(Reading time: 9 - 18 minutes)

04. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

ந்த அறையில் இருந்த மற்றவை மாறினாலும் கணினியும், டிவியும் இன்னும் மாற்றம் பெறாமல் அப்படியேதான் இருந்தது. அதைக் கவனித்து என்னால் அதைப் பற்றி கேட்காமல் இருக்க முடியவில்லை.

“நான் படங்களில் பார்த்தது போல் நீங்கள் மாற்றம் அடைந்து விட்டீர்கள் சரி, ஆனால் இந்தக் கணினி, டிவியெல்லாம் எப்படி இங்கே, எமலோகத்தில் கூட டெக்னாலஜி எப்படி” அச்சரியமாகக் கேட்டுவிட்டு இருவரில் யார் பேசுவார்கள் என்று இருவர் முகங்களையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தேன்.

மீண்டும் சித்ர குப்தரே பேசத் துடங்கினார் “மானிடா நீ கூறினாயே இந்த டெக்னாலஜி, இது அனைத்தையும் கண்டுபிடித்தவர்கள் இங்கு வந்து சேர்ந்து பல காலம் ஆகிறது தெரியும் அல்லவா. கணினியைக் கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜில் இருந்து, ஆப்பிள் பொருட்களை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் வரை இங்கு தான் இருக்கிறார்கள். நாங்கள் படைத்த மனிதர்கள் நீங்கள் டெக்னாலஜியில் முன்னேறலாம், உங்களைப் படைத்த நாங்கள் முன்னேறக் கூடாதா?”

unakkaga mannil vanthen

குப்தர் கூறியது எனக்கு நியாயமாகவே பட்டது. “அனல் மின் நிலையம், அணு மின் நிலையம் என்று வைத்திருக்கும் எங்களாலேயே மின்வெட்டைச் சமாளிக்க முடியல, இங்க எப்படி இந்தப் பொருட்களுக்கு மின்சாரம்?, ஓ உங்களிடம் இருக்கும் மேஜிக் பவர் யுஸ் பண்றிங்களா” என்னுடைய அடுத்த கேள்வி.

“மந்திரமும் இல்லை, மேஜிக்கும் இல்லை இங்கும் மின்சாரம் உற்பத்தி நடக்கிறது. அதிகம் பாவம் செய்துவிட்டு வருபவர்கள் அங்குதான் கடினமாக வேலை செய்ய வேண்டும், அதுதான் அவர்களுக்குத் தண்டனை” சித்ர குப்தர் மீண்டும் பதிலளித்தார்.

“பாவம் செஞ்சா நரகத்தில் தானே தண்டனை, எண்ணெய்ச் சட்டியில் வருத்து எடுப்பாங்க, பூச்சி, பாம்பு விட்டுக் கடிக்க வைப்பாங்கனு கேள்வி பட்டிருக்கேன் நீங்க வேறு மாதிரி சொல்கிறீர்கள்” என்னுடைய அடுத்த கேள்வி.

நான் கேட்ட கேள்விக்குச் சிரித்துவிட்டு, சித்ர குப்தர் தன் கணினியில் எதோ செய்துவிட்டு, கணினி மானிட்டரை என் பக்கம் திருப்பினார். அதை நான் பார்த்த போது, சென்னையில் வெயில் 50 டிகிரி என்று குறிப்பிட்டிருந்தது.

“நீ வசிக்கும் சென்னையின் இன்றைய வெட்ப நிலவரம் இது. இந்த வெப்பத்தைக் காட்டிலும் அதிகமாக எங்களால் எண்ணெய்யைக் கொதிக்க வைக்க முடியாது, அப்படியே செய்தாலும் அதில் முக்கப்படும் உன்னைப் போன்ற சென்னை வாசிகள், சுகமாக ஆயில் பாத் எடுப்பது போல் உற்சாகமாக அதில் விளையாடுகிறார்கள். மற்றொன்று என்ன சொன்னாய், பூச்சி பாம்பு விட்டுக் கடிக்க வைப்பது, பூலோகத்தில் இருக்கும் கொசு கடியைக் காட்டிலும் பெரியதாக நாங்கள் ஒன்றும் செய்துவிட முடியாது. நரகத்தில் தரப்படுவதாக கூறப்பட்ட அனைத்துத் தண்டனைகளும் பூலோக வாசிகளான நீங்கள் தினம் தினம் அனுபவித்து விட்டுத்தான் இங்கு வருகின்றீர்கள், மேலும் அதை நாங்கள் தந்தால் அதை ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள். ஆதலால் நாங்கள் தரும் தண்டனைகளை எப்போதோ மாற்றிவிட்டோம்” முகத்தை நக்கலாக வைத்துக் கொண்டு கூறினார் சித்ர குப்தர்.

“அது சரி நான்தான் இந்து மதத்தைச் சேர்ந்தவன், இறந்த பிறகு எமன் உங்கள் முன் வந்து நிற்கின்றேன், எனக்கு முன்னால் கிரிஸ்துவர், முஸ்லிம் அவர்களெல்லாம் இங்கு எப்பிடி, ஒருவேளைச் சாவதற்கு முன்னால் மதம் மாறிட்டாங்களா” என்னுடைய அடுத்த குழப்பத்திற்கான வினா.

நான் கேட்ட கேள்வியில் கடுப்பான சித்ர குப்தர் எமனை நோக்கி “பிரபு என்ன இவன் கேள்வியாய் கேட்டு நம் உயிரை எடுத்துவிடுவான் போலும், பொதுவாக இங்கு வருபவர்களை நாம் கேள்வி கேட்பது தானே வழக்கம் இவன் நம்மை கேள்வி கேட்கிறான், நீங்களும் அமைதியாக இருக்கிறீர்கள்”.

“பொறுமை குப்தரே, இத்தனை கேள்விகளை இவன் பூலோகத்தில் கேட்டிருந்தால் இவன் எப்போதோ பெரிய தலைவன் ஆயிருப்பான், அங்கு விட்டு விட்டு இங்கு வந்து கேட்கிறான், கேட்கட்டும், இந்த கேள்விக்கு நானே பதில் கூறுகிறேன்” கூறிவிட்டு என்னை நோக்கினார் எமன்.

“எங்களில் யாரவது மனிதர்கள் முன் தோன்றி கடவுள் வெவ்வேறு என்று குறிப்பிட்டிருக்கின்றோமா?.  நாங்கள் எப்போதுமே ஒன்றேக் குளம் ஒருவனே தேவன் என்று தான் கூறிவருகிறோம். அப்படி கூறிக் கொண்டு வரும் எங்கள் தூதர்களை வைத்து புதிதாக ஒரு மதத்தை நீங்களாக உருவாக்கிக் கொண்டு அடித்தும் கொள்கிறீர்கள். நீ மனதில் எப்படி நினைத்துக் கொள்கின்றாயே அப்படி நான் உன் கண்களுக்குத் தோன்றுவேன், முதலில் நீ என்னை மருத்துவராகப் பார்த்தாய் அதனால் உன் கண்களுக்கு மருத்துவர் போல் தோன்றினேன், எல்லாம் மனிதர்கள் உங்களின் மனதின் எண்ணங்கள் தான், இப்போது புரிகிறதா?”.

நான் ஆம் என்று தலையசைத்தேன்.

எமன் சித்ர குப்தர் பக்கம் திரும்பி “மிஸ்டர் குப்தா இவனுடைய விபரங்கள்” என்று அவர் கூறி முடிக்கும் முன்பே,

“தங்கள் கணினியில் உள்ளது பிரபு” என்று சித்ர குப்தர் பதில் கூறினார்.

கணினியைப் பார்த்த எமனின் முகம் கோவத்தில் மாறியது, கண்கள் சிவந்தது. தலையை உயர்த்தி என்னை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, “என்ன சித்ர குப்தரே இவன் நம்மை இப்படி மோசமாகத் திட்டிருக்கிறான், இவன் நாடித் துடிப்பை விட இவன் நம்மைத் திட்டியதுதான் அதிகம் போல் தெரிகிறது”.

“எனக்கும் அதுதான் புரியவில்லை பிரபு. மனிதர்கள் எதாவது பெரிய பிரச்சனை வந்தால் நம்மைத் திட்டுவார்கள் அது சகஜம்தான். ஆனால் இவன், யாரவது பிரச்சனை என்று காகிதத்தில் எழுதி இவனிடம் நீட்டினால் குட போதும் நம்மைத்தான்த் திட்டுகிறான். முந்தைய வாரத்தில், இவன் ஒரு உணவு விடுதியில் உண்ணும்போது சாப்பாட்டில் கல் இருந்ததென்று நம்மை ஒரு மணி நேரம் திட்டி தீர்த்தான். சாப்பாட்டில் கல் இருந்ததற்கும், நமக்கும் என்ன பிரபு சமந்தம். இருக்கும் வேளையெல்லாம் விட்டுவிட்டு நாமா அந்தக் கல்லை இவன் உண்ணும் உணவில் போட்டோம். அதில் அவன் கூறிய சில வார்த்தைகளைக் கேட்ட போது, நாம் ஏன் கடவுளாய்ப் பிறந்தோம் என்று எனக்கே அழுகை வந்துவிட்டது பிரபு. இவன் நம்மைத் திட்டிய கோபத்தில், அந்த உணவைச் சமைத்த சமையல்காரனின்ப் பாவக் கணக்கில், நாட்டின் மீது குண்டு போடுபவனுக்கு நாம் எத்தனைப் பாவ மதிப்பெண் தருவோமோ அத்தனை மதிப்பெண்களைத் தந்திருக்கிறேன்” என்று தன் முகத்தை அழுவதைப் போல் வைத்துக்கொண்டு கூறினார் சித்ர குப்தர்.

அதைக் கேட்டு எமனின் கோபம் மேலும் அதிகமானது. இருப்பது எல்லாம் போதாதென்று இந்த சித்ர குப்தர் வேறு நிறையக் கொளுத்தி போடுகிறாரே. எனக்கு என்ன ஜோசியாமா தெரியும் இப்படி வந்து வசமா சிக்கி கொள்வேன் என்று, தெரிந்திருந்தால் திட்டிருப்பேனா? எமன் இருக்கும் கோபத்தை பார்த்தால் நான் நரகத்தில் சிக்கி சின்னாபின்னம் ஆவது உறுதிதான்   

ஆனாலும் என் உள் மனம் கூறியது, “இதற்கு மேலும் ஏண்டா பயப்படுர?. உயிரே போயிடுச்சி, இதற்கு மேல் என்ன இருக்கு போவதற்கு, ஆதலால் தைரியமா உன் மனதில் இருக்கும் கோவத்தை கொட்டித் தீர்த்து விடு. விஷ்ணு விட்டு விடாதே” என்று

“என்னைச் சந்தோஷமா வாழவிட்டிருந்த, நான் ஏன் எமன் சார் உங்களையெல்லாம் திட்ட போகிறேன். பெத்தவங்க யார் என்று தெரியாததால் அனாதை  என்பதில் ஆரம்பம் ஆனது சார் என் பிரச்சனை, அதற்குப் பின் வளரும் போது பிரிண்ட்ஸ் யாரும் இல்லை, சரி ஒரு வேளைக்குப் போனால் என்னுடைய பிரச்சனை எல்லாம் சரி ஆகிவிடும் என்று போனால், விட்டுச்சா? அந்தப் பிரச்சனை, இல்லையே. நான் வாழ்ந்த இத்தனை நாளில் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் நான் மகிழ்ச்சியா, சந்தோஷமா இருந்தேன், அதுவும் உங்களுக்குப் பொறுக்கவில்லை, இதோ சாகடித்து இங்க கூட்டிட்டு வந்துடிங்க. ஸோ நான் சந்தோஷமா இருந்த உங்களுக்குப் பிடிக்காது. இப்படி செய்வதெல்லாம் செய்துவிட்டு, திட்டினால் மட்டும் கோபம் பட வேண்டியது. நல்ல இருக்கு சார் உங்க நியாயம்” வேகமாகவும் தைரியமாகவும் பேசி முடித்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.