(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - என் காதல் பொன்னூஞ்சல் நீ - 03 - ப்ரியா

'தற்காக கோவம்?! ஏன் இத்தனை அழுத்தம்?!' மனதின் கேள்வி. முக பாவத்தில் ஒரு பணித்துளியிலும் பத்தில் ஒரு பங்கு அளவிளான மாற்றம்..!! ஒரு சிறிய முயற்சி அவ்வளவு தான். உஷ்ணம் குறையாமல் சீறும் பெருமூச்சு.

'விழுந்து விட்டாளே, என்ன செய்ய?' யோசனையுடன் நிமிர்ந்து பார்க்கையில், பைக்கை ஒட்டி கொண்டு வந்த பரத், அதை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து அனன்யாவை தன் மடிக்கு மாற்றி கொண்டான். கிட்ட தட்ட அந்த புதியவனிடம் இருந்து தட்டி பறிப்பது போல.

"குட்டிம்மா… அனு, என்னடி ஆச்சு"

En kathal ponnunjal nee

"டேய் பரத் என்னடா ஆச்சு, தூக்கு டா அவளை", அலுவலகம் செல்ல தயாராய் வந்த ஆதிரா தான் பதற்றத்துடன் கத்தினாள்.அவன் அவளை தூக்க முயல,

"முதல்ல தண்ணி கொடுங்க, மயக்கம் போட்டுட்டாங்க" அழுத்தமான கோபம் குறையாத வார்த்தைகள்.

ஆனால் அதை கவனிக்கும் நிலையில் இருவரும் இல்லை. ஆதிரா தன் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தெளித்து அருந்த செய்தாள்.

சற்றே புருவம் சுளித்து,கை வலியில் முகம் சுறுங்க லேசாக கண் விழித்தாள் அனன்யா. விழித்தவள் எழ முயற்சித்து முடியாமல் மீண்டும் மயங்க,ஆதிரா பயந்து போனாள்.

"ஆட்டோ" அவர்களை கடந்து போன ஆட்டோவை அழைத்தது அவன் குரல். பரத் அவளை தூக்கும் முன் அவனே தூக்கி ஆட்டோவில் கிடத்தி விட்டு ஆதிராவை பார்க்க அவள் அவசரமாய் உள்ளே ஏறினாள்.

பரத் அவன் வண்டியை உதைத்து கிளப்பி கொண்டு முன்னே செல்ல ஆட்டோ கிளம்பும் போது ஆதிரா அவனை பார்த்து "நீங்க?" என கேட்க, பதில் சொல்லாமல் திரும்பி நடந்தான்.

ஆட்டோ வேகமாய் கிளம்பியிருந்தது. எப்போதும் மண்டியிருக்கும் கோபம் தான் என்றாலும் இப்பொழுது சற்று அதிகம்.!!

ஸ்கூட்டியின் சாவியை அதிலேயே வைத்துவிட்டு கிளம்பியவனின் கால்களை இடறியது அவளது கைப்பை. சுற்றும் முற்றும் பார்த்தான் எவரும் இல்லை. பையை எடுத்து ஸ்கூட்டியில் மாட்டியவன் மனதில் ஒரு மூலையில் அதை திறந்த பார்க்கும் எண்ணம் உதித்தது.

'ம்ம்ஹும் கூடாது' மனதை அடக்க அது இவனை காட்டிலும் அதிக அழுத்தமும் பிடிவாதமும் காட்ட, கைகள் தானாக அவள் பையை திறந்தது.

அவள் கம்பெனி ஐடி கார்ட்.இரண்டு வினாடி ஆராய்ச்சி.

வெள்ளையும் நீளமும் கலந்த உடையில் முடியை விரித்து விட்டிருந்தாள். கண்களுக்கு மை தீட்டுவதோடு நிறுத்தாமல் சிரிக்கவும் பேசவும் கற்று கொடுத்திருக்கிறாள் போலும், இதழ்களுக்கு போட்டியாய் அழகாய் சிரித்தன. அனன்யா வரதராஜன்.

அவன் முகத்தில் சற்றே இறுக்கம் தளர்கிறது. ‘இதற்கு மேல் அடுத்தவங்க பேகை கிளற கூடாது’ முடிவெடுத்து பையை மூட, பக்கவாட்டு பகுதியில் இருந்து நழுவியது அவள் கைப்பேசி.

அது தரையில் விழாமல் வேகமாக அதை லாவகமாய் பிடித்தவன் அதன் மீது பார்வையை ஓட்டினான். வெண்மை நிற பின்னணியில் பறக்கும் இரு நீல வண்ண பட்டாம்பூச்சிகள் பச்சை நிற கொடியின் மீது. அவள் அலைபேசிக்கு அணிவித்திருந்த அழகிய ஆடை. மொபைலின் பேக் கேஸ்.

"நீலம் பிடிக்குமோ?" எதிர் பார்க்காத கேள்வி உதயம்.

மொபைலின் திரையில் கருப்பு நிற உடையில் தலையை விரித்து விட்டு குறும்புடன் சிரிப்பது போன்ற அவள் படம். முப்பது வினாடிகள் மனமும் மூளையும் மௌன விரதம் இருந்தது.

அவசரமாக போனை அவள் பையில் போட்டவன், கண்ணாடியை எடுத்து மாட்டியவாறு சற்று தள்ளி நிறுத்தி வைத்திருந்த தன் காரில் ஏறி கொண்டான்.

"போலாம்" என்ற இவன் அதிகார குரலுக்கு அடுத்த கணமே டிரைவர் அடிபணிந்திருந்தான்.

மெல்ல கண் விழித்தவளின் நெற்றியில் கை வைத்து,

"எப்படி இருக்கு டா?" என மென்மையாய் கேட்டான் பரத்.

"ம்ம்ம் பைன்" மெதுவாக சொன்னவள் சுற்றும் பார்த்தாள். ஹாஸ்பிட்டலில் இருக்கிறாளா?! மயக்கம் வந்ததே? கண்களை இருட்டி கொண்டு வந்தபோது?

எதிரில் அவன் இருந்தானே?! எங்கே அவன்?! ஸ்கூட்டி இருந்ததே.. அவன்... தேவ்..?! ஐயோ தேவ்? அவள் காதல்...

கண்கள் அலைபாய புருவ சுளிப்புடன் அவள் யோசிப்பதை பார்த்திருந்தவன் மனத்திலும் அவள் கடைசியில் கேட்ட கேள்வி தான் வந்தது. தேவ்? அவள் காதல்?

"அனு இப்போ எதையும் யோசிக்காத டி.. அவன்.. அந்த ராஸ்கல்..."

"ப்ச்" சலிப்புடன் இருக்க மூடியிருந்த வலக்கையை திறந்து பார்த்தாள். உள்ளங்கையில் அவன் சட்டையின் பொத்தான். கரும்பச்சை சட்டையில் அழகாய் ஒயிலாய் அமர்ந்திருந்த வெளிர் பச்சை நிற பொத்தான்.மீண்டும் கைகளை மூடி கொண்டாள்.

அவன் சட்டையை பற்றியிருக்க வேண்டும். மனது நடந்தவற்றை யூகிக்க முயன்றது.

"ஹேய் அனு.. விடு எதையும் நினைச்சு குழப்பிக்காத. நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்" என அவன் நகர, எதிர்ச்சையாய் ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பியவளின் கண்கள் கூர்மையாகின. வெளியே அது?! அவன் தானே..அவனே தான்.

நகர முயற்சித்தாள். வலது கை வலித்தது முன்னிரவில் அடி பட்ட விளைவு. இடது கையில் தான் ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருந்தது.

ஜன்னலின் அருகில் ஒன்றும் அவன் இல்லை. இவள் பார்வை வட்டத்திற்குள் இருந்தான் அவ்வளவே. வெளியில் சென்றால் கூட ஒரு பத்து அடிகள் செல்ல வேண்டுமே.

எழுந்து கொள்ள முயற்சி செய்ய மட்டுமே முடிந்தது அவளால்.உடம்பின் ஒவ்வொரு அணுவும் களைத்திருந்தது.

"இந்த நேரத்தில் என்ன பண்றான் இங்க?", தனிச்சையாய் மணியை பார்த்தாள். மாலை நான்கு..!! ஐயையோ இவ்வளவு நேரம் சுய நினைவு இல்லாமல் இருந்தாளா?

மீண்டும் அவனை பார்த்தாள். கிளம்ப ஆயுத்தமாவான் போலும். பேசி கொண்டிருந்தவரிடம் தலை அசைத்து விடை பெற்றான்.

சட்டென எழுந்து நின்றிருந்தாள் அனன்யா. தலை கிறுகிறுத்தது. முயன்று சரி செய்து கொண்டு குளுகோஸ் பாட்டிலை கையில் பிடித்தவாறு வெளிய செல்ல ஓரடி எடுத்து வைத்தவள் ஜன்னலை பார்க்க அவனை காணோம்.

பார்வை அலை மோத வெளியில் செல்ல திரும்பியவள் விக்கித்து நின்று விட்டாள். அவன் தான் நின்றிருந்தான்.!!

"றிவில்ல?", சீறி பாய்ந்தவனின் அதட்டலில் உடல் தூக்கி வாரி போட்டது அவளுக்கு. தலையில் அடித்து கொண்டான்.விழிகளில் பயமும் கலக்கமும் காட்டினாள் அனன்யா.

"உட்காரு முதல்ல" அடிக்குரலில் மீண்டும் சீறினான்.பட்டென அமர்ந்து விட்டாள். கண்களில் இப்போது மிரட்சி. திருடனாய் தான் இருக்குமோ. அல்லது கடத்தல் காரனா?!

கோபமாய் அவள் அருகில் வந்தவன் அவள் கையில் இருந்த பாட்டிலை வாங்கி அதன் தாங்கியில் மாட்டினான். அவளை ஒரு முறைப்புடன் பார்த்தவன் அதே வேகத்தில் வெளியேறினான்.

என்ன நடக்கிறது என புரியா விட்டாலும் அருகில் இல்லை என்றதும் ஒரு விடுதலை உணர்வு மூச்சு விட முடிகிறதே. அவன் அருகில் இருந்தால் எவ்வளவு பதற்றம். அப்பப்பா..!!

ஒரு பெருமூச்சை அவள் ஏறிய மீண்டும் உள்ளே வந்தான் அவன். வெளி வந்த மூச்சு அப்படியே நின்றது.கோழி முட்டை கண்கள் இரண்டும் முழுவடிவில் விரிய அதை ஊடுருவி பார்த்தவாறு ஒற்றை வார்த்தை சொல்லி வெளியேறினான்.

"சாரி..!!!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.