டிபன் பாக்ஸை எடுத்து அவனுக்கும் ஒன்றை எடுத்து வைத்தவள், தனது உணவை நாசுக்காக ஸ்பூனில் எடுத்து உண்ணலானாள்.

அவளையே சற்று நேரம் பார்த்திருந்த அஜய், மேலே ஒன்றும் பேசாமல், அவள் எடுத்து வைத்திருந்த உணவை கையில் எடுத்துக் கொண்டான்.

ஜய் அந்த மருத்துவ வளாகத்திலேயே பி.ஹெச்.டி முடித்து இப்பொழுது போஸ்ட் டாக் செய்து கொண்டிருப்பவன்..பைரவி செய்யும் ஆராய்ச்சிலிருந்து சற்று மாறு பட்டு இருந்தவன், தனது மேற்படிப்பு சம்மந்தமாக ஒரு நாள் லைப்ரரியில் ஏதோ புத்தகத்தை தேட, அங்கே தற்செயலாக வந்த பைரவியின் ஐ.டி கார்ட் கீழே விழந்திருக்க, அதை அவளிடம் ஒப்படைக்கும் பொருட்டு அவளை காண செல்ல, மெல்ல அவளும் அவன் ஆராய்ச்சி செய்யும் மருத்துவ வளாகத்திலேயே படிப்பதை அறிந்து பரிச்சியம் செய்து கொண்டான்.

இருவரும் நல்ல நட்பு முறையில் பழகினாலும், போகப் போக அஜய் பைரவியை பிடித்திருப்பதாக சொன்னவன், அவளுடன் இப்பொழுதெல்லாம் சற்று நெருக்கமாகவே பழக தொடங்கியிருந்தான். அஜய் திருமணத்தில் நம்பிக்கையற்றவன். இந்திய தகப்பனுக்கும், அமெரிக்க தாயுக்கும் பிறந்தவன்..

அவனது தந்தை சங்கர நாராயணன், இந்தியாவை சுற்றி பார்க்க வந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற ஜோஸ்னாவிற்கு டூரிஸ்ட் கையிடாக அறிமுகமாகி, பின்னர் இருவரும் இணை பிரியா காதலர்களாக மாறினர்.. காதல் திருமணத்தை எதிர்த்த பெற்றவர்களை மீறி அமெரிக்க பெண்ணை மணந்தவர், பின்னர் வீட்டிற்கு மூத்த மகனானதால், மூத்தவன் எதற்காக பெற்றவரை பார்த்து கொள்ள வேண்டும், ஏன் இளைய மகள் பொறுப்பை ஏற்றுக் கொள்ள கூடாதா என்ன, என்று தன் கடமையை உதறி விட்டு ஜோஸ்னாவுடன் அமெரிக்காவுக்கு பறந்து விட்டார்.

பணக்காரியான ஜோஸ்னா, வாழ்ந்த காலம் வரை சங்கர நாராயணனுடன் நன்றாகவே இருந்தார்.. அஜய் பிறந்தவுடன், அவருக்கு உடம்பு சரியில்லாது போக, சற்று பெண் பித்தனான சங்கர நாராயணன் , அமெரிக்காவில் வசிக்கும் வேறு ஒரு இந்திய பெண்ணுடன் தொடர்பு வைத்து கொள்ள, அதையறிந்த ஜோஸ்னா, அவரை பிரிந்து தன் ஐந்து வயது மகனுடன் தனியாக வசிக்க தொடங்கினார்.. கொஞ்சம் காலம் கழித்து தன் அமெரிக்க நண்பன் ஜானை மணந்து கொண்டார்.

அஜய் பத்து வயதிருக்கும் பொழுது, கான்சர் நோயின் கடுமையில் ஜோஸ்னா இறந்து போக, மொத்த சொத்துக்கும் வாரிசானான் அஜய்.

தன் முதல் மனைவி இறந்ததை அடுத்து, தன் இரண்டாவது இந்திய மனைவியின் மூலம் குழந்தைகள் இல்லாமல் போக, மூத்தவள் மூலம் பிறந்த தன் மகன் அஜய்யுடன் மீண்டும் இணைந்து கொண்டார் சங்கர நாராயணன்.. தன் தவறை உணர்ந்திருந்தவர், தன் மகனுடன் கொஞ்சம் காலம் ஒழுங்காகவே இருக்க, அஜய்க்கு பதினெட்டு வயதாகும் பொழுது, ஒரு கார் விபத்தில் இந்திய மனைவியுடன் இறந்து போனார்.

அதன் பின்னர் அஜய் தனியாகவே வாழ பழகியிருந்தான்.. அமெரிக்க இரண்டாவது தந்தையுடன் எந்தவித தொடர்பும் அவன் பிறகு ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பணம் வேண்டியது இருக்க, படிப்பில் ஆர்வம் இருந்ததால், மருத்துவதுறையை தேர்ந்தெடுத்து படித்து , இப்பொழுது கான்சர் நோய் தடுப்பு ஆராய்ச்சியில், போஸ்ட் டாக் செய்து கொண்டிருக்கிறான்.

சின்ன வயதிலிருந்தே சரியான குடும்ப அமைப்பின் கீழ் வளராதவன், 'திருமணமா' அதெல்லாம் சுத்த வேஸ்ட் என்ற கொள்கையை கொண்டிருந்தான். அவன் மீது எந்த தப்பும் இல்லை.. அவன் தாயும், தந்தையும் முதல் திருமணைத்தை முறித்து அடுத்து வேறு துணையை தேடிக் கொண்டவர்கள்..

வாழ்வதற்கு ஒரு துணை வேண்டும்.. தங்கள் இயற்கையான இச்சையை தீர்த்து கொள்ள ஒருவனோ, ஒருத்தியோ இருந்தால் போதும்.. அதற்கு எதற்கு காதல், திருமணம், பந்த பாசமெல்லாம் எதற்கு என்ற பெற்றோர்களின் கீழ் வளர்ந்தவன்.. அவனுக்கு யார் மீதும் எந்த வித பந்தமோ, பாசமோ இல்லை.. பணம் இருந்தால் போதும், எது வேண்டுமானாலும் இந்த உலகில் செய்ய முடியும் என்ற கொள்கையில் வளர்ந்து விட்டவன், தன் தாய் தந்தை இறந்த பொழுது கூட பெரிதாக எதுவும் பாதிப்பு அடையவில்லை.

கொஞ்சம் காலமாக தான் பைரவியின் நட்பு கிடைத்த பின்னால் அன்பு, பாசம், காதல் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் பழகி தெரிந்து கொண்டிருக்கிறான். பைரவியை அவனுக்கு ரொம்பவே பிடிக்கும்.. இந்திய பெண்ணான பைரவியின் அழகில் மயங்கியே இருந்தான்.. அது நாள் வரை, பெண்களை பற்றி பெரிதாக நினைக்காதவன், பைரவியின் தோழமையில் சற்று மாறி இருந்தான்..

பெண்களை அறியாதவன் என்று அவனை சொல்ல முடியாது.. முப்பது வயதான அஜய், பெண்களை அறிந்தவன் தான்..ஆனாலும் பெரிதாக அதை எடுத்து கொள்ளவில்லை.. இதெல்லாம் இயற்கை என்ற கொள்கையுடன் அலைந்தவன், கடந்த ஒரு வருடமாக பைரவியை தவிர வேறு யாருடன் பழக நினைக்கவில்லை. அவனை கேட்டால் அது காதலா , நட்பா அது அவனுக்கே தெரியாது.. அவளுடம் பேசி, பழக பிடித்திருந்தது.. ஆனால் திருமணம் என்றால் அது அவனுக்கு பிடிக்கவில்லை.. கசந்தது.

கொஞ்சம் காலமாகவே ஒத்த ரசனையுடைய நாம் ஏன் சேர்ந்து வாழக் கூடாது என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். இன்று கூட அதை பற்றி தான் பைரவியிடம் கேட்டு கொண்டிருந்தான்.

"அஜய்.. கட்டாயம் சினிமா போக வேண்டுமா? ..எனக்கு மூட் இல்லை..பேசாமல் கொஞ்ச நேரம் மாலில் சுற்றி விட்டு வீட்டுக்கு போகலாமா? .. எனக்கு அடுத்த வாரம் நடக்கவிருக்கும் மியூசிக் பங்ஷனுக்கு சிலது வாங்க வேண்டியிருக்கிறது" என்ற பைரவிக்கு,

"ஓ. கே .. நோ ப்ராப்ளம்" என்றவன்,

"என் காரிலேயே போகலாம், உன்னை நானே வீட்டில் டிராப் செய்து விடுகிறேன்.. மன்டே காலையில் அகைய்ன் பிக்கப் செய்து கொள்கிறேன்"

மால்லை நோக்கி சென்றவர்கள், சற்று நேரம் அமைதியாக டிரைவ் செய்தவன், "பைரவி, என்ன முடிவு செய்தாய்?" என கேட்டான் அஜய்.

"அஜய்.. எனக்கு புரிகிறது.. இன்று அம்மா கேட்டார்கள், நான் ஏன் உன்னை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று.. அவர்கள் என்னவோ, உனக்கும் எனக்கும் சரியாக இருக்கும், நன்றாக ஒத்து போகும் அப்படி , இப்படி என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்..ஆனால் நீ என்னடாவென்றால், திருமணத்தில் உனக்கு இஷ்டம் இல்லை, அது இல்லாமல் சேர்ந்து வாழலாம் என்று அழைக்கிறாய்?.. அவர்களுக்கு மாத்திரம் நீ இந்த எண்ணத்தில் என்னுடன் பழகுவது தெரிந்தால் அவ்வளவுதான்.. உனக்கும் அந்த மார்க்குக்கும் என்ன பெரிய வித்யாசம்? சொல்லு?"

"மேடம்.. நான் ஒன்றும் உன்னை ஒரு நாள் டேட்டுக்கு கூப்பிடவில்லை.. நாம் சேர்ந்து வாழலாம் என்று சொல்கிறேன்.. எனக்கு உன்னை பிடித்திருக்கிறது.. உன் அழகு,குணம், பாரம்பரியம் எல்லாமே பிடிக்கிறது? .. ஆனால் திருமணம் என்று வரும் பொழுது எனக்கு சொல்ல தெரியவில்லை.. மே பி.. எனக்கு உன் பெற்றோர் மாதிரி எனது பெற்றவர்கள் இல்லையே.. காதலித்து அனைவரையும் எதிர்த்து மணம் செய்தவர்கள், பின்னர் இருவருமே பிரிந்து வேறு துணையை தேர்ந்தெடுத்து வாழ்ந்தவர்கள்.. அதனால் தானோ என்னவோ, இந்த திருமண அமைப்பு இதெல்லாம் பிடிக்கவில்லை.. நான் உன்னை வற்புறுத்தவில்லை.. உனக்கு விருப்பமிருந்தால் சேர்ந்து வாழலாம்.. இன்னும் கொஞ்சம் காலம் பார்ப்போம்.. உன் மனம் மாறுகிறதா அல்லது நான் திருமணத்தை விரும்புவேனா.. தெரியவில்லை" என்றவன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.