(Reading time: 12 - 24 minutes)

"ட்டென்று கவனம் கலைந்த சாரு, "வாம்மா வந்துட்டியா.. இரு காபி போட்டுண்டு வரேன்,", என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

"அம்மா அப்பிடியே எனக்கு ஏதாவது சாப்பிடறதுக்கும் கொண்டுத் தா..இன்னிக்கு ஒரே வேலை லேபில்..என்னோட சீஃப் ..பேதாலஜிஸ்ட் வரலை..பெண்ட் நிமிந்துடுத்து.. மத்தியானம் கூட கேன்டீன் பக்கம் போகலை..", என்று சோர்வாய் கூறினாள் மஹதி.

மஹதி ஒரு ஹாஸ்பிடலில் லேபில் பேதாலஜிஸ்டாக பணிபுரிகிறாள்.. எம். எஸ்.ஸி. பயோ டெக்னாலஜி படித்திருக்கிறாள்...அவள் வாங்கிய மார்க்குக்கு மெடிகல் சீட்டே கிடைத்தது..ராம மூர்த்தி தான் அதெல்லாம் நம்மால் முடியாது..இது எம்.பி.பி.எஸ் மட்டும் முடியாது..மேலே எம்.டி. படிக்கனும்..நமக்கு இதெல்லாம் கட்டுபடியாகாது என்று கூறி இளங்கலை அறிவியல் சேர்த்துவிட்டார்.. தன் மருத்துவராகும் கனவை மறந்து பயோ டெக்னாலஜி படித்து அதிலேயே மேற்படிப்பும் முடித்துவிட்டு..நகரின் சிறந்த மருத்துவமனையில் உதவி பேத்தாலஜிஸ்டாக கடந்த ஆறு வருஷமாக பணி புரிகிறாள்.. இப்போதைக்கு நல்ல சம்பளம் கிடைத்தாலும் அதுவும் கடலில் கரைத்த பெருங்காயமாய் போனது அந்த வீட்டில்.

அன்றைக்கு மஹதியும் ஏதோ சிந்தனை வசப்பட்டிருந்தாள்.. கடைசியில் 'இருக்கட்டும் கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு தானே வரணும்.. அப்போ அதை பத்தி யோசிக்கலாம்..ஆனா அப்பா கண்ணுலே பட்டுட்டா அதோ கதி தான்', என்று நினைத்தவள் சத்தம் கேட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

"இந்தாடி மஹதி..காபி.. சூடா உனக்கு பிடிக்குமேன்னு மங்களூர் பஜ்ஜி போட்டேன் சாப்பிடு.... உனக்கு பிடிக்குமேன்னு கொஞ்சம் வெங்காய கார சட்னியும் பண்ணியிருக்கேன், நன்னா மெத்து மெத்துன்னு இருக்கு", என்று அடுத்த அரைமணியில் வந்தாள் சாரதா. மகளிடம் பிளேட்டை கொடுத்துவிட்டு காபியை தரையில் வைத்தவள், தனக்கும் காபி ஒரு டம்ப்ளரை எடுத்து கொண்டாள்.

மகள் பஜ்ஜியை தின்று முடிக்கும்வரை காத்திருந்தவள், "என்னம்மா, ஏன் ஒரு மாதிரி இருக்கே ஆஃபிஸில் ஏதாவது டென்ஷனா?", என்று ஆதூரமாய் கேட்டாள்.

"அய்யோ அம்மா.. நீ வேற.. நானே இப்படி வேகாத வெயிலில் வந்து அம்மாடின்னு உக்காந்துருக்கேன் நீ வேற..நார்மலா மார்கழியிலே வெயில் கம்மியாகும்னு சொல்லுவியே..பாரு..மண்டை காஞ்சிபோச்சு..", என்று அலுத்துக் கொண்டாள்.

"என்னம்மா பண்ணறது.. எல்லாம் இயற்கையின் சீற்றம் தான்.. குலோபல் வார்மிங்ன்னு பேப்பரிலே போட்டுண்டே இருக்கானே.."..

"ஆனா எது எப்படியோ இந்த இளசுங்களோட ரவுசு மட்டும் தாங்கலைப்பா..வர்ர வழியிலே நடேசன் பார்க் பக்கம் இந்த வேகாத வெயிலிலேயும் ஜோடி போட்டுண்டு கடலை போடறா.. என்னதான் இருக்குமோ அப்படி.... ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துண்டு.. தாங்கலை.. வேலை வெட்டி இல்லை.. அப்பா அம்மா பணத்தை கரியாக்கிண்டு இப்படி திரியறா..", என்று பட படவென்று கொட்டினாள் மஹதி..

"போடி அசடு.. நீயும் ஒரு வயசு பொண்ணு.. இப்பிடியா பேசுவே.. நான் கூட என்னமோ நீ யாரையோ லவ் பண்ணறயோன்னு ஒரு நிமிஷம் நினைச்சேன்.. நீ என்னடான்னா லவர்ஸுக்கு எதிரா கொடி பிடிக்கறே..", என்று சிரித்தாள் சாரதா..

"நீயும் ஒரு அம்மா.. வேஸ்டும்மா நீ. இப்படி அவாளுக்கு சப்போர்டா பேசறே..உன் பசங்கன்னா சும்மா இருப்பியா?"

"ம்ம்.. யோசிக்க வேண்டிய விஷயம்..ஆனா நான் நிச்சயம் அவா தரப்பு நியாயத்தையும் பார்ப்பேன்..எல்லாம் சரி வந்துதுன்னா எனக்கு ஓ.கே. தான்", என்ற சாரதாவை பெருமையுடன் பார்த்த மஹதி

"அம்மா நீ நிச்சயம் விஷயம் தெரிஞ்சவம்மா.. அன்னெசசரியா கூச்சல் கூப்பாடு இல்லாமே விஷயத்தை நன்னா முடிப்பே..குட்..சோ இந்தாத்துலே அந்த பிரச்சனை கிடையாது.."

"கரெக்க்டுடியம்மா..அந்த பிரச்சனை கிடையாது தான் ஆனா இப்போ உலக மகா பிரச்சனையான பணம் தான் இங்கே ரொம்ப பிரச்சனை.. ஏண்டி உனக்கு லோன் கீன் ஏதாவது கிடைக்குமோ?"

"ஏம்மா என்னாச்சு ஏதாவது பிரச்சனையா?"

"ஏதாவதா?..எத்தனைன்னு கேளு..மொதல்ல நம்மாத்துலே மாடி போர்ஷன் காரா காலி பண்ணிண்டு போகப் போறா..அவா அட்வான்ஸை திருப்பி தரணும்..ரெண்டாவது வசந்த் ஏதோ கோச்சிங் சேரணும்னு அப்பா கிட்ட சொல்லிண்டு இருந்தான்..அதுக்கு கொஞ்சம் பணம் வேணும்.. மூணாவது உன்னை பொண்ணு பார்க்க வர சொல்லனும் அந்த டாக்டராத்துலே..மார்கழி கழிஞ்சா விட்டுத் தான்..ஜாதகம் பொருந்தி வரது..ஏற்கனவே அந்த பையனுக்கு உன்னை பிடிச்சு தான் கேட்டா.. இப்போ மத்ததெல்லாம் சரி வந்த உடனடியா நிறைய வாங்க வேண்டியிருக்கும்..போதாததற்கு இன்னிக்கு சாயங்காலம் ரஞ்சனி ஆத்துக்கு வரேன்னு ஃபோன் பண்ணினா..எதுக்கோ தெரியலை.. அவ வந்தாலே ஏதாவது பிரச்சனையோட தான் வருவா.."

"ஸ்டாப் ஸ்டாப்.. போதும் இதுவே எனக்கு தலைய சுத்தறது..நமக்கு கொடுப்பினை அவ்வளவு தான் அம்மா..அக்கா வருவா.அதை சாக்கிட்டு மாப்பிள்ளை வருவார்..இவ வந்தா அவ வருவா..இதே பொழப்பு ரெண்டு பேருக்கும்..அட்லீஸ்ட் ரஞ்சு அக்காவாவது பாவம்..வாயில்லாப் பூச்சி.அவளுக்கும் சேர்த்து உன் மாப்பிள்ளைதான் பேசுவார்..ஆனா கல்யாணி அக்காவோ..ஊருக்கே சேர்த்து பேசி காதுல ரத்தம் வர வழைக்காம விட மாட்டா.. எல்லாம் நம்ம கெட்ட விதி தான் காரணம்..",என்று நெற்றியை தடவினாள் மஹதி.

"அம்மா அதை விடு இவா ரெண்டுபேரும் நமக்கு டென்ஷன் தான்..இதுலே நீ இருக்கறது போறாதுன்னு என்னையும் கொண்டு போய் யார் கிட்டயாவது மாட்டி விடனும்னு ப்ளான் போடறே?. எங்கே போய் நான் முட்டிக்க?..சரி சரி மூஞ்சியை தூக்காதே..உன்னோட புது ஸ்டுடன்ட்ஸ் எல்லாம் எப்படி..நன்னா பாடறாளா? பிக்கப் பண்ணிடுவாளா?", என்று தாயை விசாரித்தாள்.

"புத்திசாலி கொழந்தைகள்டி..நன்னா ஆழ்ந்து கத்துக்கறா. நீ தான் சங்கீதத்தை பாதியிலேயே விட்டுட்டே.. உன் குரலுக்கும் ஞானத்துக்கும் நீ எங்கேயோ போயிருப்பே..உன் அக்கா ரெண்டு பேருக்கும் இன்ட்ரெஸ்ட் இல்லை சங்கீதத்துலே.. நீயாவது எனக்கு பின்னாடி இந்த பாரம்பரியத்தை எடுத்துண்டு போவேன்னு பார்த்தா அதுவும் இல்லை..வசந்துக்கு சுத்த மோசம்..ஸ்ருதியே நிக்கலை..எனக்கப்புறம் யாரும் இல்லை நம்மாத்துலே..வருத்தமா இருக்குடி..ஏண்டி..உன் கிட்ட ஒன்னு கேட்கணும்..இன்னிக்கு வந்த பொண்கள்ள மாலான்னு ஒரு பொண்ணு நீங்க ஸ்கைபிலே எடுப்பேளான்னு கேட்டா..அப்படின்ன என்னடி?..நம்மாத்துலேயும் பண்ண முடியுமா?", என்று அப்பாவியாய் கேட்டள் சாரதா.

"அம்மா அது கம்ப்யூட்டர் வழியா இன்டெர்னெட் மூலமா சொல்லித்தரது..நாம ஃபோன்ல பேசறாப்போல வீடியோவோட நீ அந்தப் பக்கம் இருக்கறவாள பார்த்துண்டே பேசலாம்..பாடலாம்..இதுனால நீ எங்க வேணா இருந்துண்டு யாரை வேணா பார்த்து பேசலாம், இப்பல்லாம் அமெரிக்கா, மத்த நாடுகள்ல இருக்கறவா இந்தியாவுல இருக்கற தங்க குடும்பகளோட பார்த்து பேச இதை தான் நிறைய யூஸ் பண்ணறா..இந்தியாவுலேயும் நீ எங்கே வேணா யாரோடையும் இது வழியா தொடர்பு கொள்ளலாம்..இன்ஃபாக்ட்..நீ பாட்டு கிளாஸ் கூட எடுக்கலாம் வெளி நாட்டுல இருக்கறவாளுக்கு..இந்த மாதிரி வெளிநாட்டு கிளாஸ்களில் நல்ல வருமானம் உண்டு..அம்மா நீ கூட ஏன் இந்த மாதிரி டிரை பண்ணக் கூடாது?", என்று தாயை கேள்வியாய் பார்த்தாள் மஹதி.

"ஆமாம்..நான் கிளாஸ் எடுக்க ரெடி ஆனா யாரு சேருவா?..எல்லாருக்கும் எப்படி தெரியும்..அப்புறம் கம்ப்யூட்டர்?", என்று கேட்டவளை பார்த்து உற்சாகப் படுத்தும் வகையில் சிரித்தாள் மஹதி..

"கவலையை நீ விடு..கடவுளா ஒரு வழி காமிக்கறார்..அதை நாம் பயன்படுத்திக்கப் பார்ப்போம் என்றவள் கை அலம்ப பின் பக்கம் விரைந்தாள்.

பின் கட்டிற்கு போனவளுக்கு தன் தம்பியின் லேப்டாப்பை அம்மாவுக்கு சிறிது நேரம் கொடுத்தால் அவள் க்ளாஸ் நடத்த ஏதுவாகயிருக்கும் என்று நினைத்து கொண்டவளுக்கு இப்போது வேறு ஒன்றும் ஞாபகம் வந்து தொலைத்தது.. "யார் அவள் வசந்துடன் கை கோர்த்தபடி பார்க் பக்கம் நடந்து சென்றது?"

தொடரும்

Episode 02

Episode 04

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.