(Reading time: 21 - 41 minutes)

மனதோர மழைச்சாரல்... - 08 - வத்ஸலா

திரே பார்த்திருக்கவில்லை ரிஷி.!!!!!! அவரை அந்த இடத்தில் எதிரே பார்த்திருக்கவில்லை ரிஷி.!!!!! கொஞ்சம் திகைப்பும், வியுப்புமாய் நிமிர்ந்தான் அவன்.  திடீரென்று அவரை பார்த்ததில் அவனுக்குள்ளே மகிழ்ச்சியும் பரவத்தான் செய்தது. அவன் உதடுகள் மெல்ல உச்சரித்தன    'அ.......ம்.....மா...' !!!!!!!

அங்கே நின்றிருந்தவர் சந்திரிகா.!!! வைதேகி என்கிற சந்திரிகா.!!! திரைப்படங்களுக்காக தனது பெயரை சந்திரிகா என்று மாற்றி வைத்துக்கொண்ட வைதேகி.!!! அவர் அருகில் நின்றிருந்தார் அவரது கணவர் கல்யாணராமன்.

மகனையும் மருமகளையும் ஒரு சேர பார்த்தவுடன் உள்ளுக்குள் கொஞ்சம் நிம்மதி பரவ, மிக நேர்த்தியான பல்வரிசை மின்ன, பளீர் சிரிப்பு மிளிர்ந்தது அம்மாவிடம். அந்த சிரிப்பில் சத்தியாமாய் கரைந்துதான் போனாள் அருந்ததி.

Manathora mazhai charal

மிக எளிமையான ஊதா நிற சேலையில், மூக்கில் மூக்குத்தி மின்ன, நெற்றியில் வட்ட பொட்டும், அதன் கீழே குங்கும கீற்றும், கண்கள் நிறைய வாஞ்சையுமாக நின்றிருந்த  அவரை ரசிக்காமல் இருக்கவே  முடியவில்லை அருந்ததியால்!! தன்னையும் அறியாமல் அழகான புன்னகை உதயமாகத்தான் செய்தது அருந்ததியினிடத்தில்..

அவனது அம்மாவை அவள் சந்தித்தது ஒரே ஒரு முறை. அவர்கள் இருவரும் சந்தித்த அந்த தினத்தின் நிகழ்வுகளும் அதன் பின் வந்த அழுத்தமான நிமிடங்களும் இருவருக்கும் ஓரிரு வாரத்தைகளை பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பத்தைக்கூட கொடுக்கவில்லை.

தனது முன்னால் தவிப்புடன்  நின்றிருக்கும் மகனை கூட விட்டுவிட்டு  அவரது கை மருமகளின் கன்னத்தைதான் வருடியது. பின்னர் கட்டிடப்பட்டிருந்த அவளது கையை தொட்டு பார்த்தவர் இதமாக கேட்டார் ' இப்போ உடம்பு பரவயில்லையாமா?

புன்னகையுடன் தலை அசைத்தாள் அருந்ததி

இது எதுவுமே ரிஷியின் கருத்தில் பதிய வில்லை. 'எந்த இடத்தில் கனவிலும் அவரை நிறுத்தி பார்க்க கூடாது என்று அவன் நினைத்திருந்தானோ அங்கேயே வந்து நிற்கிறாரே அம்மா .?? நெருஞ்சி முள்ளின் மேல் நிற்கும் பாவம் அவன் முகத்தில்.

தான் அந்த வீட்டு வாசலில் வந்து நிற்பதையே அவன் தன்மானம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. தன்மானத்தை வென்று ஓரம் தள்ளியது அவள் அவன் மீது கொண்டிருந்த நேசம் என்பது உண்மை. ஆனால் அவனது அம்மா அங்கே வந்து நிற்பதை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது அவனால்.

'என்னமா திடீர்னு?' அம்மாவை பார்த்து கேட்டவன் அப்பாவின் பக்கம் திரும்பினான் 'இங்கே எதுக்குப்பா வந்தீங்க????

இந்த வீட்டை வாங்கும் வேலைகளில் சுற்றிக்கொண்டிருந்ததில் அவரிடம் இரண்டு நாட்களாக அவர்களிடம் பேசாதது இப்போதுதான் நினைவுக்கு வந்தது அவனுக்கு. 'ஒரு போன் பண்ணி இருக்கலாமில்லையா எனக்கு? என்றான் தவிப்புடன்.

கல்யாண ராமன் எதோ சொல்ல முயல அதை கேட்கும் பொறுமை கூட இல்லை ரிஷியிடம் 'சரி வாங்க நாம கிளம்பலாம்.  சஞ்சாவோட  கெஸ்ட் ஹவுஸ் போயிட்டு எல்லாத்தையும் பேசிக்கலாம்' என்று நகர முற்பட்டான் ரிஷி. அவர்களையும் அங்கிருந்து அழைத்துக்கொண்டு சென்று விடுவதே அவனது அப்போதையே நோக்கமாக இருந்தது

அதே நேரத்தில் அங்கே மேகலாவின் இதழ்கள் வெற்றி புன்னகையில் வளைந்தன. மேகலாவே கூட எதிர்பார்க்கவில்லைதான் இதை. தனது ஒற்றை தொலைப்பேசி அழைப்புக்கு இத்தனை சக்தியா என்ன? இருவரையும் என் முன்னால் இழுத்து வந்து நிறுத்தி இருக்கிறதே?

வைதேகியின் உடல் நிலை கருதி அவரிடம் எதையுமே சொல்லாமலேதான் இருந்தார் கல்யாண ராமன். அந்த நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்தது மேகலாவின் அழைப்பு, அதுவும் வீட்டில் வைதேகி மட்டும் இருந்த போது!!!!

'சந்திரிகா... உன் அருமை பிள்ளைக்கு, உயிருக்கு உயிரான பிள்ளைக்கு நீ இல்லாமலே கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு தெரியுமோ உனக்கு?  இப்படிதான் துவங்கினார் மேகலா. 'என் பொண்ணுக்கு தாலி கட்டிட்டான் அவன்.' சிரிப்புடனே சொன்னார் மேகலா.

ஒரு நொடி சந்திரிகாவின் இதய துடிப்பு நழுவி மீண்டது நிஜம். ஆனால் எப்போதுமே தனது கோப தாபங்களையும், உணர்சிகளையும் அடக்கி ஆள தெரிந்தவர் அவர். எதிர் முனையில் இருப்பது மேகலா என்றபடியால், சொல்லபடும் விஷயம் உண்மை தானா என்றும் ஆராய துவங்கியது மனம்.

'என்ன பதிலே இல்ல? உன் புருஷன் உன்கிட்டே இதை சொன்னாரா இல்லையா? பார்த்து பார்த்து வளர்த்தே. இப்படி பண்ணிட்டானே உன் பிள்ளை. மொத்தமா உன்னை தோற்கடிச்சிட்டானே? என் பொண்ணை கல்யாணம் பண்ணி இப்படி உனக்கு துரோகம் பண்ணிட்டானே?

இன்னமும் மௌனம் மட்டுமே குடி கொண்டிருந்தது சந்திரிக்காவிடம்.

'அழுகை வருதா செல்லம்.? வரணுமே. அவன் நிஜமாவே நீ பெத்த பிள்ளையா இருந்தா உனக்கு அழுகை வரணுமே.

எதிர்முனையில் ஒரு ஆழமான சுவாசம் மட்டுமே எழுந்தது.

'இன்னொரு விஷயம் தெரியுமா உனக்கு. உன் பையன் தாலி கட்டினது என் பொண்ணுக்கு பிடிக்கலை. அவனை வேண்டாம்னு சொல்லிட்டா? மறுபடி ஒரு எள்ளலான சிரிப்பு. சந்திரிக்காவிடம் கொஞ்சம் திடுக்கிடல்.

'இப்போ நீ என்ன பண்றே உடனே சென்னைக்கு வரே. இங்கே நீ வந்ததுக்கபுறம் உன் பையன் வாழ்கை என்னவாகும்ன்னு பேசி முடிவெடுப்போம்' சமர்த்தா கிளம்பி வா பார்ப்போம்.

சில நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தார் கல்யாண ராமன். அதன் பிறகு தனது மனைவியிடம் தனக்கு தெரிந்த அத்தனையும் கொட்டி தீர்த்திருந்தார் ராமன். மகன் மீது கொஞ்சமும் கோபம் எழவில்லை சந்திரிக்காவுக்கு.

அவர்கள் இருவரும் நடித்த திரைப்படங்களை பார்க்கும் போதே அவனுக்கு சரியான ஜோடி அவள் தானோ என்று பலமுறை தோன்றி இருக்கிறது அவருக்கு.. அவர்கள் இருவரின் புகைப்படத்தை வைத்திருந்த காரணமும் அதுவே.

ஆனால் இருவருக்கும் இடையில் என்ன விரிசல்? புரியவே இல்லை கணவனுக்கும் மனைவிக்கும்.  அதற்கு மேல் அங்கே நிற்க கூட பொறுமை இல்லை சந்திரிக்காவுக்கு. உடல் நிலையை கூட பொருட்படுத்தவில்லை அவர். விமான பயணத்திற்கு மருத்துவர் சொன்ன ஒன்றிரண்டு ஆலோசனைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இதோ பறந்து வந்து நிற்கின்றனர் இருவரும்.

ரிஷி அவர்களை அழைத்துக்கொண்டு நகர எத்தனிக்க ஓடி வந்தார் இயக்குனர் 'என்னப்பா வந்தவங்களை அப்படியே அழைச்சிட்டு போறியே? முதலிலே உள்ளே வாங்க எல்லாரும்.'

'இல்லை அங்கிள். நாங்க அப்புறம் வரோம்...' அவன் பேசுவதற்குள் ராமனின் கையை பிடித்துக்கொண்டார் இயக்குனர். 'பழசு எதையும் மனசிலே வெச்சுக்காம தயவு செய்து உள்ளே வாங்க சம்மந்தி.

மறுக்க முடியவில்லை அப்பாவால். ரிஷியை தாண்டி அவர் உள்ளே நடக்க, அவர் பின்னாலேயே அவனை கடந்து நடந்தார் அம்மா. அவன் முகத்தில் தேங்கி இருந்த கொஞ்ச நஞ்ச புன்னகையும் தேய்ந்து முகம் இறுக, சில நொடிகள் அப்படியே நின்று விட்டான் ரிஷி.

அவன் தவிப்பு புரிந்தது அவனருகில் நின்றிருந்த அருந்ததிக்கு. அவனது முகவாட்டம் அவளை வருத்தியது.  அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்.

சில நொடிகளில் தன்னிலை பெற்று அவன் நிமிர அங்கே நின்றிருந்த மேகலாவின் இதழோரம் தேங்கி இருந்த கேலி சிரிப்பு அவனை குத்தியது. உடலெங்கும் பரவ துவங்கிய கோப கனலை அப்படியே உள்ளே அழுத்திக்கொண்டு, மெதுவாய் நடந்து அம்மாவின் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டான் ரிஷி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.