(Reading time: 14 - 27 minutes)

13. நேசம் நிறம் மாறுமா - தேவி

வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;

பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு;

காணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி!

மாணுடைய பேரரசே! வாழ்வுநிலையே! கண்ணம்மா! 

                                                       பாரதியார்

Nesam niram maaruma

தியின் கன்னத்தில் விழுந்த அறையில் எல்லோரும் திகைத்து நிற்க, அடித்தது யாரென பார்த்தால் பத்மா. அடி வாங்கிய ஆதியோ ஏன் அடித்தீர்கள் என்பது போல் பார்த்தானே தவிர, வேறு எந்த கோபமோ, வருத்தமோ போன்ற உணர்வுகளை காண்பிக்கவில்லை.

ஆனால் மதியோ திகைத்து அழ ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. டான்ஸ் ஆடி முடித்தவுடன் எல்லோரும் கைதட்டிக் கொண்டிருக்க, ஆதி வந்து முத்தம் கொடுத்தான். அதற்கு ஏன் பத்மா சித்தி அடித்தார்கள் என்ற எண்ணியவள் அவள் முகத்தை பார்க்க, அவளோ மதியை முறைத்துக் கொண்டிருந்தாள். 

முதலில் சுதாரித்த வாசுதேவன் “பத்மா .. என்ன இது எதற்காக இப்போ ஆதியை அடித்தாய்.?”

“என்னங்க நீங்க ? அவன் என்ன இன்னும் சின்ன பிள்ளையா? டீனேஜ் வயசு வந்தாச்சு? ஒரு பொம்பள பிள்ளைக்கு முத்தம் குடுக்கறான்.? எல்லோரும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க?

“ஏய்.. அறிவிருக்கா? இருவரும் சின்ன பிள்ளைகள் .. என்ன பேசற?

“அவனுக்கு பதிமூன்று வயசாகுது. இன்னும் என்ன சின்ன பிள்ளையா? நாளைக்கு இதே பழக்கம்தான் பெரியவனானதும் வரும். நானும் இந்த முறை வந்ததுலேர்ந்து பார்க்கறேன். அவள் இவனை அத்தான் என்பதும், அவன் இவளை வினு என்பதுவும் கேட்கவே நன்றாகவே இல்லை. யாராவது பார்த்தால் இவர்களை பிஞ்சிலேயே பழுத்தவர்கள் என்பார்கள். அதனால்தான் கண்டித்தேன்.” என்று மேலும் பேசிக் கொண்டே சென்றாள்.

இந்த முறை கிராமத்திற்கு வந்ததிலிருந்து ஆதி எப்போதும் போல் வினுவோடே இருக்கவும், பத்மா ஏதாவது சொல்லி மதியை அழ வைத்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகளை அடிக்காமல், அன்பால் கண்டித்து வளர்ப்பவர்கள் ஜானகியும், மீனாட்சியும். பத்மா அடித்ததோடு மட்டுமல்லலாமல் மேலும் கடுமையாக பேசவும் மதி இன்னும் அழ ஆரம்பித்தாள். அவளை சமாதானப் படுத்த மீனாட்சி உள்ளே அழைத்து சென்று விட்டாள்.

அதைப் பார்த்த ஆதி நேராக தன் அம்மாவிடம் சென்று “நான் செய்தது தப்பா?” என்று மட்டும் கேட்க, அவன் அன்னையோ மதி அழுது கொண்டே சென்றதை எண்ணி ஒன்றும் கூறாமல் இருக்க, ஆதி அவன் அம்மாவை நேராக பார்த்தவன் தன் அறைக்கு சென்று விட்டான்.

பத்மா அதிகமாக பேசுவதை கண்டு வாசு அவளை கண்டித்தார்.  ஹாலில் நடந்த எதுவும் ஆதிக்கோ மதிக்கோ தெரியாவிட்டாலும், இருவரும் அன்று இரவு  உறங்கவில்லை. மறுநாள் காலையில் எழுந்தவுடன் ஆதியின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டது.

எழுந்தவுடன் தன் அன்னையை தேடியவன் , அவரை காணாமல் அத்தையிடம் கேட்க, பத்மா அவனுடைய அம்மா அப்பா பக்கத்து ஊரில் ஒரு துக்கத்திற்கு போயிருக்கிறரார்கள் என்றாள். அவன் மதி மற்றும் அவர்கள் வீட்டாரை கேட்க, பத்மா

“அவர்கள் நேற்று இரவே ஊருக்கு கிளம்பி விட்டார்கள்.” எனவும், ஆதிக்கு எப்படியோ ஆனது. அதுவும் அவனிடம் சொல்லாமல் சென்றது அவனை மிகவும் பாதித்தது.

“ஏன் அத்தை ? தீடிரென்று கிளம்பி விட்டார்கள்?”

“அது.. நான் சொன்னால் தப்பாக நினைக்காதே .. ஆதி. முதலில் அத்தை உன்னிடம் சாரி கேட்கிறேன். நேற்று நான் உன்னை அடித்தது தப்புதான். ஆனால் நீ வளர்ந்து விட்டாய். மதியும் வளர்ந்து கொண்டு வருகிறாள். உங்கள் இருவருக்கிடையே எந்த எண்ணமும் இல்லை என்றாலும், நம் வீடு வேலைகாரர்கள், ஊரில் பார்க்கிறவர்கள் எல்லாம் உனக்கும் மதிக்கும் திருமணம் செய்யப் போவதாகவும், அதற்காகவே அவளை உன்னோடு பழக விடுவதாகவும் பேசுகிறார்கள். இது உனக்கும் அவளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும். அதனால் நீ அவளிடம் விலகியே இரு.”

சரி அத்தை. ஆனால் அதற்காக ஏன் இன்றைக்கு என்னிடம் சொல்லக் கூட இல்லாமல் கிளம்பி விட்டார்கள்.?

“நேற்று நீ உன் ரூமிற்கு சென்றவுடன், இதை நான் உன் அம்மாவிடமும், மீனாட்சி அத்தையிடமும் சொன்னதற்கு, என் மேல்தான் தவறு என்பது போலவும், நான் உன்னை அடித்ததும், மதியை திட்டியதும் ஏதோ காரணமாகத்தான் என்றும் என்னிடம் சண்டை போட்டார்கள். மீனாட்சி இனிமேல் அவர்கள் இந்த ஊருக்கே வரப் போவதில்லை என்று கிளம்பி விட்டர்கள். நான் கூட அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அதை எல்லாம் காதில் வாங்கமல், நேற்று இரவே டாக்ஸி வரவழைத்து சென்றார்கள்.”

இது ஆதிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவன் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டான். அத்தை பேசியதையோ, அடித்ததையோ பெரிதாக எடுக்காதவன், மீனாட்சி அத்தை அவனிடம் சொல்லாமல் சென்றது மிகவும் வருத்தம் ஏற்படுத்தியது.

அவன் மனதில் நான் மதியை முத்தமிட்டது மதியின் அம்மாவிற்கு பிடிக்காமல்தான் அவர்கள் சென்றார்கள் என்று தோன்றியது. நான் செய்தது தப்பு என்றால் பத்மா அத்தை போல் அவர்களும் என்னை திட்டவோ, அடிக்கவோ செய்திருக்கலாமே, ஏன் இப்படி என்னிடம் பேசாமல் சென்றார்கள் என்று திகைத்தான்.

துக்கத்திற்கு சென்று வந்த மறுநாள் ஜானகி ஆதியை அழைத்து,

“ஆதி, சாரி கண்ணா. அம்மா அன்று அத்தை உன்னை அடிக்கும்போது தடுக்க முடியவில்லை. எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று புரியாமல் நின்று விட்டோம். பத்மா மனதில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை”

“அதை விடுங்கள்”

“ஆதி, நீயும் இனிமேல் கொஞ்சம் பார்த்து நடந்து கொள். அத்தையை அதற்காக வெறுத்து விடாதே. இனிமேல் மதி வரும்போது..”என்று சொல்ல வந்த போது,

“இனிமேல் மதியிடம் இப்படி நடந்து கொள்ள மாட்டேன். அதோடு ..” என்று மனதினில் “அவளோடு பேசவே மாட்டேன். ஏன்.. இந்த ஊருக்கே வரமாட்டேன்” எண்ணிக் கொண்டான்.

அவன் தாய் “என்ன அதோடு” ? என்று வினவும் “ஒன்றுமில்லை.”  என்று சமாளித்து கிளம்பி விட்டான்.

மதியின் குடும்பத்தினர் எப்போதும் வருவது போல் சென்னை வரவில்லை. ஊரிலிருந்து அப்படியே நேராக தங்கள் ஊருக்கு கிளம்பி விட்டார்கள்.

இதைக் கேட்ட ஆதி, அதற்கு பின் அவர்களை பற்றி யாரிடமும் பேசுவதில்லை. அந்த வருடம் தான் ஆதியின் அத்தை குடும்பமும் தனியாக வீடு வாங்கி குடியேறியது. அது வரை சேர்ந்தே இருந்தவர்கள், ஜானகி மற்றும் பத்மாவின் கணவர் வாசுதேவன் இருவருமே அவள் தனியாக போவதுதான் நல்லது என்று முடிவு செய்தார்கள்.

டுத்த வருடம் ஊர் திருவிழாவிற்கு போனபோதும், மதியின் குடும்பம் வரவில்லை. அந்த முறை ஆதி 1௦வது என்பதால், ஒருநாள் லீவில் மட்டுமே வந்தான். வந்தனாவிற்கு கிராமத்திற்கு வர இஷ்டமில்லை. வந்தனா கிளம்பியவுடன் அதிதியும் அழுது அவளோடு கிளம்ப, சூர்யா நான் மட்டும் என்ன செய்வது என்று பிள்ளைகள் எல்லோருமே கிளம்பி விட்டார்கள். அவர்களை பத்மாவின் பொறுப்பில் விட்டு விட்டு ராகவனும், ஜானகியும் மட்டுமே இருந்தார்கள்.

அதற்கு பின் ஆதி தன் படிப்பை விடுதியில் தங்கி படித்ததோடு , தனிப் பயிற்சி வகுப்புகளும் இருந்ததால் அவன் ஊருக்கு வருவதில்லை. தன் தாய், தந்தையிடமிருந்து ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொண்டான்.

பத்மா வந்தனாவோடு அதிதி மற்றும் சூர்யாவையும் ஒரு மாதிரி தன் பிடிக்குள் வைத்துக் கொண்டாள். அவர்கள் இருவரிடமும் ஜானகிக்கு சிட்டி லைப் புரியாது என்றும், அவர் பிள்ளைகளையும் அப்படியே வளர்ப்பதாகவும் சொல்லி, வந்தனாவோடு சூர்யா, அதிதியையும் படிக்க வைத்தாள்.

ஸ்கூல் முடிந்தால் நேராக படித்து விட்டு வருவதாக கூறி அத்தை வீட்டிலேயே சூர்யாவும், அதிதியும் தங்க ஆரம்பித்தார்கள். ராகவனுக்கு பிடிக்கா விட்டாலும், தன் தங்கை மற்றும் தன் நண்பனுக்காக பொறுத்துக் கொண்டார்.

ஜானகி ஆதியிடம் மட்டும் புலம்புவாள். ஆதி ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் ஜானகி வருந்துவதைப் பார்த்து தான் வீட்டிற்கு வரும்போது தன் தம்பி, தங்கையும் இருக்குமாறு பார்த்துக் கொள்வான்.

தன் அத்தையிடம் அவன் பெரிய அபிப்ராயம் வைத்துக் கொள்வது கிடையாது. ஆனால் அத்தை அவனுடைய படிப்பில் தலையிட்டவுடன், பிடிவாதமாக தனக்கு பிடித்தைதான் படிப்பேன் என்று காமெர்ஸ் படித்து அட்மினிஸ்ட்ரேஷனும் படித்தான்.

அதே போல் வந்தனாவோடு அதிதியையும் வெஸ்டேர்ன் டான்ஸ் கற்றுக் கொள்ள சொன்ன போது, அதியின் விருப்பம் அறிந்து அத்தையை கன்வின்ஸ் செய்து பரதநாட்டியம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தான். ஜானகி மதியை பற்றியோ, அவர்கள் குடும்பத்தை பற்றியோ ஏதாவது பேச வந்தால், பேச்சை மாற்றி விடுவான். கொஞ்ச நாட்கள் கவனித்த ஜானகியும், ராகவனும் அவன் எதிரில் அவர்களைப் பற்றி பேசுவதில்லை.

சூர்யாவும், அதிதியும் குழந்தைகள் என்பதால் நடந்த சம்பவம் எதுவும் தெரியாததால், அவர்களுக்கு மதியை பற்றி ஒன்றுமே தெரியாது.

படிப்பு முடிந்தவுடன் ஆதி தனியாக பைனான்ஸ் கம்பெனி தொடங்கி நடத்தி வந்தான். அவனுக்கு திருமணம் செய்யலாம் என்று கேட்ட போது அவன் தட்டிக் கழித்து விட்டான்.

ஒருநாள் பத்மா அத்தை அவர் கணவரிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.